ஜம்முனு வாழ காம்கேரின் OTP-29: படித்த வேலையா, பிடித்த வேலையா, கிடைத்த வேலையா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 29
ஜனவரி 29, 2021

படித்த வேலையா, பிடித்த வேலையா, கிடைத்த வேலையா?

வேலை செய்பவர்களில் நான்கு பிரிவினர்.

கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வேலையில் அதன் போக்கிலே செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள் முதல் பிரிவினர்.

கிடைத்த வேலையில் தங்களுக்கான ஆர்வமான பிரிவு எங்கிருக்கிறது என கண்டறிந்து அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முன்னேறுபவர்கள் இரண்டாவது பிரிவினர்.

கிடைத்த வேலையை செய்துகொண்டே பிடித்த வேலையை ஓய்வு நேரத்தில் செய்து வருபவர்கள் புத்திசாலிகள். இவர்கள் பணி ஓய்வுக்குப் பிறகுகூட உற்சாகமாக இருப்பார்கள். காரணம் அவர்களுக்குப் பிடித்த வேலையை அந்த காலகட்டத்தில் செயல்படுத்தி தங்களை எப்போதுமே சுறுசுறுப்பாக வைத்திருப்பார்கள். இவர்கள் மூன்றாவது பிரிவினர்.

அப்படி இல்லாமல் பிடித்த வேலையைத்தான் செய்வேன் என்று முரண்டுபிடிப்பவர்கள். இவர்கள் நான்காவது பிரிவினர்.

இருபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்துக்கு ரெகுலராக ஸ்டேஷனரி வாங்கிக்கொண்டிருந்த கடைக்கு சில தினங்களுக்கு முன்னர்  நானே நேரில் சென்றிருந்தேன். ஏதேனும் பழைய முகம் தென்படுகிறதா என பார்த்தேன்.

‘வாங்க காம்கேர் மேடம் எப்படி இருக்கீங்க…’ என்றபடி ஒருவர் விசாரிக்க அவர் முகத்தை உற்று நோக்கினேன். வயோதிகத்தினால் முகம் மாறியிருந்தாலும் அடையாளம் தெரிந்தது.

‘நீங்க எப்படி இருக்கீங்க… ஓனர் எப்படி இருக்கிறார்…’ என பொதுவான விசாரிப்புக்குப் பிறகு எனக்குத் தேவையானதைச் சொன்னேன்.

காலம் ஓடியிருந்தாலும் அவர் செய்துகொண்டிருந்த வேலை மட்டும் மாறவே இல்லை. அதே வேலை. கஸ்டமர் கேட்கும் பொருட்களை தேடி எடுத்துக்கொடுக்கும் சேல்ஸ் மேன் பணி. சேல்ஸ் மேனஜராகக் கூட உயரவில்லை.

அவரைவிட வயதில் மிகவும் குறைந்த ஒரு மேனேஜர் அவரிடம் சேல்ஸ்மேனிடம் பேசும் தொனியில் ஏதோ கடுமையாகப் பேசினார்.

பொருளும் பில்லும் வந்ததும் பணம் கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.

நீண்ட காலம் ஒரே நிறுவனத்தில் பணிபுரியலாம். மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஒரே வேலையை செய்துகொண்டிருப்பதுதான் சோகம்.

எல்லோருக்குமே தாங்கள் விரும்புகின்ற துறையில் வேலை கிடைத்துவிடுவதில்லைதான். அப்படி கிடைத்துவிட்டால் அவர்கள் பாக்கியசாலிகள்.

கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வேலையில் அதன் போக்கிலே செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள் முதல் பிரிவினர். இவர்கள் குட்டையில் தேங்கிய நீர்போல வாழ்பவர்கள். நான் பார்த்த சேல்ஸ் மேன் இந்தப் பிரிவுதான்.

கிடைத்த வேலையில் தங்களுக்கான ஆர்வமான பிரிவு எங்கிருக்கிறது என கண்டறிந்து அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முன்னேறுபவர்கள் இரண்டாவது பிரிவினர். இவர்கள் நதிபோல ஓடிக்கொண்டிருப்பவர்கள்.

ஒரு நண்பர். திறமை என்று எதுவும் குறிப்பாகக் கிடையாது. ஆனாலும் எதையுமே ஆர்வமாகக் கற்றுக்கொள்வார். ஆஃபீஸ் அசிஸ்டெண்ட்டாக பணியில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் டைப்பிங், லே அவுட் செய்தல், கிராஃபிக்ஸ் என கற்றுக்கொண்டு இன்று ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸின் மேனேஜராக பணியில் உயர்ந்திருக்கிறார். இவர் இரண்டாவது பிரிவின்கீழ் வருவார்.

கிடைத்த வேலையை செய்துகொண்டு வேலை நேரம் போக மீதி நேரத்தில் தங்களுக்குப் பிடித்த பணியை செய்பவர்கள் மூன்றவாது பிரிவினர். இவர்கள்தான் மனநிறைவுடன் வாழத் தெரிந்தவர்கள். அலுவலக நேரம்போக வெளியே தங்களுக்குப் பிடித்ததை மனதுக்கு நிறைவாக செய்வதினால், அந்த மனநிறைவு அலுவலகத்தில் அவர்கள் பணி செய்யும் துறை அவர்களுக்குப் பிடிக்காத துறையாக இருந்தாலும் அதைகூட ஈடுபாட்டுடன் செய்ய வைக்கும்.

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஹோமங்கள், பூஜைகள் என ஆன்மிகத்தில். கிடைத்த வேலையோ பணி பத்திரிகைத்துறையில்.

ஆனாலும் இவர் ஹோமங்கள் செய்வதில் முறையாக ஒரு குருவிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு அவருடனேயே சிஷ்யராக பல ஹோமங்களுக்குச் சென்று அவற்றை நடத்தி வைத்து இன்று அவராகவே தனியாக அலுவலக நேரம்போக மீதி நேரத்திலும், விடுமுறை தினங்களிலும் ஹோமங்கள் நடத்தித் தருகிறார். ஆத்மார்த்தமாக இவர் விரும்பும் ஆன்மிகப் பணியை செய்வதால் அலுவலகத்தில் தனக்குக் கிடைத்த பணியையும் திறம்பட செய்கிறார். இவர் மூன்றாவது பிரிவின்கீழ் வருவார்.

அப்படி இல்லாமல் பிடித்த வேலையைத்தான் செய்வேன் என்று முரண்டுபிடிப்பவர்கள். வாழும்போதும் திருப்தியாக பணிபுரிவதில்லை. பணி புரியும் அலுவலகத்தையும், தான் செய்யும் வேலையையும் தூற்றிக்கொண்டே பணி செய்வார்கள். ஓய்வுக்குப் பிறகும் அவர்களுக்குப் பிடித்த வேலையில் அனுபவமும் ஆர்வமும் இல்லாமல் போயிருக்கும். அதையும் அப்போதும் செய்ய மாட்டார்கள். இவர்கள் நான்காவது பிரிவினர்.

இந்த நான்கு பிரிவில் நீங்கள் எந்தப் பிரிவு என்பதை உற்று நோக்குங்கள். தேங்கிய குட்டை நீராய் உங்கள் வாழ்க்கை மாறிவிடாமல் இருக்க உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள்.

என்னைப் பொருத்தவரை மூன்றாவது பிரிவினரே புத்திசாலிகள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon