ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 35
பிப்ரவரி 4, 2021
டென்ஷன் குறையணுமா? முகம் பார்த்து பேசுவதை தவிருங்கள்!
பொதுவாகவே முகம் பார்த்து பேசும்போதுதான் பிறரின் மனதை படிக்க முடியும். காரணம் மனதில் உள்ளதை முகம் காட்டிக்கொடுத்துவிடும்.
இதனால்தான் பொய் சொல்பவர்கள் கண்களைப் பார்த்துப் பேச மாட்டார்கள். ஏதோ வேலை செய்துகொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு பேசுவார்கள். காரணம் பிறர் முகத்தைப் பார்த்து கண்களை உற்று நோக்கிப் பேசும்போது பெரும்பாலும் பொய் சொல்ல முடியாது. அப்படியே பொய் சொன்னாலும் அது அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட பொய் என அப்பட்டமாக கண்டுகொள்ளப்பட்டுவிடும்.
முகம் பார்த்துப் பேசாமல் இருக்கும் லாஜிக்கை பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும்போது கூட செயல்படுத்தலாம். மனஸ்தாபம் உண்டானவர்களுடைய முகம் பார்ப்பதை தவிர்த்தால் அவர் மீதான நம் கோபம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். குறைந்தபட்சம் நம் டென்ஷனை குறைத்துக்கொள்ளவாவது உதவும்.
எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு பெண் தன் கணவனுடன் ஏற்பட்ட சண்டை குறித்து சொல்லும்போது, அவளால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தன் கணவனுடன் பேசாமல் இருக்க முடியும். அத்தனை டென்ஷன் இருக்காது. ஆனால் தன் கணவனால் அப்படி இருக்க முடியாது. மனஸ்தாபம் உண்டாகும் நாட்களில்தான் அதிக டென்ஷனாக இருப்பார் என்று சொன்னபோது, ‘ஏன் அவருக்கு உன் மேல் அத்தனை பாசமா?’ என்றேன்.
‘அப்படி இல்லை, சண்டை சச்சரவு வந்தால் நான் அவர் முகத்தை பார்க்கவே மாட்டேன். அதனால் அவருடைய முகபாவனைகள் எனக்குள் செல்லாது. அத்துடன் சண்டையினால் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் கடுகடுவென்றிருக்கும் முகத்தை பார்க்கப் பார்க்க இன்னும் நம் கோபம் அதிகமாகுமே தவிர குறையாது. அதனால் முகம் பார்ப்பதை தவிர்ப்பேன். ஆனால் சண்டை வந்து பேசாமல் இருக்கும் காலகட்டத்தில்தான் என் முக ரியாக்ஷனை துல்லியமாக கவனிப்பார் என் கணவர். கோபத்தில் சிறுத்திருக்கும் என் முகத்தைப் பார்க்கும்போது அவருடைய டென்ஷன் இன்னும் அதிகம் ஆகுமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. அதனால்தான் அவர் எங்களுக்குள் மனஸ்தாபம் உண்டாகும் நாட்களில் அதிக டென்ஷனில் இருப்பார். என் கோபம் குறைய இரண்டு மூன்று நாட்கள், ஏன் ஒரு வாரம் கூட ஆகலாம். அப்போதுதான் முகம் பார்த்து பேசத் தொடங்குவேன். என் டென்ஷன் குறைந்ததும் பிரச்சனைகளை பேசி அவற்றுக்கு தீர்வு கண்டு முற்றுப்புள்ளி வைப்போம். எங்களுக்குள் இன்னும் புரிதல் அதிகமாகும்’ என்றார்.
அவர் சொல்வதைப் போல ஒவ்வொருக்கும் டென்ஷன் அடங்கும் கால அளவு வேறுபடும் அல்லவா? ஒருவருக்கு ஒரு மணி நேரத்தில் கோபம் அடங்கும். மற்றொருவருக்கு ஒரிரு நாட்கள், இன்னும் ஒரு சிலருக்கு ஒரு வாரம். நல்லது தானே. இந்த காலகட்டத்தில் ஒருவரை ஒருவர் இன்னும் மோசமாக புரிந்து கொண்டு சண்டை போடாமல் டென்ஷன் குறைந்ததும் பேசிக்கொள்வதும் ஓர் உளவியலே.
இது நல்ல லாஜிக்காக இருக்கிறதல்லவா?
சமூக வலைதளங்களில் கூட ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை தவறாக சித்தரிப்பது, அவதூறு பேசுவது, புறம் பேசுவது என எதிர்மறையாக செயல்படுவதை நாகரிகமாக ஒதுங்கிச் செல்ல உதவும் வசதிகள் உள்ளன.
‘பிடிக்கவில்லையா Un-Friend செய். நீ என்னை Un-Friend செய்துவிட்டாயா? நான் உன்னை Block செய்கிறேன். நானே வேண்டாம் என்று நீ என்னை Un-Friend செய்யும்போது, என் பதிவுகள் மட்டும் உனக்கு எதற்கு, நான் உன்னை Block செய்கிறேன்.’
இதுதான் இன்றைய ட்ரெண்ட்.
Un-Friend, Block இவை இரண்டும்தான் சமூக வலைதளங்களில் டென்ஷனை குறைக்கும் நிவாரணிகள்.
பிடிக்கவில்லை என்றால் அடிதடி, சண்டை, கூச்சல், அவதூறு பரப்புதல், அசிங்கமாக சித்தரித்தல், பிறரிடம் வதந்தி பரப்புதல் என வன்முறையில் எதிர்மறையாக இறங்காமல் அமைதியாக ஒதுங்கிச் செல்ல வெர்ச்சுவல் உலகம் கற்றுக்கொடுத்துள்ளது.
வெர்ச்சுவல் உலகில் எத்தனையோ வசதிகள் இருந்தாலும் சில உபத்திரவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் நாகரிகமாக ஒதுங்கிச் செல்ல உதவும் Un-Friend, Block இவை இரண்டும் உண்மையிலேயே ஆன்லைன் டென்ஷன்களைக் குறைக்கும் நிவாரணிகளே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP