ஜம்முனு வாழ காம்கேரின் OTP-70: ஒரு துளி அன்புக்கு கடல் அளவு பாசம்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 70
மார்ச் 11, 2021

ஒரு துளி அன்பைக் கொடுத்து, கடல் அளவு அன்பைப் பெற்ற அற்புதத் தருணம்!

புத்தகக் காட்சிக்கு நேரடியாக செல்லவில்லையே தவிர, புத்தகக் காட்சி நடைபெற்ற 14 நாட்களும் நானும் புத்தகங்களுடன்தான் பயணித்திருக்கிறேன். இன்று அந்த அனுபவங்களின் தொகுப்பு:

காட்சி-1: புத்தகக் காட்சியில் வெர்ச்சுவலாக நானும்!

புத்தக் காட்சியில் இருந்து என் வாசகர்கள் போன் செய்து ‘நான் இந்த ஸ்டாலில் இருக்கிறேன். நீங்கள் எழுதிய இன்ன புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும்?’, ‘என் மகள் இன்ஜினியரிங் படிக்கிறாள், அவளிடம் நீங்கள் எழுதிய சி லாங்குவேஜ் புத்தகம் உள்ளது, நீங்கள் எழுதிய ஜாவா, டாட் நெட் புத்தகங்கள்  எந்த ஸ்டாலில் கிடைக்கும்?’, ‘போட்டோஷாப் புத்தகம் விகடனில் ஸ்டாக் இல்லை என்கிறார்கள்… வேறு எங்கு கிடைக்கும்?’, ‘நீங்கள் எழுதிய வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் புத்தகம் எந்த பதிப்பகத்தில் வெளியாகியுள்ளது?’ என்பது போன்ற கேள்விகளோடு அலைபேசி அழைப்புகள் மூலம் நானும் அந்தந்த ஸ்டால்களில் நின்று புத்தகங்களைப் பார்வையிடும் உணர்வுகளோடுதான் இந்த 14 நாட்களையும் கடந்திருக்கிறேன்.

காட்சி-2: திருமண நிகழ்ச்சிக்கு ஈடான உழைப்பு!

புத்தகக்காட்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் நிறைவு நாள் வரை தொடர்ச்சியாக தினம் ஒரு புத்தக வெளியீடு திட்டத்திற்காக புத்தகங்களை தயார் செய்து வெளியிடும் வேலைகள். மே மாதம் வரை எங்கள் நிறுவனப் பொறியாளர்களுக்கு Work From Home கொடுத்திருப்பதால், எங்கள் நிறுவனத்தின் வழக்கமான மற்ற வேலைகளை வெர்ச்சுவலாக மேற்பார்வையிட்டபடி புத்தக ஆக்கத்தில் முழு கவனமும் செலுத்த முடிந்தது. ஒவ்வொரு நாளின் தொடக்கமும் புத்தக ஆக்கத்தில் தொடங்கி அதிலேயே முடிந்தது.

அத்துடன் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை வெர்ச்சுவலாக நடத்தத் திட்டமிட்டதால் தினம் ஒரு சிறப்பு விருந்தினரை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செய்வதாக ஏற்பாடு. அதற்கான ஏற்பாடுகள் செய்வது என்பது வீட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்வதற்கு ஒப்பாக இருந்தது.

எங்கள் காம்கேர் நிறுவனம் சார்பிலும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பிலும் நிறைய நிகழ்ச்சிகள் நடத்தி நடத்தியுள்ளோம். ஆனாலும் வெர்ச்சுவலாக நிகழ்ச்சி நடத்தியது இதுவே முதன்முறை.

ஃபேஸ்புக்கும், எங்கள் காம்கேர் டிவியுமே நிகழ்ச்சியின் மேடை. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை அறிமுகம் செய்து வைப்பது, அவர்கள் உரையை எழுத்து, ஆடியோ, வீடியோ வடிவில் அந்தந்தத் தளத்தில் பதிவேற்றுவது, குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவது என தினமும் மூச்சுவிட நேரம் இல்லாமல் வேலை.

காட்சி-3: நேரத்தை விழுங்கும் வேலைகள்!

தினமும் காலையில் வழக்கமாக நான் எழுதும் ‘ஜம்முனு வாழ காம்கேரின் OTP’ பதிவுகளுடன் சேர்த்து அன்று வெளியிட இருக்கும் இ-புத்தகத்தை விற்பனைக்கு வைப்பது, பொதுவெளியில் காட்சிப்படுத்துவது, அதற்கான விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை தயாரிப்பது என தொடர் யாகம் போன்ற நேரத்தை விழுங்கும் வேலைகள். இடையில் அன்றாடம் நடக்கும் எங்கள் நிறுவன வேலைகளிலும் கவனம் செலுத்தி அப்டேட் செய்ய வேண்டி இருந்தது.

காட்சி-4: ஆங்கிலப் பத்திரிகையிலும், மொபைல் ஆப்பிலும்  பேட்டி!

மகளிர் தினத்தை ஒட்டி பிசினஸுக்காக ஆங்கிலத்தில் வெளிவரும் Stimulus என்ற பத்திரிகையில் ‘Successful Business Woman’ என்ற கான்செப்ட்டில் நேர்காணல் செய்தார்கள். இது தொடர் வேலைகளுக்கு இடையே சுடச்சுட ஃபில்டர் காபி குடித்ததைப் போன்ற உற்சாகத்தைக் கொடுத்தது.

விகடகவி – மொபைல் ஆப்பில் ‘ஒன்றானவள்’ என்ற கட்டுரையில் என் குறித்தத் தகவலை மேதகு இந்திராகாந்தி, ஜெயலலிதா, அப்துல்கலாம், அடையார் புற்றுநோய் நிறுவன டாக்டர் சாந்தா போன்ற மாபெரும் ஆளுமைகளுடன் ஒப்பிட்டு அவர்களுக்கு இணையாக  வெளியிட்டு சிறப்பித்தது என் ஓடும் வேகத்துக்கு நடுவில் கொஞ்சம் ஜூஸ் குடித்த தெம்பைக் கொடுத்தது.

காட்சி-5: வாசகருடனான உரையாடலில் வாய்விட்டு சிரித்த மகானுபவம்!

ஒரு வாசகருடனான அலைபேசி உரையாடல் டென்ஷனைக் குறைத்து வாய்விட்டு சிரிக்கும் சூழலை உண்டு செய்தது.

‘மேடம், நான் So & So. இன்னும் ஐந்து வருடம் சர்வீஸ் இருக்கிறது… அதன் பிறகு ஏதேனும் ஆன்லைனில் பிசினஸ் செய்யலாம் என்று நினைக்கிறேன். கம்ப்யூட்டரிலும் மொபைலிலும் கலக்கலாம் தமிழில், கம்ப்யூட்ராலஜி போன்ற சில புத்தகங்களை விகடனிலும், சூரியனிலும் வாங்கினேன்…’

‘ரொம்ப சந்தோஷம் சார்…’

‘நான் உங்களை நேரில் சந்தித்து பிசினஸ் ஆலோசனைகள் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா மேடம்… இப்பவே ப்ளான் செய்தால்தானே சரியாக இருக்கும்…’

‘இப்போதைக்கு நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பே இல்லை… பொதுவாகவே நேரில் சந்திப்பதை தவிர்ப்பேன்… போனிலும், மெயிலிலுமே முடிக்க வேண்டிய வேலைகளுக்கு நேரில் சந்தித்து நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை. கொரோனாவுக்குப் பிறகு அதுவும் ஒரு வலுவான காரணமாகியுள்ளதால் நேரில் சந்திக்க முடியாது…’

‘இப்போ இல்லை மேடம்…’

‘அப்புறம் எப்போ…’

‘இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து… நான் வேலையில் இருந்து ரிடையர் ஆனதும்…’

இன்றைய பொழுதும், இந்த நொடியும்கூட ‘சாச்சுதம்’ (சாஸ்வதம்) இல்லாதபோது ஐந்து வருடங்கள் கழித்து என்னை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்ட வாசகரை நினைத்து சட்டென சிரித்து விட்டேன். சமாளித்துக்கொண்டு, ‘இறையருள் எப்படி இருக்கிறதோ… ஐந்து வருடங்கள் கழித்து அப்போது சூழல் எப்படி இருக்கிறதோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் சார்’ என்று போனை வைத்துவிட்டப் பிறகும் எனக்குள் நானே சிரித்துகொண்டே இருந்தேன்.

காட்சி-6: ஒரே கேள்வியில் வாயடைக்கச் செய்த வாசகர்!

அலைபேசி அழைப்பு.

’வணக்கம் மேடம். இரண்டு வருடங்கள் முன்பு பேசி இருக்கிறேன்…’ எனத் தொடங்கி புத்தகம் வாங்குவது தொடர்பான அவருடைய சந்தேகங்களைக் கேட்டறிந்துகொண்ட பின்னர் அன்புடன் ஒரு கேள்வி கேட்டாரே பார்க்கலாம். அசந்தே போனேன்.

‘மேடம்,  உங்கள் வேலை எப்படி போய்க்கொண்டிருக்கிறது?’

‘வழக்கம் போல் காம்கேர் தான்…’

‘இப்பவும் அதே கம்பெனிதானா… நீங்கள் பர்மனெண்ட் ஸ்டாஃபா?’

இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவில்லை. வாயடைத்துப் போனேன்.

காட்சி-7: தனி ஸ்டால் போடலாமே எனச் சொல்லி அசத்திய வாசகர்!

ஒரு வாசகர் புத்தகக் காட்சி வாசலில் நின்றுகொண்டு ‘மேடம் உங்கள் புத்தகங்கள் அத்தனையையும் காட்சிப்படுத்தி தனி ஸ்டால் போடலாமே… ரொம்ப ஜோரா இருக்கும். இப்படி நாங்கள் ஸ்டால் ஸ்டாலா தேடிப் போய் வாங்க வேண்டாமே…’

’அது தேவையில்லாத வேலைசார். ஆன்லைனில் நிரந்தரப் புத்தகக் காட்சியாக என் வெப்சைட்டிலும் அமேசானிலும் என் அத்தனைப் புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளனவே… நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் இருந்து பட்டனைத் தட்டினால் உங்களிடத்துக்கே புத்தகங்கள் வந்துவிடப் போகிறது… அலைச்சலே வேண்டாம் சார்!’

‘இது நல்ல பதில் மேடம். நன்றி. இனி அப்படியே வாங்கிக்கொள்கிறேன்!’

வாசகர்கள் பலவிதம்.

காட்சி-8: மகளிர் தினப் பரிசு!

மகளிர் தினத்தன்று ஆகச் சிறந்த பரிசொன்று கிடைத்தது. ஏற்கெனவே சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைகழகம் என பல்வேறு பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக உள்ள என் புத்தகங்களின் வரிசையில், ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’என்ற புத்தகம் ‘Tamil Journalism’ என்ற ஊடகவியல் சான்றிதழ் படிப்புக்காக பாடதிட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக  மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் இருந்து தகவல் கொடுத்தார்கள். ஏற்கெனவே அந்த கல்லூரியில் ’கம்ப்யூட்டரிலும், மொபைலிலும் கலக்கலாம் தமிழில்’ என்ற தலைப்பில் நான் எழுதிய புத்தகம் பி.ஏ. தமிழ் இலக்கியத்தில் பாடத்திட்டமாக உள்ளநிலையில் இது மற்றுமோர் படைப்பு.

இதைவிட ஆகச் சிறந்த மகளிர்தின பரிசு வேறென்ன இருக்க முடியும்?

காட்சி-9: கெளரவம் கொடுத்த மீடியாக்கள்!

புத்தக வெளியீட்டின் வெர்ச்சுவல் நிகழ்ச்சி குறித்து சஞ்சிகை108 டாட் காம் என்ற இணைய பத்திரிகையில் என் முழுமையான பேட்டியும், தமிழ் இந்து நாளிதழில் செய்தியும் வெளியிட்டு சிறப்பித்தார்கள்.

காட்சி-10: இ-புத்தகங்களை வாங்கி பெருமைப்படுத்திய வாசகர்கள்!

தினம் தினம் நான் புத்தகம் வெளியிட்ட அடுத்த அரை மணிக்குள் புத்தகத்தை வாங்கி விட்டோம் என்று குழந்தையின் கள்ளம் கபடமில்லா உற்சாகத்துடன் எனக்கு தகவல் கொடுத்த அன்பர்களுக்கு சிறப்பு நன்றிகள்.

காட்சி-11: ஒரு துளி அன்புக்கு, கடல் அளவு அன்பை பரிசளித்த நட்புகள், நலன் விரும்பிகள், வாசகர்கள்!

நேற்று நிகழ்ச்சி குறித்து விரிவாக பதிவிட்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்தபோது இன்னும் பலரும் மனம் உவந்து வாழ்த்தினார்கள். நாம் ஒருதுளி அன்பைக் கொடுத்தால், கடல் அளவு அன்பு திரும்பக் கிடைக்கும் என்பதற்கு அந்தப் பதிவுக்கு வந்திருந்த வாழ்த்துக்களே சான்று.

நிறைய பேர் வெளிப்படையாக மனம் திறந்து வாழ்த்தி இருந்தார்கள். வாழ்த்துகள் என ஒற்றை வார்த்தையில் சொல்லாமல், என் பணிகளுடன் அவர்களின் அனுபவங்களை இணைத்து மிக உணர்வுப்பூர்வமாக எழுதி என்னை கண்ணீரில் (ஆனந்த) நனைய வைத்தார்கள்.

அத்தனை பேருக்கும் அனந்தகோடி நன்றிகள்! இதைவிட வேறெந்த வார்த்தையாலும் நன்றி சொல்லத் தெரியவில்லை.

இப்படியாக புத்தகக் காட்சி நாட்கள் கடந்து சென்றன.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
#காம்கேர்_புத்தகம் #compcare_book
#Daily_a_Book_Release_Virtual_Event

(Visited 28 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon