ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 21
ஜனவரி 21, 2021
முன் குறிப்பு, அவசியமான குறிப்பும்கூட: இந்தப் பதிவு யாரையும் குறை சொல்வதற்கான பதிவல்ல. நல்ல புரிதலுக்கான பதிவு. எனவே யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்!
புரிந்துகொள்ளுதலும் ஒரு கலையே!
ஒரு விஷயத்தை அலசி ஆராயும்போது பல்வேறு விஷயங்களை மேற்கோள் காட்டி பேச வேண்டியிருக்கும். எந்த விஷயம் முதன்மை விஷயமாக இருக்கிறதோ அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் மேற்கோள் காட்டி பேசப்படும் காரணிகள் அமைந்திருக்கும்.
உதாரணத்துக்கு படிக்க அடம் பிடிக்கும் உங்கள் பிள்ளைக்கு அறிவுரை சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். என்னவெல்லாம் சொல்வீர்கள்?
‘நன்றாக படித்தால்தான் நல்ல வேலை கிடைக்கும்’
‘நல்ல வேலை இருந்தால்தான் நல்ல வாழ்க்கை அமையும்’
‘நல்ல வாழ்க்கை அமைந்தால்தான் நிம்மதியாக வாழ முடியும்’
இப்படி சொல்லிக்கொண்டே வரும் நீங்கள் ஒரு கட்டத்தில் ‘நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படித்தேன் தெரியுமா, அப்போதெல்லாம் கரண்ட் அடிக்கடி போகும்… இப்போது இருப்பதைப் போல் யுபிஎஸ், இன்வர்டர் எல்லாம் கிடையாது… அதுவும் தேர்வு நாளன்று கரண்ட் போனால் இருட்டில் மெழுகுவர்த்தியில்தான் படிக்க வேண்டியிருக்கும்’ என்று சொல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.
உங்கள் பிள்ளை படிப்பதால் உண்டாகும் நன்மைகள் குறித்து நீங்கள் சொன்ன அத்தனை காரணங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு ‘அப்போ என்னை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கச் சொல்கிறீர்களா?’ என ஆரம்பித்து விவாதம் செய்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.
அதுபோலதான் நான் தினந்தோறும் எழுதும் பதிவுகளில் முதன்மையாக ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டிருப்பேன். அதற்கு வலுசேர்க்கும் விதமாக ஒன்றிரண்டு உதாரணங்களை சொல்லி இருப்பேன்.
இரண்டு தினங்களுக்கு முன்னர், ‘மாற்றம் ஒன்றே மாறாதது, ஆனால் மாறிக்கொண்டே இருப்பது ஒருவித மனநோய்’ என்ற கான்செப்ட்டை எடுத்து அலசியிருந்தேன். அதில் ஒரு இலக்கில் நிரந்தரமாக இல்லாமல் வேலைகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பவர்களுக்கு எந்த ஒரு பணியிலும் முழுமையான அறிவு கிடைக்காது என்பதே நான் சொல்ல வந்த கருத்து.
உண்மையில் நம் மனதுக்கு பிடித்த வேலை, பிடிக்காத வேலை என்ற பாகுபாடெல்லாம் இருப்பதில்லை. நாம்தான் அதையெல்லாம் வரையறுத்துக்கொள்கிறோம். எந்த வேலையையும் நம்மால் ஈடுபாட்டுடன் செய்ய முடியும். அப்படித்தான் இயற்கை நம் மனதையும் உடலையும் பக்குவப்படுத்தி வடிவமைத்துள்ளது என ஆரம்பித்து எப்படி பெண்கள் தங்களுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் தினமும் சோர்வில்லாமல் சமைக்கிறார்களோ, எப்படி தங்களுக்குக் குழந்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் கடமைகளை நிறைவேற்றுகிறார்களோ அதுபோல்தான் ஓரிடத்தில் பணிபுரிவதையும் சொல்கிறேன் என முடித்திருந்தேன். (இந்தப் பதிவின் லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=7822)
இந்தப் பதிவின் கரு என்ன?
இலக்கை நிர்ணயம் செய்துகொண்டு ஈடுபாட்டுடன் உழைப்பது குறித்தது.
ஆனால் ஒரு சிலர் இந்தப் பதிவின் கருவை விட்டுவிட்டு ‘பெண்கள் இப்போதெல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டேதான் திருமணம் செய்துகொள்கிறார்கள். இது இப்போது ட்ரென்ட் ஆகிவருகிறது… அவர்களின் பெற்றோரும் அதற்கு சம்மதிக்கிறார்கள்… சமுதாயத்தையும் சமாதானப்படுத்திவிடுகிறார்கள்…’ என்ற நோக்கிலும், ‘குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பாததும் பெண்களின் உரிமை சரி… ஆனால் அந்த எண்ணத்தை திருமணத்துக்கு முன்பாக வரப்போகும் கணவனிடம் சொல்லி சம்மதம் பெற்றிருந்தாக் ஓ.கே! அப்படி இல்லையென்றால் அது சரியாகுமா?’ என்ற நோக்கிலும் தங்கள் கருத்துக்களை முன் வைத்திருந்தார்கள்.
இப்படி விவாதிப்பவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?
ஒரு இலக்கை நிர்ணயம் செய்துகொண்டு தொடர்ச்சியாக ஓரிடத்தில் கொஞ்சம் காலமாவது பணி புரிந்து அவர்களின் இலக்கு சார்ந்த துறையில் ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டாம் என சொல்ல வருகிறார்களா?
பெண்களின் விருப்பங்களையும், உரிமைகளையும் நாம் என்னதான் எழுதினாலும், பேசினாலும், விவாதித்தாலும் இந்த உலகின் கடைசி பெண் இருக்கும் வரை அவளுக்கான கடமைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். அதை அவளால் ஒதுக்கித் தள்ளிவிட்டு செல்லவே முடியாது. அவள் விருப்பங்கள், உரிமைகள் இவற்றைத்தாண்டி அவளுக்கான கடமைகளை நிறைவேற்றுவதில் என்றுமே அவள் தவறியதில்லை. இயற்கையின் சில கடமைகளை அவள்தானே செய்ய வேண்டும். அதில் அவள் விருப்பம், உரிமை எல்லாம் இரண்டாம்பட்சம்தான். எல்லா நேரங்களிலும் உரிமைக்காக மட்டுமே குரல்கொடுத்துக்கொண்டிருக்க குடும்ப அமைப்புகள் பொதுவெளி அல்லவே. இரண்டு பேர் சேர்ந்து முடிவெடுக்கும் சூழலில் பல நேரங்களில் அவளது உரிமைகளையும் விருப்பங்களையும் அவளாகவே புறம் தள்ளிவிட்டுத்தான் செல்பவளாக இருக்க வேண்டிய சூழல் அமையும். அதற்காக அவள் சந்தோஷமாக இல்லை என பொருள் கிடையாது.
அதுபோல்தான் நாம் செய்யும் பணி எதுவாக இருந்தாலும் அதை ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும் என்பதை நான் ஆணித்தரமாக வலியுறுத்துகிறேன்.
இப்படி நான் எழுதியிருக்கும் பதிவில் சொல்ல வந்த முதன்மை கருத்தை அப்படியே ஒதுக்கி விட்டு அதற்கு வலு சேர்க்கும் உதாரணங்களை எடுத்து வைத்துக்கொண்டு சரியான புரிதல் இல்லாமல் பேசுவது எப்படி இருக்கிறது தெரியுமா? அதற்கும் ஒரு உதாரணத்தை என்னால் சொல்ல முடியும்.
ஒரு நடிகை தெளிவாக தன் பேட்டியில், ‘ஒரு சில வருடங்கள் நடித்த பிறகு என் துறை சார்ந்தவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்…’ என்று ஆரம்பித்து நிறைய விஷயங்களை சொல்லி இருப்பார். இன்னும் சொல்லப் போனால் ‘திருமணத்துக்குப் பிறகும் நடிப்பேன், எனக்கு திரைப்படம் தயாரிப்பதில் ஆர்வம் அதை முன்னெடுத்து செய்வேன்…’ என்பதுதான் அவர் சொல்ல வந்திருக்கும் முதன்மை கருத்தாக இருக்கும்.
ஆனால் பரபரப்புக்காக ‘குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்று சொன்னதற்குப் பிறகான தகவல்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு ‘அந்த நடிகைக்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதாம்’ என்றும் ‘திருமணம் செய்துகொள்ளாமலேயே பிள்ளை பெற ஆர்வமா அந்த நடிகைக்கு… அச்சச்சோ’ என தவறான பொருள்படும் வகையில் வேண்டுமென்றே தலைப்பிலேயே நடிகைகளை கொச்சைப்படுத்துவதும் நடந்துகொண்டுதானே இருக்கிறது. (இதற்கு விதிவிலக்காக சில மீடியாக்கள் இருக்கலாம். அவர்களை வணங்குகிறேன்)
இதைப் போல் ஒரு விவாதத்தின் கருப்பொருளை விட்டு அதற்கு வலு சேர்ப்பதற்காக சொல்லி இருக்கும் உதாரணங்களை எடுத்து வைத்துக்கொண்டு விவாதிப்பதும்.
ஒரு படைப்பின் வெற்றி என்ன தெரியுமா? படைப்பாளி தான் சொல்ல வந்ததை அதே கோணத்தில் அதன் பயனாளர்களை மிக சரியாக புரிந்துகொள்ளச் செய்வது. அதாவது புரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாக ஒரு படைப்பை வெளியிடுவது. அது எழுத்தாக இருக்கலாம், ஆடியோவாக இருக்கலாம், வீடியோவாக இருக்கலாம்.
நான் எல்லோருமே புரிந்துகொள்ளும் அளவுக்கு தெளிவாக படைப்பை வெளியிடும் என் பணியை சரியாகவே செய்துகொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன்.
தினந்தோறும் விடியற்காலையில் நான் எழுதும் ஒவ்வொரு பதிவும் உங்கள் வாழ்க்கையுடன் உங்களை தொடர்புப்படுத்த முடிந்தால் அதுவே என் படைப்புக்கான ஆகச் சிறந்த மாபெரும் வெற்றி. அந்த வெற்றியைத்தான் நித்தம் எனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும். அனைவரும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
தொடர்ந்து வாசியுங்கள்… உங்கள் ஒவ்வொருவரின் வாசிப்பும் எனக்கு தூண்டுகோல்.
மீண்டும் முதல் பத்தியில் சொல்லி உள்ள ‘முன் குறிப்பு, அவசியமான குறிப்பும்கூட’ என்பதை படிக்கவும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP