ஜம்முனு வாழ காம்கேரின் OTP-27: ‘உம்மணாம் மூஞ்சிகள்’ என முத்திரை குத்த வேண்டாம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 27
ஜனவரி 27, 2021

‘உம்மணாம் மூஞ்சிகள்’ என முத்திரை குத்த வேண்டாம்!

ஒரு சிலரைப் பார்த்தால் உம்மணாம் மூஞ்சிகள் என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு அதிகம் பேசாமல் இறுக்கமான முகபாவனையுடன் இருப்பார்கள். பொதுவாக இவர்களுக்கு நண்பர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இருக்கும் ஒருசில நட்புகளும் அவர்களை இளம் பருவத்தில் இருந்தே நன்கு புரிந்தவர்களாக இருப்பார்கள்.

எப்படி நண்பர்கள் குறைவோ அப்படியே எதிர்களும். ஏனெனில் இவர்களிடம் எதிர்ப்பைக் கூட காண்பிக்க விரும்பாமல் ஒதுங்கியே செல்லும் அளவுக்கு இவர்களின் சுபாவம் கட்டமைக்கப்பட்டிருக்கும்.

ஆனாலும் நன்கு கவனித்துப் பார்த்தால் இவர்கள் அற்புதமானவர்களாக தெரிவார்கள். சமயத்துக்கு உதவும் நல்லவர்கள்.

தினமும் எதிர்படும்போதெல்லாம் காலை வணக்கமும், மாலை வணக்கமும் சொல்லாவிட்டாலும், சிரித்து சிரித்து பிறந்தநாள் வாழ்த்துகளையும் பண்டிகை தினவாழ்த்துகளையும் சொல்லாவிட்டாலும், காலையில் வணக்கம் சொல்லி பார்த்த அதே நபரை மாலையில் பார்க்கும்போது ‘ஹலோ எப்படி இருக்கீங்க?’ என கேட்காவிட்டாலும் இவர்கள் நல்லவர்கள். சமயத்துக்கு ‘டான்’ என்று உதவிவிடுவார்கள்.

எங்கள் குடியிருப்பில் எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் ஒரு குடும்பம். அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் சமயத்துக்கு உதவிவிட்டு அதற்கான பாராட்டைக் கூட எதிர்பார்க்காமல் தானுண்டு தன் வேலையுண்டு என பார்த்துக்கொண்டிருப்பர். கணவன் மனைவி குழந்தைகள் என அனைவருமே ஒரே மாதிரி.

ஒருசமயம் நான் அமெரிக்காவுக்கு மூன்று மாதம் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக சென்றிருந்தபோது என் பெற்றோரும் வந்திருந்தனர். சென்னையில் வீடு பூட்டி இருந்தது. அப்போது  ஒரு வங்கியில் இருந்து விசாரணைக்கு இரண்டு பேர் வந்திருக்கிறார்கள். அதாவது ‘கிரெடிட் கார்டில் பணம் கடன் இருக்கிறது. அதை இன்னும் 10 நாட்களுக்குள் கட்டாவிட்டால்…’ என்ற தோரணையில் பேசி இருக்கிறார்கள். எங்களுக்கு அந்த வங்கியில் அக்கவுண்டோ, கிரெடிட் டெபிட் கார்டுகளோ எதுவுமே கிடையாது என்பதுதான் ஹைலைட்.

இன்னும் சொல்லப் போனால் வாழ்நாளில் கிரெடிட் கார்டையே பயன்படுத்தாத அபூர்வ நபர்களைக் கணக்கெடுத்தால் அந்தக் கணக்கில் நாங்களும் வருவோம்.

அந்தக் குடியிருப்பில் இருக்கும் மற்றவர்கள் ‘அவர்கள் வெளிநாடு சென்றிருக்கிறார்கள்…’ என்று சுருக்கமாக பதில் சொல்லி அவர்களை வழி அனுப்பி இருக்க எங்கள் எதிர்வீட்டு பெண்மணிதான் தைரியமாக  அவர்களிடம் விவரம் கேட்டு தெரிந்துகொண்டு, ‘அவர்கள் மிக நேர்மையானவர்கள்… இப்படி செய்ய மாட்டார்கள்… நீங்கள் தவறாக வந்து விசாரணை செய்கிறீர்கள் என நினைக்கிறேன்…’ என்று சொன்னதுடன் அவர்கள் மொபைல் எண்ணை வாங்கி எங்களுக்கு வாட்ஸ் அனுப்பினார்கள். நாங்கள் அந்த பெண்மணிக்கு போன் செய்து நன்றி சொன்னோம். அடுத்த முறை வந்தால் இன்னும் பேச்சுக் கொடுத்து சில விவரங்களை கேட்க முடியுமா என கேட்டுக்கொண்டோம்.

அடுத்த சில நாட்களில் அதே நபர்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவர்களிடம் பேச்சுக்கொடுத்து அவர்களிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து எந்த வங்கியில் இருந்து வருகிறார்கள், எந்த கிளை, வந்தவர்களின் பெயர், மொபைல் எண் மற்றும் யாரை விசாரணை செய்ய வந்திருக்கிறார்கள், அவர்கள் அக்கவுண்ட் எண் போன்ற விவரங்களை கேட்டு  அவர்கள் கைப்பட எழுதி வாங்கி இருக்கிறார். இதை எல்லாம் நாங்கள் செய்யச் சொல்லவில்லை என்பதுதான் ஹைலைட்.

அந்த பெண்மணி கல்லூரியில் படித்தவர். ஹவுஸ் மேக்கர். அதிகபட்சம் 45 வயதிருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் வேலைக்குச் செல்லும் பெண்களைப் போல மனிதர்களைக் கையாள்வதற்கான எக்ஸ்போஷர் இல்லாதவர். ஆனாலும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டார் என்பதை அழுந்தச் சொல்லவே இத்தனை விவரங்களைப் பட்டியலிட்டேன்.

விசாரணை என்ற பெயரில் வந்திருந்தவர்கள் தங்கள் கைப்பட எழுதிய விவரங்களை எங்களுக்கு ஸ்கேன் செய்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்க நாங்கள் அங்கிருந்தபடி அந்த வங்கியின் கஸ்டமர் கேருக்கும் உயர்மட்ட அதிகாரிகளுடனும் போன் செய்து விவரங்களைச் சொல்லி வாதாடி போராடி ‘கிரெடிட் கார்டே இல்லாத நபரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாக  கோர்ட்டில் கேஸ் போட வேண்டிருயிருக்கும்…’ என்று எங்கள் பிபி எகிற எங்கள் சக்திக்கு உட்பட்ட அத்தனை சாகசங்களையும் செய்து  இல்லாத கிரெடிட் கார்ட் ஏற்படுத்திய பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தோம்.

அதற்குப் பேருதவியாக இருந்தது அந்த பெண்மணி விசாரணை என்ற பெயரில் வந்திருந்தவர்களிடம் அவர்கள் கைப்பட எழுதி வாங்கிய விவரங்கள்தான். அந்த துண்டுச் சீட்டில் அவர்கள் கைப்பட எழுதிக் கொடுத்த கையெழுத்தே சாட்சியாகிப் போனது. அந்த நபர்கள் வங்கியின் பெயரைச் சொல்லி வந்திருக்கும் ஃபேக் விசாரணையாளர்கள் என்பது உறுதியானது.

இப்போது சொல்லுங்கள் யார் உண்மையான நண்பர்கள்?

‘உம்மணாம் மூஞ்சிகள்’ என்ற முத்திரைக் குத்தப்பட்டவர்கள்தான் சமயத்துக்கு உதவினார்கள். காலையிலும் மாலையிலும் பார்க்கும்போதெல்லாம் முகம் முழுவதும் சிரித்துப் பேசுபவர்கள் ஒரு பிரச்சனை என வரும்போது ஆமை ஓட்டுக்குள் தன் தலையை நுழைத்துக்கொள்வதைப் போல கதவை அடைத்துக்கொள்ள, அமைதியாக தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர்கள்தான் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு தன் நேசக் கரத்தை நீட்டினார்கள்.

எனவேதான் யாரையும் ‘உம்மணாம் மூஞ்சிகள்’ என முத்திரை குத்த வேண்டாம் என சொல்கிறேன். ஏனெனில் அவர்கள்தான் சமயத்துக்கு உதவ உத்திரவாதம் அளிக்கும் நபர்களாக இருப்பார்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 33 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon