ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 57
பிப்ரவரி 26, 2021
ஜனவரிக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்?
ஜனவரி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவது மூன்று விஷயங்கள். ஆங்கிலப் புத்தாண்டுத் தொடக்கமும், பொங்கல் பண்டிகையும், அதை ஒட்டி வருகின்ற புத்தகத் திருவிழாவும்தான்.
ஆனால், இந்த வருடம் புத்தகக்காட்சி நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்துடன் ஜனவரி மாதம் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. பொங்கல் திருவிழாவும் கடந்து சென்றது.
இந்த வருடம் புத்தகத்திருவிழா நடந்தால் ‘தினம் ஒரு புத்தகம்’ வெளியிடும் எண்ணம் இருந்தது. அது என் வாழ்நாள் கனவும்கூட.
1992-ல் தொழில்நுட்பத்தை தமிழில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து புத்தகங்கள் வெளியிட ஆரம்பித்தேன். அத்தனையும் எங்கள் காம்கேரில் எங்கள் பிராண்டில் நாங்கள் தயாரிக்கும் சாஃட்வேர்கள் மூலம் கிடைக்கின்ற தொழில்நுட்ப அனுபவங்களின் தொகுப்பு. அந்தந்த காலகட்டத்தில் என் தொழில்நுட்ப அனுபவங்களை புத்தகமாகவும், ஆடியோ வீடியோ அனிமேஷன் படைப்புகளாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், மேடை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பதிவு செய்துகொண்டே இருந்தேன். இன்று வரை தொடர்கிறேன். மூச்சு உள்ளவரை தொடர்வேன். இப்படியாக தமிழகமெங்கும் தொழில்நுட்ப விழிப்புணர்வை ஏற்படுத்த அடங்காத என் தொழில்நுட்ப ஆர்வத்தை அசுர முயற்சியாக்கி அசராமல் செய்து வந்தேன்.
அந்த காலகட்டத்திலேயே ‘மாதம் ஒரு புத்தகம்’ வெளியிட்ட அனுபவம் உள்ளது. இத்தனைக்கும் தமிழில் தொழில்நுட்பப் புத்தகம் வெளியிடுவது அத்தனை எளிதல்ல.
1.தொழில்நுட்பத்தை பொதுமக்களுக்குப் புரியும் தமிழில் எழுத வேண்டும்.
2.பொருத்தமான ஸ்கிரீன் ஷாட்டுகளை செயல்முறை விளக்கத்துடன் தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் விளக்கப்படங்களுடன் தான் எழுத வேண்டி இருக்கும். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்துக்குச் சென்றுவிட்டது. அதனால் ‘இதை இப்படி செய்யுங்கள்’ என்று சொன்னாலே புரிந்துகொள்கிறார்கள். ஆனால் தொழில்நுட்பம் வளராத 1992-களில் எல்லாமே விளக்கப்படங்களுடன் செயல்முறை விளக்கத்துடன் இருந்தால் மட்டுமே புரிய வைப்பது சாத்தியம். எனவே என்னைப் பொருத்தவரை எழுதுவது என்பது செயல்முறை விளக்கத்துடன் தயாரிப்பதாகும். அது அத்தனை எளிதல்ல. உடல் சோர்வில்லாமல் மனதை செய்கின்ற பணியில் தியானம்போல கவனம் குவிக்க வேண்டும். அப்போதுதான் சரியாக அந்த படைப்பை கொண்டுவர முடியும்.
3.பிறகு லே-அவுட் செய்ய வேண்டும்.
4.லே-அவுட் செய்த பிறகு நான் எழுதியதும் லே-அவுட் செய்ததும் சரியாக இருக்கிறதா என ஒப்பிட்டுப் படித்துப் பார்க்க வேண்டும்.
5.மேலும் நான் கொடுத்த படங்கள் அந்தந்த இடத்தில் சரியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதா என பார்க்க வேண்டும்.
6.தமிழ் இலக்கணப் பிழைத்திருத்தம் செய்ய வேண்டும்.
7.அதைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பிழைத்திருத்தம் செய்ய வேண்டும்.
8.பின்னர் லே-அவுட் ஆர்டிஸ்ட்டிடம் கொடுத்து பிழைகளை சரி செய்யச் சொல்ல வேண்டும்.
9.பிழைத்திருத்தம் செய்து வந்ததும் அவை சரியாக இருக்கிறதா என மீண்டும் சரி பார்க்க வேண்டும்.
10.அதன் பின்னர் அட்டைப்படத்தை நான் எழுதிய புத்தகத்துக்குத் தொடர்பான படங்களுடன் வடிவமைக்க வேண்டும். கதை, கட்டுரை, கவிதை என்றால் எந்த ஆர்டிஸ்ட் வேண்டுமானாலும் வடிவமைத்துவிடுவார்கள். தொழில்நுட்பப் புத்தகம் எனும்போது நான் கான்செப்ட் கொடுத்தால் மட்டுமே அட்டைப்படம் சிறப்பாக அமையும்.
இப்படியாக தொழில்நுட்பப் புத்தகங்களை வெளியிடுவது என்பது ஒரு யாகம் செய்வதைப் போன்ற பெருமுயற்சி.
என் ஒவ்வொரு புத்தகமும் 500, 600 பக்கங்கள் இருக்கும். 1000 பக்கங்கள் கொண்ட தொழில்நுட்பப் புத்தகங்களை எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன்.
இப்படியாக இதுவரை வெளியான புத்தகங்களின் எண்ணிக்கை 128. அதில் பல புத்தகங்கள் உலகளாவிய நூலகங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும், இந்திய அளவிலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடதிட்டமாக உள்ளன. ‘இவ்வளவுதான் கம்ப்யூட்டர்’, ‘இவ்வளவுதான் இண்டர்நெட்’, இவ்வளவுதான் கம்ப்யூட்டரில் தமிழ்’ என்ற என் முதல் மூன்று புத்தகங்களும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தில் அறிமுகமான போது என் வயது 25.
முதன் முதலாக பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக என் புத்தகங்கள், அதுவும் என் இளம் வயதில் அறிமுகம் எனும்போது அதுகொடுத்த ஊக்கமே இன்று வரை உற்சாகமாக செயல்பட வைக்கிறது. படைப்புகள் தரமாக காலத்துக்கு ஏற்ப அமைந்தால் அது தானாகவே தனக்கான சிம்மாசனத்தை நோக்கி முன்னேறிச் செல்லும் என்பதற்கு என் படைப்புகளே சிறந்த முன் உதாரணம். இது கர்வமல்ல. உழைப்பு கொடுத்த தன்னம்பிக்கை.
அச்சுப் புத்தகங்களைப் பொருத்தவரை பக்கங்கள் அதிகமாக அதிகமாக விலையும் அதிகம் வைக்க வேண்டி இருக்கும். அதே கதைதான் இ-புத்தகங்களுக்கும். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கைக்கு பதிலாக ஃபைலுன் அளவு விலையை நிர்ணயிக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அவ்வளவுதான் வித்தியாசம்.
இ-புத்தகங்களைப் பொருத்தவரை பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதன் ஃபைலின் அளவு (File Size) அதிகரிக்கும். ஃபைலின் சைஸ் அதிகரித்தால் விலையும் அதற்கேற்பவே வைக்க முடியும். நாமாக விலையை குறைத்து வைக்க முடியாது. ஃபைலின் சைஸுக்கு ஏற்ப இந்த இ-புத்தகத்துக்கு இத்தனை ரூபாய் வைக்க வேண்டும் என அமேசான் தளமே சொல்லிவிடும். அந்த விலையையோ அல்லது அதற்கு அதிகமாகவோ நாம் விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஆனால் அதற்குக் குறைவாக நிர்ணயிக்க இயலாது.
சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
இந்த வருடம் புத்தக்காட்சி நடக்காது என்ற எண்ணத்தில் ஜனவரியில் ‘வாழ்க்கையின் அப்பிடைசர்’, ‘வாழ்க்கையின் OTP’ என்ற இரண்டு புத்தகங்களை வெளியிட்டேன்.
திடீரென புத்தக்காட்சி பிப்ரவரி-24 முதல் மார்ச்-9 வரை என அறிவிக்கப்பட்டது. எனவே, என் ‘தினம் ஒரு புத்தகம்’ என்ற கனவை நனவாக்கிக்கொள்ளும் முயற்சியில் புத்தகக்காட்சித் தொடங்கிய பிப்ரவரி 24, 2021 புதன் கிழமை அன்று ‘வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்’ என்ற புத்தகத்தை அமேசானில் வெளியிட்டேன்.
பிப்ரவரி-24 முதல் மார்ச்-9 வரை நடைபெற இருக்கின்ற புத்தகக் காட்சியில், இந்த 14 நாட்களும் தினம் ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறேன். நடத்திக் கொடுப்பது இறைசித்தம். நான் முயற்சிக்கப் போகிறேன். இயற்கை மனோபலத்தைக் கொடுத்து, இறைசக்தி முயற்சியை வெற்றிகரமாக நடத்திக்கொடுத்தால் என் கனவு நனவாகும்.
இந்தப் புத்தகக்காட்சியில் அமேசானில் வெளியான என் மூன்று புத்தகங்கள்:
- வாழ்க்கையின் அப்பிடைசர் : https://www.amazon.in/dp/B08TV2JJB4
ஜம்முனு வாழ வழிகாட்டும் நூல்! விலை ரூ.49/-
- வாழ்க்கையின் OTP: https://www.amazon.in/dp/B08VWGKKV6
தவமாய் வாழ்ந்து வரமாய் குவிக்க வழிகாட்டும் நூல்! விலை ரூ.49/-
- வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்: https://www.amazon.in/dp/B08XGLB6X6
சுமக்க வேண்டியதை சுமக்கவும், ஒதுக்க வேண்டியதை ஒதுக்கவும் கற்றுக்கொடுக்கும் நூல்! விலை ரூ.75/-
நித்தம் என் எழுத்தை வாசிக்கும் அன்பர்கள் அமேசானில் குறைந்த விலையில் நான் வெளியிடும் வாழ்வியல் புத்தகங்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். நண்பர்களும், உறவினர்களுக்கும் பரிசளிக்கும் வசதிகளும் உள்ளன. ஏதேனும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவித்தால் விளக்கம் கொடுக்கிறேன்.
புத்தகங்களை வாங்கி படித்து சந்ததியினருக்குப் பொக்கிஷமாக்க இருக்கும் அன்பர்களுக்கு என் முன்கூட்டிய நன்றிகள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP