ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 73
மார்ச் 14, 2021
தனித்துவம் என்பது தனியாக இயங்குதல் என்பது அல்ல!
ஒருசிலர் பிறரிடம் ஏதேனும் சிறு உதவி கேட்பது என்றால் கூச்சப்படுவார்கள். ஆங்கிலத்தில் இதனை Obligation என்றும் சொல்லலாம். ‘அப்படி நினைத்துக்கொள்வார்களோ, இப்படி நினைத்துக்கொள்வார்களோ’ என்று ஏகத்துக்கு மனதுக்குள் குழம்பித் தவிப்பார்கள்.
உதவி கேட்பது என்பது பெரும் குற்றமல்லவே? யாருமே பிறரிடம் எந்த உதவியையும் கேட்காமலேயே வாழ்ந்துவிட முடியாது.
உதவி என்பதை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். ஒன்று நம் சுய லாபத்துக்காக மட்டும் பிறரிடம் ஏதேனும் கேட்பது. மற்றொன்று, நமக்கு உதவுவதன் மூலம் அவர்களுக்கும் சிறப்பு உண்டாகக் கூடிய விஷயங்களாக இருக்கலாம். முன்னதில் கொஞ்சம் யோசிக்கும் நம் மக்கள், பின்னதில் தயங்காமல் செய்வார்கள்.
எந்த மாதிரியான உதவியை கேட்கிறோம் என்பதில்தான் இருக்கிறது அது வெற்றியடைவதன் சூட்சுமம். தவி பணத்துக்காக என்றால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். பணம் எப்பேர்ப்பட்ட நட்பையும் முறித்துவிடும் சக்தி வாய்ந்தது.
மற்றபடி எதுவாக இருந்தாலும் கேட்கலாம். என்ன சொல்லிவிடப் போகிறார்கள். முடியும் என்பார்கள் இல்லையெனில் முடியாது என்பார்கள். வேறென்ன நினைத்துவிட முடியும்? அப்படியே நினைத்துக்கொண்டாலும் அதில் உங்கள் தவறு என்று எதுவும் கிடையாது. அவர்களின் நினைப்பு என்பது அவர்களின் குணத்துக்கும் பண்புக்குமான சான்று அவ்வளவுதான்.
எங்கள் காம்கேர் நிறுவனம் ஆரம்பித்த புதிது. தமிழில் வெளிவந்துகொண்டிருந்த தொழில்நுட்பப் பத்திரிகையில் தொடர்கள் எழுதிக்கொண்டிருந்தேன். அந்த பத்திரிகையும் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. எனவே நான் எழுதுவதும், அதை அவர்கள் பத்திரிகையில் வெளியிடுவதும் பரஸ்பர உதவியாக இருந்தது. பரஸ்பர உதவி என்று சொல்வதைவிட பரஸ்பர செயல்பாடு என்று சொல்லலாம். அதுதான் பொருத்தமாக இருக்கும்.
ஒருமுறை எங்கள் நிறுவன சாஃப்ட்வேர் தயாரிப்புக்கு விளம்பரம் கொடுக்க நினைத்து அவர்கள் சொன்ன கட்டணத்தில் ஏதேனும் குறைத்துக்கொள்ள முடியுமா என்று அந்த பத்திரிகை ஆசிரியரிடம் கேட்டேன். அவர் என்னைவிட பத்து பன்னிரெண்டு வயது பெரியவர். எனக்கு நன்கு அறிமுகம் ஆனவரும்கூட. எங்கள் நிறுவன நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு சிறப்பு விருந்தினராகவும் அழைத்திருக்கிறேன். நான் என் அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுப்பதை சிலாகித்துப் பேசுவார். அந்த வகையில் அப்பா அம்மாவுடன் நட்பு பாராட்டுபவரும்தான். இருந்தாலும் கேட்பதற்கு சங்கடப்பட்டுக்கொண்டுதான் கேட்டேன்.
அதற்கு அவர் முடியாது என்று சொல்லி இருந்தாலும் நான் ஏற்றுக்கொண்டுதான் இருக்கப் போகிறேன். ‘பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டு என் தலை மறைந்ததும் ‘நல்லா சம்பாதிக்கிறாங்க… பாருங்கள்… விளம்பரத்தில் கட்டணக் குறைப்பு கேட்கிறார்…’ என்பதை அவர் மொழியில் இன்னும் கீழிறங்கிப் பேசியதாக அங்கு பணியில் இருந்த ஒரு நபர் சொன்னார். மேலும் என் வளர்ச்சி அவருக்குப் பிடிக்கவில்லை என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். ஆனால் நான் நம்பவில்லை. ‘இதுபோல பிறர் சொல்வதை எல்லாம் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்’ என சொல்லிவிட்டு அந்த விஷயத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.
ஆனால் அதன் பிறகு ‘இந்த மாதம் விளம்பரப் பக்கங்கள் நிரம்பி விட்டன’ என்பதுபோல ஏதேனும் ஒரு காரணம் சொல்லி என் விளம்பரத்துக்கு இடம் கொடுக்காமல் தட்டிக் கழித்துக்கொண்டே வந்தார். அப்போதுதான் அந்த நிறுவனத்தில் பணியில் இருந்த நபர் சொன்ன கருத்து உண்மைதான் என்பது புரிந்தது.
இதுபோன்ற அனுபவங்களே மனிதர்களை அடையாளம் காட்டுகிறது. பின்னர் நானும் ‘நேரம் கிடைப்பதில்லை’ என்று நாசூக்காக காரணம் சொல்லி அந்தப் பத்திரிகையில் எழுதுவதையும் குறைத்துகொண்டேன்.
வியாபாரத்தில் விளம்பரம் கொடுப்பதும், அதற்கான கட்டணத்தில் சலுகைகள் கேட்பதும் சகஜம்தான். இதை என்னவோ பெரிய உதவி என்ற கணக்கில் எடுத்துக்கொண்டு செயல்பட்ட அந்த பத்திரிகை ஆசிரியர் இன்றும் என்னைப் பார்த்தால் பேசுவார். என் நலன், காம்கேர் நலன், பெற்றோர் நலன் என ஒன்றுவிடாமல் விசாரிப்பார். நாங்கள் எதிரி அல்ல. அதற்காக, நண்பர்கள் என்று அர்த்தமும் அல்ல.
சமீபத்தில் வெர்ச்சுவலாக ஆன்லைனில் நான் கொண்டாடிய ‘தினம் ஒரு புத்தக வெளியீடு’ நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு விருந்தினரை அழைப்பதாக நினைத்திருந்தேன். ஒருசிலர் தாங்களாகவே முன் வந்து தங்கள் கருத்துக்களை தங்கள் ஃபேஸ்புக் பேஜில் பதிவிட்டார்கள். ஒருசிலரிடம் நான் கேட்கலாமா என்றெண்ணி கேட்டேன். ஆனால் முடியும், முடியாது, இன்ன பிரச்சனை என்று ஏதேனும் ஒரு காரணம் கூட சொல்லாமல் அமைதியாக இருந்ததுதான் ஆச்சர்யமாக இருந்தது.
நான் கேட்டது உதவி அல்ல. ஒரு மேடை நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினரை அழைக்கிறோம் என்றால் அது நமக்கு மட்டும் அல்ல. யாரை அழைக்கிறோமோ அப்படி அழைக்கப்படுபவருக்கும் பெருமைதானே?
‘வருகிறேன், வரவில்லை, இப்போது கொஞ்சம் பிசி. சாத்தியம் இல்லை…’ என்று ஏதேனும் ஒரு பதில் கொடுத்தால்தானே நம்மால் அந்த நிகழ்ச்சிக்கு வேறு சிறப்பு விருந்தினரை பேச்சாளரை அழைக்க வசதியாக இருக்கும். அப்படி இல்லாமல் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்தால் நாம் திரும்பவும் நினைவுபடுத்துவதா அல்லது வேறு என்ன செய்வது என்ற பெரும் குழப்பம் உண்டாகும்தான். எனக்கு ஆரம்பத்தில் குழப்பம் ஏற்பட்டது உண்மைதான்.
அதனால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து ‘வாருங்கள், வாழ்த்துங்கள்’ என்ற தலைப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டேன். என் வாசகர்கள் முதற்கொண்டு ஒருசில துறை சார்ந்த வல்லுநர்களும் தாங்களாகவே முன் வந்து இந்தத் திட்டத்தை எடுத்துச்சொல்லி பரவலாக்கினார்கள். ஆடியோவாகவும், வீடியோவாகவும், எழுத்தாகவும் அவரவர்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து மகிழ்வித்தார்கள். மகிழ்ந்தார்கள். மகிழ்வித்து மகிழ்வதுதானே மனிதர்களுக்குக் கிடைத்த வரம்.
இனிவரும் காலம் முழுக்க முழுக்க டிஜிட்டல் உலகம். அந்த உலகில் புத்தக வாசிப்புக்கு இ-புத்தகங்களே உதவி செய்யும் என்பதால் தொடர் நிகழ்ச்சியாக புத்தகக் காட்சி நடைபெற்ற 14 நாட்கள், எங்கள் காம்கேர் வாயிலாக நான் எழுதிய 14 புத்தகங்களை இ-புத்தகங்களாக வெளியிட்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தேன். தி இந்து தமிழ், சஞ்சிகை போன்ற பத்திரிகைகளும் எங்கள் முயற்சியை பாராட்டி ஊக்குவித்தது.
நாம் செய்யும் செயல்களில் பிறரையும் இணைத்துக்கொள்வதுதான் வெற்றியின் அச்சாணி. எதுவுமே ‘தனி நபர் சாதனை’ கிடையாது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலரது உழைப்பில், பலரது வாழ்த்துக்களில், பலரது முன்னெடுப்புகளில்தான் சாதனைகள் பெருஞ்சாதனைகளாகின்றன.
இவ்வளவு ஏன்? பல பெயர் சொல்லும் விருதுகள் தேடி வந்தெல்லாம் கொடுக்கப்படுவதில்லை. நாம் தான் விண்ணப்பிக்க வேண்டும். பல விருதுகளுக்கு நாம் விண்ணப்பித்தாலும் பிறரது பரிந்துரைகளும் கருத்தில்கொள்ளப்பட்டுதான் அது விருதுக்குப் பொருத்தமானதாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
விருதுகளுக்கே பரிந்துரைகள் தேவைப்படும்போது நம்முடைய நல்ல செயல்கள் பரவலாக வேண்டும் என்றால் பலரது உழைப்பும், ஊக்கமும் அவசியம்தானே?
திரும்பவும் சொல்கின்றேன்… நாம் செய்யும் செயல்களில் பிறரையும் இணைத்துக்கொள்வதுதான் வெற்றியின் அச்சாணி.
தனித்துவம் என்பது தனியாக செய்வது என்று அர்த்தம் அல்ல. செய்யும் செயல்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் நல்லோர்கள் பலரையும் இணைத்துக்கொண்டு செயல்படுவதே தனித்துவம்.
இதுவே என் பாதை. வெற்றிகரமான பாதையும்கூட!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP