ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 24
ஜனவரி 24, 2021
யார் நண்பர்?
ஃபேஸ்புக் வந்த பிறகு நண்பர்கள் என்று சொல்லுக்கான அர்த்தமே மாறிப்போனதோ என்று தோன்றுகிறது. யாரைப் பார்த்தாலும் ‘அவர் என் நண்பர்’ என்று சொல்லும் அளவுக்கு தாங்களாகவே நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் ஆளுக்கு 5000 நபர்களை (நண்பர்களை அல்ல, நபர்களை) தன் தொடர்பு பட்டியலில் வைத்திருக்கலாம் என்ற வரையறை வைத்துள்ளதால் ஆளுக்கு 5000 நபர்களை தொடர்புப் பட்டியலில் இணைத்து வைத்துக்கொள்கிறார்கள். அவ்வளவே. 5000 பேரும் எப்படி நண்பர்கள் என்ற வரையறையின் கீழ் வருவார்கள்?
ஃபேஸ்புக்கை மார்க் ஜூக்கர்பர்க் தொடங்கிய கல்லூரி வளாகத்தினுள் தங்களுடன் படிக்கின்ற மாணவ மாணவிகள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ள உதவும் ஒரு புத்தகமாகவே கண்டுபிடித்தார். பின்னர் அது உலகளாவிய பிரசித்தி பெற்ற ஒரு வர்த்தமாகிப் போனது.
கல்லூரி மாணவர்களுக்காக அவர் தொடங்கிய நெட்வொர்க்கில் தன் கல்லூரி மாணவ மாணவிகளை அடையாளப்படுத்த Friend என்றும் Friend List என்றும் பெயர் சூட்டினார். அவ்வளவே.
ஒரு மாபெரும் திருவிழா நடத்த ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கு பல கடைகளை விரிக்கிறார்கள். கடை போடுவதற்கு அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வாங்கிக்கொள்கிறார்கள். மக்களை அந்த திருவிழாவுக்கு இலவசமாக அழைக்கிறார்கள். மக்களைக் கூட்டுகிறார்கள். மக்களும் ஆர்வமுடன் கடைகளை பார்வையிடுகிறார்கள். பிடித்ததை வாங்குகிறார்கள். பிக்னிக் ஸ்பாட் போல மக்களிடம் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. சில கடைகளில் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. சில கடைகளில் வியாபாரம் மந்தம்தான். அந்தத் திருவிழா நேரத்தில் வியாபாரம் சுமாராகவே இருந்தாலும் அவர்களுக்கு நல்ல விளம்பரம். பின்னாளில் தேவை ஏற்படும்போது அந்த நிறுவனங்களைத் தொடர்புகொண்டு பயன்பெறுவார்கள். இது ஒரு நல்ல வியாபார யுத்தி.
இதுதான் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நமக்கெல்லாம் கிடைக்கும் இலவச சேவையின் அடிநாதம்.
அதுவும் ஃபேஸ்புக்கில் நாமாகவேதான் ப்ரைவேட்டாக வைத்துக்கொள்ள வேண்டிய நம்மைப் பற்றிய விவரங்களை புள்ளி விவரங்களுடன் நித்தம் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறோம். ஒருசிலர் நம் அனுமதி இன்றி அவற்றை எடுத்து சுயலாபம் பெறுகிறார்கள்.
இதில் சமூகவலைதளங்களை குறைசொல்லி ஒன்றும் பிரயோஜனமில்லை.
கோடானுகோடி மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு ஃபேஸ்புக்கை இலவசமாக கொடுக்க வேண்டும் என்றால் அவர்களின் தொழில்நுட்பக் கட்டமைப்பும், பொருளாதார கட்டமைப்பும், வியாபார நுணுக்கங்களும் எந்த அளவுக்கு ஆழமாகவும் அகலமாகவும் இருக்க வேண்டும் என்பதை சிந்தியுங்கள்.
சரி நம் விஷயத்துக்கு வருவோம்.
யார் நண்பர்?
ஒரே கல்லூரியில் படிப்பவர்களைக் கூட சீனியர், ஜூனியர் என்றுதான் குறிப்பிடுகிறோம். ஒரே வகுப்பில் படிப்பவர்களை வேண்டுமானால் நண்பர்கள் என்று சொல்லலாம். அதுவும் பிடித்திருந்தால் ‘நண்பர்’. இல்லை என்றால் ‘உடன் படிக்கும் மாணவர்’. இந்த வித்தியாசத்தை உணருங்கள்.
ஆசிரியரை குரு என்ற ஸ்தானத்தில்தானே வைக்க முடியும். அவர் உங்களுடன் அன்பாகப் பழகுகிறார் என்பதற்காக அவர் உங்கள் நண்பர் ஆகிவிட முடியாதல்லவா? அன்போடு, பண்போடு, நட்புள்ளத்தோடு பழகும் ஓர் ஆசிரியர் என்ற அளவில் அவருடைய நெருக்கத்தை வைத்துக்கொள்ளலாம். ‘அந்த ஆசிரியர் என் நண்பர்’ என்று சொல்ல ஆரம்பிக்கும்போது உளவியல் ரீதியாகவும் மனதுக்குள்ளும் மாற்றங்கள் நிகழ ஆரம்பிப்பதை தவிர்க்க இயலாது. யாரை எந்த ஸ்தானத்தில் வைத்து அழகு பார்க்க வேண்டுமோ அந்த ஸ்தானத்தில் வைத்து அழகு பார்த்தால் எல்லோருக்கும் நல்லது.
இந்த குழப்பங்களை சரி செய்துகொள்ளாததினால்தான் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான குரு-சிஷ்யன்(யை) என்ற தொடர்புகள் கொச்சைப்படுத்தப்படுகின்றன சில இடங்களில். நான் ஏதோ ஆசிரியர்களை எல்லாம் தவறாக சொல்லிவிட்டதாக நினைக்க வேண்டாம். ஆசிரியர்கள் புனிதமானவர்கள். குரு ஸ்தானம் என்பது இறைசக்தி வாய்ந்த ஒரு பதவி. அந்தப் பதவிப் பிரமாணம் செய்துகொள்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் இங்கு குறிப்பிடுகிறேன். அப்படிப்பட்ட தெய்வங்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் பாரதத்தில்தான் நாமும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதில் சந்தேகமே இல்லை.
இப்படி இருக்கும்பட்சத்தில் ஃபேஸ்புக்கில் தொடர்புப் பட்டியலில் இருக்கிறோம் என்ற காரணத்துக்காக ‘நண்பர்’ என்ற உயரிய வார்த்தையை ஒருசிலர் கொச்சைப்படுத்துகிறார்கள்.
ஃபேஸ்புக்கில் நட்புப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் ஃபேஸ்புக்கில் தொடர்பில் இருப்பவர். அவ்வளவே. அதில் இணைந்திருக்கும் தெரிந்தவர் தெரியாதவர், அறிந்தவர் அறியாதவர், தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள், ஒரிஜினல் முகம் வைத்திருப்பவர் பொய் முகம் வைத்திருப்பவர் என அத்தனை பேரும் எப்படி நண்பர்கள் என்ற பிரிவின் கீழ் வர முடியும்? கொஞ்சம் சிந்தியுங்கள்.
ஆத்மார்த்தமாகப் பழகும் ஓரிருவரை தக்க வைத்துக்கொள்வதே பிரம்மப்பிரயத்தனமாக இருக்கும் இந்தாளில் ஃபேஸ்புக் நட்பில் இருக்கும் 5000 நபர்களும் எப்படி நண்பர்கள் ஆவார்கள்?
அலுவலகத்தில் 25 நபர்கள் கொண்ட ஒரு டீமை வழிநடத்தலாம். ஆனால் 25 நண்பர்களை சமாளிப்பது அத்தனை சுலபம் கிடையாது. 25 குடும்ப உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஒரு விழா நடத்துவது அத்தனை எளிதான விஷயம் அல்ல. இதைத்தான் நான் சொல்ல வருகிறேன். அப்படி இருக்கும்போது ஃபேஸ்புக்கில் இருக்கும் 5000 நபர்களையும் நண்பர்கள் என்ற வகையில் எப்படி கொண்டு வருவது? அப்படிக் கொண்டு வந்தால் அந்த நட்புகளை சமாளிப்பதுதான் எப்படி?
பிசினஸ் செய்பவர்கள் அவர்களின் பொருட்களை / சேவைகளை பயன்படுத்துபவர்களை எப்படி கிளையிண்ட் / கஸ்டமர் என்ற பெயரில் அடையாளப்படுத்துகிறார்களோ, எழுத்தாளர்கள் எப்படி தன் புத்தகங்களை வாசிப்பவர்களை வாசகர்கள் என அடையாளப்படுத்துகிறார்களோ, நடிகர்கள் எப்படி தன் திரைப்படத்தைப் பார்த்து ரசிப்பவர்களை ரசிகர்கள் என அடையாளப்படுத்துகிறார்களோ அப்படித்தான் முகநூல் என்ற பொதுவெளியில் இணைந்திருப்பவர்கள் அவரவர் ‘தொடர்பில் இருப்பவர்கள்’ மட்டுமே.
அதில் நமக்கு நேரடியாக நண்பர்களாக இருப்பவர்களும் இருக்கலாம், நம் குடும்ப உறுப்பினர்கள் இருக்கலாம், நம் ஆசிரியர்கள் இருக்கலாம், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் இருக்கலாம். அதனால் அத்தனை பேருமே நண்பர்கள் என்றழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நண்பர் வேறு. நட்புடன் பழகுவது என்பது வேறு.
சமீபத்தில் முகநூல் தொடர்பில் இருக்கும் ஒருவர் ஒரு தொழில்நுட்ப சந்தேகம் கேட்டிருந்தார். தொழில்நுட்பமே என் சுவாசம் என்பதால் சில நிமிடங்களில் என்னால் தீர்வளிக்க முடிந்தது. அதற்கு மிக மகிழ்ச்சியுடன் கண்ணியமாக ஃபேஸ்புக்கிலேயே என் பெயரைக் குறிப்பிட்டு நன்றி சொல்லி இருந்தார்.
அடுத்த சில நாட்களில் தன் நண்பர் சொன்னதாக அவர் பெயரையும் குறிப்பிட்டே எனக்கு ஒரு தகவல் அனுப்பி இருந்தார்.
20 வருடங்களுக்கு முன்னர் தமிழில் வெளிவந்துகொண்டிருந்த ஒரு தொழில்நுட்பப் பத்திரிகையில் பணிபுரிந்துகொண்டிருந்த அவருடைய நண்பர் ‘காம்கேர் புவனேஸ்வரிக்கு அந்த பெயரை வைத்ததே’ தான்தான் என்று சொன்னதாக கூறியிருந்தார்.
நானோ அதிர்ச்சியின் உச்சத்தில். காரணம் அவர் சொன்ன நண்பரின் பெயரைக்கூட நான் அறிந்திருக்கவில்லை.
அதோடு மட்டுமில்லாமல் யாருக்கு யார் பெயர் வைப்பது?
கொஞ்சம் பிரபலமாகி விட்டால் (பிரபலம் என்ற வார்த்தையே எனக்குப் பிடிக்காது. ஆனாலும் இங்கு பயன்படுத்த வேண்டிய சூழல்) அல்லது
ஒருவர் தன் சொந்த உழைப்பில் வளர்ந்துவிட்டால் அந்த வெற்றிக்குச் சொந்தம் கொண்டாட முகம் அறியா நபர்கள் எத்தனைபேர் கிளம்பிவிடுகிறார்கள் என மனதுக்குள் கோபம் கொப்பளித்தது.
நான் உடனே என்னிடம் தொழில்நுட்ப உதவி பெற்றவரிடம் போன் செய்து பேசினேன்.
எனக்கு புவனேஸ்வரி என பெயர் வைத்ததும், காம்கேர் புவனேஸ்வரி என பெயர் வைத்ததும், என் நிறுவனத்துக்கு காம்கேர் சாஃப்ட்வேர் என பெயர் சூட்டியதும் என் பெற்றோரே என்ற பேருண்மையை அவருக்கு புரிய வைத்தேன். எது எதற்கெல்லாம் நிரூபணம் செய்ய வேண்டி உள்ளது என்று பாருங்களேன்.
இத்தனைக் கதையும் ஏன் சொல்கிறேன் என்றால் நண்பர்கள் என்ற வார்த்தைக்கான பொருள் குறித்து நான் சிந்தித்து வைத்திருந்ததை உங்கள் அனைவருக்கும் புரியும்படி சொல்வதற்காகவே!
நல்லதொரு தொடர்பில் இருப்போம். அன்புள்ளத்துடன் பழகுவோம்!
இதுதான் என் லாஜிக்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP