ஜம்முனு வாழ காம்கேரின் OTP-33: கடும் துக்கத்தில் இருந்து மீண்டுவர ஓரிடத்தில் அமராதீர்கள்!  

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 33
பிப்ரவரி 2, 2021

கடும் துக்கத்தில் இருந்து மீண்டுவர ஓரிடத்தில் அமராதீர்கள்!

திடீரென உங்களுக்கு ஒரு துக்கம். அதன் காரணமாய் கடுமையான ஸ்ட்ரெஸ். இதில் இருந்து விடுபட அருமையான வழி உள்ளது.

ஓரிடத்தில் அமைதியாக உட்காராதீர்கள். யோகா, தியானம் என பழக்கமே இல்லாத விஷயங்களுக்குள்ளும் செல்ல வேண்டாம். நண்பர்களை அழைத்து துக்கங்களைக் கொட்ட நினைத்து புலம்பவும் வேண்டாம். மற்றவர்களிடம் புலம்பப் புலம்ப துக்கம் அந்த நேரத்துக்குக் குறைவதைப் போல இருந்தாலும் நேரம் ஆக ஆக பேசிய நபருடனான உரையாடலை தொடக்கப் புள்ளியாக வைத்து உங்கள் துக்கம் இன்னும் அதிகாமாகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. புத்தகம் படிப்பது, சினிமா பார்ப்பது போன்றவை எல்லாம் துக்கம் குறைக்கும் நிவாரணி கிடையாது. அந்த நேரத்துக்கு உங்கள் மனமும் அவற்றில் செல்லாது.

பிறகு என்னதான் செய்வது?

நகர்ந்துகொண்டே இருங்கள். நடந்துகொண்டே இருங்கள். சைக்கிள் ஓட்டும் பழக்கம் உள்ளவராக இருந்தால் சைக்கிளில் ஓட்டுங்கள். முடிந்தால் ஒரு கிலோமீட்டர் இரண்டு கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள் அதிசயத்தை. உங்களை அறியாமலேயே உங்கள் துக்கம் புறமுதுகிட்டு ஓடிவிடும் என்று சொல்ல மாட்டேன். உங்கள் துக்கத்தை எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். ஸ்ட்ரெஸ் உங்களுக்குள் புகுந்து ஆளுமை செலுத்தி அட்டகாசம் செய்யாமல், உங்களை விட்டு ஒரு அடி தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கும்.

இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சின்னதும் பெரியதுமாய் ஏதேனும் கஷ்டங்கள், துக்கங்கள், சோகங்கள் இருக்கத்தான் செய்யும். உடல் உபாதைகள், வேலை, தொழில், சொத்து பிரச்சனைகள், காதல் தோல்விகள் இப்படி அவை எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். மீண்டு வந்துதானே ஆக வேண்டும். வேறு வழி?

பத்தாவது படிக்கும்போது பள்ளி ஆசிரியையின் சூழ்ச்சியினால் மாநிலத்திலேயே முதலாவதாக வருவதற்காக முயற்சி செய்து கடுமையாக உழைத்துப் படித்த எனக்கு பள்ளியில்கூட முதலாவதாக வர முடியாத சூழல். ஆசிரியையின் சூழ்ச்சிதான் என தெரிந்ததும் வழக்கு, விசாரணை, கோர்ட் என தங்களால் முடிந்த அத்தனை முயற்சிகளையும் எடுத்து என் பெற்றோர் எனக்கு தன்னம்பிக்கைக் கொடுத்தாலும் எனக்குள் சின்னதாக ஒரு ஏமாற்றம் அதன் காரணமாய் அவமான உணர்வு. மீளவே முடியாத அளவுக்கு ஸ்ட்ரெஸ். இதற்காகவே வேறு பள்ளி, வேறு ஊர் என என் பெற்றோர் எனக்காக எத்தனையோ பிரம்மப்பிரயத்தனங்கள் செய்து எனக்கு உற்சாகம் கொடுக்க முயற்சித்தாலும் உள்ளுக்குள் சுருங்கித்தான் கிடந்தேன்.

+1, +2 பள்ளிக்குச் சென்றேன். படித்தேன். அவ்வளவுதான். அதன் காரணமாய் இன்ஜினியரிங், மெடிகல் என புரொஃபஷனல் கோர்ஸ் எதுவும் சேர இயலவில்லை.

இருப்பதிலேயே மிகச் சிறந்த கோர்ஸில் சேர்க்க விரும்பிய என் பெற்றோர் அந்த காலகட்டத்தில் நம் கல்வித் திட்டத்தில் புதிதாக அறிமுகம் ஆகி இருந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்த்தார்கள். பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் திருச்சி இந்திரா காந்திக் கல்லூரியில்.

வீட்டில் இருந்து கல்லூரிக்கு சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். மலைக்கோட்டையில் வீடு என்பதால் அரை கிலோமீட்டர் தொலைவுதான் கல்லூரிக்கு. அந்தக் கல்லூரியில் யாருமே சைக்கிளில் வர மாட்டார்கள். என் சைக்கிள் மட்டுமே தனித்து நிற்கும்.

எனக்குள் இருந்த ஸ்ட்ரெஸ் கொஞ்சம் விலக ஆரம்பித்திருந்தது. ஆனால் முழுவதுமாக விலகி விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லமுடியும். காரணம் அந்த அளவுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை, மனிதர்கள் மீதான நம்பிக்கையை ஆசிட் விட்டல்லவா அழித்திருந்தார் அந்த ஆசிரியை. பதினைந்து வயதில் அந்த அதிர்ச்சி கொஞ்சம் அதிகம்தான்.

அடுத்து எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில். அழகான மரங்கள் சூழ்ந்த பாதையில் ஊருக்குள் உள்ளடங்கிய இடத்தில் மன்னம்பந்தல் என்ற இடத்தில் பிரமாண்டமாக அமைதியாக இயங்கும் ஒரு கல்லூரி.

ஊரில் இருந்து கல்லூரி ஐந்து கிலோமீட்டர். அப்போதும் நான் கல்லூரி வாகனத்தைத் தவிர்த்து சைக்கிளில் சென்று வர ஆரம்பித்தேன். கல்லூரி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணிக்கு முடிவடையும். காலையில் 5 கிலோமீட்டர், திரும்ப வர 5 கிலோமீட்டர். ஆக மொத்தம் ஒரு நாளுக்கு 10 கிலோமீட்டர்.

என் பெற்றோர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. எல்லா நாட்களும் இவ்வளவுதூரம் சைக்கிளில் செல்ல முடியாது, கல்லூரி வாகனத்தில் பாஸ் எடுத்துக்கொண்டுவிடலாம் என சொல்லியும் கேட்காமல் சைக்கிளில்தான் செல்வேன் என அடம்பிடித்து அனுமதி பெற்றேன்.

2 வருடங்கள் இதுபோலவே. மழை வெயில் புயல் என ஒருநாளும் பஸ்ஸில் செல்லவே இல்லை. காலையில் சைக்கிளில் செல்லும்போது உற்சாகமாக இருக்கும். மதியம் வெயிலில் திரும்பும்போது கொஞ்சம் சோர்வாக இருக்கும். ஆனாலும் சைக்கிள் பயணத்தை மட்டும் விடவில்லை.

அந்த காலகட்டத்தில் எனக்குள் நானே ஒரு புதிய மாற்றத்தை உணரத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கை மீதான நம்பிக்கையும் மனிதர்கள் மீதான பிடித்தமும் மலரத் தொடங்கியது. புது உற்சாகம் எனக்குள் குடிகொண்டது. அப்போது எங்கள் வகுப்பில் 22 மாணவர்கள் மட்டுமே. அதில் ஐந்துபேர் மாணவிகள்.

என்னுடைய அமைதித்தன்மை, ப்ராஜெக்ட் தயாரிக்கும் போது கையாளும் வித்தியாசமான அணுகுமுறை, தேர்வு எழுதும்போது என் கையெழுத்தும் எழுத்தின் நடையும் மொழியின் ஆதிக்கம், பேராசிரியர்களுக்கு மரியாதைக் கொடுக்கும் பாங்கு, செமினார் எடுக்கும்போது கையாளும் புதுமையான அணுகுமுறை இப்படி என் சொல் செயல் அத்தனையும் கவனிக்கப்படும் அளவுக்கு வெளிச்சம் உண்டாகியது. என் எண்ணங்கள் அத்தனையும் இந்த உலகத்துக்குள் வண்ணமயமாக பரவ ஆரம்பித்திருந்த அருமையான காலகட்டம்.

நான் செமினார் எடுக்கும் முறையையே அப்போது பயிற்சி பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்கள் பின்பற்றத் தொடங்கினார்கள் எனும் அளவுக்கு எனது பாணி அமைந்திருந்தது. அதை அவர்களும் வெளிப்படையாக சொன்னார்கள் என்பதுதான் ஹைலைட்.

நான் தேர்வு எழுதினால் 100-க்கு 100 மதிப்பெண் போட்டு என் விடைத்தாளை வகுப்பு முழுவதும் சுற்றறிக்கைப் போல அத்தனை மாணவர்களுக்கும் காட்சிப்படுத்தி கெளரவித்தார்கள்.

என் பதினைந்து வயதில் ஏற்பட்ட அதிர்ச்சி நீங்கி இந்த மாற்றங்கள் எனக்குள் ஏற்பட கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளுக்கும் மேல் ஆனது. காலம் அத்தனையையும் மாற்றியது என சொல்ல மாட்டேன். தொடர்ச்சியாக 10 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் எனக்குள் சொல்லணா தைரியத்தை, தன்னம்பிக்கையை என்னை அறியாமலேயே உள்ளுக்குள் செலுத்தியது. அந்த தன்னம்பிக்கை நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. அதுதான் விஷயம்.

அதன் பின்னர்தான் சொந்தமாக ஐடி நிறுவனம் தொடங்கியது, கடுமையாக உழைத்தது, பணி சார்ந்து வெளிநாடுகளுக்குப் பயணம், செய்தது, அமெரிக்காவில் புகழ்பெற்ற மிசெளரி பல்கலைக்கழகத்தில் இந்திய நாட்டு கல்விக்கும், அமெரிக்கக் கல்விக்குமான ஒப்பீடு என்ற தலைப்பில் ஆவணப்படம் எடுத்தது, என் துறை சார்ந்து மட்டுமில்லாது எம்.பி.ஏ உட்பட சில மேற்படிப்புகள் படித்தது, நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் எழுதித் தள்ளியது, எங்கள் நிறுவன சாஃப்ட்வேர் அனிமேஷன் தயாரிப்புகள் உலகமெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பாடதிட்டமாக மாறியது என என் எல்லைகள் விரிவடைந்துகொண்டே சென்றன.

இத்தனை மாற்றங்களும், உச்சங்களும் என்னை வந்தடைய மிக முக்கியக் காரணமாக நான் கருதுவது, நம்புவது என்ன தெரியுமா?

மன அழுத்தம் இருந்த காலகட்டத்தில் நித்தம் 10 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்ததையே சொல்வேன். சைக்கிளில் சென்றுதான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. கல்லூரி வாகனம் இருந்தது, கல்லூரி வாகனத்தில் செல்ல விருப்பம் இல்லை என்றால் தனியாக ஆட்டோ  ஏற்பாடு செய்துகொள்ளலாம் என என் பெற்றோர் எத்தனை சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக சைக்கிள் பயணத்தையே தேர்ந்தெடுத்தேன்.

10 கிலோ மீட்டர் சைக்கிள் பயணமே எனக்கு யோகா போல் தியானம் போல என்னை எனக்கு அடையாளம் காட்டின. என்னை நானே உள்ளுக்குள் பார்க்கத் தொடங்கினேன். சைக்கிள் பயணத்தில் என் சின்ன சின்ன வருத்தங்கள் கரைய ஆரம்பித்தன. வருத்தங்கள் கரையத் தொடங்கியதுமே சந்தோஷங்களுக்கான அத்தனை விஷயங்களும் உள்ளுக்குள் வரத் தொடங்கியது.

என் வெற்றிக்கு இதுதான் காரணம்.

இன்னொரு முக்கியமான விஷயம். என் பத்து வயதில் விளையாடும்போது முன் பல்லில் முக்கால் பாகம் விழுந்து உடைந்துவிட்டது. ஏற்கெனவே விழுந்து முளைத்த பல் என்பதால் அதை எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் சொன்னதால் அப்படியே விட்டு விட்டோம். எம்.எஸ்.ஸி வரை எனக்கு முன் பல்லில் ஒரு பல் கால்பாகம் மட்டுமே இருந்தது. அதற்காக நான் வருந்தியதும் இல்லை. பின்னாளில் அதை எடுத்துவிட்டு வேறு பல் வைத்துக்கொள்ளலாம் என சொன்னார்கள்.

எம்.எஸ்.ஸி முடிக்கும்போது அந்த பல் தானாகவே வளர்ந்து (?) மற்றொரு பல்லுக்கு இணையாக வந்து நின்றது. இது மருத்துவ ரீதியாக ஆச்சர்யமான விஷயம் என்று மருத்துவர்களே சொன்னார்கள்.

இதெல்லாம் கூட என் தன்னம்பிக்கையின் காரணமாகத்தான் என்பதை நான் நம்பத்தொடங்கினேன்.

இப்போதுகூட மனம் சற்று சோர்வாக உணர்ந்தாலும் சைக்கிள் எடுத்துக்கொண்டு வெளியில் சென்று வருகிறேன். காரில் ‘லாங் ட்ரைவ்’ செல்கிறேன். காரை எங்குமே நிறுத்தாமல் சில கிலோமீட்டர் வரை சென்று திரும்புகிறேன்.

இத்தனை கதைகளும் எதற்காக என்றால் ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபட அசைவற்று ஓரிடத்தில் சோகமாக அமர்ந்திருக்காமல் நகர்ந்துகொண்டே இருங்கள் என்பதை சொல்வதற்காகத்தான்.

இது என் நம்பிக்கை. உங்கள் நம்பிக்கை வேறாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் இழந்துவிடாதீர்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon