ஜம்முனு வாழ காம்கேரின் OTP-58: பவுடர் ஓவியங்கள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 58
பிப்ரவரி 27, 2021

பவுடர் ஓவியங்கள்!

அது ஒரு கோடைக்கால விடுமுறை மாலைப்பொழுது. அந்த அப்பார்ட்மென்ட் குழந்தைகள் வயதுவாரியாக அவரவர்கள் வயதுக்கு ஏற்ப விளையாடிக் கொண்டிருந்தார்கள். கிரிக்கெட், ஊஞ்சல், கண்ணாம்மூச்சி, ஓடிப்பிடித்தல் என்று களைக்கட்டியிருந்தது.

அந்த அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ஒரு வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த ஒரு சிறுமி பவுடர் டப்பாவை வைத்துக்கொண்டு சிமெண்ட் தரையில் தட்டித்தட்டி படம் வரைந்துகொண்டிருந்தாள். அவளைச் சுற்றி அவள் வயதை ஒட்டிய சில சிறுமிகள் உட்கார்ந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘நானும் படம் வரைகிறேன்… என்னிடம் கொடு…’ என்று கேட்டுக்கொண்டு சில சிறுவர்கள். காட்சியே கவிதையாய் இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் அச்சிறுமியைச் சுற்றியிருக்கும் நண்பர்களின் கூட்டம் குறைந்திருந்தது. ஒருநாள் அவளைச் சுற்றி யாருமே இல்லை. அவள் மட்டும் தனியாக வரைந்துகொண்டே இருந்தாள். படங்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருந்தன. தாஜ்மஹால், மயில், காந்திஜி என நேர்த்தியாக இருந்தன.

நான் அருகில் இருந்து கவனிப்பதை உணர்ந்த அச்சிறுமி வெட்கத்துடன் ‘அம்மா…’ என்று கூப்பிட்டுக்கொண்டே உள்ளே ஓட, அதற்குள் அவள் அம்மாவே வெளியில் வந்தார்.

‘உங்கள் மகள் வரையும் படங்கள் சூப்பராக இருக்கு’ என்று சொல்ல அம்மாவின் முகம் பிரகாசமானது.

‘எங்க ஊர் பக்கமெல்லாம் எல்லா காலங்களிலும் கலர்பொடி கிடைக்கும், காலியான பவுடர் டப்பாக்களில் வெவ்வேறு கலர்பொடிகளைப் போட்டுக் கொடுத்து விடுவேன். இவள் தன் இஷ்டத்துக்கு தரையில் தட்டித்தட்டி வரைந்துகொண்டே இருப்பாள். இங்கு கலர் பொடி கிடைக்கவில்லை. அதனால் பவுடர் டப்பாவையே வாங்கிக்கொடுத்துள்ளேன்… கலர் பொடியினால் இவள் வரைகின்ற படங்கள் இன்னும் அழகா இருக்கும்…’ என்று தன் மகளின் திறமையை என்னிடம் பெருமைப் பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தாள்.

‘அதுமட்டுமில்லைங்க… சப்பாத்தி, பூரிக்கு கோதுமை மாவு பிசையும்போது இவளுக்கும் கொஞ்சம் பிசைந்து கொடுத்து விடுவேன். இவள் அதை வைத்துக்கொண்டு பொம்மைகள் செய்வாள்…’

பெண்ணின் பெருமை சொல்லிப் பூரிக்கும் அம்மாவை ‘அப்படியா?’ எனச் சொல்லி ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘ஆனா, இந்த அப்பார்ட்மெண்ட்டுல பவுடர் டப்பாவை இவள் வேஸ்ட் செய்வதாக சொல்கிறார்கள்… இவளுடன் சேர்ந்தால் தம் குழந்தைகளும் கெட்டுப் போய்விடுவார்கள் என்று அவர்கள் வீட்டுக் குழந்தைகளை இவளுடன் விளையாட அனுப்ப மாட்டேன் என்கிறார்கள்… நேற்று என் காதுபடவே எதிர்வீட்டுச் சிறுவனின் அம்மா தன் பையனை திட்டிக்கொண்டிருந்ததை கேட்டேன்…’ என்று சொல்லிக்கொண்டிருந்தபோது ஒரு சிறுமி தன் அம்மாவின் கைப்பிடித்து அந்த வழியாக வந்தாள்.

அச்சிறுமி, ‘அம்மா… எனக்கும் பவுடர் டப்பா வாங்கித்தாம்மா, நானும் படம் வரையறேன்…’ என்று பவுடர்படங்களைப் பார்த்து அடம்பிடிக்க, ‘சூ… சும்மா இரு… பவுடர் டப்பா என்ன விலைன்னு தெரியுமா? பணத்தை இப்படி வேஸ்ட் செய்யக்கூடாது…’ என்றபடி நகர்ந்தார் அவள் அம்மா.

அவர்கள் வீட்டில் சென்ற வாரம் 2000 ரூபாய் கொடுத்து பேட்டரியில் இயங்கும் பாராசூட் வாங்கிய பொம்மையும், 1000 ரூபாய் கொடுத்து வாங்கிய பறக்கும் கார் பொம்மையும் இந்த அப்பார்ட்மெண்ட் சிறுவர்களின் காட்சிப் பொருளாக இருந்தது எனக்கு நன்கு தெரியும். அந்த பொம்மைகளைவிடவா பவுடர் டப்பாவின் விலை அதிகம்?

யாரோ ஒருவரின் கிரியேடிவிட்டியில் உருவாகியுள்ள தானியங்கி பொம்மைகளைவிட, குழந்தைகள் தங்கள் கற்பனையில் உருவாக்குகின்ற படைப்புகள் எத்தனை விலைமதிப்பற்றன? புரிந்துகொள்ளும் பெற்றோர்களின் குழந்தைகள் சாமியிடம் வரம் வாங்கிவந்தவர்கள்.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு சிற்பி இருப்பதை உணர்ந்துகொள்வோம். அந்தச் சிற்பிக்குத் தேவையான உளியை மட்டும் நாம் வாங்கிக்கொடுப்போம். மற்றதை நம் குழந்தைகள் பார்த்துக்கொள்வார்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

(‘குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற நூலில் இருந்து ஒரு கட்டுரை)

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon