ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 23
ஜனவரி 23, 2021
நீங்கள் பணி செய்யும் நேரமும், இடமும் இறைசக்தி பெற வேண்டுமா?
—1—
நலன் விசாரிப்புகள் என்பது போலித்தனம் இல்லாமல், சம்பிரதாயமான வார்த்தைகளாக இல்லாமல் உண்மையான அக்கறையுடன் நம் உள்ளத்தில் இருந்து வருமேயானால் நம் நினைவுகள் காலத்துக்கும் பிறர் உள்ளத்தில் நிலைத்திருக்கும்.
வாய்ப்பிருந்தால் அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகள் ஏதேனும் முன்பே நீங்கள் அறிந்திருந்தால் அது குறித்து மென்மையாக விசாரித்து அதில் இருந்து மீண்டுவிட்டீர்கள் தானே என கேட்டு நலன் விசாரியுங்கள், அப்புறம் என்ன அவர்கள் மனதில் உங்களுக்கு நிரந்த சிம்மாசனம் தயார். ஆனால் அந்த பர்சனல் விசாரிப்பு ‘வம்பு பேசுகிறான்(ள்)’ என்று சென்றடைந்துவிடாமல் இருக்கட்டும். கவனம்.
—2—
முக்கியமான விஷயத்துக்காக ஒருவரிடம் முதன்முதலில் பேசும்போது அவர் ஏதேனும் சொல்லும்போது ‘நானும் அப்படித்தான், நானும் அப்படித்தான்’என்று வாய்க்கு வாய் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். உங்கள் எண்ணோட்டமும் நீங்கள் யாரிடம் பேசுகிறீர்களோ அவருடைய எண்ணோட்டமும் ஒன்றாகவே இருந்தாலும்கூட.
உலகில் வாழும் நம் எல்லோருக்குமே எல்லா சூழலுமே இருக்கத்தான் செய்யும். உதாரணத்துக்கு ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தையை எல்.கே.ஜி, யு.கே.ஜி படிக்கும் குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய ஸ்டெஸ்ஸும், அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் ஸ்ட்ரெஸ்ஸும் ஒன்றல்ல. ஆனால் அந்த இரு பிரிவினருக்கும் இருப்பது ஸ்ட்ரெஸ்தான். அதில் சந்தேகமில்லை.
அதற்காக அந்தக் குழந்தை அலுவலகத்தில் பணிபுரிபவரிடம் பேசும்போது ‘எனக்கும் அப்படித்தான் அங்கிள்…’ என்று சொன்னாலோ அல்லது அந்த அலுவலகப் பணியாளர் குழந்தையிடம் பேசும்போது ‘எனக்கும் அப்படித்தான்…’ என்று சொன்னாலோ அது எந்த அளவுக்கு நகைப்புக்கு உரியதாக இருக்குமோ அப்படி இருக்கும் வாய்க்கு வாய் ‘நானும் அப்படித்தான், நானும் அப்படித்தான்’ என்ற சொல்லாடல்களைப் பிரயோகிப்பது.
—3—
உங்கள் மகிழ்ச்சியை அப்படியே எல்லோரிடமும் கொட்டிக்கொண்டிருக்க வேண்டாம். ‘வாவ்’என அதிசயிப்பவர்கள் மனம் பொறாமையினால் புழுங்குவது உங்கள் கண்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
மாறாக அவர்களின் மகிழ்ச்சியை உங்களிடம் பகிரும்போது வாயால் மட்டும் ‘வாவ்’ சொல்லி உற்சாகப்படுத்தாமல் உண்மையிலேயே அக்கறையுடன் வாழ்த்தி மகிழுங்கள். உங்கள் மனமும் உற்சாகத்தில் துள்ளும். உண்மையான அக்கறை இல்லாவிட்டால் பொறாமையினால் வேகும் என்பது வேறு விஷயம்.
நல்லோர்களை பற்றி நினைப்பதும், நல்லோர்களுடன் பேசுவதும், நல்லோர்கள் குறித்து பிறருடன் பேசுவதும் கூட உங்களுக்கான உற்சாக டானிக்தான். ஆம். நல்லோர்கள் எல்லா பரிணாமங்களிலும் நன்மைகளையே செய்வார்கள்.
—4—
உங்கள் வருத்தங்களையும் சோகங்களையும் ஏமாற்றங்களையும் பிறரிடம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம். கேட்கும்போது ‘ச்சூ’ கொட்டி கேட்டாலும் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு கதையே. ஏனெனில் காலையில் இறப்பு நடந்த வீட்டில் முக்கிய நபராக இருந்துகொண்டே மாலையில் ஃபேஸ்புக்கில் பிறர் பதிவுகளுக்கு லைக்கும் கமெண்ட்டும் போடும் வினோதமான மனோபாவமுள்ள காலகட்டத்தில் வசிக்கிறோம் நாம்.
இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில் உங்கள் சோகக் கதைகள் கட்டுக்கதைகளாக இன்பாக்ஸ் to இன்பாக்ஸ் பல்வேறு பரிணாமங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கே தெரியாமல்.
—5—
ஏதேனும் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக சிறப்பு விருந்தினராக அழைக்க இருப்பவரிடம் பேசும்போது உங்கள் நிறுவனத்தைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்காமல் நீங்கள் என்ன நோக்கத்துக்காக அவரை தொடர்பு கொண்டிருக்கிறீர்கள் என்பதை சொல்லிவிட்டு அவரைப் பற்றி அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதையும் காதுகொடுத்து கேளுங்கள். அவர்கள் குறித்து கூகுள் செய்து நன்கு தெரிந்துகொண்டு தொடர்பு கொள்ளுங்கள்.
இத்தனை திறமைசாலியான உங்களுக்கு இன்னும் கெளரவங்கள், புகழ், பாராட்டுகள், விருதுகள் கிடைத்திருக்கலாம் என்பதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கவும். அவரவர்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதை இறைவன் அளித்துக்கொண்டுதான் இருக்கிறான் என்பதை மறவாதீர்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் இறைவன் என்று நான் குறிப்பிட்ட இடத்தில் இயற்கை என்பதைப் பொருத்திக்கொள்ளுங்கள்.
—6—
அதுபோல முக்கியமான நபரிடம் அலுவலக ரீதியாக பேசிக்கொண்டிருக்கும்போது ஆண்களாக இருந்தால் உங்கள் மனைவியைப் பற்றியோ, பெண்களாக இருந்தால் உங்கள் கணவரைப் பற்றியோ பெருமையாகச் சொல்லி உரையாடலை ஹோம்லியாக்க முயன்றால் அந்த உரையாடல் பெரும்பாலும் வெற்றியடைவதில்லை.
—7—
ஒருவருடன் உரையாடும்போது அவரைப் பாராட்ட வேண்டிய தருணத்தில் அந்தப் புகழ்ச்சி அவர்களை மட்டும் உற்சாகப்படுத்துவதாக இல்லாமல், அவரை எந்த செயலுக்காகப் பாராட்டுகிறீர்களோ அந்த செயலால் உங்கள் உரையாடல் எந்த அளவுக்கு மேம்பட்டது என்றும், உங்கள் மனம் அவருடைய செயலால் எப்படி நேர்மறையாக செயல்பட்டது என்றும் உண்மையிலேயே சொல்லிப் பாருங்கள். உங்கள் பாராட்டினால் பரவசமான அவரது மனதைவிட பல மடங்கு பரவசம் உங்களைத் தொற்றிக்கொள்ளும்.
உதாரணத்துக்கு ஒருவர் உங்களிடம் பேசும்போது ‘குறை ஒன்றும் இல்லை… பூரண மகிழ்ச்சியான வாழ்க்கை… சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது’ என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன். ‘ஆஹா, எப்படி இப்படி பாசிட்டிவாக பேசுகிறீர்கள். யு ஆர் கிரேட்’ என்று முடித்துவிடாமல் ‘ஆஹா, உங்கள் உற்சாகம் என்னையும் தொற்றிக்கொண்டது. உங்களின் இந்த நேர்மறை சுபாவம்தான் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இந்த குணம்தான் மற்றவர்கள் உங்களுடன் நட்பாகக் காரணமாகிறது’ என்று உங்களுடனுடன் அவரது நேர்மறை குணத்தை இணைத்துப் பாராட்டுங்கள்.
அதுபோல அப்படி யாரேனும் உங்களைப் பாராட்டினால் ‘எப்பவுமே நான் இப்படித்தான். எல்லோரிடமும் இப்படித்தான் பேசுவேன். அதனால்தான் எல்லோருக்கும் என்னைப் பிடிக்கிறது. ஒருமுறை பாருங்கள்…’ என இழுத்து உங்கள் சுயபுராணத்தை ஆரம்பித்துவிடாதீர்கள். பிறகு உலகில் எந்த சக்தி வாய்ந்த பெஃவிகால் போட்டு ஒட்டினாலும் அந்த நட்பில் உயிரோட்டம் வரவே வராது. கவனம்.
பிறரைப் பாராட்டும்போதும் சரி, நீங்கள் மற்றவர்களின் பாராட்டை ஏற்கும்போதும் சரி எல்லைக்கோட்டை தாண்டாதீர்கள்.
—8—
நான் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் மூன்று மணிக்கே எழுந்துவிடுவேன் என்று பதிவிட்டபோது பலரும் இதுபோல் எங்களால் இருக்க முடியவில்லை என வருத்தப்பட்டனர்.
எல்லோருக்கும் உடலமைப்பும், வீடும், பணியிடமும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இரவு 12 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பும் ஒருவரால் எப்படி 3 மணிக்கு எழ முடியும். சிலருக்கு 8 மணிநேரம் தூங்கினால்தான் உடல் சுறுசுறுப்பாகும். ஒருசிலருக்கு 4 மணி நேரமே போதுமானதாக இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு 10 மணிநேர தூக்கம் தேவையாக இருக்கும். அவரவர் உடல்அமைப்பு, அவரவர் சூழல், அவரவர் வாழ்க்கை. எல்லாமே எல்லோருக்குமே பொதுவானதில்லை. பொருந்துவதுமில்லை.
அவரவருக்கு இயற்கை கொடுத்துள்ள வாழ்க்கை எப்படி அமைகிறதோ அப்படியே தொடரலாம். எதுவாக இருந்தாலும் ஒரு ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பதையே நான் சொல்ல வருகிறேன்.
—9—
தினமும் வாக்கிங் செல்லும் பழக்கமுடையவர்களுக்கு மழைநாளில் குடை பிடித்துக்கொண்டாவது வாக்கிங் செல்ல வேண்டும் என்ற உந்துதல் இருக்குமேயானால் அதுவே ஒரு செயலுக்கான ஒழுங்கு என்று சொல்லலாம். மழையில் குடை பிடித்துக்கொண்டு வாக்கிங் செல்லுங்கள் என நான் சொல்ல வரவில்லை.
—10—
எந்த செயலானாலும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மனம் அந்த நேரத்துக்கும் அந்த இடத்துக்கும் அடிமையாகும். அப்புறம் என்ன நீங்கள் செய்யும் வேலை இன்னும் நேர்த்தியாகும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP