ஹலோ with காம்கேர் – 355
December 20, 2020
கேள்வி: ‘எருமை மாட்டின் மீது மழை பெய்தால்…’ என்ற மனோநிலை பெருகியதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?
சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த நாளில் கருத்துச் சுதந்திரம் அதிகரித்து மனதில் பட்டதை கொஞ்சமும் எடிட் செய்யாமல் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே வெளிப்படுத்தும் நிலைக்கு பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். இலக்கணப் பிழை, இலக்கியப் பிழை இவற்றை நான் சொல்ல வரவில்லை. அசிங்கமான ஆபாசமான அருவருப்பான வார்த்தைப் பிரயோகங்களைத் தான் சொல்கிறேன்.
அத்துடன் எந்த ஒரு பிரச்சனை குறித்து பேசும் போதும் அதை மூன்றாம் நபருக்கு ஏற்பட்ட பிரச்சனையாய் நினைத்துப் பேசும் மனோபாவம் பெருகிவிட்டது. அந்த பிரச்சனைக்கும் நாம் யாரிடம் பேசுகிறோமோ அவருக்கும் மிக நெருங்கிய தொடர்பிருந்தாலுமேகூட.
அதாவது எந்த ஒரு விஷயத்தையும் ஒரு செய்தியாகவே பார்க்கும் அவலமான மனோநிலை.
இளைஞர் ஒருவர் தன் தாயை அடித்து கொலை செய்துவிட்டு பணத்தைத் திருடிச் சென்றாலும் அது ஒரு செய்தி. பத்து வயது சிறுமியை வன்கொடுமை செய்த குடுகுடு தாத்தா பற்றியதும் ஒரு செய்தி. கொரோனாவால் இறந்த நடுத்தர வயது நண்பர் குறித்த தகவலும் ஒரு செய்தி. உங்கள் வீட்டில் ஒரு இறப்பு நடந்தாலும் அது ஒரு செய்தி. அடுத்த வீட்டில் குழந்தை பிறந்தாலும் அது ஒரு செய்தி.
இப்படி எதுவாக இருந்தாலும் அந்த நிமிடத்துக்கு அதை ஒரு பரபரப்பு செய்தியாக உள்வாங்கிக்கொண்டு அடுத்த நிமிடம் இயல்பாக கடந்து செல்லும் வெறுமையான மனோநிலைப் பெருகியதைத்தான் சொல்கிறேன்.
முன்பெல்லாம் ஒருவரின் தவறை எடுத்துச் சொல்ல பொதுவாக ஒரு உதாரணத்தைச் சொல்லி அதன்மூலம் ஒருவருடைய தவறை மறைமுகமாக உணர்த்துவார்கள்.
இப்போதெல்லாம் அப்படி எடுத்துச் சொல்ல முற்பட்டால் எதிராளி அதை மூன்றாம் நபருக்கான பிரச்சனையாகவே அல்லது மூன்றாம் நபரின் தவறாகவே நினைத்து அது குறித்து இன்னும் அதிதீவிரமாக விமர்சிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ‘எருமை மாட்டின் மீது மழை பெய்தால்’ என்று ஒரு சொல்லாடல் உண்டு. அதைப்போல எந்த ஒரு விஷயத்தையும் அது அவர்கள் சம்மந்தப்பட்டதாகவே இருந்தாலும் அதை தூர தள்ளி வைத்து அது நம்முடைய தவறு இல்லை. வேறு யாருடையதோ என்று நினைத்து வாயில் வந்ததை எல்லாம், மனதில் தோன்றுவதை எல்லாம் பேசிப் பேசி குளிர் காய்கிறார்கள்.
சமூக வலைதளங்கள் பெருகியதால் முகம் பார்க்க அவசியம் இல்லை. வெர்சிவல் உலகில் முகமூடி போட்டுக்கொண்டு எதையும் பேச முடிகிறது. எதையும் எழுத முடிகிறது. கட்டுப்படுத்த அவரவர்களின் மனசாட்சியைத் தவிர வேறு யாரும் கிடையாது. நினைத்தால் விருப்பம் இருந்தால் ‘இதோ நானிருக்கிறேன்’ என வெளிப்படுத்திக்கொள்ளலாம். விருப்பமில்லை எனில் மறைந்துகொண்டு வேடிக்கை மட்டும் பார்க்கலாம். ‘அப்படியா, நான் கவனிக்கவில்லையே’ எனச் சொல்லி தப்பிக்கலாம்.
‘எதிரியின் எதிரி எனக்கு நண்பன்’ என்பதைப் போல நமக்கு துன்பம் கொடுத்த ஒருவர் குறித்து எழுதி ‘இன்னாரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ என எச்சரிக்கைப் பதிவிட்டால் அந்த நபரை தங்கள் ‘நெருங்கிய’ நண்பராக்கிக்கொண்டு இன்பாக்ஸிலும், மெசஞ்சரிலும், வாட்ஸ் அப்பிலும் நம்மைப் பற்றியே அவதூறு பேசி மகிழும் மட்டமான மனநிலை பெருகிவிட்டது.
இதுபோன்ற காரணிகளால்தான் மறைமுகமாக ஒருவரின் தவறை சுட்டிக் காட்டினாலும் அதை உணர்வதற்கான பக்குவ மனிதர்கள் குறைந்து வருகிறார்கள். நேரடியாக முகத்துக்கு நேராக சொல்லிவிட்டால் நிரந்தர எதிரியாகி விடுகிறார்கள்.
‘எருமை மாட்டின் மீது மழை பெய்தால்…’ என்ற மனோநிலை பெருகியதற்கு இவையெல்லாம்தான் காரணங்களாக இருக்க முடியும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software