ஜம்முனு வாழ காம்கேரின் OTP-30: இங்கிதம் தவறுவது எதனால்? (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 30
ஜனவரி 30, 2021

இங்கிதம் தவறுவது எதனால்?

(கடைசியில் முக்கியக் குறிப்பையும் படிக்கத் தவற வேண்டாம்)

நேற்று மதியம் 3 மணிக்கு அலுவலக லேண்ட் லைனில் அழைப்பு. என் உதவியாளர் பேசிய பிறகு எனக்கு கனெக்ட் செய்தார்.

‘நான் So & So காலேஜ்ல இருந்து பேசறேன்…’

(So & So என்ற இடத்தில் அவருடைய கல்லூரியின் பெயரை சொன்னார்)

இப்படி பேச ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் கல்லூரி அலுவலகத்தில் இருந்து ஏதேனும் மீட்டிங்கில் அல்லது கருத்தரங்கில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்பம் சம்மந்தமாக பேசுவதற்காக என்னை அழைப்பவர்களாக இருப்பார்கள் என்பதால், ‘ஓகே… சொல்லுங்க சார்…’ என்றேன்.

இந்த இடத்தில் நான் சொல்லி இருக்கும் ‘சார்’ எதிரில் இருப்பவருக்கு வழக்கமாக நான் கொடுக்கும் மரியாதை அடைமொழி. அவர் எந்த வயதினராக இருந்தாலும் சரி. சிறியவராக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும்.

‘ஏதாவது உங்க கம்பெனில வேல இருக்கா…’

‘முதல்ல… நீங்க யார்னு சொல்லுங்க சார்’

இந்த சாரும் மரியாதை அடைமொழியே.

‘நான் So & So காலேஜ் ஸ்டூடன்ட்…’

‘ஓ.கே… உங்க பெயர் சொல்லுங்க…’

‘So & So…’

(இந்த So & So என்ற இடத்தில் அவரது பெயர்)

’சரி என்ன படிக்கிறீங்க…’

’டிகிரிதான்…’

‘என்ன டிகிரி சார்?’

இந்த சார் சற்றே எரிச்சலான உணர்வினால்.

காரணம் ‘டிகிரிதான்’ என்று பொதுவாக சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது. அதுவும் வேலை கேட்டு போன் செய்யும் ஒரு மாணவரிடம் இருந்து இப்படிப்பட்ட பொறுப்பற்ற பதில் வந்தால்.

‘பி.காம்…’

‘எப்படி என் போன் எண் கிடைத்தது?’

‘நீங்க எங்க காலேஜூக்கு ஒரு நிகழ்ச்சிக்கு சீஃப் கெஸ்ட்டா வந்துருக்கீங்க…’

‘ஓ… நைஸ்… நினைவு வைத்திருக்கிறீர்களா?’

‘ஆமாம்… நாங்க சில ஃப்ரெண்ட்ஸ் செல்ஃபி கூட எடுத்துக்கட்டுமான்னு கேட்டோம்… நீங்களும் சரின்னீங்க…’

‘ஓ…’

‘என்னோட ஃப்ரண்ட்டுக்கும் வேல வேணும்… அவன் பி.ஏ படிச்சிருக்கான்…’

‘சரி…’

‘சமூக வலைதளங்களில் என்னை ஃபேஸ் புக், டிவிட்டர் இப்படி எதிலாவது ஃபாலோ செய்கிறீர்களா?’

‘இல்ல… யு-டியூப்ல தான்…’

‘ஓ.. நைஸ்…’

‘ஃபேஸ்புக் பிசினஸ் பக்கத்தில் ஏதேனும் வேகன்சி இருந்தால் பதிவிடுவேன். அப்போது தொடர்புகொள்ளுங்கள்… கல்லூரிக்கு நான் வந்திருந்ததை நினைவு வைத்திருந்து பேசியதற்கு நன்றி’

‘ஆங்… சரி…’

இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இந்த உரையாடலில் பேசிய மாணவன் எந்த இடத்திலும் ‘மேடம்’ என்று அழைக்கவே இல்லை என்பதை  கவனித்தீர்களா?

அதுபோல போனில் பேச ஆரம்பிக்கும் முன்னும் வணக்கம், குட் மார்னிங் போன்ற மரியாதை நிமித்தத் தொடக்கமும் இல்லை என்பதையும் கவனித்தீர்களா?

வணக்கம் சொல்லியே பேச ஆரம்பிக்காதவர் உரையாடலை முடிக்கும்போது நன்றி சொல்லியா முடித்திருக்கப் போகிறார்? அதையும் செய்யவில்லை என்பதையும் கவனித்தீர்களா?

நான்தான் அந்த மாணவன் என்று தெரியாதபோது சார் என்று இரண்டு முறையும், எரிச்சலில் ஒரு முறை சார் என்றும் அடைமொழி கொடுத்து அழைத்திருப்பதையும் கவனித்தீர்களா?

அதுபோல போனை துண்டிப்பதற்கு முன் கல்லூரிக்கு நான் வந்திருந்ததை நினைவில் வைத்திருந்து பேசியதற்கு நன்றி என நான்தான் நன்றி சொல்லி இருக்கிறேன். அதையும் கவனித்தீர்களா?

அதுபோல நான் அந்தக் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக சென்றபோது நான் பேசிய தன்னம்பிக்கை உரையில் எதுவுமே நினைவில் இல்லை அந்த மாணவனுக்கு. அவரும் அவரது நண்பர்களும் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளட்டுமா என என்னிடம் பர்மிஷன் கேட்டது மட்டும் நினைவில் இருக்கிறது. அதையும் கவனித்தீர்களா?

வேலை கேட்டு போன் செய்யும் ஒரு இளைஞனின் அணுகுமுறை இப்படி இருந்தால் எப்படி வேலை கிடைக்கும் என்ற பெருங்கவலை என்னை தொற்றிக்கொண்டது.

வணக்கம் கிடையாது. மரியாதை அடைமொழி கிடையாது. நன்றி கிடையாது. சாரி கிடையாது. நம்மைவிட சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் சார், மேடம் என நான் அடைமொழி கொடுத்து அழைத்தாலும் அவர்கள் திரும்பவும் மேடம், சார் என்று அழைப்பது கிடையாது. விதிவிலக்குகளை வணங்குகிறேன்.

இது குறித்தெல்லாம் நான் யோசித்துக்கொண்டிருந்தபோது திரும்பவும் அதே மாணவர் அழைத்தார்.

இப்பவும் அவர் தொந்திரவுக்கு மன்னிக்கவும் என்றெல்லாம் கூறாமல் ‘உங்க ஃபேஸ்புக் ஐடி என்ன?’ என்று கேட்டார்.

நான் பொறுக்க மாட்டாமல் ‘என்னப்பா, ஒரு நிறுவனத்தில் வேலை கேட்டு போன் செய்கிறீர்கள்… பேசும் நபர் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் என தெரிந்தும் மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்கின்ற உணர்வே இல்லாமல் இப்படி ஏனோ தானோவென்று பேசுகிறீர்களே?’ என்று கேட்டுவிட்டேன்.

‘ஓ… அதுவா… ஃபேஸ்புக்குல எல்லார்கிட்டயும் இப்படி பேசிப் பேசி பழகிட்டது…’ என்றார். இப்பவும் ‘மேடம்’ என்று குறிப்பிடவில்லை.

நானும் விடவில்லை.  வேண்டும் என்றே சார் என்ற அடைமொழியுடன் தொடங்கினேன்.

‘அப்படியா சார்… ஃபேஸ்புக்கிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் வயது வித்தியாசம் இன்றி அனைவரையும் மரியாதையாக அழைத்துப் பழகுங்கள். எழுதும்போதும், பேசும்போதும், பிறரிடம் குறிப்பிடும்போதும் இப்படி எல்லா சூழலிலும் மரியாதையை விட்டுவிடாதீர்கள். எல்லோருக்கும் மரியாதை கொடுங்கள். அனைவரிடமும் அன்புடன் பண்புடன் பழகுங்கள்…’ என்று பாடம் எடுத்தேன்.

‘ஓ.கே…’ என்று சொல்லிவிட்டு சில நொடிகள் தாமதித்து ‘மேடம்’ என்றார்.

பழக்கம் இல்லை என்பதால் இந்தத் தடுமாற்றம். இங்கிதமாகப் பழக கற்றுக்கொள்வார்.  நிச்சயம் பழகிக்கொள்வார். கல்லூரியில் இருந்து இப்போதுதானே வெளியில் வந்திருக்கிறார்.

ஒன்று மட்டும் புரிகிறது. மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையும் சமூக வலைதளங்களில் பழகுவதைப் போலவே மாறிவிட்டது. மனிதனுக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மனிதனின் இயல்பான வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டது.

ஆங்கிலத்தில் adaptation என்று ஒரு வார்த்தை உண்டு. அதாவது ஒன்றின் பழக்கத்தை அப்படியே பற்றிக்கொள்ளுதல், சூழலுக்கு ஏற்ப குணத்தை மாற்றிக்கொள்ளுதல் என்று இடத்துக்கு ஏற்ப பொருள் கொள்ளலாம்.

சமூக வலைதளங்களின் பழக்க வழக்கங்களை அப்படியே அடாப்டேஷன் செய்துகொண்டு நிஜ உலகிலும் செயல்படுத்துகிறார்களோ என்ற அதிர்ச்சியே உண்டானது.

ஆன்லைன் வெர்ச்சுவல் உலகில் சமூக வலைதளங்களே முதன்மை உலகம் போல மாறிவிட்டதோ என்றெண்ணும் அளவுக்கு அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெர்ச்சுவல் உலகமும், நிஜமாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துவிட்டதோ என்ற  அச்சம் தொற்றிக்கொண்டது. நிஜ உலகின் தாக்கத்தை இணைய உலகம் பற்றிக்கொண்டால் பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் இணைய உலகின் தாக்கத்தை நிஜ உலகம் அதி தீவிரமாகப் பற்றிக்கொண்டுள்ளதே என் அச்சத்துக்குக் காரணம்.

இது ஆரோக்கியமான சூழல் கிடையாது. தொழில்நுட்பம் ஒரு வசதி. இணையம் ஒரு வசதி. சமூக வலைதளங்கள் ஒரு வசதி. அவ்வளவே. நாம் வாழ்வது இரத்தமும் சதையுமாக உணர்வுப்பூர்வமான மனிதர்களுடன். இங்கு நம்மால் கண்டுபிடிக்கப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தலாம். ஆனால் அவற்றையே நிஜ உலகமாக்கிக்கொண்டு போதையேற்றிக்கொண்டால் என்ன ஆகும் என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.

புரிந்துகொள்பவர்கள் புத்திசாலிகள்!

முக்கியக் குறிப்பு:

இப்போதெல்லாம் இளைஞர்களே இப்படித்தான், இளைய தலைமுறையினரே இப்படித்தான் என்று யாரும் பின்னூட்டம் எழுத ஆரம்பிக்க வேண்டாம். ஏன் எனில் 40+, 50+, 60+, 70+ என பல வயதினரும் இப்படித்தான் செயல்படுகிறார்கள். நான் வெர்ச்சுவல் உலகில் மட்டுமில்லாமல் நிஜ உலகிலும் பலதரப்பட்ட மனிதர்களை பணி நிமித்தம் சந்திப்பதால் உண்டான தாக்கத்தில் உருவானதே இன்றைய பதிவு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon