ஜம்முனு வாழ காம்கேரின் OTP-34: முரண்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 34
பிப்ரவரி 3, 2021

முரண்கள்!

‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு!’

2007 ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த 1-1/2 மணி நேர ஆவணப்படம் இது. எங்கள் பெற்றோரின் வாழ்க்கை வரலாறு.

இதில் எங்கள் அப்பா அம்மா இருவருமே 24 மணி நேர பணி சுழற்சியில் இருந்தாலும் குழந்தைகள் வளர்ப்பிலும், வீட்டு நிர்வாகத்திலும் எந்த அளவுக்கு இருவரும் சரிசமமாக தங்கள் பங்களிப்பைக் கொடுத்தார்கள் என்பதுபோன்ற விவரங்களை காட்சிப்படுத்தி இருந்தோம்.

‘இருவரும் வேலைக்குச் செல்வதில் உள்ள கஷ்டங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்’ என்பது ஒருசாராரின் கருத்து.

‘எப்படிப்பட்ட புரிதல் இருந்தால் பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக இருக்க முடியும். ஆணும் பெண்ணும் சரி சமமாக வீட்டுச் சுமைகளை பகிர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும்போது வீடும் சொர்க்கமாகும்’ என்பது மற்றொரு சாராரின் கருத்து.

இரண்டு பிரிவினரின் கருத்துக்களும் அவரவர் வாழும் சூழலுக்கு ஏற்பவும், அவர்வர்கள் எண்ணங்களுக்கு ஏற்பவுமே அமைந்திருப்பதை கவனிக்கவும். இரண்டு கருத்துக்களுமே இரண்டு துருவங்கள். ஒன்று கஷ்டங்களை பார்க்கிறது. மற்றொன்று நன்மைகளை பாராட்டுகிறது.

வாழ்க்கையில் இதுபோல்தான் ஒன்றுக்கொன்று முரணான விஷயங்கள் நிறைய உள்ளன.

—–1—–

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பிசினஸ் மீட்டிங். பல கிளைகள் கொண்ட அந்த  நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர் என்னுடைய திறமைகளை வியந்து பாராட்டிப் பேசினார். பேச்சின் ஊடே ‘எனக்கு பெண்கள் இதுபோல சுயமாக தன் தனித்திறனில் முன்னேறுவது மிகவும் பிடிக்கும்…’ என்று சொன்னார்.

நான் நன்றி சொன்னதுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆர்வக் கோளாறில் ‘உங்கள் மனைவி வேலைக்குச் செல்கிறாரா?’ என்று கேட்டேன்.

அதற்கு அவர் டென்ஷனாகி ‘நான் பிசினஸில் பிசியாக இருப்பதால் அவரை வேலைக்கு அனுப்பவில்லை. குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு நிர்வாகம் என அவள் ரொம்ப பிசி…’ என்றார்.

‘என்ன படித்திருக்கிறார் அவர்?’

‘எம்.எஸ்.ஸி, எம்.பி.ஏ’

‘எத்தனை குழந்தைகள் சார்?’

‘ஒரே மகன், ஐந்தாவது படிக்கிறான்’

ஐந்தாவது படிக்கும் ஒரு மகனை கவனித்துக்கொள்வதற்கும், மூன்றே நபர்கள் உள்ள ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதற்கும் இரட்டைப் பட்டம் பெற்ற ஒரு பெண் தன் வாழ்க்கையை அர்பணிக்கிறாள். அவளுடைய படிப்புக்கு ஏற்ற ஒரு பணிக்குச் செல்லவும் அல்லது சுயமாக ஒரு தொழிலை செய்யவும் அனுமதிக்காத ஒருவர் பொதுவெளியில் தங்கள் தனித்திறனில் சுயமாக முன்னேறும் பெண்களை வியக்கிறார் என்பதை நினைக்கும்போதே சிரிப்புதான் வந்தது. அதே நேரம் அவர் மனைவியை நினைத்தால் வேதனையாகவும் இருந்தது.

—–2—–

ஒரு பத்திரிகையாளர். வார்த்தைக்கு வார்த்தை பெரியார் பெரியார் என சொல்லிக்கொண்டே இருப்பார். என்னிடம் பேசும்போது கூட அவர் குறித்து சிலாகித்து சொல்லிக்கொண்டே இருப்பார், எனக்கு அவர் கருத்தில் உடன்பாடில்லை என்பதை நன்கு அறிந்தபோதும்.

நான் என் வெற்றிகளுக்குக் காரணம் இறை அருள் என்று சொன்னபோது வெகுண்டெழுந்து ‘இப்படித்தான் உங்களைப் போன்ற படித்தவர்கள் கூட தங்கள் உழைப்பினால் கிடைத்த வெற்றிக்கு இறைவனை சொல்கிறீர்கள்… மூட நம்பிக்கையில் உழல்கிறீர்கள்’ என்று சொன்னார்.

அப்படிச் சொன்னதுடன் நிறுத்திக்கொண்டாரா, மீண்டும் அவர் அபிமான தலைவர் குறித்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

ஒரே ஒருமுறை நான் இறைசக்தி என்று சொன்னதற்கே அவரால் பொறுக்க முடியவில்லையே. அவர் வார்த்தைக்கு வார்த்தை அவரின் அபிமான தலைவரை கொண்டாடிக்கொண்டே இருக்கிறாரே எனக்கு எப்படி இருக்கும்?

‘சார், நான் இறைவன் மீது வைத்துள்ள என் நம்பிக்கை மூட நம்பிக்கை என்றால் நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை உங்கள் அபிமானத் தலைவர் பெயரை சொல்கிறீர்களே… அது என்ன நம்பிக்கை, அதுவும் மூட நம்பிக்கைத்தானே… என் கடவுள் நம்பிக்கை உங்களுக்கு மூடநம்பிக்கை என்றால் உங்கள் தலைவர் நம்பிக்கை எனக்கு அதிதீவிர மூடநம்பிக்கை’ என்றபோது வாயை மூடிக்கொண்டார்.

—–3—–

ஒரு தொலைக்காட்சியில் என் நேர்காணல். லைவ் அல்ல. ரெகார்ட் செய்யப்பட்டு வேறொரு நாள் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.

வாழ்க்கையில் என் குறிக்கோள் என்ன, எப்படி அதை அடைய முயற்சித்தேன், எப்படி கடுமையாக உழைத்தேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தேன்.

இறுதியில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.

‘நீங்கள் பொருளாதார ரீதியாக நல்ல வசதியாக இருந்ததால் வேலைக்குச் செல்லாமல் சுயமாக பிசினஸ் செய்ய ஆரம்பித்தீர்கள் என்று சொல்கிறீர்கள்…’ என்ற கோணத்தில் ஆரம்பித்து அவரது புரிதல் இன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

நான் பிரமித்தேன். வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடன் நான் முன்னேறியதை இத்தனை பிரயத்தனப்பட்டு விரிவாக விளக்கிக்கொண்டிருக்கும்போது அதற்கு நேர்மாறாக மீடியாவில் பணிபுரியும் ஒருவரால் எப்படி புரிந்துகொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட்டேன்.

ரெகார்டிங்கை அப்படியே நிறுத்தச் சொல்லிவிட்டு என்னை பேட்டி எடுத்தவரிடம் மீண்டும் புரிய வைத்தேன். குறிக்கோளுக்கும் பொருளாதாரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. குறிக்கோள் இருந்தால் அதை அடையும் வழிகளும் தானாகவே அமைந்துவிடும். என் படிப்பு, திறமை, உழைப்பு இந்த மூன்றையும் மட்டுமே அஸ்திவாரமாக்கி உருவான நிறுவனமே எங்கள் காம்கேர் என்பதை மீண்டும் தெளிவாக்கிவிட்டு ஒளிப்பதிவை மீண்டும் தொடர்ந்தோம்.

எப்படியெல்லாம் சாதாரண சின்ன சின்ன விஷயங்கள் கூட முரண்களாக சென்றடைகின்றன என்பதற்கு இதுவே ஆகச் சிறந்த உதாரணம்.

—–4—–

முரண்களை அப்படியே ஒதுக்கித்தள்ளிவிடவும் முடியாது. நாமாகத் தேடிச் சென்று முரண்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை என்றாலும், நம் கவனத்துக்கு வரும் முரண்களுக்கு விளக்கம் கொடுக்கவில்லை என்றால் அதுவே நமக்கு நிரந்தர ஐகானாக முத்திரை குத்தப்பட்டுவிடும்.

முரண்களே முட்டுக்கட்டைகளாகி முன்னேற விடாமல் செய்துவிடலாம். எனவே, கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon