ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 10: திறமையும் ஆர்வமும் ஒன்றல்ல!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 10
ஜனவரி 10, 2021

திறமையும் ஆர்வமும் ஒன்றல்ல!

திறமைக்கு ஏற்ற வேலைக்குச் செல்வதா, நமக்கு ஆர்வம் இருக்கும் துறையில் பணிக்குச் செல்வதா என்ற குழப்பம் உங்களில் பலருக்கு இருக்கலாம்.

இப்போதெல்லாம் நம் திறமைக்கு ஏற்ற வேலையாக இருந்தாலும் சரி, ஆர்வத்துக்கு ஏற்ற பணியாக இருந்தாலும் சரி அதற்குப் பொருத்தமான கல்வியும் தொழில்நுட்பமும் கை கொடுக்கிறது.

ஆனால் திறமை ஆர்வம் இரண்டும் ஒன்றல்ல, இரண்டும் வெவ்வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டையும் சரியாக எப்படி தெரிந்துகொள்ள எளிமையான ஒரு வழியை சொல்கிறேன்.

கணிதத்தில் Venn Diagram என்ற கான்செப்ட் உண்டு. இரண்டு வட்டங்கள். முதல் வட்டத்திலும் இரண்டாவது வட்டத்திலும் உள்ள ஒத்த எண்களை மட்டும் பிரித்தெடுப்பதற்கு Intersection என்று பெயர்.

இந்த கான்செப்ட்டை நம் திறமை மற்றும் ஆர்வம் என்ற ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வோம்.

இந்த படத்தில் A என்பது நம் திறமை. B என்பது நம் ஆர்வம்.

A என்ற திறமையின் கீழ் எழுதுதல், சமைத்தல், வரைதல், பேசுதல்   போன்றவற்றை பட்டியலிடலாம்.

B என்ற ஆர்வத்தின் கீழ் எழுதுதல், வரைதல், பாட்டு, நடனம், பேசுதல், வகுப்பெடுத்தல் போன்றவற்றை பட்டியலிடலாம்.

A = {எழுதுதல், சமைத்தல், வரைதல், பேசுதல்}

B = {எழுதுதல், வரைதல், பாட்டு, நடனம், பேசுதல், வகுப்பெடுத்தல்}

A என்ற திறமையிலும், B என்ற ஆர்வத்திலும் உள்ள மதிப்புகளை ஒப்பிடுவோம். இரண்டிலும் எழுதுதல், வரைதல், பேசுதல் என்ற மூன்று மட்டுமே பொதுவாக இருப்பதால் அவற்றை பிரித்தெடுப்போம்.

A Intersection B = {எழுதுதல், வரைதல், பேசுதல்}

நமக்குத் திறமையும், ஆர்வமும் ஒருசேர இருக்கும் மூன்று விஷயங்கள் எழுதுதல், வரைதல், பேசுதல் என்பதை கண்டிபிடித்தாயிற்று.

சரி. இதில் எந்தத் துறை நமக்கானது.  இதைக் கண்டுபிடிக்கவும்  ஒரு வழி உள்ளது.

நீங்களாகவே ஏதேனும் ஒரு நிகழ்வை கற்பனை செய்து கொள்ளுங்கள். அப்படி கற்பனை செய்வதை நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள எழுதுதல், வரைதல், பேசுதல் போன்றவற்றில் பொருத்திப் பார்க்கலாம்.

அதாவது உங்கள் கற்பனையை எழுத்து வடிவிலும், ஓவியமாக வரைந்தும், ஆடியோ வடிவில் பேசியும் பாருங்கள்.

நீங்கள் நம் நாட்டு பிரதமருடன் உரையாடி உங்கள் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்கிறீர்கள். இதுவே உங்கள் கற்பனை.

இதனை கட்டுரையாக எழுதுங்கள். உங்கள் ஸ்மார்ட் போனில் பேசி ரெகார்ட் செய்து பாருங்கள். ஓவியமாக வரையுங்கள்.

நீங்களே மதிப்பீடும் செய்துகொள்ளுங்கள். எதில் 100 சதவிகித மதிப்பெண் கிடைத்து முழுமையாக நீங்கள் உணர்கிறீர்களோ அதுவே உங்கள் முதன்மை திறமை. அடுத்தடுத்த மதிப்பெண் பெற்றதை சப்போர்ட்டிவ் திறமையாகவும் வைத்துக்கொள்ளலாம்.

எழுதுவதில் 100 சதவிகித மதிப்பெண் கிடைத்தால் அதுதான் உங்கள் முதன்மைத் திறமை. பேசுவதில் 70 சதவிகிதம், வரைவதில் 50 சதவிகிதம் என்றால் அவை சப்போர்ட்டிவ் திறமைகள். அவ்வளவுதான். சிம்பிள் லாஜிக்.

எழுதுவதை முதன்மைப் பணியாகவும், பேசுவதையும், வரைவதையும்  வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த லாஜிக் பணிகளுக்காக மட்டும் அல்ல, வீட்டில் கூட முடிவெடுக்க வேண்டிய சில விஷயங்களுக்குப் பயன்படும். எங்கெல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டிக்கொண்டு முடிவெடுக்க முடியாமல் திணற அடிக்கிறதோ அங்கெல்லாம் இந்த லாஜிக்கைப் பயன்படுத்தலாம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon