ஹலோ With காம்கேர் -346: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல்கள்! (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 346
December 11, 2020

கேள்வி: பிரச்சனைகளை பகிர்வதில் உள்ள உளவியல் சிக்கல் என்ன?

இரண்டு நாட்களாய் தற்கொலை செய்துகொண்ட தொலைக்காட்சி சீரியல் நடிகை சித்ரா குறித்த தகவல்கள்தான் சமூக வலைதளங்களில்.

யாரேனும் தற்கொலை செய்துகொண்டுவிட்டால் பொதுவான ஆலோசனையாக இருப்பது எது தெரியுமா?

‘நெருக்கமான ஒரிருவரிடமாவது மனசு விட்டு பேசியிருக்கலாம்’

சரியான ஆலோசனைதான். சந்தேகமே இல்லை.

‘யார் அந்த நெருக்கமான ஓரிருவர்’  என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

நம் பிரச்சனை என்பது நம்மைப் பொருத்தவரை ரகசியம். பெரும்பாலானோருக்கு தம் ரகசியம் பிறருக்கு தெரிந்துவிடக் கூடாது என்பது அதிமுக்கியமாக உள்ளது. பிறரிடம் சொல்லும்போது ஏன் அவர்கள் நமக்கு நெருக்கமானவராகவே இருந்தாலும் அந்த ரகசியம் காக்கப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

பொதுவாகவே நிரந்தரமான எதிரிகள் வேண்டுமானால் இருக்கலாம். நிரந்தரமான நட்புகள் உள்ளனவா என்பது கேள்விக்குறியே. இன்று நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் நாளை நம்மைவிட்டு விலகிவிட வாய்ப்புகள் நிறைய உள்ளன. அந்த சூழலில் நாம் பகிர்ந்த நம்மைப் பற்றிய தகவல்கள் நமக்கே ஆபத்தானதாகக் கூட அமையலாம்.

இப்போதெல்லாம் நண்பர்கள், அவர்கள் மனதுக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தாலும் தங்களுக்குள் ஒரு எல்லை வைத்துக்கொண்டுதான் பழகுகிறார்கள். ஒரு அளவுக்கு மேல் நம்முடைய பிரச்சனைகளை காதுகொடுத்துகூட கேட்பதில்லை. நம்மை தவிர்க்கவே பார்க்கிறார்கள். அப்படியே கேட்டாலும் ஆத்மார்த்தமாக நல்ல வார்த்தைகள் எதையும் பேசுவதில்லை. செய்தி சேனல்கள் பெருகிவிட்ட இந்தநாளில் நாம் பகிர்வதையும் ஒரு செய்தியாக உள்வாங்கிக்கொள்ளும் பக்குவத்துடன்தான் இருக்கிறார்கள்.

உலகத்தில் சில விஷயங்கள் மிக சிக்கலானவை. அதில்  கணவன் மனைவி மற்றும் காதலர்களுக்கு இடையேயான பிரச்சனைகளையும்  சொல்லலாம். காரணம் முழுக்க முழுக்க பரஸ்பர நம்பிக்கையையும், மனம் சார்ந்த மெல்லிய உணர்வுகளையும் மட்டுமே வைத்து கட்டமைக்கப்படும் அந்த உறவுமுறையில் உள்ள பிரச்சனையை அத்தனை எளிதில் வெளியில் பகிர யாருமே விரும்புவதில்லை, தன் பெற்றோர் உட்பட.

எனக்குத் தெரிந்த ஒரு நடுத்தர வயது இலக்கியவாதி. நிறைய நண்பர்கள் கொண்டவர். தீவிர புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர். ஊரறிந்த விஷயம் அது. அவரது நெருங்கிய நட்புகள் என சொல்லப்படும் ஒரு பெண்ணும், ஒரு ஆணும் என் நிறுவனத்தில் ஒரு வீடியோ ப்ராஜெக்ட்டுக்கு தகவல் சேகரித்துக்கொடுக்கும் பணியில் சில மாதங்கள் பணி செய்திருக்கிறார்கள்.

ஒருநாள் அவர்களிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது தங்கள் நண்பர் குறித்து வெகுவாக சிலாகித்து பேசினார்கள். தங்கள் நட்பின் ஆழத்தை சில நிகழ்வுகள் மூலம் பெருமை பொங்க சொன்னார்கள்.

‘இவ்வளவு சொல்கிறீர்களே, அவருடைய  புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தச் சொல்லலாமே’ என்றேன்.

‘மேம், அது அவருடைய பர்சனல் விஷயம். நாங்கள் பொதுவாக மற்றவர்கள் பர்சனல் விஷயத்தில் தலையிடுவதில்லை…’ என்றனர் அவர்கள் இருவரும் ஒருசேர.

எனக்கு ஆச்சர்யம் + அதிர்ச்சி.

ஒருவருடைய தீய பழக்கத்தை அவருக்கு எடுத்துச் சொல்லாதவர்கள் எப்படி நண்பர்களாக இருக்க முடியும். அதுவும் என்னிடம் பேசிக்கொண்டிருந்த இருவரும் அந்த இலக்கியவாதியுடன் நெருங்கிய நண்பர்கள் என்றுவேறு சொல்லிக்கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த அளவுக்குத்தான் நண்பர்களுக்குள்ளான பிணைப்பு உள்ளது. நட்பின் இலக்கணத்தில் பிழை உள்ளது. வேறென்ன சொல்ல?

நல்ல நண்பர்கள், தீவிர நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டால் தன் நண்பர் தவறு செய்தால் எடுத்துச் சொல்ல வேண்டும். அதைவிட்டு தவறு செய்வதும் தீய பழக்கவழக்கங்கள் இருப்பதும் அவருடைய பர்சனல். நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்பதும், ஜாலியாக பேசுவதற்கும், ஒன்றாக அமர்ந்து குதூகலமாக ஓட்டலில் சாப்பிடுவதற்கும், பிரயாணங்கள் செய்வதற்கும் (முகத்தில் அறைந்தாற்போல் சொல்ல வேண்டுமானால் ‘ஊர் சுற்றுவதற்கும்’) மட்டும்தான் அந்த நட்பு உதவுகிறது என்றால் அதை நான் நட்பு என்றே சொல்ல மாட்டேன். அதற்கு என்ன பெயர் கொடுப்பது என்று நான் அறிந்த வகையில் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி. அவரும் அவருடைய கணவரும் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். என் பெற்றோரின் நெருங்கிய நண்பர்கள்.

ஒரு சமயம் எங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அவரும் அவருடைய கணவரும் விருந்தினராக வந்திருந்தபோது பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன், என் பெற்றோருடன் அமர்ந்து.

‘எப்படி பொழுது போகிறது…’ என்றேன்.

‘காலையில் மகனையும் மகளையும் வேலைக்கு அனுப்பும் வரை சமையல் வேலை. பின்னர் பூஜை, சாப்பாடு, குட்டித்தூக்கம், கோயிலுக்குச் செல்லுதல் என பொழுது ஓட்டமாய் ஓடுகிறது’ என்றார்கள்.

‘டிவி பார்ப்பதில்லையா’ என்றேன்.

‘டிவியா… நியூஸ் மட்டும் பார்ப்போம்’ என்றனர்.

‘ஏதேனும் சீரியல் பார்ப்பீர்களா?’ என்றேன்.

இந்தக் கேள்விக்கு மட்டும் வெகு அவசரமாக ‘சே, சே… நாங்கள் சீரியல் எல்லாம் பார்ப்பதே இல்லை…’ என்றனர், சீரியல் பார்ப்பதே ஏதோ கேவலமான செயல்போல.

நானும் விடாமல் ‘ஒன்றுகூட பார்ப்பதில்லையா?’ என்றேன்.

‘இல்லைம்மா…’ என்று சொல்லிவிட்டு பேச்சை வேறு திசையில் மாற்றப்பார்த்தார்கள்.

அதற்குள் நான் டிவியை ஆன் செய்தேன். ஏதோ ஒரு சேனலில் சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. நான் வேண்டுமென்றே சேனலை மாற்றவில்லை.

கொரோனாவுக்கு முன்பெல்லாம் வழக்கமாக இரவு 8.30 மணிக்குத்தான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருவேன். வந்ததும் குளித்து சாப்பிட்டு டிவியை ஆன் செய்வேன். குறிப்பாக எந்த நிகழ்ச்சியையும் பார்ப்பதில்லை. எது அந்த நேரத்துக்கு என் கவனத்தை ஈர்க்கிறதோ அதை சில நிமிடங்கள் பார்த்துவிட்டு ரிலாக்ஸ் செய்துகொண்டு தூங்கச் செல்வேன்.

அப்படி ஒருநாள் ஒரு சேனலில் வாய் பேசமுடியாத காதும் கேட்காத ஒரு பெண்ணின் வாழ்க்கை பற்றிய கதை ஓடிக்கொண்டிருந்தது. அந்த பெண் கலெக்ட்டர். அம்மாவுக்கும் அவளுக்கும் ஒத்து வராது. பெற்ற குழந்தைகளிடமே பாகுபாடு காண்பிக்கும் அம்மாக்களில் ஒருவளாக இருந்தாள். அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஒரே ஆறுதல் அவள் அப்பா. மனைவியின் குணத்தினால் அவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுக்கு ஆறுதலாக அவளுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார். மகளுக்கு வரன் பார்த்து கலெக்ட்டர் மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து திருமணமும் முடிகிறது. இப்படியாக கதை வெகு இயல்பாக சென்றுகொண்டிருந்தது. காது கேட்காத வாய் பேச முடியாத அந்த பெண்ணின் அட்டகாச நடிப்பில் ஈர்க்கப்பட்டு சில எபிசோடுகள் வரை பார்த்தேன். அதன் பின்னர் அந்த கதை நேரம் மாற்றப்பட்டதா அல்லது சீரியலே நிறுத்தப்பட்டதா என தெரியவில்லை. நான் டிவி பார்க்க அமரும் நேரம் அது ஒளிபரப்பாவதில்லை.

இந்த கதை குறித்து விருந்தினராக வந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போது அவர்கள் இருவரும் ‘நீ சீரியல் எல்லாம் பார்ப்பாயா?’ என்று கேட்டார்கள்.

‘ஏன் இப்படி கேட்கிறீர்கள்… இந்த சீரியல் நேரமும் நான் அலுவலகம் முடிந்து வந்து ரிலாக்ஸ்டாக அமரும் நேரமும் ஒன்றாக இருந்ததால் பார்க்க முடிந்தது…’

உடனே அவர்கள் இருவரும் இறுக்கம் தளர்த்தி ‘நாங்களும் சீரியல் பார்ப்போம் என சொல்லி மாலையில் 7 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை ஓடக்கூடிய அத்தனை சீரியல்களின் தலைப்பையும் சொல்லி அதில் தாங்கள் பார்க்கும் சீரியல்களை மட்டும் குறிப்பிட்டார்கள்..’

நான் ஆச்சர்யமாக அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என் மகனும் மகளும் அலுவலகத்தில் இருந்து வருவதற்கே இரவு 11, 11.30 ஆகிறது. அவர்களுக்கு சாப்பாடு போடுவதற்காக நாங்கள் விழித்திருப்போம். இரவு 9 மணிக்கு மேல் என்ன செய்வது என தெரியாமல் டிவி சீரியல்கள் பார்க்க ஆரம்பித்தோம். ஜஸ்ட் பொழுதுபோக்குக்குத்தான்…’ என்றனர்.

‘அதில் என்ன தவறிருக்கிறது மாமி… நாள் முழுவதும் அமர்ந்து சீரியல்களைப் பார்ப்பது என்ற அடிக்‌ஷனுக்கு ஆளாவதுதான் பிரச்சனையில் முடியும். நீங்கள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு இரவு ஒன்றிரண்டு சீரியல்கள் பார்ப்பது தவறில்லை…’ என்று அவர்களுக்கு ஆறுதலாகச் சொன்னேன்.

இந்த நிகழ்வை ஏன் சொல்கிறேன் என்றால்…

சீரியல் பார்ப்பதையே தன் நெருங்கிய நட்பின் குடும்பத்தினரிடம் பகிர்வதில் இத்தனை ரகசியம் காக்கிறார்கள் என்றால், அவர்களுடைய பர்சனல் பிரச்சனைகளை எப்படி பகிர்வார்கள் என்பதை யோசியுங்கள். சீரியல் பார்ப்பதை சொன்னால் தங்கள் இமேஜ் பாதிக்கப்படும், தங்களை கேவலமாக நினைப்பார்கள் என்ற புரிதலில்தானே சீரியலே பார்ப்பதில்லை என சொல்கிறார்கள்.

இதே லாஜிக்தான் தங்கள் பிரச்சனைகளை நெருங்கிய நட்பிடம் பகிர்வதிலும். தங்கள் பிரச்சனைகளை சொன்னால் தங்களை கேவலமாக நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் / எண்ணத்தில்தான் பெரும்பாலானோர் பகிர்வதில்லை. ரகசியம் காக்கப்படுமா என்ற சந்தேகத்தில் பலர் பகிர்வதில்லை.

மனித மனங்கள் விசித்திரமானது. இப்படி இருந்தால் இப்படி செய்யுங்கள் என்றெல்லாம் ஃபார்முலா போட்டுக்கொண்டு ஆலோசனை சொல்ல முடியாது. பெரும்பாலான பிரச்சனைகள் மனம் சார்ந்தவை என்பதால் வெகு கவனமாக கையாள வேண்டும். நொடியில் உண்டாகும் உணர்வுக் கொந்தளிப்பு தற்கொலையில் முடியாலாம்.

இதில் படித்தவர் படிக்காதவர், பணக்காரர் ஏழை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

மனித மனங்களும், உணர்வுகளும் அனைவருக்கும் பொதுவானதே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

டிசம்பர் 17,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon