ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 7: பிரச்சனை – நெருக்கமாக அணைத்துக்கொள்வோம், திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 7
ஜனவரி 7, 2021

பிரச்சனை – நெருக்கமாக அணைத்துக்கொள்வோம், திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்!

பிரச்சனை குறித்து என் அணுகுமுறை இதுவே. இதைப் படிக்கும்போது பிரச்சனையை நெருக்கமாக அணைத்துக்கொண்டு கொண்டாடச் சொல்வதைப் போல இருக்கும். ஆனால் முழுமையாகப் படித்தால் மட்டுமே நான் சொல்ல வரும் லாஜிக் புரியும்.

பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு இரண்டு வழிமுறைகள்.

ஒன்று, பிரச்சனைக்குக் காரணமானவர்களை நேரடியாக எதிர்கொண்டு அவர்களுடன் ‘மள்ளுக்கு’ நின்று நேரத்தை வீணடிப்பது.  இந்த அணுகுமுறையில் ‘ஜெயிப்பா தோற்பா’ என்பது கேள்விக்குறியே. அது எதிராளியின் பணபலம், அரசியல் பலம் மற்றும் இன்ன பிற பிண்ணனி பலங்களைப் பொறுத்தது.

இரண்டாவது, பிரச்சனைக்குக் காரணமானவர்களுக்கு நாம் அவர்களை இனம் கண்டுகொண்டுவிட்டோம் என்று தெளிவாகவே சொல்லிவிட்டு அவர்களை விட்டு ஒதுங்கி, அந்தப் பிரச்சனையை கொஞ்சமும் சட்டை செய்யாமல் பிரச்சனையை விட்டே ஒதுங்கி விடுதல். இது கோழைகள் செய்கின்ற செயல் அல்லவா என உங்களில் பலரோ சிலரோ நினைக்கலாம். உண்மையில் இப்படி செய்வதுதான் பக்குவமுள்ளவர்கள் செய்கின்ற செயல். இவர்கள் கோழைகள் அல்ல. தைரியமானவர்கள். தங்கள் திறமை மீதும் தாங்கள் செய்கின்ற பணி மீதும் அசாத்திய நம்பிக்கைக் கொண்டவர்கள்.

முதல் பிரிவில் வருபவர்கள், தாங்கள் சந்தித்த ஒரு பிரச்சனைக்காகவே ‘உடல் பொருள் ஆவி’ அத்தனையையும் அடகு வைத்து தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி போராடிப் போராடி ஒரு கட்டத்தில் அந்தப் பிரச்சனைக்குக் காரணமான பணியில் இருந்தே வெளியேறிவிடவும் வாய்ப்புண்டு.

இரண்டாவது பிரிவில் வருபவர்களில் செயல் பிரச்சனை செய்பவர்களை விட்டு விலகி வந்ததைப் போலவும், பிரச்சனையை விட்டு தூர வந்துவிட்டத்தைப் போலவும் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் அந்தப் பிரச்சனையை அமைதியாக வேறுவிதாக கையாண்டுகொண்டிருப்பார்கள்.

இதை ஒரு உதாரணத்துடன் சொல்கிறேன்.

2000-ம் வருடம் எங்கள் நிறுவனத்தில் நாங்கள் அனிமேஷன் துறையை அறிமுகப்படுத்தினோம்.

மற்றவர்கள் 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் அனிமேஷன் சிடிக்களை விற்பனை செய்து வந்தபோது நாங்கள் 99 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தினோம். தாத்தா பாட்டி கதைகள், பேரன் பேத்திப் பாடல்கள், கந்தர் சஷ்டிக் கவசம், திருக்குறள், திருவாசகம், முல்லா கதைகள், ஈசாப் கதைகள், தெனாலிராமன் கதைகள் என ஏராளமான அனிமேஷன் படைப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு விற்பனையிலும் சாதனை செய்து வந்தோம்.

அந்த காலகட்டத்தில் சிடிக்களை அப்படியே ’ரெப்ளிகேட்’ (பிரதி எடுத்து) செய்து 20 ரூபாய்க்கும் 25 ரூபாய்க்கும் தெருவோர கடைகளில் விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். அந்த அளவுக்கு எங்கள் அனிமேஷன் படைப்புகள் பிரமாதமாக இருந்ததால்தானே அவை தெருவோரக் கடையினரும் விற்பனை செய்யும் அளவுக்கு பிரபலமாயின என்று அதை நேர்மறையாகவே எடுத்துக்கொண்டேன்.

முதலில் இது எங்கள் உழைப்பை சுரண்டுவதைப் போல நாங்கள் அதிர்ந்தாலும், இதுவும் ஒருவகையான விளம்பரப்படுத்தலே என்பதை உணர்ந்து, அந்த பிரச்சனையைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்ல ஆரம்பித்தோம்.

தெருவோர கடைகளில் உள்ளவர்களாவது நம் முகம் அறியாதவர்கள். ஆனால் ஒருசில விநியோகஸ்தர்களே முதலில் நூறு சிடிக்களை பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு பத்தாயிரம் சிடிக்களை பிரதி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்தது எங்கள் கவனத்துக்கு வந்தபோதுதான் இதையெல்லாம் லீகலாக அப்ரோச் செய்வதைவிட பிசினஸ் சூட்சுமத்துடன் அணுகுவதே நீண்டகாலத்துக்கு பலன்தரும் என்பதை உணர்ந்து ஒரு முடிவெடுத்தோம். சம்மந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு அவர்களின் செயல்பாட்டினால் இனி சிடிக்களை அவர்கள் மூலம் விற்பனை செய்வதில்லை என்பதை தெரியப்படுத்தினோம்.

அனிமேஷன் படைப்புகளை வெளியிட்டதும் தமிழகம் முழுவதும் வருகின்ற பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தினோம். அறிமுகக் கட்டுரைகள் எழுதினோம். பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் தானாகவே வந்து பேட்டி எடுத்தார்கள். மதிப்புரைகள் எழுதி கொண்டாடினார்கள். இந்த வெளிச்சப்படுத்தல் லாஜிக் நன்றாக கைக்கொடுத்தது.  எந்த அனிமேஷன் படைப்பாக இருந்தாலும் அதை ஆறு மாதம்  இலக்கை வைத்துக்கொண்டு அதற்குள் அதை விற்றுத் தீர்ப்பது என முடிவெடுத்தோம். செயல்படுத்தினோம். வெற்றி கண்டோம்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு எங்கள் அனிமேஷன் படைப்புகள் பிரதி எடுக்கப்பட்டாலும் அதை நாங்கள் எங்கள் தயாரிப்புக்கான விளம்பரமாகவே கருத ஆரம்பித்தோம்.

பிசினஸில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் இதுபோன்ற சின்ன சின்ன கசிவுகளுடன்தான் பெரிய பெரிய வெற்றிக்கனிகளைப் பறிக்க முடியும்.

கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் சினிமாக்களே திரையில் வெளியாவதற்கு முன்பு சிடியாக விற்பனை ஆகி வந்த கலாகட்டம் அது.  இன்று அதே பிரச்சனை யு-டியூப் சேனல் மூலம். ஆக பிரச்சனையில் ஒன்றும் மாற்றம் இல்லை. அந்தப் பிரச்சனை பல்கிப் பெருகும் வேகத்தில்தான் மாற்றம்.

பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எந்தப் பணிக்கு அல்லது படைப்புக்கு பிரச்சனை வருகிறதோ அந்த படைப்பை நம் அளவில் விளம்பரப்படுத்தி, வெளிச்சப்படுத்திக் கொண்டாடி பொதுவெளியில் சிம்மாசனத்தில் உட்கார வைப்பதே புத்திசாலித்தனம்.

ஆனால் பெரும்பாலானோர் பிரச்சனையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டுக் கொண்டாடி அதை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அதற்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருப்பார்கள். நேர விரயம் மட்டுமில்லாமல் பல நேரங்களில் அந்த அணுகுமுறை தோல்வியிலேயே முடியும்.

நாம் வெற்றி பெறவும் நிம்மதியாக இருக்கவும்  பிரச்சனைகளையும் பிரச்சனைக்குறியவர்களையும் விட்டு தூர வந்துவிடுவது ஒன்றுதான் வழி. ஆனால் பிரச்சனைக்கு ஆளான நம் தயாரிப்பை / நம் உழைப்பை / நம் படைப்பை இன்னும் நெருக்கமாக அணைத்துக்கொள்வோம். திகட்டத் திகட்டக் கொண்டாடுவோம்.

நான் இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் செயல்படுகிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon