ஜம்முனு வாழ காம்கேரின் OTP-22: கடந்தகாலம்தான் ஒருவரது நன்னடத்தை சான்றிதழ்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 22
ஜனவரி 22, 2021

கடந்தகாலம்தான் ஒருவரது நன்னடத்தை சான்றிதழ்!

நேற்று வந்திருந்த ஒரு இமெயில் 28 வருடங்களுக்கு முந்தைய காலத்துக்கு என்னை அழைத்துச் சென்றது.

1992-ல் எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய காலத்தில் நம் நாட்டில் தொழில்நுட்பம் அப்போதுதான் அறிமுகமாகி இருந்தது. கம்ப்யூட்டர் தங்கள் வேலைவாய்ப்புக்கு உலை வைக்கும் என்ற தவறான நம்பிக்கைகள் பரவி இருந்த காலகட்டம்.

அந்த சூழலில் என்னைச் சுற்றி இயங்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், மளிகைக் கடைகள், வங்கிகள் போன்றவற்றை அணுகி தொழில்நுட்ப விழிப்புணர்வு அளித்து, கம்ப்யூட்டரை குறைந்த விலையில் அசம்பிள் செய்துகொடுத்து, நாங்கள் தயாரிக்கும் அவர்களின் பயன்பாட்டுக்கான சாஃப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து கொடுத்து, அதைப் பயன்படுத்த பயிற்சியும் அளித்து குறுகிய காலத்துக்கு அவற்றை இலவசமாகப் பயன்படுத்திப் பார்க்க அனுமதியும் கொடுத்து, பின்னர் பிடித்திருந்தால் வாங்கலாம் என்ற உத்திரவாதமும் அளித்து என்னன்னவோ சாகசங்கள் செய்து நான் கற்ற தொழில்நுட்பத்தை என்னைச் சுற்றி இயங்கும் இந்த சமுதாயத்தையும் கற்கச் செய்து நான் உயர்வதுடன் இந்த சமுதாயத்தையும் மேம்படுத்த என்னால் ஆன பெருமுயற்சிகள் அத்தனையையும் எடுத்தேன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன்.

அப்படியான நாட்களில் 1994-ஆம் ஆண்டு சென்னை க்ரீம்ஸ் ரோடில் இயங்கி வந்த பஞ்சப் நேஷனல் வங்கியில் அவர்களின் அன்றாட தகவல்களை கம்ப்யூட்டர் டேட்டா பேஸில் பதிவாக்கி டாக்குமெண்ட் செய்துகொடுக்கும் பணியை தனியாரிடமே கொடுத்து வந்தார்கள்.

அவர்களின் தேவைக்காக சாஃப்ட்வேரை தயாரித்து அவர்களின் அன்றாட தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவாக்கி வாரந்திர, மாதாந்திர, வருடாந்திர கணக்குகளை கம்ப்யூட்டரில் ரிப்போர்ட் தயாரித்துக்கொடுத்து வந்தோம்.

அப்போது அங்கு ஆடிட்டிங் பிரிவில் பணியில் இருந்த ஒருவரிடம் இருந்து வந்திருந்த இமெயிலைத்தான் இந்தப் பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

‘வாழ்த்துகள் மேடம். உங்கள் நேர்காணலை குங்குமம் தோழி பத்திரிகையில் பார்த்தேன். நான் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி புரிந்தேன்… அண்மையில் பணி ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த 28 வருடங்களில் உங்கள் நிறுவனத்தின் அபார வளர்ச்சி வியக்க வைக்கிறது’ என்று ஆங்கிலத்தில் எழுதி பாராட்டி இருந்தார். அவரது பெயர், முகவரி, மொபைல் எண் அனைத்தையும் கொடுத்திருந்தார்.

உடனே செய்துகொண்டிருந்த அலுவலகப் பணிக்கு சிறிய இடைவெளி கொடுத்துவிட்டு அவருக்கு போன் செய்தேன்.

ஆச்சர்யத்துடன் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டோம். 1994-ம் ஆண்டு பஞ்சாப் நேஷனல் வங்கியில் அவருடன் பணியில் இருந்த ஒரு சிலர் குறித்து நினைவுகளை பகிர்ந்துகொண்டார். அவர்களை எனக்கும் தெரியும் என்பதால். வங்கியில் சீஃப் மேனஜராக பணியில் இருந்து ஓய்வு பெற்று தற்சமயம் கோயம்புத்தூரில் செட்டில் ஆகி இருப்பதாகக் கூறினார்.

‘எப்படி சார் என்னை நினைவில் வைத்திருந்தீர்கள்…’ என்றேன்.

‘காம்கேர் என்ற பெயர் நன்றாக நினைவிருக்கிறது, புவனேஸ்வரி என்பதும் மிக நன்றாக நினைவில் உள்ளது. ஆனால் முகம்தான் நினைவில் இல்லை. ஆனால் உங்கள் நேர்காணலில் 1992-ம் வருடம் நிறுவனத்தைத் தொடங்கினேன் என்று சொல்லி இருந்தீர்கள். அதனால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து யோசித்துப் பார்த்தேன். உங்கள் வெப்சைட்டில் இருந்து இமெயில் முகவரி எடுத்தேன்…’ என்றார்.

‘ரொம்ப சந்தோஷம் சார்…’ என்றேன்.

‘இத்தனை விரைவில் தொடர்புகொண்டு பேசுவீர்கள் என நான் நினைக்கவில்லை… பொதுவாக ஒரு நிலைக்கு உயர்ந்தவர்கள் முந்தைய காலகட்டத்தில் சந்தித்தவர்களின் தொடர்புகளை மறந்துவிடுவார்கள்… ஆனால் நீங்கள்…’ என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

நானும் சந்தோஷத்தில் எதையுமே பேசவில்லை. அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

‘அப்போதே நீங்கள் மிக எளிமையாகத்தான் இருப்பீர்கள். ரொம்பவும் அமைதி. ஆனால் சுறுசுறுப்பு அதிகம். கடுமையான உழைப்பாளி. ஞாயிறு அன்று கூட எங்கள் வங்கியின் சில பிரிவுகள் இயங்கும். அப்போது ஞாயிறு என்றும் பார்க்காமல் முடித்த பணிகளை கொடுத்துவிட்டு கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து சரியாக வேலை செய்கிறதா என பரிசோதித்து விட்டுதான் கிளம்புவீர்கள்.

அப்போது நீங்கள் பஸ்ஸில்தான் வருவீர்கள்… உங்கள் நிறுவனம் இருந்த ஆதம்பாக்கத்தில் இருந்து க்ரீம்ஸ் ரோடுக்கு நேரடி பஸ் கூட இருக்காது. டிவிஎஸ் ஸ்டாப்பிங்கில் இறங்கி நடந்து வருவீர்கள்…’ என்று போன மாதமோ அதற்கு முந்தைய மாதமோ நடந்த விஷயங்களை சொல்வதைப் போல சொல்லிக்கொண்டே போனார்.

எனக்கு ஆச்சர்யத்துக்கு மேல் ஆச்சர்யம்.

‘எப்படி சார் இத்தனை நினைவுகள்’ என்று கேட்டேன்.

‘எனக்குத் தெரிந்து 1992-ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் நிறுவனங்களே நம் நாட்டில் மிக மிகக் குறைவு. இல்லவே இல்லை என்றுகூட சொல்லலாம். அதுவும் ஒரு இளம் பெண் துறுதுறுவென பிசினஸில் பரபரப்பாக இயங்கியதை கண்களால் பார்த்து அதிசயத்தவர்களுள் நானும் ஒருவன். ஒரு பெண் தொழில்முனைவோராக உங்களை எங்கள் வங்கியில் யாராலும் மறக்கவே முடியாது… இப்போது பிசினஸ் பெண்மணியாகவும் பார்த்துவிட்டேன்…’ என்றார்.

அதன் பிறகு என் சகோதரி, சகோதரன் அப்பா, அம்மா என யாரையும் விட்டு வைக்கவில்லை. எல்லோரையும் நினைவில் வைத்திருந்து விசாரித்தார்.

அவர் கடைசியில் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்தான் மிக முக்கியமானவை.

‘இந்த காலத்தில் யாருக்கு போனில் பேசுவதற்கு பிடிக்கிறது. எல்லாமே வாட்ஸ் அப். பிறந்த நாள் வாழ்த்தானாலும், துக்கம் விசாரிப்பதாக இருந்தாலும், தீபாவளி பொங்கல் வாழ்த்தென்றாலும் வாட்ஸ் அப் தான். ஆனால் நான் போனில் அழைத்துத்தான் வாழ்த்துகிறேன். பண்டிகை தினங்களில் காலையில் சாப்பிட்டு வேலைகளை முடித்துவிட்டு 11 மணிக்கு ஆரம்பித்தால் 1 மணி  வரை நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் போன் செய்து வாழ்த்தி சில நிமிடங்கள் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். வாட்ஸ் அப்பில் தேவைப்பட்டால் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துகொள்வேன்…’ என்றார்.

இந்த விஷயம்தான் இன்று நம் அனைவருக்கும் தேவையாக உள்ளது. மனசு விட்டுப் பேச ஆள் இல்லை என்று சொல்பவர்களில் யாரேனும் ஒருவர் இதுபோல பண்டிகை தின வாழ்த்துகளை போனில் அழைத்து பகிர்ந்துகொள்கிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும். இப்படி நாள் கிழமை பண்டிகை தினங்களில் நட்புகளிடமும் உறவுகளிடமும் பேசும் வழக்கத்தை வைத்துக்கொண்டால் மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவை காணாமலேயே போய்விடும் என்பது நிதர்சனம். ஏதேனும் ஒரு சமயம் மனசு விட்டுப் பேச ஆள் இல்லாமல் தவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படாதல்லவா?

‘ஆமாம் சார், இப்போதெல்லாம் இளம் தலைமுறையினருடன் சேர்ந்துகொண்டு முந்தைய தலைமுறையினரும் அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு அப்படியே அடிக்ட் ஆகிவிட்டார்கள்… எதுவாக இருந்தாலும் வாட்ஸ் அப் தான். எங்கள் வீட்டில் இன்றும் நான் தினமும் வெளியில் கிளம்பும்போது என் அப்பா ‘காரில் பெட்ரோல் இருக்கான்னு செக் செய்துகொள், பர்ஸ் எடுத்துக்கொண்டாயா, பணம் இருக்கிறதா, பார்த்து பத்திரமா போயிட்டு வா’ என்று சொல்லாமல் அனுப்ப மாட்டார். இன்னும் சொல்லப் போனால் பெரும்பாலும் காரிலும் பைக்கிலும் பெட்ரோல் நிரப்பி வைப்பதே அப்பாதான்…’ என்றேன்.

‘அந்த காலம் போல அப்பா அம்மா சொல்வதைக் கேட்க பிள்ளைகள் தயாராக இல்லை… ஏனெனில் இந்தக் காலத்தில் எக்ஸ்போஷர் அதிகம்…’ என்றார்.

‘சரி சார் எந்த எக்ஸ்போஷரும் இல்லாத 1992-லேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து சுயமாக தொழில் தொடங்கி அதையே இலக்காகிக்கொண்டு இன்று நானும் உயர்ந்து இந்த சமுதாயத்தையும் உயர்த்த என்னளவில் எத்தனை உயரிய பங்களிப்பை அளித்துள்ளேன்… ஆனால் நீங்கள் சொல்வதைப் போல கட்டற்ற எக்ஸ்போஷர் உள்ள இந்த நாளில் எத்தனை தொழில்முனைவோர் உருவாகி உள்ளனர் சொல்லுங்கள்… ஒருசில விதிவிலக்குகளைத் தவிர…’ என்றேன்.

‘ஆமாம்… உண்மைதான்’ என்றார்.

‘எக்ஸ்போஷர் என்பதை தங்களுக்குத் தேவையான விஷயங்களில் தங்களுக்குப் பிடித்தமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள். சுயநலத்துக்காக மட்டுமே தங்கள் எக்ஸ்போஷரை சாதகமாக்கிக்கொள்கிறார்கள். இதுதான் நான் கண்கூடாக பார்க்கும் வலிமிகுந்த உண்மை…’ என்றேன்.

‘இவ்வளவு பிசியான நீங்கள் எனக்காக இத்தனை நிமிடங்கள் ஒதுக்கிப் பேசியதற்கு மிக்க நன்றி மேடம்… எப்போது வேண்டுமானாலும் போனில் அழைத்துப் பேசலாம்… வாழ்த்துகள் மேடம்…’ என்று வார்த்தைக்கு வார்த்தை ‘மேடம் , மேடம்’ என்று மரியாதை கலந்து பேசிய அவருடைய பண்பின் அன்பின் நனைந்தேன்.

போனை வைத்தபோதுதான் பார்த்தேன். 20 நிமிடங்கள் கடந்திருந்தது. மீண்டும் அலுவலக வேலையில் மூழ்கினேன். ஆனால் பின்னணி இசைபோல கடந்த காலம் எனக்களித்த நன்னடத்தைச் சான்றிதழின் இனிமையில் நனைந்துகொண்டே நேற்றைய பொழுது இனிமையானது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 37 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon