ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 15: நீங்கள் புதிதாக தொழில் தொடங்கி இருக்கும் சுயதொழில் முனைவோரா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 15
ஜனவரி 15, 2021

நீங்கள் புதிதாக தொழில் தொடங்கி இருக்கும் சுயதொழில் முனைவோரா?

நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து 1992-ல் காம்கேர் சாஃப்ட்வேர் என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு (ஐடி) நிறுவனத்தைத் தொடங்கியபோது நிறைய பேர் எனக்கு சொன்னது என்ன தெரியுமா?

‘ஒரு ஜெராக்ஸ் மெஷின் வாங்கிப் போட்டு டிடிபி சென்டரையும் பிரவுசிங் சென்டரையும் தொடங்கிவிட்டால் சிறப்பாக இருக்கும்….’

அவர்களுக்கு என்ன தெரியும்? என் குறிக்கோளும் இலட்சியமும் நம் நாட்டிற்காகவே எங்கள் காம்கேர் பிராண்டில் சாப்ஃட்வேர்கள் தயாரிப்பதுதான் என்பது. அவர்கள் கம்ப்யூட்டரைப் பார்ப்பதெல்லாம் டிடிபி சென்டரிலும், பிரவுசிங் சென்டரிலும் மட்டும்தானே. அதைத்தாண்டிய புலமையையும் சிந்தனையையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாதல்லவா?  அத்துடன் அப்போதெல்லாம் நம் நாட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொழில்நுட்பம் வளரவே இல்லை.

நான் சிரித்துக்கொண்டே அவர்களுக்கு என் குறிக்கோளை புரிய வைப்பேன். ஆனாலும் பெரும்பாலும் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

இவ்வளவு ஏன்? ஒருமுறை அவள் விகடனில் என்னை பேட்டி எடுத்தபோது எங்கள் சாப்ஃட்வேர் நிறுவனம் குறித்து சொன்ன எதையுமே புரிந்துகொள்ளாமல் பேட்டி எடுத்தவர் தன் புரிதலுக்கு ஏற்ப நான் பிரவுசிங் சென்டர் நடத்துவதாகவே நினைத்துக்கொண்டு  ‘பிரவுசிங் செண்டர் நடத்தும் காம்கேர் புவனேஸ்வரி!’ பேட்டியை எழுதி அது வெளிவந்தும் விட்டது. சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தில் என்ன செய்வார்கள், என்னென்ன பணிகள் இருக்கும் என்பதையெல்லாம் நான் தெள்ளத்தெளிவாக புரியும்படி விரிவாக விளக்கியும் அந்த நிருபர் எப்படி புரிந்துகொள்ளாமல் தன் தவறான புரிதலை பேட்டியாக எழுதி வெளியிட்டார் என்பது எனக்கு ஆச்சர்யமே.

பின்னர் அவள் விகடனுக்குக் கடிதம் எழுதினேன். அவர்கள் தவறுக்கு வருந்துகிறோம் என்ற தகவலை அடுத்த இதழில் வெளியிட்டார்கள் என்பது வேறு விஷயம்.

நாம் செய்கின்ற பிசினஸ் குறித்து மற்றவர்களுக்கு விளக்கிப் புரிய வைத்து நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. நம் தயாரிப்புகள் மக்களை சென்றடையும்போது அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உபயோகப்பட ஆரம்பிக்கும்போது மட்டுமே அவர்களால் நம் பிசினஸின் தன்மை குறித்து உணர முடியும். எனவே கவனம் நம் தயாரிப்புகளில் இருக்க வேண்டும். இதுதான் சுயமாக தொழில் தொடங்குபவர்கள் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயம்.

திறமை வேறு, ஆர்வம் வேறு என்பதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு ஆர்வம் இருக்கும் துறைகளில் எல்லாம் திறமை இருக்கும் என சொல்ல முடியாது. உங்களுக்கு பாட்டுப் பிடிக்கும் என்றால் அந்து உங்கள் ஆர்வம். உங்களுக்குப் பாட்டுப் பாடும் திறமை இருந்துத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. பாட்டு கேட்பதில் ஆர்வம் இருந்தால் போதும். பாட்டு கேட்பது என்பது ஆர்வம். பாட்டுப் பாடுவது என்பது திறமை. இதில் எது உங்கள் தேர்வு என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

உங்கள் திறமை என்ன, சக்தி என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் புற காரணங்களினால் அவை மிகைப்படுத்தப்பட்டு உங்கள் கண்களை மறைத்து உங்களை அலைக்கழிக்காமல் இருந்தாலே நீங்கள் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என அர்த்தம்.

ஏதேனும் ஒரு காரணத்தால் பிசினஸில் தோல்வி அடைந்தால், வெற்றி பெற்றே தீருவேன் என உங்கள் உடல் மற்றும் மனநலத்தை அடகு வைத்துவிடாதீர்கள்.

தன்னம்பிக்கை வேறு, சாத்தியக் கூறுகள் வேறு. சாத்தியமே இல்லாத விஷயங்களில் நீங்கள் எத்தனை தன்னம்பிக்கையாக இருந்தாலும் வெற்றிபெறுவது கடினம்.

வளர்ச்சி வேறு, வீக்கம் வேறு. பிசினஸில் நாம் கொடுக்கும் இன்புட்டுக்கு அவுட்புட் கொடுத்தால் அது வளர்ச்சி. அதை மீறிய அவுட்புட் கிடைக்கிறதென்றால் நீங்கள் எங்கோ சறுக்குவதற்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணருங்கள்.

‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டும்… இந்த பிராஜெக்ட்டை செய்தால் உங்களை உலகறியச் செய்கிறோம்…’ என உங்களை உசுப்பேற்றி தங்களுக்குத் தேவையானதை செய்துமுடித்துக்கொள்ளும் சுயநலவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர். எனவே உங்கள் படிப்பு, திறமை இவற்றின் அடிப்படையில் தொடங்கி இருக்கும் அல்லது செய்துகொண்டிருக்கும் பணியில் இருந்து திசை திரும்பாதீர்கள்.

உங்கள் திறமை என்ன, அதனடிப்படையில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள், எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பது உங்கள் மனதுக்கு நன்கு தெரியும். எனவே உங்களை வஞ்சப் புகழ்ச்சி செய்யும் எந்த வார்த்தைக்கும் மயங்கி சூழ்ச்சியில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

‘நீங்கள் செய்துகொண்டிருக்கும் பிசினஸுடன் சேர்த்து இதையும் செய்யலாமே…’ என்று உங்கள் திறமையை தங்கள் தேவைக்கு பயன்படுத்திக்கொண்டு உங்கள் பணிக்கு இம்மியும் சம்மந்தமே இல்லாத பிராஜெக்ட்டை உங்கள் தலையில் சுமத்தி நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணியின் தன்மையையே திசை மாற்றிவிடுபவர்களும் உண்டு. உங்களுக்கு நேரடியாக ஒரு பணியைப் பற்றிய முழுமையான அறிவு இல்லாமல் மற்றவர்களை நம்பி அதை பிராஜெக்ட்டாக எடுக்காதீர்கள்.

‘உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்… நாங்கள் செய்து தருகிறோம்…’ என அரசியல் பிரமுகரோ, ஏதேனும் ஒரு துறையில் பிரபலமானவரோ சொன்னால் அதை வேதவாக்காக நினைக்க வேண்டாம். உங்களால் செய்து முடிக்கக் கூடிய வேலைகளை நீங்களே செய்துகொள்ளுங்கள். சிபாரிசை கூடுமானவரை தவிர்க்கவும்.

நாங்கள் இருக்கிறோம்’ என்று உறுதி அளிக்கும் நபர்கள் நீங்கள் சிக்கலில் மாட்டும்போது தொடர்பு எல்லைக்கு வெகுதூரம் சென்றிருப்பர் அலைபேசியில் மட்டுமல்ல, நேரில்கூட முக தரிசனம் கிடைக்காது.

தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். கடன் கொடுக்கிறார்களே என கடன் வாங்கி அதை அடைப்பதற்காக சம்மந்தமில்லாமல் ஏதேனும் ஒரு பிராஜெக்ட்டை எடுத்து அதை முடிக்கவும் முடியாமல் கடனையும் அடைக்க முடியாமல் திண்டாட வேண்டாமே.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon