ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 64
மார்ச் 5, 2021
தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது?
(முன்குறிப்பு: இந்தக் கட்டுரை தற்கொலை எண்ணம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து மட்டுமே. அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் தனி கட்டுரையாக எழுதுகிறேன்)
மன அழுத்தம் அதிகமாகும்போது அதில் இருந்து வெளிவர முடியாமல் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். மன அழுத்தம் எனப்படும் ஸ்ட்ரெஸ்ஸுக்கு அகக்காரணிகள், புறக்காரணிகள் என இரண்டு காரணிகள் உள்ளன.
ஒன்று எந்தவிதமான பிரச்சனையுமே இல்லாமல் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கு மருத்துவ ஆலோசனையும், தீவிர மருத்துவமுமே மருந்தாக இருக்க முடியும். இதனை அகக்காரணி எனலாம்.
உதாரணத்துக்கு சிலருக்குக் காரணமே இல்லாமல் அழுகை வரும். ஐந்து நிமிடம் முதல் கால் மணி நேரம் வரைகூட தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருப்பார்கள். சிலர் காரணமே இல்லாமல் மனம் வருத்தமாகி முடங்கிவிடுவார்கள். சிலருக்கு யாரோ காதில் பேசுவதைப் போல கேட்கலாம். இன்னும் சிலருக்கு எதிரே யாரோ ஒருவர் வந்து நின்றுகொண்டிருப்பதைப் போல தோன்றலாம். இப்படி ஏதேனும் ஒருவிதத்தில் மனோரீதியாக பாதிக்கப்பட்டவர்களிடம் மன அழுத்தம் இருந்தால் தனிமையைத் தவிருங்கள், யோகா தியானம் செய்யுங்கள், நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள் என்பது போன்ற அறிவுரைகள் வேலைக்கு ஆகாது. அவர்கள் உடனடியாக மனநல மருத்துவரை சந்தித்து ஆலோசனை எடுப்பதும், மருத்துவம் பார்த்துக்கொள்வதும்தான் ஒரே வழி.
இரண்டாவது, கடன் பிரச்சனை, காதல் தோல்வி, சமூக வலைதளங்களில் மிரட்டல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களினால் உண்டாகும் மன அழுத்தம் புறக்காரணிகள் என்ற பிரிவின் கீழ் வரும்.
இதுபோன்ற பிரச்சனைகளினால் உண்டாகும் மன அழுத்தத்துக்கு வேண்டுமானால் பொதுவான உளவியல் ரீதியான ஆலோசனைகள் எடுபடலாம். இதெல்லாம் ஒரு பிரச்சனையா, விட்டுத் தள்ளுங்கள், நாங்கள் இருக்கிறோம், இது இல்லை என்றால் மற்றொன்று, கவலைப்படாதே, தனிமையில் இருக்காதே, யாரிடமாவது மனம் விட்டு பேசு, சூழலை மாற்று என்பது போன்ற அறிவுரைகள் சொல்லலாம். ஆனால் அவர்கள் காதுகள் மட்டும்தான் அவற்றை கேட்டுக்கொண்டிருக்கும். எதுவுமே மனதுக்குள் செல்லாது. அவர்களாக முயற்சி செய்து அவர்கள் பிரச்சனையில் இருந்து வெளிவர முயன்றால் மன அழுத்தத்தில் இருந்து வெளிவர வாய்ப்புள்ளது.
புறக்காரணிகளால் உருவாகும் மன அழுத்தத்தினால் தற்கொலை வரை செல்பவர்கள் எதனால் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தால் ஒருவிஷயம் தெளிவாகப் புலப்படும்.
பொதுவாக நமக்கு இதயம் மற்றும் மனம் இரண்டினாலும் சிந்திக்கும் ஆற்றல் உண்டு. இதயம் உணர்வுரீதியாக சிந்திக்கும். மனம் அறிவு ரீதியாக சிந்திக்கும்.
காதலிப்பவர்கள் பெரும்பாலும் இதயத்தால் மட்டுமே சிந்திக்கிறார்கள். அதனால்தான் தான் உண்மையாக காதலிக்கும் நபர் (காதலனோ, காதலியோ) தவறானவர் என ஒருகட்டத்தில் தெரிந்தாலும் அவர்களை கைவிட முடியாமல் தவிப்பார்கள். அவர்களின் மனம் தன் அறிவார்ந்த சிந்தனையினால் ‘தவறானவன்/ள் என தெரிகிறதல்லவா, விட்டு ஒதுங்கிவிடு’ என எடுத்துச் சொன்னாலும் அவர்கள் இதயம் அந்த உண்மையை ஏற்க மறுக்கும். ஏற்றுக்கொள்ளவே கொள்ளாது. இதுதான் இதயத்தின் பலவீனம். தனக்குப் பிடித்துவிட்டால் அதனை அத்தனை எளிதாக விட்டு வீசிவிடுவதற்கு ஒத்துழைக்கவே ஒத்துழைக்காது.
‘இவனையா காதலிக்கிறாள்?’, ‘இவளைப் போயா காதலிக்கிறான்… இவளிடம் என்ன இருக்கிறது?’ என்பது போன்ற விமர்சனங்களை காதலிப்பவர்களை சுற்றி இருப்பவர்களிடம் கேட்க முடியும். காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். ஆமால், காதலிப்பவர்கள் இதயத்தால் சிந்திப்பதால் சின்னச் சின்ன குறைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அவர்கள் திருமணத்துக்குப் பிறகு அறிவால் சிந்திக்க ஆரம்பித்துவிடுவதால் அதே சின்ன சின்ன பிரச்சனைகள், குறைகள் எல்லாம் பூதாகரமாகிவிடுகின்றன.
பிசினஸில் இருப்பவர்கள் பெரும்பாலும் மனதால் சிந்திப்பார்கள். அதனால்தான் அவர்களால் லாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்து செயல்பட முடிகிறது. அவர்களுக்கு பாவ புண்ணியங்கள், மனிதாபமான செயல்பாடுகள் எல்லாம் இரண்டாம்கட்ட செயல்பாடுகளே. முதலில் எடுக்கும் வேலையில் லாபம் கிடைக்கிறதா என பார்ப்பார்கள். அப்படிக் கிடைத்தால் அதில் பாவ புண்ணியங்கள், மனிதாபமான செயல்பாடுகள் போன்றவற்றை ஒரு எல்லைக்கு உட்பட்டு செயல்படுத்துவார்கள். எடுக்கும் வேலையில் லாபமே இல்லையென்றால் அதை எடுக்கவும் போவதில்லை, அதில் பாவ புண்ணியங்கள், மனிதாபமான செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்தவும் அவசியம் ஏற்படப் போவதில்லை.
ஆனால் அந்த பிசினஸில் கடன் பிரச்சனை கழுத்துவரை வந்து நெறிக்கும்போது அவர்கள் மனம் அறிவால் சிந்திக்கும் தன் ஆற்றலை இழந்துவிடுகிறது. அப்போது அவர்கள் இதயம் விழித்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தும். அதனால் அந்தப் பிரச்சனை கொடுக்கும் அவமானங்களுக்கு பயந்து ஓடி ஒளிய ஆரம்பிப்பார்கள். ஒரு கட்டத்தில் தப்பிக்கவே முடியாது என்ற நிலை வரும்போது தற்கொலை முடிவை எடுத்துவிடுகிறார்கள்.
தற்கொலை எண்ணம் வந்துவிட்டால் இதயம் மட்டுமே வேலை செய்யும். அறிவு வேலை செய்யாது. இதயம் மிக பலவீனமானது. சட்டென உடைந்துவிடும் தன்மை கொண்டது. அறிவு வேலை செய்யாதபோதுதான் இதயம் ஆதிக்கம் செலுத்துகிறது. பிரச்சனைகளின்போது நம் உடல் இதயத்தின் ஆதிக்கத்தில் இருக்கும். அப்போது மன அழுத்தம்அதிகமாகும். அந்த நேரத்தில் மனம் சிந்திக்கும் ஆற்றலை இழக்கும். விளைவு தற்கொலை எண்ணம். நம் மனம் அந்த எல்லைக்கு வந்துவிட்டால் அந்த நேரத்தை கடப்பதும், தனித்திருக்காமல் நண்பர்களுடன் / உறவுகளுடன் இருப்பதும், யாரையேனும் அழைத்துப் பேச வேண்டும் என நினைப்பதும் சாத்தியமே இல்லாத ஒன்று. அதையெல்லாம் செய்யச் சொல்வது அறிவு. அது முடங்கிவிடுவதால் தற்கொலை எண்ணம் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP