ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 14
ஜனவரி 14, 2021
இலக்கைப் பற்றிக்கொள்ளாதீர்கள், இலக்கில் கரையுங்கள்!
பலருக்கும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதைவிட தானே ஒரு பிசினஸ் தொடங்குவதில் விருப்பம் அதிகம் இருக்கிறது. தவறில்லை. ஆனால் சில புரிதல்களை மனதில் நிறுத்திக்கொண்டுத் தொடங்க வேண்டும்.
பல வருடங்களாக பத்திரிகை துறையில் பணிபுரிந்த நண்பர் ஒருவர் அவர் மனைவியுடன் சேர்ந்து கேட்டரிங் பிசினஸ் தொடங்கியபோது என்னிடம் அவர் பகிர்ந்துகொண்டவை இன்றும் நினைவில் இருக்கிறது.
‘ஒருவரிடம் கை கட்டி அடிமைபோல வேலை பார்த்து பார்த்து அலுத்துப் போச்சு மேடம்… அதான் சொந்தமா பிசினஸ் ஆரம்பிச்சுட்டேன்…’
நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘ஒரு நாள் லீவு போடக் கூட ஹெச் ஆர் கிட்ட ஆயிரத்தெட்டு காரணங்கள் சொல்லணும்… எனக்கான லீவை நான் எடுக்கக் கூட ஆஃபீஸ்ல மன்றாடணும்…’
என் அமைதி அவருக்கு உற்சாகத்தைக் கொடுக்க இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டே போனார்.
இறுதியில் என் அனுபவத்தில் மூன்று கருத்துக்களை முன்வைத்தேன்.
‘முழு சுதந்திரம் கொடுத்துவிட முடியுமா?’
‘உங்களுக்கு பல பாஸ்கள்’
‘லீவுன்னா லீவுதான்!’
‘நீங்கள் ஓரிடத்தில் வேலை செய்வதையே என்னவோ கை கட்டி அடிமைப் போல வேலை பார்த்ததா சொல்றீங்களே… அப்போ நீங்கள் தொடங்கி இருக்கும் பிசினஸில் உங்களிடம் வேலை பார்ப்பவர்களும் அப்படித்தானே நினைத்துக்கொண்டு வேலை பார்ப்பார்கள்…’ என்று கேட்டேன்.
‘நான் அப்படி நடந்துகொள்ள மாட்டேன் மேடம். முழு சுதந்திரம் கொடுத்துவிடுவேன்…’ என்றார்.
‘அப்படித்தான் எல்லா நிர்வாகத் தலைமைகளும் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு தாங்கள் முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாகவே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்… ஏன் அண்மையில் நீங்கள் வேலையை உதறிவிட்டு வந்தீர்களே அந்த ஓனர்கூட அப்படித்தான் நினைத்துக்கொண்டிருப்பார். ஆனால் உங்களை திருப்திப்படுத்த முடிந்ததா அவரால்?’ என்றபோது அமைதியானார்.
நான் தொடர்ந்தேன்.
‘நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களுக்கு ஒரு பாஸ்தான். உங்கள் வேலையில் ஏதேனும் பிழை நேர்ந்துவிட்டால் அவருக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். ஆனால் நீங்கள் வேலை கொடுக்கும் நிலைக்கு வந்துவிட்டால் உங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளரும் உங்களின் பாஸ்போலதான்.
குறிப்பாக நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் கேட்டரிங் பிசினஸில் ஆர்டர் கொடுக்கும் மொத்த குடும்பமும் உங்கள் பாஸ்தான்’ என்றபோது நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்கத் தொடங்கினார்.
நான் மேலும் தொடர்ந்தேன்.
ஓரிடத்தில் பணிபுரியும்போது ‘லீவு என்றால் லீவுதான்’. போனை ஆஃப் செய்துவிட்டு உங்கள் சொந்த வேலைகளைப் பார்க்கலாம். ஆனால் சொந்த பிசினஸில் அசதியாய் இருக்கிறதென்று அரை மணி நேரம் நிம்மதியாய் ரெஸ்ட் எடுக்க முடியாது. வருடத்தின் 365 நாட்களும் நினைவுகள் உங்கள் பிசினஸ் குறித்தே சுற்றிக்கொண்டிருப்பதை தவிர்க்கவே இயலாது.’
சொந்தமாக பிசினஸ் செய்வது நல்ல விஷயம்தான். ஆனால் பிசினஸ் செய்யும்போது கட்டற்ற சுதந்திரமாக இருக்கலாம் என நினைப்பதுதான் தவறான கண்ணோட்டம். அப்போதுதான் உங்களுக்கு நீங்களே எத்தனையோ கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை மறவாதீர்கள்.
வேலைக்குச் செல்கிறீர்களோ அல்லது பிசினஸ் செய்கிறீர்களோ அது உங்கள் தேர்வு. ஆனால் இரண்டிலுமே செய்யும் செயலில் ஈடுபாடு மிக முக்கியம்.
ஒரு வேலையை இலக்காக்கிக்கொண்டால் அந்த இலக்கை நாம் பற்றிக்கொள்கிறோமா அல்லது இலக்கு நம்மைப் பற்றிக்கொள்கிறதா என்பதில்தான் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்.
என்னைப் பொருத்தவரை பிசினஸ் ஆகட்டும், தொழில்நுட்ப லாஜிக் ஆகட்டும், ஹார்ட்வேர் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகட்டும் எல்லாவற்றுக்குமான தீர்வு உறக்கத்தில் என் கனவில்தான் கிடைத்திருக்கின்றன.
நான் படித்தது தொழில்நுட்பம். திறமை எழுத்து. கனவு முழுக்க முழுக்க கிரியேட்டிவிடி.
நான் சாஃப்ட்வேரும் தயாரிப்பேன். கதையும் எழுதுவேன். மிமிக்கிரியும் செய்வேன். படங்களும் வரைவேன். அனிமேஷனும் செய்வேன், மேடையிலும் பேசுவேன். வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் எடுப்பதிலும் நுணுக்கமாக வீடியோ எடிட்டிங் செய்வதிலும் திறன் உண்டு.
என் எண்ணம் சொல் செயல் இப்படி அனைத்தையுமே நான் எடுத்துக்கொண்ட இலக்கிலேயே இருப்பதால்தான் இத்தனையும் சாத்தியமாகிறது.
புகழ், பெயர், பணம் இப்படி எதற்குமே நான் அவசரப்பட்டதில்லை. என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டிய அளவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போதும் தொடர்கிறது. அந்த நிறைவே என்னை அடுத்தடுத்த இலக்கை நோக்கி உந்தித்தள்ளுகிறது.
இலக்கை நான் பற்றிக்கொண்டேன் என்பதைவிட இலக்கு என்னைப் பற்றிக்கொண்டு நான் அதில் கரையத்தொடங்கினேன் என்பதே நிஜம்.
இலக்கில் கரையுங்கள், வெற்றியில் மிதக்கலாம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP