ஜம்முனு வாழ காம்கேரின் OTP-32: குற்ற உணர்ச்சி அவசியமா?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 32
பிப்ரவரி 1, 2021

குற்ற உணர்ச்சி அவசியமா?

பொங்கல் அன்று பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கும் மாணவியின் பெற்றோர் எனக்கு போனில் அழைத்து பொங்கல் வாழ்த்து சொன்னார்கள். இருவருமே வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுடைய மகளும் என்னிடம் பேச வேண்டும் என சொன்னதாகச் சொல்லி அவளிடம் போனை கொடுத்தார்கள்.

அதற்கு முன் அந்த மாணவி குறித்து சின்ன ஃப்ளாஷ் பேக்.

அவர்களின் மகள் பன்னிரெண்டாம் வகுப்புப் படிக்கிறாள். கொரோனா காலகட்டத்தில் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி இன்ஸ்டாகிராமில் நிறைய ஆண் நட்புகள். அவர்களின் தவறான அணுகுமுறையினால் படிப்பில் நாட்டம்போய் அப்பா அம்மாவிடமும் சதா சண்டை, கூச்சல், புரிதல் இல்லாமை. அவளுடைய கவுன்சிலிங்கிற்காக என்னை தொடர்புகொண்டார்கள்.

அலைபேசியிலேயே நான்கு நாட்கள் பேசினேன். எப்போதுமே என் கவுன்சிலிங் அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும். அறிவுரை சொல்ல மாட்டேன். இப்படி இரு, அப்படி இரு என அதிகாரமாகவும் பேச மாட்டேன். எப்படி இருந்தால் எப்படிப்பட்ட உயர்வான வாழ்க்கை வாழ முடியும் என்ற நேர்மறை கோணத்தில் மட்டுமே பேசுவேன். தேவைப்படும் இடங்களில் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் உதாரணமாக்குவேன். கவனமாக அதை சுயபுராணமாக இல்லாதவாறு பார்த்துக்கொள்வேன். அதனால் பெரும்பாலும் இளைய தலைமுறையினருக்கு என்னைப் பிடித்துவிடும்.

நான்கு நாட்கள் பேசிய பிறகு அவளுடைய நடை உடை பாவனையில் நல்ல மாற்றம் இருப்பதாக அவளுடைய பெற்றோர் கூறினார்கள்.

அவள் நன்றாக படம் வரைவாள் என்பதால் அவளுடைய திறமையை ஊக்கப்படுத்தி அவள் மனதை திசை திருப்புவதற்காக என்னுடைய சில படைப்புக்கு ஓவியங்கள் வரைந்து தரச்சொல்லி கட்டுரைகளை அனுப்பி வைப்பேன். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கட்டுரைகளுக்கு படம் வரைந்து அனுப்பினாள். அதற்கு நான் வாட்ஸ்அப்பில் பாராட்டினால் அதற்கு எந்த பதிலும் அனுப்ப மாட்டாள்.

ஒருநாள் பேசும்போது ‘திறமைக்கான அங்கீகாரம் கிடைப்பதே அரிய விஷயமாகி உள்ள இந்த நாளில் உன் திறமை என்ன என்று கண்டறிந்து அதற்கு வாய்ப்பையும் கொடுத்து அதை சில நூறு பேர் பார்த்து வாழ்த்தும் அளவுக்கு என் வெப்சைட்டிலும் பதிவிட்டு அதை உனக்கு தகவலாக அனுப்பும்போது அதற்கு ‘நன்றி மேடம்’ என்ற பதிலை டைப் செய்யக் கூட உன்னால் முடியவில்லையா?’ என்று கொஞ்சம் கடுமையாகவே கோபித்துக்கொண்டேன்.

வேலை மேம், டியூஷன் மேம், கிளாஸ் மேம் இப்படி பல காரணங்களை வரிசையாக அடுக்கினாளே தவிர ‘சாரி மேம், இனிமேல் பதில் அளிக்கிறேன்…’ என்ற பதில் அவளிடம் இருந்து வராததால் எனக்கு அவளுடைய செய்கை வருத்தமே என்பதை மீண்டும் அவள் மனதில் பதிய வைத்துவிட்டு போனை வைத்தேன்.

இப்படி செய்வது என்னவோ இளைய தலைமுறை மட்டும் என்று எண்ணி ‘இந்தகாலத்து இளைஞர்களே இப்படித்தான்’, ‘இந்த காலத்து பிள்ளைகளே இப்படித்தான்’, ‘இளையதலைமுறையினரே இப்படித்தான்’ என யாரும் பின்னூட்டமிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

காரணம். முந்தைய தலைமுறையினரின் நல்ல பழக்க வழக்கங்கள் இளைய தலைமுறையினருக்கு வருகிறதோ இல்லையோ, இளைய தலைமுறையினரின் பழக்க வழக்கங்களை அப்படியே முந்தைய தலைமுறையினர் பின்பற்ற ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால், 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் செல்போனில்தானே மூழ்கி இருக்கிறார்கள். பெரியவர்கள் என நான் சொல்வது 40+ வயது முதல் 80+ வயதுவரை. இதை தவறு என்று சொல்லவில்லை.

ஒரு தீபாவளி தினத்தில் 70 வயது பெரியவரை சந்தித்தேன். ‘கங்கா ஸ்நாநம்’ குறித்த ஒரு தகவலை என்னிடம் சொன்னார். சொன்னது தவறில்லை. ஆனால் சொல்லி முடித்ததும் ‘வாட்ஸ் அப்பில் வந்தது, நானும் இதை ஷேர் செய்தேன்…’ என்றபோது அவரை ஆச்சர்யமாக பார்த்தேன். ‘ஏன் அங்கிள், கங்கா ஸ்நாநம் குறித்து இப்போதுதான் வாட்ஸப்பில் படித்துத்தான் உங்களுக்குத் தெரியுமா, அதற்கு முன் தெரியாதா?’ என்றேன்.

‘தெரியும்… ஆனால் இப்படி வாட்ஸ் அப்பில் வந்தது என்று சொன்னால்தானே இன்றைய இளைய தலைமுறையினருடன் எங்களை பிணைத்துக்கொள்ள இப்படிப் பேசினால்தானே முடியும்…’ என்றார்.

வாட்ஸ் அப்பில் ஃபார்வேர்ட் மெசேஜ்களுக்கு பதில் அனுப்ப வேண்டாம். ஆனால் உங்களுக்காகவே தனிப்பட்ட முறையில் ஒரு தகவலை அனுப்பினால் அதற்கு உடனடியாக பதில் கொடுக்கவில்லை என்றாலும் அன்றைய தினத்தில் ஏதேனும் ஒரு நேரத்தில் ‘தகவல் பார்த்தேன். புரிந்துகொண்டேன். நன்றி’ என்பது போல உங்களுக்கு வந்திருக்கும் தகவலின் தன்மைக்கு ஏற்ப பதில் அளிப்பதுதானே பண்பாடு.

நான் இப்படித்தான் உடனுக்குடன் பதில் அளிக்க நேரம் இல்லை என்றால் அன்றைய தினத்தில் இரவு நெட்டை ஆஃப் செய்வதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஏதேனும் முக்கிய தகவல் இருந்தால் படித்துவிட்டு பதில் கொடுப்பேன். குறைந்த பட்சம், ‘தகவல் அறிந்தேன். பின்னர் விரிவாக பேசுகிறேன்’ என்ற பதிலையாவது அனுப்பி வைப்பேன்.

எப்போது ஆன்லைனில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோமோ அப்போது அதற்குறிய மரியாதையை கொடுத்துத்தானே ஆக வேண்டும்.

வாட்ஸ் அப்பே பயன்படுத்துவதில்லை என்போரை விட்டு விடுவோம். மற்றவர்கள், வாட்ஸ் அப்பில் பதில் அனுப்புவதற்காகவே பிரத்யோகமாக நேரத்தை ஒதுக்கி நம்மை மதித்து தகவல் கொடுத்தவர்களுக்கு திரும்ப ஒரு வரி பதிலை அனுப்புவதுதான் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதை. அதற்குக்கூட நேரம் இல்லாமல் நாம் யாரும் இங்கே ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருப்பதில்லை.

சரி பொங்கல் அன்று என்னிடம் பேச நினைத்த மாணவியின் கதைக்கு வருவோம்.

அந்த மாணவி போனில் பேச ஆரம்பித்ததுமே பொங்கல் வாழ்த்து சொல்வாள் என நினைத்திருந்த எனக்கு அவள் சொன்ன சாரி ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ‘சாரி மேம்…’ என இழுத்தாள்.

‘எதற்கு?’

‘என்னை வாழ்த்தி நீங்கள் அனுப்பிய வாட்ஸ் அப் தகவல்களுக்கு ரிப்ளை செய்யாமல் அலட்சியப்படுத்தியதற்கு…’

இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாளே என்று எனக்கு ஒரே ஆச்சர்யம்.

‘அதை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறாயே…’

‘ஆமாம் மேம். அன்றில் இருந்து இன்று வரை எனக்குள் சின்ன கில்டி கான்ஷியஸ் போயிட்டே இருக்கு மேம்…’

16,17 வயது மாணவி குற்ற உணர்வு குறித்து பேசுவது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது.

‘நான் அதை அன்றே மறந்துட்டேன். நீ நினைவில் வைத்திருக்கிறாய். நல்ல விஷயம்தான். நாம் செய்கின்ற சின்ன சின்ன தவறுகளையும் நாம் உணர ஆரம்பித்து பிரச்சனை சிறியதாக இருக்கும்போதே சரி செய்துகொண்டுவிட்டால் நாம் சிறப்பானவர்களாக உருவெடுக்க முடியும்…’ என்றபோது அவள் ‘இனிமேல் அப்படி நடந்துகொள்ள மாட்டேன் மேம்… சாரி’ என்று திரும்பவும் சொன்னாள்.

வாழ்த்துகள் சொல்லி போனை வைத்தபோது புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பது குறித்து நான் எழுதிய பதிவிற்கு ஒருசிலர் தாங்கள் எடுக்கப் போகும் தீர்மானங்கள் குறித்து பதிவிட்டது நினைவில் வந்துபோனது.

ஒருசிலர் ‘புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்போவதில்லை. இப்போது உள்ளபடி வாழ்வதே சிறப்பு’ என்று சொல்லி இருந்தார்கள். அப்படி பதில் சொன்னவர்கள் நான் அறிந்த வகையில் சமூக வலைதளங்களிலேயே  பிறரை கஷ்டப்படுத்தும் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் தவறு என்றே உணராமல், உணர்த்தினாலும் மாறாமல் ‘புத்தாண்டு தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்போவதில்லை. இப்போது உள்ளபடி வாழ்வதே சிறப்பு’ என்று பின்னூட்டமிடுவது எனக்கு ஆச்சர்யத்தையே உண்டு செய்தது.

தாங்கள் செய்கின்ற செயல்கள் பிறரை கஷ்டப்படுத்தினால் அதனை உணர வேண்டும். தங்களின் அந்த செயல்களுக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால் மட்டுமே மாற்றங்கள் வரும்.

சமூக வலைதளங்கள் குற்ற உணர்வுகளை குழிதோண்டி புதைத்து கருத்துச் சுதந்திரம் என்ற புது கோணத்தை அல்லவா உண்டாக்கிவிட்டது.

இதற்கு பலி ஆவது இளைய தலைமுறை மட்டும் அல்ல. வயது வித்தியாசம் இன்றி  ஒட்டுமொத்த மனித சமுதாயமே.

சிந்திப்போம், செயல்படுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 599 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon