சஞ்சிகை108 – Web Magazine : ‘தினம் ஒரு நூல் வெளியீடு’ – நேர்காணல் (March 9, 2021)

சஞ்சிகை108 இணைய இதழில்  எனது நேர்காணல்!

https://sanjigai108.com/?p=10520

‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ – வெர்ச்சுவல் நிகழ்ச்சி!
(Daily a Book Release – Virtual Event)

காம்கேர் கே. புவனேஸ்வரி – ஐ.டி நிறுவன CEO, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பல்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MD ஆக கடந்த 28 ஆண்டுகளாக  செயல்பட்டுவருகிறார். இவரது  நிறுவனம் தயாரித்துள்ள  சாஃப்ட்வேர் தயாரிப்புகள், ஆவணப்படங்கள்-அனிமேஷன்-இகன்டன்ட்-ஆடியோ வீடியோ படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங்களில்  பாடதிட்டமாக இடம்பெற்றுள்ளன.

130-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் புத்தகங்கள் எழுதியுள்ள இவரது தொழில்நுட்பப் புத்தகங்கள் பல்வேறு பல்கலைகழகங்களில் ஆய்வு நூல்களாகவும், சமூக  செயல்பாடுகளுக்கு உதவும் நிகழ்ச்சிகளுக்கான பாடதிட்டமாகவும் உள்ளன.  இவரது  தொழில்நுட்ப தயாரிப்புகளையே கருவாக வைத்து ஆராய்ச்சி செய்து Ph.D பட்டம் பெற்றவர்களும் இருக்கிறார்கள்.

தமிழகம்,  இந்தியா மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேஷியா,  ஸ்ரீலங்கா, மாஸ்கோ போன்ற நாடுகளிலுள்ள  நூலகங்களில் இவரது  புத்தகங்கள் இடம்பெற்று வாசகர்களுக்கிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன. இவர் நடத்தி வரும் ‘காம்கேர் டிவி’ என்ற யு-டியூப் சேனல் மிகப் பிரபலம்.

பிராஜெக்ட்டுகளுக்காக பலமுறை அமெரிக்கா சென்று வந்தவர். தமிழகத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உரை நிகழ்த்தி அவர்களின் உந்துசக்தியாகவும் விளங்குகிறார்.

2021 புத்தகக் காட்சியில் இவர் அறிமுகப்படுத்தியுள்ள திட்டம் குறித்து உற்சாகத்துடன் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

மேடை நிகழ்ச்சிக்கும் வெர்ச்சுவல் நிகழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாக நிகழ்ச்சி என்றால் மேடை இருக்கும். மைக் இருக்கும். பேச்சாளர்கள் இருப்பார்கள். பார்வையாளர்கள் இருப்பார்கள். நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்று அந்த குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் எத்தனைப் பார்வையாளர்கள் வருகிறார்களோ அவர்கள் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்வையிட முடியும். அதன் டிஜிட்டல் வெர்ஷனை யு-டியூப் சேனல்களிலும், சமூக வலைதளங்களிலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம். நேரடியாக கலந்துகொள்வது என்பது அனைவருக்கும் சாத்தியமில்லாத ஒன்று.

ஆனால் நான் அறிமுகப்படுத்தியுள்ள ‘தினம் ஒரு புத்தக வெளியீடு!’ என்ற வெர்ச்சுல் நிகழ்ச்சியில் காம்கேர் டிவியும், சமூக வலைதளங்களுமே நிகழ்ச்சியின் மேடை. ஆன்லைனில் தொடர்பில் உள்ள அனைவருமே பார்வையாளர்கள். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்ன?

இந்த வருடம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் காட்சியை முன்னிட்டு தினம் ஒரு புத்தக வெளியீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளேன்.

இதன் நோக்கம் 2021 புத்தகக் காட்சி நடைபெறும் 14 நாட்களும் (பிப்ரவரி 24, 2021 முதல் மார்ச் 9, 2021 வரை) தினமும் ஒரு நூலை அமேசானில் வெளியிடுவதாக ஏற்பாடு.

நான் எழுதி எங்கள் காம்கேர் நிறுவன வெளியீடாக வெளிவரும் 14 நூல்கள் 14 நாட்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

ஆக, 14 நாட்கள் 14 நூல்கள் வெளியீடு – இதுவே எங்கள் வெர்ச்சுவல் நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் நாள்?

ஏற்கெனவே சொன்னதைப் போல இது வெர்ச்சுவல் நிகழ்ச்சி. ஒருநாள் மட்டும் நடைபெறுவதில்லை. 14 நூல்கள் வெளியிடுவதாக இருப்பதால்

இந்தப் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியை 14 நாட்களும் நடத்துவதாக ஏற்பாடு.

பிப்ரவரி 24, 2021 அன்று முதல் நாள் நிகழ்ச்சி. இன்றுடன் 14 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்?

என்னைப் பொருத்தவரை என் எழுத்துக்களை வாசிப்பவர்கள் அனைவருமே சிறப்பு விருந்தினர்கள்தான். இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்கவும், அறிமுகப்படுத்தவும் சில சிறப்பு விருந்தினர்களை அழைத்திருக்கிறேன். அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கும், இந்த நிகழ்ச்சியில் வெளியிட்டுக்கொண்டிருக்கும் புத்தகங்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள்.

சிறப்பு விருந்தினர்கள் அவர்வர்கள் செளகர்யத்துக்கு ஏற்ப ஏதேனும் ஒரு நேரத்தில் வருகை தந்து தங்கள் கருத்துக்களை எழுத்து வடிவிலோ அல்லது வீடியோவாகவோ அல்லது இரண்டு விதங்களிலுமோ பதிவு செய்வார்கள்.

அவற்றை என் ஃபேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் பகிர்கிறேன். மேலும் எங்கள்  காம்கேர் டிவி – யுடியூப் சேனலில் ஒளிபரப்புகிறேன்.

இதுவரை எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்?

இது வரை 136 நூல்களை எழுதி வெளியீட்டிருக்கிறேன். ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ திட்டத்தின் கீழ் இதுவரை 13 நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.

நேற்று வரை 13 நாட்கள் கடந்துள்ள புத்தகக் காட்சியில் இதுவரை

1. வாழ்க்கையின் அப்பிடைசர்
2. வாழ்க்கையின் OTP
3. வாழ்க்கையின் அப்லோடும், டவுன்லோடும்!
4. குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட்!
5. எந்தப் பாதையில் உங்கள் பயணம்?
6. பெண் *Conditions Apply
7. மாறிவரும் மனோபாவமும், மாற்றத்துக்கான பாஸ்வெர்டும்!
8. பாரதப் பெருமிதங்கள்!
9. பிக் டேட்டா – Big Data – தகவல் சூழ் உலகில் ‘பிக் பிரதர்’
10. கனவு மெய்ப்பட!
11. இலக்கில் கரையுங்கள்!
12. மனிதனாய் வாழ்வதற்கான ஃபார்முலா!
13. கொரோனா லாக்டவுனில் முதல் மூன்று மாதங்கள்

என 13 இ-புத்தகங்களை அமேசானில் வெளியிட்டுள்ளேன்.

இன்னும் 1 புத்தக வெளியீடு உள்ளது. அது இன்று.

இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?

நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் ஒரு யுக்திதான். நமக்குப் பிடித்தமான ஒரு வேலையை அதிகப்படியாக செய்யும்போது நம் உற்சாகம் கூடி நமக்குள் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். அந்த வகையில் என் அடிப்படைத் திறமையான எழுத்து என்பது அனிமேஷன், ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல்வேறு பரிமாணங்களை எடுத்து பரிணாம வளர்ச்சி கண்டிருந்தாலும் புத்தகங்கள் வெளியிட்டு நான் அறிந்ததை ஆவணப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கிடைக்கிறது. அதனால் அதனை எப்படியெல்லாம் செய்தால் இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பரவலாக்க முடியும் என்பதை ஆராய்ந்து தினம் ஒரு புத்தக வெளியீட்டை ஆன்லைனில் செய்து வெர்ச்சுவல் நிகழ்ச்சியாக்கி உள்ளேன்.

எப்படி தினம் ஒரு புத்தகம் வெளியிட முடிகிறது?  

என் பத்து வயதில் கோகுலத்தில் ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற கதை வெளியாகி ‘இதுதான் உன் திறமை. கெட்டியா புடிச்சுக்கோ’ என இயற்கை எனக்களித்த வரத்தை நான் இறுகப்பற்றியதால் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கும் மேல் நித்தம் ஏதேனும் எழுதி வருகிறேன் (நாள் தவறாமல் என்பது குறிப்பிடத்தக்கது). அவை அந்தந்த காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெளியானது. பரிசுகளையும் விருதுகளையும் பெற்றன.

எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய பிறகு என் தொழில்நுட்ப அனுபவங்களை அந்தந்த காலகட்டங்களிலேயே புத்தகமாக வெளியிட்டு வந்தேன். மாதம் ஒரு புத்தகம் வெளியிட்ட காலமெல்லாம் இருந்திருக்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்நாளில் நித்தம் ஃபேஸ்புக், என் பர்சனல் வெப்சைட், ப்ளாக் என பல்வேறு சமூக வலைதளங்களில் தினந்தோறும் பிரம்ம முகூர்த்தத்தில் தயாராகும் என் படைப்புகளை வெளியிட்டு வருகிறேன்.

என் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இன்று ‘தினம் ஒரு புத்தகம்’ வெளியிட்டு  குறைந்த விலையிலும் விற்பனை செய்ய முடிகிறது.

இ-புத்தகங்களை எங்கு வாங்குவது? எப்படி வாசிப்பது, எப்படி சேகரிப்பது?

நாங்கள் வெளியிடும் இ-புத்தகங்கள் அமேசான் இணையதளத்தில் கிடைக்கும். ஆன்லைனில் கட்டணம் செலுத்து வாங்கிக்கொள்ளலாம்.

உங்கள் கையில் உள்ள மொபைலில் கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்துகொண்டு இந்த இ-புத்தகங்களை வாசிக்கலாம். இடத்தை அடைத்துக்கொள்ளாமல் எத்தனை இ-புத்தகங்களை வேண்டுமானாலும் வாங்கி சேகரிக்க முடியும். ஆஃப் லைனில் படிக்க முடியும். இணையத் தொடர்பு தேவையில்லை. உங்கள் போனை நீங்கள் மாற்றினாலும் மீண்டும் கிண்டில் ஆப்பை டவுன்லோடு செய்துகொண்டால் உங்கள் லைப்ரரியில் நீங்கள் வாங்கிய இ-புத்தகங்கள் பத்திரமாக இருக்கும்.

உங்கள் மொபைலில், ஐபேடில், டேப்லெட்டில், லேப்டாப்பில், டெஸ்க்டாபில் என எதில் வேண்டுமானாலும் படிக்க முடியும். கிண்டில் ஆப்பை டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

மொபைலில் ஃபேஸ்புக் படிப்பதைப் போல, பி.டி.எஃப் ஃபைல்களை வாசிப்பதைப் போல இ-புத்தகங்களை வாசிப்பதும் மிக சுலபமானதே.

மேலும் கிண்டில் சாதனத்திலும் படிக்கலாம். நிறைய வாசிக்கும் வழக்கம் உள்ளவர்கள் கிண்டில் சாதனத்தை வாங்கிப் பயன்படுத்தினால் கண்களுக்குப் பாதுகாப்பு.

வாழ்த்து!

எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும் வகையில் இவர் வெளியிடும் வாழ்வியல் நெறிகளையும் தன்னம்பிக்கையையும் ஊட்டும் இந்த நூல்களை வாங்கி படித்து உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு பொக்கிஷமாக்கிக் கொள்ளுங்கள். அத்தனையும் அமேசானில் இணையதளத்தில் இ-புத்தகங்களாகக் கிடைக்கிறது. இவரது வெப்சைட்: http://compcarebhuvaneswari.com/, இமெயில்: compcare@hotmail.com.

—***—

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari