முதல் வாழ்த்து… முத்தான பாராட்டு!
கடந்த 2 ஆண்டுகளாய் விடியற்காலை 6 மணிக்கு நான் தொடர்ச்சியாய் எழுதி பதிவிட்டுவரும் விடியற்காலை பதிவுகளுக்கு வந்திருக்கும் முதல் வாழ்த்து இது.
இந்த வருடம் முடிந்து 2021 தொடங்க இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் தருவாயில் எனக்கு சர்ப்ரைஸாக வாழ்த்துக் கவிதை எழுதியதுடன் அதற்குப் பொருத்தமாக வடிவமைத்து வாழ்த்திப் பாராட்டிய கமலா முரளி அவர்களின் அன்புக்கு நன்றி.
நான் அடிக்கடி பயன்படுத்தும் எழுத்தும், வாசிப்பும் என் ’சுவாசம்’ , என் பெற்றோரை நான் குறிப்பிடும் ‘அப்பாம்மா’ போன்ற வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே பயன்படுத்தி என் எழுத்தை அவர் நேசிப்பதை நயமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த அளவுக்கு என் எழுத்தை நேசிக்கும் அன்பர்களை பெற்றது என் பாக்கியம்தான். இயற்கையும் இறைவனும் என்னுடன் துணை நிற்பதால் எழுத்து எனக்கு கைகூடுகிறது.
சென்ற வருடம் இந்தநாள் இனிய நாள். இந்த வருடம் ஹலோ வித் காம்கேர். அடுத்த வருடம் இன்னும் புதுமையாய்…
பெயரில்தான் மாற்றம். நோக்கம் ஒன்றே ஒன்றுதான். விடியற்காலையில் நல்ல தகவலுடன் தொடங்க வேண்டும் என்பதே.
தொடர்ச்சியாகப் படித்துவரும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
அன்புடன்,
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
கமலா முரளி அவர்களின் வாழ்த்துக் கவிதை
புத்தொளிப் பெண்
காம்கேர் கே.புவனேஸ்வரிக்கு!
சாந்தமான விழியிரண்டும்
பேசும் தன்னம்பிக்கை வீரம்!
பூந்தோட்டச் சொற்கோவை
பேசும் உழைப்பின் நற்தரம்!
இளம்பெண் தான் உற்சாகத்தில்
செயலில், தோற்றத்திலும்!
களம் கண்டு வாகை சூடியதோ
கணினி தொழில்நுட்பத்தில்!
கருத்துகள் புதுக்கோணத்திலே
கனப் பொருத்த சொற்களுடன்!
எழுத்து அவருக்கு ஓர் வேள்வி!
வாசித்தலோ அவர் சுவாசம்!
நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்,
நவயுக சமூக தள பயன்முறை
நற்சிந்தனை, மன உறுதி என
நற்காலை இடுவாரே பதிவு!
பல்கலைக்கழகப் பாடங்களாய்
வித்தகர் இவரின் புத்தகங்கள்!
பண்பான அப்பாம்மா ஆசியுடன்
சேவைப்பணி செய்கிறாரே!
கலைமகள் அருள் பெற்றவராம்!
காம்கேர் நிறுவன அதிபதியாம்!
காம்கேர் கே.புவனேஸ்வரியே!
காவியமாய் நீ வாழியவே!
புத்தாண்டு வாழ்த்துகளுடன்
கமலா முரளி
டிசம்பர் 29, 2020