ஜம்முனு வாழ காம்கேரின் OTP-63: ‘பல் உள்ளவன் பகோடா சாப்பிடுகிறான்’

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 63
மார்ச் 4, 2021

‘பல் உள்ளவன் பகோடா சாப்பிடுகிறான்’

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலை வரை செல்பவர்களை கவனித்தால் ஒரு விஷயம் நன்கு புலப்படும். அவர்கள் நிறைய படித்திருப்பார்கள், அறிவாளியாக இருப்பார்கள், தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள். பல தடைகளைத் தாண்டி முன்னுக்கு வந்தவர்களாக இருப்பார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் அளவுக்கு குரு என்ற ஸ்தானத்தில்கூட இருப்பார்கள்.

பின் ஏன் தற்கொலை வரை சென்றுவிடுகிறார்கள்.

ஸ்ட்ரெஸ். வேறென்ன?

இத்தனை சிறப்புகள் இருந்தும் ஏன் ஸ்ட்ரெஸ் வருகிறது?

இத்தனை சிறப்புகள் இருப்பதால்தான் ஸ்ட்ரெஸ் வருகிறது.

என்ன புரியலையே?

ஆமாம். திறமைகள் கூடக் கூட, அறிவு விசாலமாக விசாலமாக,  தன்னம்பிக்கைத் தளும்பித் தளும்பி வழியத் தொடங்கும் அந்தத் தருணத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் போதுமான அளவு கிடைக்கவில்லை என்ற சின்ன குறுகுறுப்பு அவர்கள் அடிமனதில் இருந்துகொண்டேதான் இருக்கும்.

நான் மேலே குறிப்பிட்ட அத்தனை சிறப்புகளும் உள்ள எல்லோராலும் சமுதாயத்தில் தன்னை முன்னிருத்திக்கொள்ள முடிவதில்லை அல்லது தெரிவதில்லை. அவர்கள் தங்கள் அளவில் நிறைவான வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் தாங்களாகவே தங்களை முன்னிருத்திக்கொள்வதில் விருப்பம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அதற்காக அவர்களுக்குத் தாங்கள் முன்னிலைப்படுத்தப்படுவதில் விருப்பம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. மற்றவர்கள் அவர்களாகவே முன் வந்து தங்களை முன்னிலைபப்டுத்த வேண்டும் என்ற விருப்பத்தை, ஆசையை ஆழ்மனதில் புதைத்துக்கொண்டு வாழ்பவர்களாக இருப்பார்கள். அதனால் உண்டாகும் மன அழுத்தமே அவர்களின் சிக்கல்.

ஒருசிலரை கவனியுங்கள். அவர்கள் பெரிய அறிவாளியாகவோ, திறமைசாலியாகவோ இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்ததை திறம்பட செய்வார்கள். ஆனால் சமுதாயத்தில் நல்ல தொடர்புகளை பெற்றிருப்பார்கள். அந்தத் தொடர்புகள் மூலம் தங்களிடம் உள்ள திறமையை மிக அருமையாக வெளி உலகுக்குக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதில் வல்லவராக இருப்பார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானல், இவர்கள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்வதில் சமர்த்தர்கள்.

இவர்கள் தங்கள் அளவிலும் நிறைவாக வாழ்கிறார்கள். பொதுவெளியிலும் தாங்கள் கொண்டாடப்பட தாங்களே முயற்சி எடுத்து தங்கள் விருப்பத்தையும் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இதனால் மன அழுத்தம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஆழ் மனதுக்குத் தெரியும் தங்கள் திறமைக்கு இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் அதிகம். இதை தக்க வைத்துக்கொள்வதே நம் வேலை என்பதை நன்கறிந்தவர்களாக இருப்பார்கள்.

இதுவே, முன்னர் சொன்ன அதீத அறிவாளிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

ஓரிடத்தில் கடைபோட்டு காய்கறிகள் விற்பனை செய்யும் இரண்டு நபர்களில் ஒருவர் நிமிடத்துக்குக்கு ஒருமுறை ‘வெண்டைக்காய்… தோட்டத்து வெண்டைக்காய், கொய்யா ஜோரான கொய்யா…’ என வாயால் கூவி கூவியோ அல்லது ஸ்பீக்கரில் ஒலிபரப்பியோ விற்பனை செய்கிறார். மற்றொருவர் அமைதியாக தானுண்டு தன் வேலையுண்டு என கடையை விரித்து வைத்துக்கொண்டு காத்திருக்கிறார். இரண்டு பேரில் யாருக்கு விற்பனை அதிகம் இருக்கும். நீங்களே சொல்லுங்கள். இப்போது முடிவெடுங்கள் உங்களை எப்படி வெளிப்படுத்திக்கொண்டால் இந்த உலகம் உங்கள் திறமைகளைக் கொண்டாடும் என.

நமக்கு பசித்தால் நாம்தான் சமைத்து சாப்பிட வேண்டும். அதைவிட்டு பிறர் வந்து  ‘உனக்குப் பசிக்குமே, இந்தா சாப்பிடு’ என வலிய வந்து கொடுப்பார்கள் என காத்திருந்துவிட்டு பின்னர் யாருமே என் பசியை கண்டுகொள்ளவில்லை என புலம்பி அழுவதினால் பயன் கிடையாது.

‘பல் உள்ளவன் பகோடா சாப்பிடுகிறான்’ – இவ்வளவுதான் வாழ்க்கை!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon