ஜம்முனு வாழ காம்கேரின் OTP-26: ‘The Great Indian Family’ –  பார்த்திருக்கீங்களா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 26
ஜனவரி 26, 2021

The Great Indian Family –  பார்த்திருக்கீங்களா?

‘The Great Indian Kitchen’ – ஊர் உலகமே இந்த படத்தைப் பற்றிப் பேசுகின்றனவே. நீங்கள் ஏன் எதுவுமே எழுதவில்லை என்பது சிலரின் கேள்வி.

எங்கள் ‘The  Great  Indian Family’ – ல் நாங்கள் வாழ்ந்து வருவதால் ‘The Great Indian Kitchen’ என்ற படத்தை பார்க்கும் ஆர்வம் வரவில்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்ப்பேன்.

அது என்ன ‘The Great Indian Family’?

என் 20 வயது வரை, அதாவது எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேரும் நாள் வரை அப்பாக்கள் என்றாலே என் அப்பா போல்தான் இருப்பார்கள் என்றும், அம்மாக்கள் என்றால் என் அம்மா போல்தான் இருப்பார்கள் என்றும் நினைத்திருந்தேன்.

ஆனால் என்னுடன் படித்தவர்களின் அப்பா அம்மாக்கள் குறித்து அவர்கள் என்னிடம் பகிர்ந்த போதுதான் எங்களின் பொக்கிஷத்தின் மதிப்பை பல மடங்காக உணர்ந்தேன்.

ஆம். உண்மையில் எங்கள் ‘அப்பாம்மா’ எங்களின் பொக்கிஷங்களே. இலக்கணப் பெற்றோர். எங்கள் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான தம்பதிகளுக்கு ரோல் மாடல்.

மனைவி மற்றும் பெண் குழந்தைகளின் உள்ளாடைகள் முதல் சானிட்டரி நாப்கின் வரை எந்த அப்பாவால் கூச்சமில்லாமல் வாங்கி வர முடிகிறதோ…

சேலையின் மேல் முள் விழுந்தாலும், முள் மேல் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் ஆபத்து என்று சொல்லும் சொல்லாடலை மாற்றி ‘பெண்கள் ஏன் எப்பவுமே சேலையாகவே இருக்க வேண்டும், முள்ளாகவும் இருக்கலாமே’ என அசாத்திய தைரியம் கொடுக்க எந்த அம்மாவால் விவேகத்துடன் கூடிய தன்னம்பிக்கைக் கொடுக்க முடிகிறதோ…

அந்தக் குடும்பம் சொர்க்கம்.

அப்படிப்பட்ட சொர்க்கத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம்.

எனவேதான், ‘The Great Indian Kitchen’ என்ற படத்தை பார்க்கும் ஆர்வம் வரவில்லை. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பார்ப்பேன்.

எங்கள் அப்பா அம்மா குறித்து நாங்கள் எடுத்த ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தில் அவர்களுடன் பணிபுரிந்த நண்பர் பகிர்ந்திருக்கும் சிறு பகுதியை உங்கள் பார்வைக்காக கொடுக்கிறேன்.

எங்கள் ‘The Great Indian Family’ என்பது  ‘The great Indian Kitchen’ சினிமாவுக்கு 100% அப்படியே எதிர்மாறானது.

‘The great Indian Kitchen’ – இந்தத் திரைப்படம் சமையல் அறையில் அடைந்து கிடந்து வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் குறித்தது.

எங்கள் ஆவணப்படம் ஒரு ஆணும் பெண்ணும் எந்த அளவுக்கு இணக்கமாக குடும்பப் பொறுப்புகளை பகிர்ந்துகொள்ள முடியும்  என்பதை என் பெற்றோரின் வாழ்க்கையில் இருந்தே ஆவணப்படுத்தி உள்ளேன்.

இதுவே  எங்கள் ‘The Great Indian Family’. நேரமும் வாய்ப்பும் ஆர்வமும் இருப்பவர்கள் பார்த்து ரசியுங்களேன்.

https://youtu.be/G4rAsFRsZrA

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 35 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon