ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 47
பிப்ரவரி 16, 2021
நீங்கள் எப்போதுமே பெரியவராக இருக்க வேண்டுமா?
நேற்று ஒரு பத்திரிகை நேர்காணல் தொலைபேசி வாயிலாக. விரைவில் ஜனரஞ்சக பத்திரிகையில் வெளிவர உள்ளது. முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும்.
அந்த நேர்காணல் கிளறி விட்ட நினைவுகளில் இன்றைய பதிவு.
வயது – பிறந்ததில் இருந்து எத்தனை நாட்கள் ஆகியுள்ளது என்ற கணக்கு மட்டுமே!
பதினைந்து பதினாறு வயது ஆணை விட ஐந்தாறு வயது குறைவான ஒரு பெண் வயதில் சிறியவளாக இருந்தாலும் விழிப்புணர்வு ஆணைவிட ஒருபடி அதிகமாகவே இருக்கும். 15 வயது ஆணைவிட 10 வயது பெண்ணுக்கு மனமுதிர்ச்சி அதிகம் இருக்கும். உடல் சார்ந்த இயற்கை விழிப்புணர்ச்சியினால் மனம் சார்ந்தும் அவர்கள் மனமுதிர்ச்சி பெற்றவர்களாகவே இருப்பார்கள்.
வெறும் வயதை வைத்து பெரியவன், சிறியவன் என்ற அடையாளத்தைப் பெறுவதும் குறிப்பிடுவதும் அபத்தம்தான்.
20 வயதுக்குப் பிறகுதான் நம் இந்திய நாட்டில் பெரும்பாலும் தனியாக தனித்துவமாக பயணிக்க ஆரம்பிக்க வாய்ப்பு ஆரம்பமாகிறது. 20 வயதில் இருந்து 30 வயது வரை வேலையிலும், திருமண வாழ்க்கையிலும் காலூன்றிக்கொள்ள வேண்டிய அழுத்தம்.
30 வயதுக்கு மேல் ஓரளவுக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதல் ஆரம்பமாகியிருக்கும். பெற்றோர், பள்ளி, கல்லூரி, நண்பர்கள், சமுதாயம், உறவினர்கள் என இயங்கிக்கொண்டிருக்கும் இந்த களமும் தளமும் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கும் பாடங்களினால் தெளிவு கிடைக்கப் பெற்றிருப்பார்கள் அல்லது தெளிய முயன்றுகொண்டிருப்பார்கள்.
30 வயதுக்கு மேல் வேலை / தொழில் மற்றும் திருமண பந்தத்தில் செட்டில் ஆனவர்களின் அனுபவங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவரவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் அளவுக்கு ஏற்ப அனுபவத்தின் நீளமும் அகலமும் வேறுபடலாம்.
40 வயதுக்கு மேல், 50 வயதுக்கு மேல் என வயதை அடிப்படையாக வைத்து மனிதர்களை பிரித்தால் பெரும்பாலும் அவர்களின் வாழ்க்கை முறை ஒன்று போலவே இருப்பதைக் காணலாம்.
60+ வயதுக்கு மேல் 80+ வயதினர் வரை எல்லோரையுமே ஒரே வயதினராகவே எடுத்துக்கொள்ளலாம் என்கின்ற அளவுக்கு அவர்களின் சுபாவம் அமைந்திருப்பதைக் காணலாம். எல்லாவற்றிலும் இருப்பதைப்போல் இதிலும் விதிவிலக்குகள் உண்டு.
விதிவிலக்கு மனிதர்கள் எப்படி உருவாகிறார்கள் என்றால், அவரவர்களின் அனுபவத்துக்கு ஏற்ப அவர்களின் சுபாவங்கள், பழக்க வழக்கங்கள், பண்புகள் மாறுவதினால் இருக்கலாம்.
ஆக, ஒருவரின் வயது அவருடைய அனுபவத்துக்குச் சான்றாகாது. வயது என்பது பிறந்ததில் இருந்து இப்போதுவரை எவ்வளவு நாட்கள் ஆகியுள்ளது என்ற கணக்கு மட்டுமே.
20 வயதில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு பின்னர் தொடர் சிகிச்சையினால் அதில் இருந்து மீண்டு படித்து முடித்து வேலைக்குச் சென்று சம்பாதித்து இந்த சமுதாயத்தில் தலைநிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் நடைபோடும் 30 வயது பெண்ணின் அனுபவமும் பெற்றோரின் சம்பாத்தியத்தில் 25 வயதுவரை வாழ்ந்துவிட்டு பின்னர் வேலையிலோ அல்லது திருமண பந்தத்திலோ செட்டில் ஆகும் ஒரு ஆணுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. இந்த ஒப்பீடு ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும்கூடப் பொருந்தும்.
சம வயதுள்ள ஆணின் அனுபவமும் பெண்ணின் அனுபவமும் ஒன்றாகவே முடியாது. ஆண்களைவிட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் சவால்களும் அதிகம். பிரச்சனைகள் மட்டுமல்ல புரிதல்களும் வேறுபடும்.
என்னுடைய முப்பது வயதில் என்னைவிட பத்து வயது பெரியவரான ஒரு ரிப்போர்ட்டர் (ஆண்) என்னை நேர்காணல் செய்தார். நான் சொன்ன கருத்தை அவர் எப்படி புரிந்துகொண்டார் தெரியுமா?
நான் சொன்ன கருத்து:
‘என் அப்பா அம்மா இருவருமே 24 மணி நேர பணி சுழற்சியில் வேலைக்குச் செல்வதால் நாங்களே (நானும் என் தங்கை, தம்பியும்) பாதுகாப்பாக இருக்க கற்றுக்கொடுத்துள்ளார்கள். வீட்டில் ஒரு நோட்டு வைத்திருப்போம். அப்பா அம்மா இருவரும் இல்லாத நேரத்தில் வீட்டில் என்ன நடந்தாலும் அநத் நோட்டில் எழுதி வைப்போம். அப்பா அம்மா ஆஃபீஸ் விட்டு வந்ததும் மறக்காமல் சொல்வதற்காக இந்த ஏற்பாடு. இதனால் எங்களுக்குள் கம்யூனிகேஷன் கேப் வரவே இல்லை. இதுபோல வீட்டிலேயே ஒரு அலுவலகத்துக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் நாங்கள் கற்றுக்கொண்டோம்.’
ரிப்போர்ட்டர் புரிந்துகொண்டு எழுதியது என்ன தெரியுமா?
‘இவரது அப்பா அம்மா இருவரும் வேலைக்குச் செல்வதால் இவரது தம்பி தங்கைகள் இவரின் கண்காணிப்பில்தான் வளர்ந்தார்கள்… இளம் வயதிலேயே மனமுதிர்ச்சி கிடைத்ததால் நிறுவனம் நடத்தும் அளவுக்கு திறமை பெற்றார்…’
எத்தனை அபத்தமான கருத்து இது. என்னைவிட ஓரிரு வயதே வித்தியாசம் உள்ள தம்பி தங்கைகளை நான் எப்படி வளர்த்திருக்க முடியும்? நான் சொன்னது என்ன ரிப்போர்ட்டர் புரிந்துகொண்டது என்ன? மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட ஒரு நேர்காணலில் இதே கருத்தை அப்படியே புள்ளி கமா மாறாமல் சொன்னேன்.
அந்த ரிப்போர்ட்டர் எவ்வளவு அழகாக சரியான புரிதலுடன் எழுதினார் தெரியுமா? இந்த ரிப்போர்ட்டரும் (பெண்) என்னைவிட பத்து வயது பெரியவர்.
புவனேஸ்வரி அவர்கள் இந்த துறைக்கு வந்த விதத்தை மிக அழகாகக் கூறினார். ‘நான் பிறந்தது கும்பகோணம். அப்பா வி.கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் துணைக்கோட்ட பொறியாளர். அம்மா கே. பத்மாவதி அதே துறையில் சீனியர் தொலைபேசி கண்காணிப்பாளர். பெற்றோரின் பணி காரணமாக மயிலாடுதுறை, கும்பகோணம், கடலூர், விருதாச்சலம், சீர்காழி, திருவாரூர், திருச்சி என பல்வேறு ஊர்களில் வசிக்க வேண்டி இருந்தது. இருவரும் ‘ஷிஃப்ட்’ முறையில் பணி செய்ய வேண்டி இருந்ததால், மூத்த பெண்ணான நானும், தம்பி, தங்கையும் எங்கள் நேரத்தை நிர்வகிக்கவும், சுய சார்புடன் விளங்கவும் இளமையிலேயே பயிற்றுவிக்கப்பட்டோம்’
இந்த இரண்டு ரிப்போர்ட்டர்களிடமும் நான் சொன்னது என்னவோ ஒரே விஷயம்தான். ஆனால் புரிதலில்தான் எத்தனை வித்தியாசங்கள்?
‘இருவரும் ‘ஷிஃப்ட்’ முறையில் பணி செய்ய வேண்டி இருந்ததால், மூத்த பெண்ணான நானும், தம்பி, தங்கையும் எங்கள் நேரத்தை நிர்வகிக்கவும், சுய சார்புடன் விளங்கவும் இளமையிலேயே பயிற்றுவிக்கப்பட்டோம்…’ எத்தனை சரியான புரிதல் கவனியுங்கள்.
ஒரு விஷயத்தை ஒருவரது அனுபவத்தைப் புரிந்துகொள்வதிலேயே இத்தனை தடுமாற்றம் என்றால் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி சொல்லவா வேண்டும்.
அதனால்தான் சொல்கிறேன், வயது என்பது நாம் பிறந்ததில் இருந்து எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கிறோம் என்ற கணக்கு மட்டுமே. வயதை வைத்து பெரியவர் சிறியவர் என கணக்கிட வேண்டாம்.
அனுபவங்களும், நற்பண்புகளும், குணநலன்களுமே ஒருவரை சிறியவரா பெரியவரா என்பதை எடுத்துச் சொல்லும் சான்று!
நாம் நம்முடைய எல்லா வயதிலும் மற்றவர்களைவிட பெரியவராக இருக்க எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழப் பழகுவோம். பெரியவராக இருப்போமே! வயதில் மட்டும் அல்ல… நற்பண்புகளில், ஒழுக்கத்தில், பண்பில், குணநலன்களில்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP