ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 6: குறுகிய கால திட்டங்களை தீட்டுங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 6
ஜனவரி 6, 2021

குறுகிய கால திட்டங்களை தீட்டுங்கள்!

என்னிடம் பணிபுரிந்த அலுவலகத்தை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணிடம் ஒருமுறை, ‘உனக்கான மிகப் பெரிய ஆசை என்ன?’ என்று பொதுவாக கேட்டேன்.

‘வாழ்க்கையில் ஒரு முறையாவது நயாகரா அருவிய பார்த்துடணும்மா’ என்றார்.

எனக்கு வியப்பு. அவர் நம் நாட்டில் உள்ள குற்றால அருவியையாவது நேரில் சென்று பார்த்திருப்பாரா என்று ஆச்சர்யம். அதையும் அவரிடமே கேட்டேன்.

அதற்கு அவர் சொன்ன பதிலில் மேலும் வியந்தேன்.

‘இல்லம்மா, வூட்டு வேலைக்காக தெனம் காலைல நாலு வூடு, மாலைல நாலு வூடு… பத்து பாத்திரம் தொலக்கி துணி தொவைத்து… இப்புட்டுத்தான் என் உலகம்… குடிகார புருசன மேய்க்கிறதே பெரும்பாடு… இதுல நான் எங்கே குத்தால அருவிக்கெல்லாம் போறது…’

‘அப்புறம் எந்த நம்பிக்கையில் நயாகரா அருவியை ஒருமுறையாவது பார்த்துடணும்னு சொல்றீங்க?’ என்றேன்.

‘கற்பனைக்கு காசா பணமாம்மா, ஆசையத்தான் வச்சுப்போம் அத பெருசா வச்சுப்பமேன்னுதான் நயாகரா அருவிய பார்கணும்னு வச்சிருக்கேன்…’ என்றாரே பார்க்கலாம்.

இப்படியான நேர்மறை எண்ணம் சிறந்ததுதான். ஆனால் அது எந்த விதத்திலும் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம்.

எல்லோரும் நீண்ட கால திட்டத்தை உருவாக்குங்கள் என்றுதான் சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை குறுகியகால திட்டத்தை உருவாக்குங்கள் என்றே சொல்வேன்.

ஐடி நிறுவன நேர்காணல்களில் ‘அடுத்த ஐந்தாண்டுகளில் உங்கள் இலக்கு என்ன?’ என்ற கேள்வி நிச்சயம் உண்டு.

யாரும் நம்மிடம் கேட்கவில்லை என்றாலும் நம் ஒவ்வொருவருக்குள்ளேயுமே வெளியில் சொல்லாமல் மனதுக்குள் புதைத்துக்கொண்ட நீண்ட கால திட்டங்கள் நிறைய இருக்கும். அடுத்த ஐந்தாண்டுகளில் இருப்பதிலேயே விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும், அப்பார்ட்மெண்ட் இல்லாமல் தனி பங்களா ஒன்று கட்ட வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை வெளிநாடு செல்ல வேண்டும் என்றெல்லாம் கனவுகளின் பட்டியல் நீளும் அவரவர்களின் உள்ளக்கிடங்கைப் பொருத்து.

இவை நிறைவேறாத போது வாழ்க்கையில் விரக்தி உண்டாகும். அதிர்ஷ்டமே இல்லாதவன்(ள்) நான் என்ற தாழ்வு மனப்பான்பை உண்டாகும். பிறர் மீது பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் தலை தூக்கும்.

காரணம் நாம் தீட்டிய நீண்டகால திட்டம் அந்த காலகட்டத்துக்குள் நிறைவேறாத ஏக்கம். அதன் வெளிப்பாடே இவை.

இப்படி இல்லாமல் இன்று இதற்கு பிள்ளையார் சுழி போட்டுவிட வேண்டும், அடுத்த வாரம் இதைத் தொடங்கிவிட வேண்டும், ஒரு மாதத்தில் அதை முடித்துவிட வேண்டும், ஆறு மாதத்துக்குள் இதற்கு செயல்வடிவம் கொடுத்துவிட வேண்டும், அடுத்த வருடத்துக்குள் நினைத்ததை சாதித்துக் காட்ட வேண்டும் என்றெல்லாம் குறுகியகால திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அதை செய்வதற்கான உத்வேகம் நமக்குள் உண்டாகும். ஒவ்வொன்றாக முடித்துக்கொண்டே வரும்போது மனநிறைவு கிடைக்கும். நிறைய விஷயங்களை சிறப்பாகவே செய்துமுடிக்க முடியும்.

இன்று, இந்த வாரம், இந்த மாதம், அடுத்த ஆறுமாதத்துக்குள், அடுத்த ஒரு வருடத்துக்குள் என குட்டி குட்டியாக குறுகியகால திட்டங்களை தீட்டுவதன் மூலம் நாம் நினைத்ததை சாதிப்பதற்கான வழிமுறைகளும் பாதைகளும், முயற்சிகளும் முன்னெடுப்புகளும் நமக்கு வசப்படும். நாம் எடுத்துக்கொண்ட இலக்கில் தேவைப்பட்டால் நம் சூழலுக்கும், சாத்தியக்கூறுகளுக்கும் ஏற்ப மாற்றங்களையும் செய்துகொள்ளலாம். தவறில்லை.

இப்படி குறுகியகால திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றிகொண்டே வந்தால் ஒருகட்டத்தில் அவை பிரமாண்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும்.

என்னிடம் பேட்டி எடுப்பவர்கள் ‘உங்கள் எதிர்கால திட்டம் என்ன?’ என்று தவறாமல் கேட்பார்கள்.

பொதுவாக என் இடத்தில் இருக்கும் யாராக இருந்தாலும் ‘எங்கள் நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் சாஃப்ட்வேர் நிறுவனமாக உருவாகிவிட வேண்டும்…’  என்றுதான் சொல்லி இருப்பார்கள்.

ஆனால் என் பதிலும் பார்வையும் வேறு.

கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டம் பெறுவது என்பது என் சிறு வயது கனவெல்லாம் கிடையாது. ஏனெனில் நான் வளர்ந்து +2 முடித்த பிறகுதான் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடதிட்டமாகவே வந்தது. இருப்பதிலேயே நல்ல கோர்ஸில் சேர்த்து படிக்க வைக்க  வேண்டும் என்பது என் பெற்றோரின் ஆசை. அதுவே என் விருப்பமும். எனவே கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அதிலும் இரட்டைப் பட்டம் பெற்றேன்.

அதுப்போல நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என் குறிக்கோளாக இல்லை. படித்து முடித்து வெளியில் வந்தபோது என்னைச் சுற்றிய இயங்கி வந்த இந்த சமுதாயத்தில் தொழில்நுட்பம் குறித்த போதிய விழிப்புணர்ச்சி இல்லாமல் இருந்தது. நான் படித்த படிப்பை என் வேலைக்காக எப்படி மாற்றலாம் என யோசித்தபோது உருவானதே  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற நிறுவனம். என் நிறுவனத்தின் மூலம் நானும் உயர்ந்து என்னைச் சார்ந்த சமுதாயத்தில் உள்ளவர்களையும் உயர்த்தினேன். இப்போதுவரை அப்படியே தொடர்கிறது.

இப்படியாக நான் அவ்வப்பொழுது அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப என் நிறுவனத்தின் மூலம் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை செய்துகொண்டிருக்கிறேன்.

அதன் பலன், தொழில்நுட்ப உலகில் எங்கள் காம்கேர் சாஃப்வேரின் தயாரிப்புகளும், அது சார்ந்து நான் எழுதும் புத்தகங்களும் உலக அளவில் பேசப்படுகிறது. இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது இறைசெயல். நான் ஒரு கருவி அவ்வளவே.

இன்னொரு முக்கியமான விஷயம்.

1992-ல் நான் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போது நம் நாட்டில் ஐடி நிறுவனங்களே ஒன்றிரண்டுதான் இருந்தன. நம் நாட்டில் சொந்தமாக சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கிய முதல் பெண் நான்தான். அதற்கான விருதுகள் கூட அந்த காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது.

இதையெல்லாம் எதிர்பார்த்து நீண்டகால திட்டம் எல்லாம் தீட்டவில்லை நான். படிப்பையும் உழைப்பையும் திறமையையும் போட்டு நிறுவனம் தொடங்கினேன். குறிக்கோள்களையும், திட்டங்களையும் குறுகியகால வரையறைக்குள் அடக்கினேன். ஒவ்வொன்றாக முடித்து அடுத்தடுத்து குறிக்கோள்களையும் திட்டங்களையும் வரையறை செய்கிறேன்.

இந்த செயல்முறை எனக்கு இன்றுவரை கைக்கொடுக்கிறது.

என்னைப் பொருத்த வரை பெரிய வட்டம் போட்டுவிட்டு அதற்குள் சிறிய வட்டங்களை போட்டு அந்த வட்டத்தை நிரப்ப முடியாமல் திணறுவதைவிட சிறிய சிறிய வட்டங்களை போட்டுக்கொண்டே வந்தால் பிரமாண்ட வட்டம் தானாகவே உருவாகிவிடும் என்பதுதான் என் லாஜிக்.

நீங்களும் இப்படி சிந்தித்துப்பாருங்களேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon