ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 36
பிப்ரவரி 5, 2021
Introverts – குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்?
நிறைய நண்பர்களே இல்லையே, அப்போ நாம் வாழத் தகுதியற்றவரோ என்ற எண்ணம் தலைதூக்குகிறதா? அப்போ இந்தப் பதிவு உங்களுக்குத்தான்.
என் பள்ளிப் பருவத்தில் என் வயதை ஒத்த மாணவிகள் இருப்பதைப் போல இருக்க மாட்டேன். மிக அமைதியாக இருப்பேன். தேவைப்படும்போது மட்டுமே பேசுவேன். என் சக வயதினர்களைவிட அவர்களின் பெற்றோர், தாத்தா பாட்டி, பள்ளி கல்லூரியாக இருந்தால் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் என என்னுடைய அணுகுமுறையே வேறாக இருக்கும். நான் வித்தியாசமாக இருப்பதாக காட்டிக்கொள்வதற்காக அப்படி இருப்பதாக வெளியில் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் நான் அமைதியாக இருப்பதாலும், பெரியவர்களுக்கு அதீதமாக மரியாதை கொடுப்பதாலும், பண்புடன் பேசுவதாலும் என் சக வயதினரை விட அவர்களின் பெற்றோருக்கும் தாத்தா பாட்டிக்கும் ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் என்னை பிடிக்கும். அவர்கள்தான் தானாகவே என்னை தொடர்புகொண்டு பேசி மகிழ்வார்கள் என்பதுதான் உண்மையான நிகழ்வாக இருக்கும்.
அத்துடன் என் சக வயதினர் செய்கின்ற பிறரை சீண்டுகின்ற சின்ன சின்ன சேட்டைகளை கூட செய்ய மாட்டேன். அப்படி செய்பவர்களையும் ‘அப்படி செய்யக் கூடாது’ என சொல்வதால் எனக்கு நட்பு வட்டம் மிகக் குறைவு.
ஏதேனும் பேசிக்கொண்டிருப்பவர்கள் கூட என்னைப் பார்த்துவிட்டால் பேச்சை நிறுத்திவிட்டு சிரித்துக்கொள்வார்கள். பள்ளி கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட அவசியம் இருந்தால் மட்டுமே கலந்துகொள்வேன்.
ஒரு நாள் என் வகுப்பு மாணவியின் அம்மா என் பெற்றோரிடம் ‘இப்படி பொத்திப் பொத்தி வளர்த்தால் உலகம் புரியாது. பின்னாளில் கஷ்டப்படுவாள்…’ என்று சொன்னார்கள்.
அதற்கு என் பெற்றோர் ‘குழந்தைகள் வளர வளர சூழலுக்கு ஏற்ப தானாகவே கற்றுக்கொள்வார்கள்…’ என்று பதில் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.
என் அப்பா அம்மா சொல்வதால்தான் நான் அப்படி நடந்துகொள்கிறேன் என்பது அவர்களின் எண்ணம். உண்மையில் என்னை என் அப்பா அம்மா எதற்குமே கட்டுப்படுத்தியதில்லை. என் சுபாவம். என் குணம். அதற்கேற்பவே என் செயல்பாடுகள். இன்று வரை அப்படித்தான்.
—1—
பி.எஸ்.ஸி படித்தபோது என்னுடன் படிக்கும் ஒரு சக மாணவி என் வீட்டுக்கு அருகில் குடி இருந்தாள். அவள் கொஞ்சம் கலகல டைப். சில நேரங்களில் அடுத்தவர்களையும் சீண்டும் குணம். என்னுடன் சேர்ந்து கல்லூரிக்கு வர ஆரம்பித்தாள். கல்லூரிக்கு செல்லும் வழியில் பிற கல்லூரி மாணவர்களை பார்த்துவிட்டால் அவர்கள் காதில் விழ வேண்டும் என்பதற்காக வேகமாக பேசுவாள். சத்தம் போட்டு சிரிப்பாள். அத்தனையும் கவன ஈர்ப்புக்காக. ஏற்கெனவே அந்த நாட்களில் ஈவ் டீஸிங் அதிகம். அதுவும் இப்படி தானாகவே வலிய சென்று கவன ஈர்ப்பு செய்தால் கேட்கவா வேண்டும்?
அவளுக்கு நான் ‘இப்படி எல்லாம் இருக்கக் கூடாது. படிக்கும் நாட்களில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்… நமக்கென்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும்…’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவளும் விடவில்லை. ‘இந்த வயதில் ஜாலியாக இல்லாமல் எப்போது ஜாலியாக இருக்கப் போகிறோம்…’ என்று சொல்லி என்னை மடைமாற்றவே முயற்சித்தாள்.
என் குணமும் அவள் குணமும் எதிர்துருவங்களில் இருந்ததால் அவளுடன் சேர்ந்து கல்லூரிக்குச் செல்வது எனக்கு நரக வேதனையானது. ஒருநாள் பொறுக்க மாட்டாமல் ‘சாது மிரண்டால்’ என தலைப்பிட்டு அவளுக்கு நான் என்னவெல்லாம் அறிவுரை சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேனோ அத்தனையையும் எழுதி அவள் வீட்டுக்குச் சென்று கொடுத்தேன். அவள் படிக்கும் வரை காத்திருந்தேன். படித்து முடித்த பிறகு அதை வாங்கிக்கொண்டு பேசாமல் வேகமாக வீட்டுக்கு வந்துவிட்டேன்.
அன்று முதல் கல்லூரிக்கு அவளுடன் சேர்ந்து செல்வதை நிறுத்தினேன். கல்லூரியில் அவள் நட்பு வட்டத்திடம் என் குறித்து கேலியாக சொல்லி சிரித்து மகிழ்ந்தாள். எத்தனை நாள் செய்ய முடியும்? ஒரு கட்டத்தில் அவள் வழியில் என்னை தொந்திரவு செய்யாமல் செல்ல ஆரம்பித்தாள்.
இன்று நான் ஒரு நிறுவனத்தை உருவாக்கி 28 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைத் தாங்கி திறம்பட நடத்தி வருகிறேன். என் பாதையில் நான் கடக்கும் வழியில் ஆயிரக்கணக்கானவர்களை உருவாக்கி உள்ளேன். இன்றும் தொடர்கிறது. அவள் குடும்பத் தலைவி. காதல் திருமணம். வழக்கம்போல குடும்பம், குழந்தைகள். அவள் படித்த தொழில்நுட்பத்துறை பங்களிப்பு பெரிதாக ஏதும் இல்லை.
—2—
எம்.எஸ்.ஸி படிக்கும் போது என் வகுப்பு மாணவ மாணவிகள் ஒருமுறை கல்லூரி முதல்வரிடமும், துறைத் தலைவரிடமும் 2 மணி நேரம் அனுமதி பெற்று உடன் படிக்கின்ற மாணவியின் திருமணத்துக்குச் சென்றோம். மாணவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து சினிமாவுக்கு செல்வதாக திட்டமிட்டார்கள். துறைத்தலைவரிடம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி பெற்றிருப்பதால் அதை மீறி செயல்பட விரும்பவில்லை என கூறி நான் வரவில்லை என்று சொல்லி விட்டு நேராக கல்லூரிக்குச் சென்றேன்.
நூலகத்தில் அமர்ந்து புத்தகங்கள் வாசித்தேன். மாணவர்கள் சினிமாவுக்குச் சென்று திரும்பியவுடன் துறைத்தலைவர் விவரம் அறிந்து வகுப்புக்கு வெளியே அனைவரையும் நிற்க வைத்து தண்டனை கொடுத்தார். நானும் அவர்களுடன் சேர்ந்து தண்டனை அனுபவித்தேன். சக மாணவர்களை காட்டிக்கொடுக்கவுமில்லை. நானும் சினிமாவுக்கு செல்லவில்லை, லைப்ரரியில்தான் இருந்தேன் என என்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவும் இல்லை. என் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நடந்துகொண்டேன். அவ்வளவுதான்.
—3—
என் 22 வயதில் சொந்தமாக நிறுவனம் தொடங்கியபோது என் வயதை ஒத்தவர்களின் பெற்றோர் ‘அவளைப் பார் எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறாள். நீயும் அவளைப் பார்த்து கற்றுகொள்’ என சொல்ல ஆரம்பித்தார்கள். பின் எப்படி அமைவார்கள் நண்பர்கள்?
காலையில் 6 மணிக்கு நிறுவனத்துக்கு கிளம்பி விடுவேன். 9.30-க்கு சாப்பாடு சாப்பிட வருவேன். திரும்ப இரவு 9 மணிக்கு வீடு திரும்புவேன். என் டிவிஸ் 50 – யின் சப்தத்தை வைத்து கலை 6 மணி, 9.30 மணி, இரவு 9 மணி இவற்றை நான் வசிக்கும் தெருவில் உள்ளவர்கள் அறிந்துகொள்ளும் அளவுக்கு என் நேரம் தவறாமை இருந்து வந்தது. இன்று வரை தொடர்கிறது. என்ன அன்று டிவிஸ்-50-யில் சென்றேன். இன்று காரில் செல்கிறேன். அது ஒன்றுதான் வித்தியாசம்.
—4—
எனக்கு வாய்ப்புக்கொடுக்கும் அத்தனை மீடியாக்களிலும் பங்கேற்பதில்லை. என் திறமையை மதிக்கும் தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கிறேன். தேர்ந்தெடுத்து மட்டுமே நேர்காணலுக்கும் சம்மதிக்கிறேன்.
இவ்வளவு ஏன், விருதுகளை நோக்கிக்கூட நான் செல்வதில்லை. என்னை நோக்கி வரும் விருதுகளைக்கூட தேர்ந்தெடுத்துத்தான் பெறுகிறேன்.
கிடைக்கும் நேரத்தை குடும்பத்துடன் செலவிடவே விரும்புகிறேன். அதில்தான் மகிழ்ச்சியே கிடைக்கிறது.
எளிமையாகவே இருப்பேன். உடை அணிவேன். குடும்ப நிகழ்ச்சிகளில் என் நடை உடை பாவனை அனைத்துமே நான் ஒரு நிறுவன தலைமை என்பதை பறை சாற்றாது. நிறுவன நிகழ்ச்சிகளில்கூட எளிமையான உடை அதற்கு மேல் புரொஃபஷனல் லுக்கிற்காக ஒரு கோட். இதுதான் என் பாணி.
இதனால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்குச் சென்றால்கூட கவனம் என் மீது இருக்காது. நான் அமைதியாக என் பங்களிப்பைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருப்பிடம் திரும்புவேன்.
—5—
இப்படியான கொள்கைபிடிப்புள்ள என் வாழ்க்கைப் பாதையில் எனக்கான நட்பு வட்டம் மிக மிகக் குறைவுதான். ஆனால் இருக்கின்ற நட்புகள் தரமான நட்புகள்.
நட்புகளில் Quantity – ஐ விட Quality முக்கியம். எனக்கு என்னை நன்கு புரிந்துகொண்ட குவாலிட்டியான நட்புகள் மட்டுமே. குவாண்டிட்டியில் 100 என்பது குவாலிட்டியில் 5 – க்கு சமம். அதாவது 100 நண்பர்கள் என்ற கணக்கைவிட 5 நல்ல தரமான நண்பர்கள் என்பது மிகப் பெரிய விஷயம்.
சரி இந்தக் கதையெல்லாம் எதற்காக?
இப்படிப்பட்ட குணம் உள்ளவர்களை ஆங்கிலத்தில் Introverts என்பார்கள். அதாவது உள்முக சிந்தனையாளர்கள் என தமிழில் சொல்லலாம்.
‘தரமான மிகக் குறைந்த நண்பர்கள், அமைதியான சுபாவம், எப்போதுமே குடும்பத்துக்கு முக்கியத்துவம், தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளில் பங்களிப்பு, தங்களை தாங்களாகவே முன்னிலைப்படுத்திக்கொள்ளாத சுபாவம், எளிமையான நடை உடை பாவனை, சிக்கனமான நடவடிக்கை, தேவைக்கு தாரளமாக செலவு செய்தல், தன் குறிக்கோளில் அதீத கவனம், சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யாத பக்குவம்…’ இதெல்லாம் இண்ட்ரோவெர்ட் என்படும் உள்முக சிந்தனையாளர்களிம் குணாதிசயங்கள்.
அதற்காக இவர்களுக்கு சமுதாய பங்களிப்பு இருக்கவே இருக்காதோ என எண்ண வேண்டாம். எப்படி நான் இயங்கும் துறையில் என் பணிகளை சமுதாய நோக்கில் கொண்டு செல்கின்றேனோ அதுபோல இண்ட்ரோவெர்ட் என்படும் உள்முக சிந்தனையாளர்களிம் செய்யும் ஒவ்வொரு செயலுமே ஏதேனும் ஒரு விதத்தில் சமுதாய பங்களிப்புக்கு வித்திடும். சட்டத்துக்குப் புறம்பாக செய்யாத எந்த ஒரு செயலுமே சமுதாயத்துக்குச் செல்லும் சேவை தானே?
என்ன நான் சொல்வது?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP