ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 28
ஜனவரி 28, 2021
நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு ‘தத்துபித்தென’ உளறுபவர்களை எப்படி கையாள்வது?
ஒரு சிலரை கவனித்துப் பாருங்கள். சாதாரண சின்ன விஷயத்துக்கே கோபப்பட்டு கத்திவிடுவார்கள். திடீரென பார்ப்பவர்களுக்கு அவர்கள் ‘ஷார்ட் டெம்பர்’ என்றும் ‘கோபக்காரர்கள்’ என்றும் தோன்றலாம். ஆனால் அவர்கள் அப்படிப்பட்ட சுபாவம் கொண்டவராக இருக்க மாட்டார்.
‘பின் ஏன் அவர்கள் சின்ன விஷயத்துக்குக் கோபப்பட்டு கத்துகிறார்கள்?’ என்பதை சற்று உற்று நோக்கினால் ஓர் உளவியல் புரியும்.
அதாவது அவர்கள் யாரிடம் கோபப்பட்டார்களோ அந்த நபரால் அவர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிருப்தியின் கடைசி கட்ட வெளிப்பாடே ஒன்றுமே இல்லாத சின்ன விஷயதுக்காக கோபப்படும் அந்த நிகழ்வு.
சின்னதும் பெரியதுமாக ஏற்பட்ட அதிருப்திகளையும், கோபங்களை ஏற்படுத்தும் செயல்பாடுகளையும் பொறுமையாகத் தாங்குவதாக நினைத்துக்கொண்டு சகித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்றுமே இல்லாத மிகச் சிறிய விஷயத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அழுத்தம் உண்டாகிவிடும்.
திருக்குறளும் அதைத்தானே ‘பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’ என்கிறது. மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், மயிலிறகை அளவோடு ஏற்றாமல் அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். அதுபோல்தான் எவ்வளவோ பெரிய பெரிய பிரச்சனைகளை தாங்கியவர்களுக்கு ‘பைசா பெறாத விஷயம்’ என்பார்களே அதுபோல ஒன்றுமே இல்லாத சிறிய விஷயத்தை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத அளவுக்கு அழுத்தம் உண்டாகி வெடித்து கத்திவிடுவார்கள்.
வீடுகளில்கூட பெண்களை கவனித்துப் பாருங்கள். கணவனாகட்டும், குழந்தைகள் ஆகட்டும் எத்தனையோ கஷ்டங்களைக் கொடுத்திருப்பார்கள். அதற்கெல்லாம் வாயைத் திறக்காமல், ‘சாம்பாரில் உப்பு குறைவாக இருக்கிறது…’ என்று சொல்லும்போது வெடித்துச் சிதறிவிடுவார்கள். கோபத்தில் கத்த ஆரம்பித்துவிடுவார்கள். கோபம் சாந்தமடையவே சில மணி நேரங்கள் ஆகலாம். அந்தக் கோபம், சாம்பாரில் உப்பு குறைவாக இருந்தது என்று சொன்னதற்காக அல்ல… அதற்கு முன் அவளுக்குள் ஏற்பட்ட திருப்தியின்மையும், சுமத்தப்பட்ட குறைகளும் அவளை நிலை தடுமாறச் செய்கிறது அவ்வளவுதான்.
குழந்தைகள் மிரள மிரள அம்மாவை பார்த்துக்கொண்டிருப்பார்கள். ‘அம்மா எப்போ கத்துவாள்’ என எங்களுக்குத் தெரியாது என்று தன் உறவினர்களிடமும் நண்பர்களிடமும்கூட புகார் அளிப்பார்கள்.
இப்படித்தான் ஒருவரால் நமக்குள் ஏற்படும் கோபத்தையும், அதிருப்தியையும் நாம் தாங்குவதாக நினைத்துக்கொண்டு சகித்துக்கொண்டிருந்தால் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் வெடித்தே தீரும்.
எனவே, உள்ளுக்குள் உண்டாகும் கோபத்தையும் அதிருப்தியையும் எந்த வகையிலாவது சம்மந்தப்பட்டவர்களிடம் அவ்வப்பொழுது சொல்லிவிடுவது நல்லது. அப்படிச் செய்வது இரண்டு நல்ல விஷயங்களுக்குக் காரணமாகலாம். ஒன்று, சம்மந்தப்பட்டவர் குணமுள்ளவராக இருந்தால் அவருடைய தவறை அவர் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையலாம். இரண்டாவது நமக்குள் கோபத்தை வைத்துக்கொண்டு குமைந்துகொண்டே இருந்து நம் உடல் மற்றும் மன நலத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.
அப்படி இல்லாமல் தேவையில்லாமல் கோபத்தையும் அதிருப்தியையும் சுமக்க ஆரம்பித்தால் என்றாவது ஒருநாள் திருவள்ளுவர் சொல்லியபடி மயிலிறகு ஏறிய வண்டிபோலாகிவிடும் நம் நிலைமை. எனவே கவனம்.
அதுபோல்தான் நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்களின் சூழல் புரியாமல் அவர்களை காயப்படுத்துவது.
ஒருமுறை எங்கள் நிறுவனத்தின் வாயிலாக ஒரு கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். அதில் ஒரு பங்கேற்பாளராக நகைச்சுவை பேச்சாளர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். அப்போது வந்த முக்கியமான அலைபேசி அழைப்புக்கு பதில் சொல்வதற்காக நிகழ்ச்சி நடக்கும் அறைக்கு வெளியே சென்று திரும்பினேன். அதனால் நிகழ்ச்சியில் அமர்ந்திருந்தாலும் என் கவனம் முழுவதும் அலைபேசி வாயிலாக வந்த அந்த பிரச்சனை குறித்தே ஓடிக்கொண்டிருந்தது. என் நிறுவனத்தில் ஒரு சிறிய பிரச்சனை. சாஃப்ட்வேர் தொடர்பாகத்தான். ஆனால் அதைப் பயன்படுத்தும் நிறுவனத்தில் இருந்து தொடர்ச்சியாக தொடர்புகொண்டு புகார் அளித்தபடி இருந்ததால் நிறுவனத்தில் இருந்து எனக்கு தகவல் கொடுத்தனர். விரைவாக ஒரு முடிவு எடுத்து அலுவலகத்துக்கு போன் செய்து என் உதவியாளரிடம் அந்த ஐடியாவை சொல்லி அதன்படி செயல்படச் சொன்னேன்.
நிகழ்ச்சி முடிந்ததும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் ‘அரங்கமே குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டிருக்கும்போது நீங்கள் மட்டும் வெகு சீரியஸாக இருந்தீர்கள். சிரிக்கவே இல்லை…’ என சொல்லி ஏதோ ஜோக் சொல்லிவிட்டதைப் போல் சிரிக்க, நகைச்சுவை பேச்சாளரும் அவருடன் சேர்ந்துகொண்டு ‘ஆமாம், மேடத்தை சிரிக்க வைக்க சிறப்பு வகுப்பு வைத்து விட வேண்டியதுதான்…’ என்று ஒத்து ஊதினார். இரண்டு பேரும் நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.
ஆம். அவர் நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்திக்கொள்ளும் வகுப்பு எடுத்தும் சம்பாதிக்கிறார். தவறில்லை. அது அவர் வேலை / தொழில்.
ஆனால், நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பிறர் மனதை காயப்படுத்தும் அவருக்கு யார் வகுப்பெடுப்பது? நான் எடுத்தேன். எப்படித் தெரியுமா?
அவர் வேலையை மட்டும் அவர் செய்திருந்தால் பல நிகழ்ச்சிகளுக்கு அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கலாம். ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதைப் போல அவர் தன் பக்குவமில்லாத பேச்சினால் அந்த வாய்ப்பை இழந்தார். அவ்வப்பொழுது போன் செய்து ‘நிகழ்ச்சிகள் ஏதெனும் இருந்தால் சொல்லுங்கள் மேடம்’ என்று வாய்ப்பு கேட்டபடிதான் உள்ளார். என் மனம்தான் அதற்கு இடம்கொடுக்கவில்லை இன்றுவரை.
எங்கள் நிறுவனம் சார்பாக, கடந்த 10 வருடங்களாக எத்தனையோ நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம் ஆனால் அவரை அழைப்பதே இல்லை. இதுதான் நான் அவருக்கு எடுத்த பாடம்.
இங்கு கோபம், நகைச்சுவை என இரண்டு உணர்வுகள் குறித்துப் பேசியுள்ளோம்.
எப்படி கோபத்தை உள்ளுக்குள் அடக்குவது தவறு என்று கூறினேனோ, அப்படித்தான் நகைச்சுவை உணர்வை உள்ளுக்குள் அடக்கி ஆள வேண்டிய சூழல்களில் வெளிப்படையாக ‘தத்துபித்தென்று’ உளறி மற்றவர்களைக் காயப்படுத்துவதும் தவறு. முன்னது தவறு என்றால், பின்னது மாபெரும் தவறு.
உணர்வுகள் மயில் இறகைவிட மென்மையானது. அதே நேரம் இரும்பைவிட வலிமையானதும்கூட. அதை நாம் எப்படி கையாள்கிறோமோ அந்த தன்மையில் நம்மிடன் அது குடிகொள்ளும். கையாள்வதில் இருக்கிறது சூட்சுமம்.
உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். கவனமாக இருப்போம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP