ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 9: புகழ்ச்சியும் ஒருவகை மெஸ்மரிசமே! 

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 9
ஜனவரி 9, 2021

புகழ்ச்சியும் ஒருவகை மெஸ்மரிசமே!

பணி இடங்களில் பெரும்பாலோனோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?

நல்லபடியாக வேலை செய்துகொண்டிருப்பார்கள், பயிற்சிப் பணியில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ‘ஹை ஸ்பீட்’ எடுத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் வேலையில் யாரேனும் ஒருவர் அவர்கள் மனதைக் கலைக்க தயாராக நிற்பார்கள். அது அவர்கள் வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் பொறாமையில் செய்யும் நயவஞ்ச செயலாக இருக்கும்.

பெரிய நயவஞ்சகம் எல்லாம் செய்ய மாட்டார்கள். ஒரே ஒரு வரி புகழ்ச்சியில் எதிராளியை கவிழ்த்து விடுவார்கள்.

காரணம் எதிராளி தன் திறமையினால் உழைப்பினால் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் நேரத்தில் அவர்களிடத்தில் அசாத்திய தன்னம்பிக்கை உண்டாகி இருக்கும்.

ஒரு சிலருக்கு அந்த தன்னம்பிக்கை என்பது எல்லை மீறி கர்வமாக தற்பெருமையாக அவர்களை அறியாமலேயே உருமாறி இருக்கும். அந்த நேரத்தில் அவர்களை நோக்கி வரும் புகழ்ச்சி நல்ல புகழ்ச்சியா வஞ்சப் புகழ்ச்சியா என்பதைக் கூட அவர்களால் இனம் கண்டுகொள்ள முடியாது. தங்கள் மீதான அதீத கர்வம் அவர்கள் கண்களை மறைக்கும். புகழுக்கு அடிமையாகி மெஸ்மரிசம் செய்வதைப் போல வஞ்சகம் செய்பவர்கள் சொல்வதை அப்படியே செய்ய ஆரம்பிக்கவும் தயங்க மாட்டார்கள்.

அப்படி என்ன மிஸ்மரிசம் செய்யும் அளவுக்கு அவர்கள் சொல்வார்கள்?

‘உங்கள் திறமைக்கு நீங்கள் எங்கேயோ இருக்கணும்…’

அவ்வளவுதான். இந்த ஒற்றை வார்த்தையில் ‘க்ளீன் போல்ட்’ என்று சொல்வார்களே அப்படி மதியை கழற்றி தூர வீசிவிட்டு அவர்கள் சொல்லடியில் வீழ்ந்து விடுவார்கள்.

பிறகென்ன தாங்கள் செய்துகொண்டிருக்கும் பணியில் கவனம் சிதறுதல். தாங்கள் தங்கள் திறமைக்கு குறைந்த சம்பளத்துக்கு, குறைந்த அங்கீகாரத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலுதல். நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தல். சின்னதும் பெரியதுமாக தவறுகளை செய்தல். இப்படியாக அவர்களின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே எதிர்மறையாக செயல்பட ஆரம்பிக்கும்.

எந்த சூழலிலும் ‘தன்னைத் தான் அறிதல்’ என்ற பக்குவத்தில் இருந்து மாறவே கூடாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்குத் தெரிவதெல்லாம் நீங்கள் ஜொலிப்பது மட்டுமே. நீங்கள் அந்த உயரிய நிலைக்கு வருவதற்கு நீங்கள் பணி செய்துகொண்டிருக்கும் நிறுவனம் எத்தனை வாய்ப்புகளைக் கொடுத்து உங்களை ஜொலிக்க வைத்துள்ளது என்பதை எந்த காலத்திலும் நினைவில் இருந்து நீக்கவே கூடாது.

எங்கள் நிறுவனம் அனிமேஷன் துறையில் காலடி எடுத்து வைத்திருந்த காலகட்டம் அது. 2000-ம் வருடம். ஏழெட்டு ஓவியர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனிமேஷனில்  பயிற்சிக்கொடுத்து அனிமேஷன் படைப்புகளை வெளியிட்டு வந்தோம். அப்போது சென்னையில் இயங்கி வந்த மற்றொரு அனிமேஷன் நிறுவனம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்ததால் அவர்கள் நிறுவனத்தை மூடிவிட்டார்கள். அங்கு பணியில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பலர் எங்கள் நிறுவனத்துக்கு வேலைக்காக அணுகினார்கள்.

அவர்களில் ஒருசிலரை நேர்காணல் செய்து எங்கள் அனிமேஷன் டீமில் இணைத்துக்கொண்டோம்.

அங்குதான் பிரச்சனை தொடங்கியது.

கம்ப்யூட்டரின் அடிப்படைக் கூட தெரியாமல், அனிமேஷன் சாஃப்ட்வேர்கள் பற்றி புள்ளி கமா கூட அறியாமல் எங்களிடம் சேர்ந்த ஓவியர்கள் இரண்டாண்டுகளில் நாங்கள் கொடுத்தப் பயிற்சியில் ஆகச் சிறந்த அனிமேட்டர்களாக மாற்றம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

வெளியில் இருந்து எங்கள் அனிமேஷன் டீமில் புதிதாக சேர்ந்த அனிமேட்டர்களுக்கு எங்கள் டீமில் ஏற்கெனவே இருந்த அனிமேட்டர்கள் மிக நேர்மையாக பணி செய்வது உறுத்தத் தொடங்கியது. காரணம் அவர்கள் முன்பு பணி செய்த இடத்தில் அவர்கள் பணியின் தன்மை வேறு. எங்கள் நிறுவனத்தில் பணியின் தன்மை வேறு.

அவர்கள் நிறுவனத்தில் படம் வரைய ஒருவர், கலர் கொடுக்க ஒருவர், அனிமேஷன் செய்ய ஒருவர், ஆடியோ இணைக்க ஒருவர் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக வல்லுநர்கள் இருப்பார்கள்.

எங்கள் நிறுவனத்தில் ஓவியர்கள்தான் கம்ப்யூட்டரில் படம் வரைந்து, அனிமேஷன் செய்து நாங்கள் ரெகார்ட் செய்து கொடுக்கும் ஆடியோக்களை இணைத்து அனிமேஷனை முழுமைப்பெற செய்ய வேண்டும்.

இப்படி நாங்கள் பயிற்சி கொடுத்த ஓவியர்கள் திறமைசாலிகளாக இருந்தது அவர்கள் கண்களுக்கு உறுத்தத் தொடங்கியது. எங்கள் டீமில் லீடராக இருந்தவரிடம் ‘நீங்கள் உங்கள் திறமைக்கு எங்கேயோ இருக்கணும்…’, ‘இப்படியா உட்கார்ந்த இடத்தைவிட்டு நகரமால் உழைப்பீர்கள்… உங்கள் உழைப்பை சுரண்டுகிறார்கள்…’, ‘உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் இல்லையே…’ என்றெல்லாம் சொல்லி அவர் மனதை கலைக்கத் தொடங்கினார்கள்.

ஒருசில நாட்களிலேயே நடப்பதை தெரிந்துகொண்டேன். புதிதாக சேர்ந்த அனிமேட்டர்களை வேலையில் இருந்து நீக்கினேன்.

அவர்களின் வஞ்சத்துக்கு யார் பலிகடா ஆனாரோ அந்த ஓவியரும் முன்புபோல் நேர்மையாக செயல்படவில்லை. எங்கள் நிறுவன கொள்கைக்கு எதிராக செயல்படத் தொடங்கினார்.

அறிவுரைகளும் ஆலோசனைகளும் அவர் மனதுக்குள் செல்லாத அளவுக்கு தற்பெருமை என்ற போதையில் மிதக்க ஆரம்பித்ததால் மதி இழந்திருந்தார்.

கடைசியில் அவரையும் வேலையில் இருந்து நீக்க வேண்டியதாகிவிட்டது. காலில் ஒரு கட்டி வந்தால் மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் அந்த கட்டியை ஆப்பரேஷன் செய்து எடுக்காவிட்டால் அது காலையே பதம்பார்த்துவிடும் என்ற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? ஆப்பரேஷன் செய்துதானே ஆக வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்தோம்.

அந்த காலகட்டத்தில் அனிமேஷன் நிறுவனங்கள் அதிகமகா இல்லை. அனிமேஷன் தயாரிப்பில் எங்கள் நிறுவனம்தான் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தது.

எனவே வெளியே சென்று அவரால் அனிமேஷன் துறையில் சாதிக்க வாய்ப்பில்லாமல் போனது. எனக்கு நன்கு தெரிந்த ஒரு பதிப்பகத்தில் பணி செய்துகொண்டிருக்கிறார்.

இப்படித்தான் பலரும் தங்களுக்கான வாய்ப்புகளை தவறவிட்டுகொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு ஏன் எனக்குக் கூட ‘‘உங்கள் திறமைக்கு நீங்கள் இருக்க வேண்டிய உயரமே வேறு…’ என்ற அஸ்திரம் எய்தப்படுவதுண்டு. அதற்கு ‘நான் ஏற்கெனவே உயரத்தில் தானே இருக்கிறேன்…நீங்கள் இப்போதுதான் கீழிருந்து என்னை அண்ணாந்து பார்க்கிறீர்கள்’ என்ற பலமான சக்தி வாய்ந்த அஸ்திரத்தை அவர்களை நோக்கி எய்துவேன்.

அப்புறம் என்ன நடக்கும் அந்த இடத்தில் என்பதை அவரவர் கற்பனைக்கு விடுகிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon