ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 5: ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டாமே!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 5
ஜனவரி 5, 2021

ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்ய வேண்டாமே!

ஒரு சிலரை பார்த்திருப்போம். ஒரே வேலையை பல மணி நேரங்கள் செய்துகொண்டே இருப்பார்கள். அப்படி செய்யும்போது என்னதான் ஈடுபாட்டுடன் ஆர்வமாக செய்தாலும் மனம் சோர்வடையும். உடலுக்கும் அலுப்பு தட்டி, ஓய்வு எடுக்கக் கைகளும் கால்களும் கெஞ்சும்.

இதன் காரணமாய் சாதாரணமாக அவர்கள் செய்கின்ற வேலையை முடிக்க 24 மணி நேரம் ஆகும் என்றால் அவர்களுக்கு 48 மணி நேரம்கூட ஆகலாம். காரணம் ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்யும்போது ஏற்படும் அயற்சி பணியின் வேகத்தைக் குறைக்கும்.

இதற்கு பதிலாக எப்போது மனதுக்கு அலுப்பு ஏற்படுகிறதோ அப்போது சிறிய ப்ரேக் எடுத்துக்கொண்டு வேறு வேலையில் கவனம் செலுத்திவிட்டு முகம் கழுவி புத்துணர்வுடன் மீண்டும் பழைய வேலையில் கவனம் செலுத்தினால் அந்த வேலை குறித்த நேரத்தில் முடியும்.

இதுதான் நாம் எடுத்துக்கொண்ட வேலையை சலிப்பில்லாமல் செய்ய உதவும் லாஜிக்.

சிறு வயதில் தேர்வுக்காக படிப்பதற்கு அளிக்கப்படும் விடுமுறை தினங்களில் நான் தொடர்ச்சியாக படித்துக்கொண்டே இருப்பேன். கணிதம் என்றால் பேப்பரில் போட்டுப் பார்ப்பேன். இதர சப்ஜெக்ட்டுகளை வாய்விட்டு நடந்துகொண்டே படிப்பேன். இதனால் கால்வலி ஏற்படும், தொண்டை வலிகூட எடுக்கும். கணிதம் போட்டுப் பார்த்துப் பார்த்து கைவிரல்களும் வலிக்க ஆரம்பிக்கும். இதன் தொடர்ச்சியாய் மனமும் சோர்வடையத் தொடங்கும்.

இதுபோல எப்போது என் உடலும் மனமும் சோர்வடையத் தொடங்குகிறதோ அப்போது ஃபேனை முழு வேகத்தில் வைத்து, அறையை இருட்டாக்கிக்கொண்டு  கண்களை மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவேன். அலாரம் வைத்ததைப் போல சரியாக 15 நிமிடங்களில் விழிப்புத் தட்டும். 1 மணி நேரம் தூங்கிய புத்துணர்வு கிடைக்கும். என் உடலும் மனமும் முழுமையாக சார்ஜ் ஆகிவிட்ட சுறுசுறுப்பைக் கொடுக்கும். பிறகென்ன முகம் கழுவி புத்துணர்வுடன் படிக்க ஆரம்பித்துவிடுவேன்.

அதுபோல கணிதத்தை 2 மணி நேரம் தொடர்ச்சியாக போட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால் எளிமையான கணிதம் கூட ஏடாகூடமாகி தப்பும் தவறுமாக விடை கொடுக்கும் அளவுக்கு என் கவனம் சிதறும். அப்போது அந்த பாயிண்ட்டில் கணிதம் பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு வேறு சப்ஜெக்ட் படிக்க ஆரம்பித்துவிடுவேன். அரை மணி வேறு சப்ஜெக்ட் படித்துவிட்டு கணிதத்துக்கு மீண்டும் வந்தால் விடைகள் சுறுசுறு வேகத்தில் வந்துகொட்டும்.

இதே லாஜிக்கை என் நிறுவனத்தில் செயல்படுத்தலாம் என நினைத்து மதியம் சாப்பிட்ட பிறகு 20 நிமிடங்கள் கண் மூடி தூங்கிவிட்டு பணிகளைத் தொடரலாம் என்ற பழக்கத்தை அறிமுகப்படுத்தி மதிய உணவு இடைவேளையை 20 நிமிடங்கள் அதிகரித்துக்கொடுத்தேன். ஒருசிலர் எங்கள் அலுவலக பூஜை அறையில் அந்த நேரத்தில் யோகா செய்வார்கள். ஒருசிலர் குட்டித்தூக்கம், இன்னும் ஒருசிலர் பத்திரிகைகள் வாசித்தல். இப்போதெல்லாம் பெரும்பாலும் மொபைலில்தான் மனதை குவிக்கிறார்கள். ஓய்வெடுக்க நேரம் கொடுத்தாலும் அதை சரியாக பயன்படுத்துவதில்லை. அந்த பொன்னான நேரத்தையும் மொபைலுக்கே தாரை வார்த்துக்கொடுத்துவிடுகிறார்கள்.

நாம் கம்ப்யூட்டரில் ஃபோட்டோஷாப்பிலோ அல்லது அனிமேஷன் சாஃப்ட்வேர்களிலோ வேலை செய்துகொண்டிருக்கும்போது சில மணி நேரங்களில் நம் கம்ப்யூட்டரின் வேகம் குறைந்ததைப் போல தோன்றும். ஃபைல்களை திறப்பதற்கும் மூடுவதற்குமே நம் பொறுமையை சோதிக்கும் அளவுக்கு நேரம் எடுத்துக்கொள்ளும்.

அந்த சமயத்தில் நாம் செய்துகொண்டிருக்கும் வேலைகளை சேவ் செய்துவிட்டு கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்து கொண்டு வேலைகளைத் தொடர்ந்தால் கம்ப்யூட்டர் சுறுசுறு வேகத்தில் இயல்பான வேகத்தில் வேலை செய்யத் தொடங்குவதைக் காணலாம்.

இயந்திரமானாலும், மனிதனானாலும் ஒரே வேலையை பலமணி நேரங்கள் தொடர்ச்சியாக செய்யும்போது வேலை செய்யும் வேகமும் திறனும் குறையும். சிறிய இடைவெளி விட்டு செய்துகொண்டிருக்கும் வேலையில் இருந்து முற்றிலும் வெளியே வந்து வேறு வேலையில் கவனம் செலுத்திவிட்டு மீண்டும் பழைய வேலைக்கே சென்றால் புத்துணர்வு கிடைக்கும். வேலைகளின் வேகமும் கூடும்.

‘நீங்கள் எப்படி நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கிறீர்கள்?’

என்னிடம் எல்லோரும் அதிசயித்துக் கேட்கும் பல கேள்விகளுள் இதுவும் ஒன்று.

காலை 6 மணிக்கு அலுவலகம் சென்று நிர்வாகப் பணிகளைத் தொடங்கினால் இரவு வரை புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக நான் இயங்குவதற்கு மிக முக்கியக்காரணம் பல்வேறு வேலைகளை மாற்றிமாற்றி செய்வதால்தான்.

எழுத்தில் தொடங்கும் எனது ஒரு நாளின் தொடக்கம் அனிமேஷன் படைப்புகளுக்காக ஓவியம், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ப்ராஜெக்ட் குறித்த உரையாடால்கள், சாஃப்ட்வேர் மற்றும் ஆப் தயாரிப்புக்கான லாஜிக்குகள், ஆடியோ வீடியோ ரெகார்டிங்குகள், இடையிடையே மேடை நிகழ்ச்சிகளில் பேசுவதற்காக ஸ்கிரிப்ட் தயாரித்தல் என பலதரப்பட்டப் பணிகளுடன் சுவாரஸ்யமான பணிச்சூழல். எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்ததுதான் என்றாலும் கிரியேட்டிவிட்டியையும் லாஜிக்கையும் மாறி மாறி பின்னிப்பிணைந்து செயல்படுத்துவதால் எல்லாவற்றையுமே உற்சாகமாக செய்ய முடிகிறது.

என் சொந்த நிறுவனம் என்பதால் வேலைபளு அதிகம்தான். ஆனால் அதை சுவாரஸ்யமாக்கி உற்சாகமாக பணி செய்வதால் பளு தெரிவதில்லை.

நான் வேலை வேலை என குறிப்பிடுவது அலுவலக வேலைகளை மட்டுமல்ல. வீட்டு வேலைகளிலும் இதே லாஜிக்கைப் பின்பற்ற முடியும். பொங்கலுக்காக வீட்டை ஒட்டடை அடித்து சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். ஒரே நாளில் வீடு முழுவதையும் சுத்தம் செய்தால் உடல் வலி கண்டுவிடும். அத்துடன் முழுமையாகவும் நேர்த்தியாகவும் சுத்தம் செய்ய இயலாது. ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்துகொண்டே வந்தால் வேலையை முடிக்க நான்கைந்து நாட்களோ ஒரு வாரமோ எடுத்துக்கொண்டாலும் ஒரு நாளில் 1 மணி நேரம் அந்த வேலைக்கு ஒதுக்கினால் போதும் அல்லவா? மேலும் வீடு முழுவதையும் நேர்த்தியாக சுத்தம் செய்ய முடியுமே.

இவ்வளவு விரிவாக சொன்னதை சுருக்கமாக நச்சென்று சொல்லட்டுமா?

‘பரபரப்புக்கு சுறுசுறுப்பு சேர்க்க இடையிடையே நாம் freeze ஆக வேண்டும்’ அவ்வளவுதான்.

நான் செய்கின்ற எல்லா பணிகளிலும் இதே லாஜிக்கைத்தான் பின்பற்றுகிறேன். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 13 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon