ஹலோ with காம்கேர் – 361
December 26, 2020
கேள்வி: அண்மையில் என்னை பாதித்த இரண்டு விஷயங்கள் என்ன தெரியுமா?
சமீபத்தில் இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தது. துறவு வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்தாலும் சரி இல்லற வாழ்க்கையை விரும்பி தேர்ந்தெடுத்தாலும் சரி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதுதான் வேதனையின் உச்சம்.
முதல் விஷயம்:
கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில் பாதிரியார் தாமஸ் கோட்டூர் அவருக்கு உடந்தையாக இருந்த கன்னியாஸ்திரீ செபி இருவரும் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவித்து தண்டனையும் கொடுத்து தீர்ப்பளித்துள்ளது.1992-ல் நடந்த கொலைக்கான தீர்ப்பு 28 ஆண்டுகள் கழித்து இப்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம், கோட்டயத்திலுள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் கன்னியாஸ்திரீ அபயா. விடியற்காலையில் எழுந்து படிக்கும் வழக்கம் உள்ள அவர் தண்ணீர் குடிக்க சமையல் அறைக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் பாதிரியார் தாமஸ் கோட்டூரையும், கன்னியாஸ்திரீ செபியையும் ஒன்றாகப் பார்த்திருக்கிறார். தகாத தொடர்பு வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அபயாவை அடித்துக் கொன்று அருகிலுள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.
இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சி அடைக்கா ராஜு. இவர் அவ்வப்போது சிறிய திருட்டுகளில் ஈடுபடுவார்.
கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட அன்று இவர் அங்குள்ள அந்த கல்லூரிக்கு திருடுவதற்காக அதிகாலை சுமார் 4 மணி அளவில் சென்றுள்ளார். அப்போது 3 பேர் சேர்ந்து ஒரு பெண்ணை அங்குள்ள கிணற்றில் தூக்கி வீசுவதைப் பார்த்துள்ளார். கிணற்றில் வீசப்பட்டது கொலை செய்யப்பட்ட கன்னியாஸ்திரீ அபயாவின் உடல்.
போலீஸ் விசாரணையில் முக்கிய சாட்சியாக அடைக்கா ராஜு சேர்க்கப்பட்டார். வறுமையை காரணம் காட்டி பலகோடிகள் தருவதாக ஆசை காட்டப்பட்டாலும், பல்வேறு அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் இருந்தாலும் தன் வாக்குமூலத்தை திரும்பப் பெறாமல் கடைசிவரை தனது நிலையில் உறுதியாக நின்று வழக்கின் இறுதிவரை ஒரே நிலைப்பாட்டுடன் இருந்தவர் இவர் மட்டுமே.
திருட்டு தொழிலை அன்றே விட்டு, மனம் மாறி உழைத்து வாழ்ந்து வருகிறார்.
ஒரு வழக்கில் திருடர் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் நீதி கிடைத்திருப்பது ஏதோ சினிமாவில் நடக்கும் ஒரு நிகழ்வு போல பிரமிப்பாக இருந்தாலும், மிக இளம் வயதில் எந்த தவறுமே செய்யாத ஒரு இளம் பெண்ணை ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக கொலை செய்த நிகழ்வு மனதை மிகவும் பாதித்தது.
அபயா 14,15 வயதில் இருந்தே கன்னியாஸ்திரீ ஆக வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாராம். அவர் பெற்றோர் அதற்கு சம்மதிக்காததால் அழுது அடம் பிடித்து தன் இலக்கை அடைந்தாராம். அவருடைய வீட்டுக்கு கன்னியாஸ்திரீகளும், பாதிரியார்களும் வரும் போது அவர்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகளைப் பார்த்து அவர் கன்னியாஸ்திரீயாக ஆக ஆசைப்பட்டதாக அவரது சகோதரர் பிஜூ தாமஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது விஷயம்:
சின்னத்திரை நடிகை சித்ரா ஓட்டல் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்தது.
அவருடைய பெற்றோருக்கும் அவர் மீடியாவில் பணியாற்றுவது, நடிப்பது இவை பிடிக்காதாம். படிக்கும் காலத்திலேயே வீட்டுக்குத் தெரியாமல் சில சேனல்களில் நிகழ்ச்சிகளை நடத்தவும் தொகுத்தளிக்கவும் ஆரம்பித்திருக்கிறார். பிறகு வீட்டுக்குத் தெரிந்து அடியும் திட்டும் வாங்கி தன் கொள்கையில் உறுதியாக இருந்து சின்னத் திரை, வெள்ளித்திரை என தன் எல்லையை தன் திறமையினால் விரிவாக்கிக்கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வந்தவர், திருமணமும் செய்துகொண்டு தன் பணியை தன் பாதையில் வழக்கம்போல தொடரவும் முடிவெடுத்து அதற்கான முன் ஏற்பாடுகளில் பரபரப்பாக இருந்தவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இன்னமும் என் மனதால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாகவே உள்ளது.
முன்னதில் ஒரு பெண் துறவுக்காக வீட்டில் அழுது அடம்பிடித்து அதில் ஐக்கியமானவர். பின்னதில் ஒரு பெண் தன் விருப்பமான துறையில் தன் பாதையை அமைத்துக்கொள்ள வீட்டில் அழுது அடம்பிடித்து தனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.
இரண்டு நிகழ்விலும் பாதிக்கப்பட்டது ஒரு பெண்தான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software