ஹலோ with காம்கேர் – 360
December 25, 2020
கேள்வி: விரைவில் வர இருக்கும் ஒரு பத்திரிகை நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் எனக்குப் பிடித்தவை என்ன தெரியுமா?
உங்கள் திறமையால் மக்கள் மனதில் இடம் பெற இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கொடுக்கும் அறிவுரை?
மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்கு நீங்கள் திறமைசாலியாக இருந்தால் மட்டும் போதாது. உங்கள் திறமையால் நீங்கள் உயர்ந்ததைப் போல உங்களைச் சார்ந்தவர்களை எந்த அளவுக்கு உயர்த்தி உள்ளீர்கள் என்பதில்தான் இருக்கிறது சூட்சுமம். அவர்களின் வெற்றியின் உயரமும், சாதனையின் உச்சமும் மக்கள் மனதில் உங்களின் இடத்தை மென்மேலும் உயர்த்தும்.
விருதுகள் குறித்து உங்கள் பார்வை?
விருதுகள் சாதனையாளர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. என் துறை சார்ந்த பயணத்தில் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு எத்தனையோ விருதுகள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் அந்தந்த அமைப்புகள் என் திறமைகளை கண்டறிந்து தானாகவே தேடி வந்து என்னை கெளரவித்த விருதுகள். என் 23 வயதில் இருந்து விருதுகள் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். கடந்த ஏழெட்டு வருடங்களாகவே எனக்கு விருதுகள் கொடுக்க நினைத்து என்னை அணுகுபவர்களிடம் அதை மறுத்து இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கச் சொல்லி வருகிறேன்.
1.சில ‘முக்கிய’ விருதுகளுக்கு நாம்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
2.ஒரு சில ‘சிறப்பான’ விருதுகளுக்கு நாம் விண்ணப்பித்த பிறகு அதற்கு நம்மைப் பரிந்துரை செய்ய சில முக்கியஸ்தர்களின் உதவியை நாட வேண்டியிருக்கும்.
3.இன்னும் ஒரு சில ‘பிரமிக்கத்தக்க’ விருதுகளுக்கு நாம்தான் முன்னெடுப்பு செய்ய வேண்டும்.
இதுவரை இந்த மூன்றையும் செய்வதற்கு எனக்கு விருப்பம் இல்லை என்பதால் அதற்கு முயற்சித்ததில்லை. அதற்கு எடுக்கும் முயற்சியில் 10 படைப்புகளை உருவாக்கிவிடலாம். அந்த அளவுக்கு நேரமும் உழைப்பும் தேவைப்படும் தேடல்கள் அவை.
எனக்கு விருதுகளை எல்லாம்விட எனக்கு மிக மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒரு விஷயம் உள்ளது. அது என்ன தெரியுமா? என் படைப்புகளில் பல புத்தகங்கள் வடிவிலும், சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆடியோ வீடியோ வடிவிலும் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பாட திட்டமாக உள்ளன. உலகளாவிய முறையில் பல நூலகங்களில் என் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இதுவே விருதுகளைவிட எனக்கு மன நிறைவைக்கொடுக்கும் விஷயம்.
காரணம். விருதுகள் என் ஷோகேஸை மட்டுமே அழகுபடுத்தும். பெருமைப்படுத்தும். கல்விக்கூடங்களில் பாடதிட்டமாக இருக்கும் என் படைப்புகள் எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றி அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருப்பதே ஆகும்.
முக்கியக் குறிப்பு: இதுபோல இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். நேர்காணல் வெளியானதும் விரைவில் பகிர்கிறேன். அது 2021-ன் தொடக்கத்தில் வெளிவரும் முதல் நேர்காணலாகவும் இருக்கலாம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software