ஜம்முனு வாழ காம்கேரின் OTP-31: நேர்த்திக்கும் திறம்பட செய்வதற்குமான வித்தியாசம்?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 31
ஜனவரி 31, 2021

நேர்த்திக்கும் திறம்பட செய்வதற்குமான வித்தியாசம்?

ஒரு செயலை நேர்த்தியாக செய்வது என்பது ஒருவரின் பழக்கம் சம்மந்தப்பட்டது. திறம்பட செய்வது என்பது ஒருவரின் புத்திசாலித்தனத்துடன் தொடர்புடையது. நேர்த்தியாக செய்பவர்கள் அனைவருமே புத்திசாலிகள் என்று அர்த்தம் கொள்ள முடியாது.

உதாரணத்துக்கு, தோட்ட வேலையில் ஈடுபாடுள்ள ஒருவர் வாராவாரம் தோட்டத்தை சுத்தம் செய்து அவருடைய தோட்டத்தை தெய்வீகமாக வைத்துக்கொள்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அந்த நேர்த்தி அவருடைய பணி செய்யும் குணத்தில் அடங்கிவிடும். அவர் குறித்து பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் ‘அவர் நேர்த்தியாக தோட்டத்தை பராமரிப்பார்’ என்று சொல்லலாம்.

அவருக்கு இரண்டு தோட்டக்காரர்களை உதவிக்குக் கொடுத்து பணி செய்யச் சொல்லுங்கள். அவரால் அத்தனை நேர்த்தியாக வேலையை முடிக்க முடியாது. காரணம், தோட்டக்காரர்களுக்கு தான் நினைப்பதையும், எதிர்பார்ப்பதையும் சொல்லி வேலை வாங்கிக்கொள்ளும் பக்குவம் அறவே இருக்காது. அவர் ஒருவராக 3 மணி நேரத்தில் தோட்டத்தை சுத்தம் செய்கிறார் என்றால் உதவியாளர்கள் இருவரை வைத்துக்கொண்டு 6 மணி நேரமானாலும் வேலையை முடிக்கமாட்டார். காரணம் அவருக்கு வேலைவாங்கும் திறன் இருக்காது.

‘தான் உண்டு தன் வேலையுண்டு’ என்று பணி செய்துகொண்டே இருக்கும் பலருக்கு பிறரிடம் வேலை வாங்கும் திறன் இருக்காது.

எனவேதான் சொல்கிறேன், நேர்த்தி என்பது வேறு. திறம்பட செய்வது என்பது வேறு. முன்னது நாம் எடுத்துக்கொண்ட செயலை மனதிருப்தியுடன் செய்வது. பின்னது நாம் எடுத்துக்கொண்ட செயலை எதற்காக யாருக்காக செய்கிறோமோ அவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றி  திறனுள்ளதாக செயல்பட வைப்பது.

நாம் எடுத்துக்கொண்ட செயலை யாருக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டுமோ அவர்களை நோக்கியப் பயணமாக அதன் செயல்பாடுகளை அமைக்க வேண்டும்.

யார் யாரையெல்லாம் ஈடுபட வைத்து அந்த செயலை செம்மைப்படுத்த முடியும் என ஆராய்ந்து அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

செயல்பாட்டின் நோக்கத்தை தெளிவாக மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் சொல்லிப் புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றெல்லாம் ஈகோ பார்த்துக்கொண்டிருந்தால் நாம் என்னதான் முயற்சி செய்து ஒரு செயலை ஆரம்பித்திருந்தாலும் அது விழலுக்கு இறைத்த நீராய் பயனில்லாமல் போகும்.

‘நான் முயற்சித்தேன் வெற்றிபெறவில்லை’ என்று வருத்தப்படுவதைவிட எப்படி முயற்சித்தோம் என்பதில்தான் நாம் எடுத்துக்கொண்ட செயலின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கிறது.

ஒரு விஷயத்தை நினைவில் வையுங்கள். முயற்சியில் நேர்மை இருக்கட்டும். நாம் எடுத்துக்கொண்ட செயல் உடனடி வெற்றி தராவிட்டாலும் நம் முயற்சியின் நேர்மை வேறுவகையில் பலன் தருவது நிச்சயம்.

நான் இப்படித்தான் செயல்படுகிறேன். சந்தோஷமாக வாழ்கிறேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 66 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon