ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 8
ஜனவரி 8, 2021
கூடுதல் சுமை ஆளுமை குணத்தை வளர்த்தெடுக்கும்!
பொதுவாக அலுவலகத்தில் தான் உண்டு, தன் வேலை உண்டு என தன் பணிகளை செவ்வனே செய்து வரும் பணியாளர்களைவிட வேலையில் மட்டுமில்லாமல் அலுவலகம் சார்ந்த மற்ற சில பணிகளை தாங்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்பவர்களை மேலிடத்துக்கு மட்டும் இல்லாமல் அவர்கள் பணி செய்யும் குழுவில் இருப்பவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
காரணம், அவர்கள் தைரியசாலிகள், பிரச்சனைகளை எளிதாக புரிந்துகொள்வார்கள், ஏதேனும் ஆலோசனை என்றால் இவர்களிடம் கேட்கலாம் என்ற பிம்பம் அவர்கள் மீது தானாகவே உருவாக ஆரம்பித்துவிடும்.
மற்றவர்கள் தங்கள் பணிகளை மட்டும் செய்யும்போது இவர்கள் பல்வேறு வேலைகளை தங்கள் விருப்பத்துக்காக கூடுதலாக செய்வதால் ‘ரொம்ப நல்லவர்கள்’ என்ற அபிர்ப்பிராயமும் உண்டாகும்.
இப்படி செய்பவர்களுக்கு ‘ஜால்ரா அடிப்பவர்கள்’, ‘சோப்பு போடுபவர்கள்’ என பொறாமையிலும் வயிற்றெரிச்சலிலும் ஒருசிலர் பட்டம் கொடுத்தாலும், பெரும்பாலும் இவர்கள் பிறர் கவனத்தை ஈர்ப்பவர்களாகவே இருப்பார்கள்.
காரணம், பொறுப்பை தாங்களாகவே ஏற்றுக்கொண்டு செயல்படுவதால் உண்டாகும் தலைமைப் பண்பு. அதன் காரணமாய் உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் தானாகவே ஒட்டிக்கொள்ளும் ஒரு கம்பீரம். இதற்குப் பிரதிபலன்களை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்றாலும் தகுந்த வெகுமதிகள் அவ்வப்பொழுது மதிப்பு, மரியாதையில், அங்கீகாரம் என வெவ்வேறு வழிகளில் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
எங்கள் நிறுவனத்தில் பயிற்சிப் பணியில் இரண்டு பேர் ஒரே நாளில் சேர்ந்தார்கள். அவர்களுடையது அனிமேஷன் பணி.
முதலாமானவர், நாங்கள் கற்றுக்கொடுப்பதை மட்டும் கற்றுக்கொள்ளாமல் மற்ற பிராஜெக்ட்டுகளுக்குத் தேவையானதை ஸ்கேன் செய்துகொடுத்தல், அனிமேஷன் படைப்புகளை திரையிட்டு ‘குவாலிட்டி செக்’ செய்யும்போது உடன் அமர்ந்து அதை துல்லியமாக கவனித்தல், எங்கள் கண்களில் படாத சில தவறுகளை குறிப்பெடுத்துக்கொடுத்தல், ஆடியோ வீடியோ ரெகார்டிங்குகள் போது உடன் இருந்து உதவுதல் என தானாகவே முன் வந்து எல்லாவற்றிலும் தன் பங்களிப்பை செய்ய ஆரம்பித்தார்.
இரண்டாமானவரோ, தான் உண்டு தன் பணி உண்டு என என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
பொறுப்புகளை தானாகவே முன்வந்து சுமந்தவர், பணி சார்ந்த வேலைகளை நிறைய கற்றுக்கொண்டார். எங்கள் நிறுவனத்தில் அனிமேஷன் பிரிவில் தவிர்க்கவே முடியாத ஒரு நபரானார். சில காலங்கள் பணி புரிந்து பின்னர் வெளிநாட்டில் அனிமேஷன் குறித்த படிப்பு படிப்பதற்காக முறையாக எங்களிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகினார்.
அவர் சென்ற பிறகு அந்த இடத்தை நிரப்புவதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் பணியில் திறமை பெற்றவர்களாக இருந்தாலும் ஆளுமை குணத்தில் அத்தனை திறமைசாலிகளாக இருக்கவில்லை. அப்படியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க சில காலங்கள் ஆனது எங்களுக்கு.
ஆளுமை என்பது இப்படி இருக்க வேண்டும். நாம் இருக்கும் இடத்தில், நாம் இயங்கும் தளத்தில் நம் பணிகள் மட்டுமில்லாமல் நம் குணங்களும் அது சார்ந்த செயல்பாடுகளும் பேசப்பட வேண்டும். நாம் அந்த இடத்தை விட்டு வந்தாலும் அந்த இடம் நம் நினைவுகளை அவர்களுக்கு கிளறியபடி இருக்க வேண்டும்.
இரண்டாமானவரோ அனிமேஷன் துறையில் பணிக்கு சில காலங்கள் முயற்சித்துவிட்டு ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் புத்தகம் லே-அவுட் செய்துகொடுக்கும் பணியில் இருக்கிறார்.
அலுவலகத்தில் மட்டுமல்ல வீட்டில், சமுதாயத்தில் இப்படி எல்லா இடங்களிலுமே பொறுப்பைக் கூடுதலாக சுமப்பவர்களுக்குத்தான் வெகுமானம் கூடுதலாகக் கிடைக்கும். வெகுமானம் என நான் சொல்வது மரியாதை, அங்கீகாரம் இத்யாதி இத்யாதி. இவை அனைத்துமே பணத்தைத் தாண்டிய பெருவிஷயங்கள்.
எங்கள் வீட்டுக்கு எதிர் குடியிருப்பில் குடி இருப்பவர்கள் நல்ல வசதியானவர்கள். மனைவி அரசாங்க வேலையில். கணவன் பிசினஸ். விடியற்காலையில் கணவன் எழுந்து வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்து கோலம் போடுவார். அது அதிசயம் அல்ல. நிறைய பேர் செய்கிறார்கள்.
அந்த குடியிருப்புக்கு ஒருபுறம் காலி மனை. மறுபக்கம் ஒரு ஆடம்பர கலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை.
அவர் தன் குடியிருப்பின் வாசலை மட்டும் அல்ல அக்கம் பக்கம் முழுவதும் சுத்தம் செய்வார். வீடுகளில் குப்பையை அள்ளுவதைப் போல தெருவிலும் பெரிய பையில் பெருக்கும் குப்பைகளை அள்ளி தெருமுனையில் உள்ள குப்பைத் தொட்டியில் கொண்டு போடுவார்.
இதனால் அந்த வீட்டு வாசல் பெரிய வட்டவடிமாக ஆர்ச் போல சுத்தம் செய்யப்பட்டு வெகு அம்சமாக ஜொலிக்கும்.
அத்துடன் எங்கள் தெருவில் இருக்கும் டிரான்ஸ்ஃபார்மரின் கீழ் குப்பைகளை வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் நகரும் ஒருசில வீட்டினர் அவர் கண்களில் பட்டுவிட்டால் ‘இரண்டு அடி நடந்தால் குப்பைத் தொட்டி இருக்கிறதல்லவா, அங்கு சென்று போடலாம் அல்லவா?’ என்று அன்பாகத்தான் சொல்வார். ஆனால் அதில் ஒரு ஆளுமை இருக்கும்.
இப்படி தவறுகள் சின்னதோ பெரியதோ, அவற்றைக் கண்டும் காணாமல் போகாமல் அதை நாசூக்காக எடுத்துச் சொல்லுதல் கூட ஒருவித ஆளுமைதான். இதனால் சொல்பவர்களுக்கு ஆரம்பத்தில் மனதுக்குள் அர்ச்சனை விழுந்தாலும் நாளடைவில் ‘அந்த தவறை செய்யக் கூடாது, அந்த மனுஷன் பார்த்தால் போச்சு’ என்ற சிறிய உந்துதல் ஏற்படும். மாற்றங்கள் இப்படித்தான் சின்ன சின்ன அளவில் உண்டாகும்.
கூடுதல் பொறுப்பை தானாக விரும்பி சுமப்பவர்களுக்கு ஏமாளிகள், பிழைக்கத் தெரியாதவர்கள், அசடுகள் போன்ற பட்டங்கள் சுலபமாகக் கிடைக்கும். ஆனால் உண்மையில் அவர்களிடம் இருப்பது ஆகச் சிறந்த தலைமைப் பண்பு.
அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்களை நம்பி பின் தொடர்பவர்கள் தானாகவே உருவாவார்கள்.
நீங்களும் உன்னிப்பாக கவனித்துப் பாருங்களேன். நீங்கள் இதுநாள் வரை ஏமாளிகள், அசடுகள், பிழைக்கத் தெரியாதவர்கள் என நினைத்திருந்தவர்களின் தலையைச் சுற்றி ஒளி வட்டம் தெரிவதை உணர்வீர்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP