ஹலோ with காம்கேர் – 362
December 27, 2020
கேள்வி: வாசிப்பதில் நான் கடைபிடிக்கும் லாஜிக் என்ன தெரியுமா?
‘வாசிப்பதற்குக் கூட லாஜிக்கா’ என ஆச்சர்யமாக இருக்கிறதா?
ஆம். வாசிப்பதற்கும் லாஜிக் வைத்திருக்கிறேன். சொல்கிறேன் கேளுங்களேன்.
என் துறை சார்ந்த புத்தகங்கள் தவிர பிறதுறை சார்ந்த புத்தகங்கள் நிறைய வாசிக்க வேண்டும் என்கின்ற ஆர்வம் இருந்தாலும் என் மனமும் உடலும் ஒருசேர ஒத்துழைத்தால் மட்டுமே என்னால் வாசிக்க முடியும்.
படிப்பதற்கு மனதை தயார்படுத்துவதைப்போல் உடலையும் தயார்படுத்த வேண்டும்.
ஒரு பணியை செய்வதற்கு மனதைத் தயார்படுத்தலாம். உடலை எவ்வாறு தயார்படுத்துவது என நீங்கள் நினைக்கலாம்.
நிச்சயம் முடியும்.
என் பள்ளிப் பருவத்தில் இருந்தே நடந்து கொண்டே படிப்பது என்பது என் சுபாவம். உடலுக்கு ஒரு அசைவைக் கொடுத்துக்கொண்டே படிக்கும்போது நாம் படிக்கும் விஷயங்கள் வழக்கத்தைவிட இன்னும் வேகமாக நமக்குப் புரியத் தொடங்கும். சுவாரஸ்யம் கூடும். சாதாரணமாக ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து படிக்கும்போது புரிந்துகொள்ளும் விஷயங்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக மூன்று மடங்கு வேகமாக பாடங்களை மனதுக்குள் உள்வாங்கிக்கொள்ளும் சக்தியை எனக்குக் கொடுக்கும்.
மேலும் பள்ளிக்காலம் முதல் கல்லூரி காலம் முடியும் வரை வாய் விட்டுப் படிக்கும் வழக்கமும் உண்டு. இதன் பொருள் மனப்பாடம் செய்வது என யாரும் தவறாக நினைக்க வேண்டாம். ஒரு முறைக்கு இருமுறையாக மனதுக்குள் ஒருவிஷயம் செல்லும்போது அதன் புரிதல் இன்னும் மேம்படும்.
ஒரு கான்செப்ட்டை கண்களால் பார்த்து மனதுக்குள் வாசித்து மேலோட்டமாக ஒருமுறை புரிந்துகொண்ட பிறகு வாய்விட்டு படிக்கும்போது நாம் படித்ததை இந்த இரண்டாவது முறை மனதுக்குள் கொண்டு செல்கிறோம். இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் நாம் படிப்பது நமக்குப் புரிபடும். மனதுக்குள் பதியவும் செய்யும்.
இன்றும் சில விஷயங்களை மென்மையாக வாய்விட்டு உச்சரித்து வாசிப்பேன். இது வாசிப்பின் மற்றொரு பரிணாமத்தை எனக்குக் கொடுக்கும்.
இப்போதுகூட ஏதேனும் ஒரு விஷயத்தை வேகமாகவும் ஆழமாகவும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் நடந்துகொண்டே படிப்பது என் சுபாவம். அது அச்சுப் புத்தகங்களாக இருந்தாலும் சரி, மொபைல், ஐபேட், கிண்டில் போன்ற சாதனங்களாக இருந்தாலும்சரி மெல்ல நடந்துகொண்டு படிப்பது என்பது வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யத்தை மென்மேலும் கூட்டும்.
வேறு வழியே இல்லை, லேப்டாப்பில்தான் வாசிக்க வேண்டும் என்றால் மட்டுமே ஓரிடத்தில் அமர்ந்து படிப்பேன்.
மேலும் மேடையில் உரை நிகழ்த்தும்போதுக்கூட ஓரிடத்தில் நின்றுகொண்டு போடியத்தில் பேசுவதைவிட இயல்பாக நடந்துகொண்டு பேசுவது மிகவும் பிடிக்கும். அப்போதுதான் இறுக்கமாக பேசாமல் இயல்பாக பேசுவதற்கு என் மனது தயாராகும். போடியத்தில் நின்றுகொண்டு பேசும்போது நான் என்ன தயார் செய்திருக்கிறேனோ அதை அப்படியே அதன் எல்லைக்குள் இருந்து மட்டுமே வெளிப்படுத்த முடியும். நடந்துகொண்டே பேசும்போது தயார் செய்து வந்திருக்கும் விஷயங்களில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டி பேச முடியும்.
இவை எல்லாம் என் அனுபவம். உங்கள் அனுபவம் வேறாக இருக்கலாம். அவரவர் பழக்கம். அவரவர் வழக்கம். அவரவர் விருப்பமும்கூட.
இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்கின்ற கட்டாயம் ஏதுமில்லை. யாரும் கட்டுப்படுத்தவும் முடியாதல்லவா?
ஒருசிலர் படுத்துக்கொண்டே வாசிப்பார்கள். நானும் படுத்துக்கொண்டே வாசித்துப் பார்த்திருக்கிறேன். வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்குள் தூக்கம் கண்களைச் சுழற்றும். எனவே சீக்கிரம் தூக்கம் வேண்டும் என விரும்பினால் படுத்துக்கொண்டே படிக்க ஆரம்பித்துவிடுவேன். நிறைய வாசிக்க வேண்டும் என நினைத்தால் நடந்துகொண்டே படிக்கத் தொடங்குவேன். இதில் மற்றொரு நன்மையும் உண்டு. வாக்கிங் செல்வதைப் போன்று உடலுக்கும் ஒரு பயிற்சி கிடைக்கிறதல்லவா?
இதுதான் வாசிப்பதில் நான் பின்பற்றும் லாஜிக்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software