ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 74
மார்ச் 15, 2021
பெற்றோருக்கு நீங்கள் செய்யும் ஒரே பிரதி உபகாரம்!
முன் குறிப்பும் முக்கியக் குறிப்பும்: இந்தப் பதிவில் நான் சொல்லி உள்ள அத்தனை விஷயங்களிலும் விதிவிலக்குகள் உண்டு.
நம் அணுகுமுறை சரியாக இருந்தபோதிலும் கூட, சில நேரங்களில் சிலவிஷயங்களில் நமக்கு சரி என்று படுகின்றவற்றை நமக்கு மிகவும் வேண்டியவர்களே ஒத்துக்கொள்ளாதபோது சலிப்பு வருகிறதே என்ற வருத்தம் நிறைய பேருக்கு இருக்கும்.
பொதுவெளியில் இதுபோன்ற சூழலை கடந்து வந்துவிடலாம். ஆனால் வீட்டில் எனும்போது மன உளைச்சல் உண்டவாதை தவிர்க்க முடியாதுதான். ஏனெனில் நாள் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தாலும் அந்த நாளில் முடிவில் நாம் கூடடைவது வீட்டில்தானே.
இந்த சூழலை மூன்று விதமாக ஆராய வேண்டும்.
1.உங்கள் வயது
2.உங்கள் பொருளாதார சூழல்
முதலில் இந்த இரண்டு காரணிகளை எடுத்துக்கொள்ளலாம். கடைசியில் மூன்றாவது காரணி குறித்துப் பேசலாம்.
நீங்கள் இளம் வயதினராகவோ அல்லது மத்திம வயதினராகவோ இருந்து நல்ல வேலையும் சம்பாத்தியமும் இருந்துவிட்டால் வீட்டில் ஓரளவுக்கு சமநிலையை கொண்டுவந்துவிடலாம். அதாவது குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் ஒத்த மனநிலையில் இல்லாவிட்டாலும் முரண்பாடான மனநிலையில் இல்லாத சூழலில் வீட்டில் நீங்கள் சொல்வது எடுபடும். ஏற்றுக்கொள்ளப்படும்.
கணவன் மனைவி இருவரும் முரண்பாடான மனநிலையில் இருக்கும்போது கணவனோ அல்லது மனைவியோ தங்களுக்குப் பிடித்த ஒரு குழந்தையை தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு அவர்களை தலையாட்டி பொம்மைகளாக உருவாக்கிக்கொண்டிருந்தால் நீங்கள் சொல்வது செல்லுபடியாகாது.
‘எங்க அப்பாவுக்கு போட்டோவுக்கு சிரிக்கக் கூட தெரியாது’, ‘எங்க அப்பாவுக்கு இங்கலீஷில் அவ்வளவு சரளமா பேசவே வராது’ என்று பல குழந்தைகள் தங்கள் அப்பாவைப் பற்றி பொதுவெளியில் பேசுவதையும், ‘எல்லாம் எங்க அம்மா செலக்ஷன் தான்’, ‘அம்மா தான் கிரேட்’ என்று அம்மாவை கொண்டாடுவதையும் பார்த்திருப்பீர்கள்.
இதுபோல ஒருவரை உயர்த்திச் சொல்வதற்காக மற்றொருவரை இறக்கிப் பேசுவதை குழந்தைகளிடம் தவிர்க்கக் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்படி உங்களை உயர்த்திப் பேசி உங்கள் துணையை இறக்கிப் பேசுவது அந்த நேரத்துக்கு உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் அதுவே உங்களுக்கு பெரும் இடைஞ்சலாக அமைந்துவிடும். உங்கள் குழந்தைகள் அப்படிப் பேசும்போது ‘இப்படி அம்மாவை குறைவாகப் பேசக் கூடாது’, ‘அப்பாவை இப்படியா உன் நண்பர்களிடம் விட்டுக்கொடுப்பாய்’ என எடுத்துச் சொல்லி தமாஷ், ஜாலி எல்லாம் இருக்க வேண்டியதுதான். தவறே இல்லை. அவை எல்லாமே நமக்குள் பேசிக்கொள்ளும்போது எப்போதாவது விளையாட்டுக்காக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதையே நிரந்தர விளையாட்டாக வைத்துக்கொள்ளக் கூடாது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும்.
நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்றபின் கணவன் மனைவியாக பிள்ளைகளுடன் வாழ வேண்டிய சூழல் அமைந்தால் அந்த இடத்தில் உங்கள் பொருளாதார சூழலைப் பொருத்தே உங்கள் செல்வாக்கு அமையும்.
நல்ல ஓய்வூதியம் வந்துகொண்டிருக்கும்பட்சத்தில் உங்கள் மகளிடமோ அல்லது மகளிடமோ உங்கள் செல்வாக்கு செல்லுபடியாகலாம். அதுவும் நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை உங்கள் செலவுகளுக்காக அவர்களிடம் கொடுக்கும்பட்சத்தில்.
உங்களுக்கு ஓய்வூதியம் எதுவும் கிடையாது எனும் பட்சத்தில் உங்கள் அணுகுமுறை எப்பேற்பட்டதாக இருந்தாலும் நீங்கள் சொல்வதில் நியாயம் இருந்தாலும் அது அங்கு செல்லுபடியாகாது.
ஒருசிலர் தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் தங்கள் செட்டில்மெண்ட் பணத்தை அப்படியே பங்கீடு செய்து தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுகிறார்கள். அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்வார்கள். எனக்கென்று எதையுமே வைத்துக்கொள்ளவில்லை. எல்லாவற்றையும் எங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டோம் என்று சொல்லும் பெற்றோர்கள் பின்னாளில் ஒருவாய் காபி குடிக்கக் கூட பிள்ளைகளிடன் தயங்கித் தயங்கிக் கேட்க வேண்டிய கொடும் சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள்.
கையில் பணம் இருந்தால் உங்கள் மதிப்பு வேறு. பணம் இல்லாவிட்டால் உங்கள் மதிப்பு வேறு. வங்கியில் உங்கள் செட்டில்மெண்ட் பணத்தை போட்டுவிட்டு உங்கள் காலத்துக்குப் பிறகு அதை உங்கள் மகன், மகள், பேரன், பேத்திக்கு பங்கீடு செய்து எடுத்துக்கொள்ளலாம் என்று உயில் எழுதி வைத்துவிடுவது ஒன்றுதான் வாழும் காலத்தில் கெளரவமாக நீங்கள் வாழ்வதற்கு நீங்கள் செய்கின்ற ஒரே ஏற்பாடு.
உங்கள் மீதான மதிப்பு வங்கியில் நீங்கள் போட்டு வைத்திருக்கும் பணத்துக்கு ஏற்பவே அமையும் என்பதால் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
இதைக் கேட்பதற்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கலாம். எல்லாமே பணத்தை வைத்துத்தானா என்று மனம் கொஞ்சம் சோர்வடையும். ஆமாம். திருமணத்துக்கு வரன் பார்க்கும்போதே பையன் நன்றாக சம்பாதிக்கிறானா, வீடு வாசல் இருக்கிறதா, கார் இருக்கிறதா, எத்தனை கார் இருக்கிறது என்று பார்க்கிறோம். பெண் நன்றாகப் படித்திருக்கிறாளா, வேலைக்குச் செல்கிறாளா, எவ்வளவு நகை போடுவார்கள் என்று பார்க்கிறோம்.
பையனுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, நல்ல கடவுள் பக்தி உள்ள பையன், நல்ல குணாளன் என்பதும், பெண் ரொம்ப அமைதியானவள், தான் உண்டு தன் வேலையுண்டு என்று குனிந்த தலை நிமிராமல் வேலைக்குச் சென்று வருவாள், இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பெண் கிடைப்பது கஷ்டம் என்பதும் பையன் மற்றும் பெண்ணின் பொருளாதார சூழல் எல்லாம் ‘பத்தும் பதவிசாக’ அமைந்தால் மட்டுமே கொண்டாடப்படுவதை நாம் நன்கு அறிவோம். பணம் இல்லாவிட்டால் நல்ல வேலை இல்லாவிட்டால் மேலே சொன்ன குணாதிசயங்கள் கொண்ட பையனையோ அல்லது பெண்ணையோ யாரேனும் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுப்பார்களா?
இங்கு இரண்டு சூழல்களைப் பற்றிப் பேசி இருக்கிறோம்.
ஒன்று, இளம் / மத்திம வயது, நல்ல சம்பாத்யம், நல்ல குழந்தைகள். இந்த சூழலில் உங்கள் நியாயமான கருத்துக்களுக்கு மதிப்பு கிடைக்க வேண்டுமானால் அந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அலசி இருக்கிறோம்.
இரண்டாவது, ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை. உங்கள் கையில் காசு இருந்தால் மட்டுமே நீங்கள் கொண்டாடப்படுவீர்கள் என்பதை அலசி இருக்கிறோம்.
இந்த இரண்டு சூழலையும் அடுத்து மூன்றாவதாக ஒரு சூழல் உள்ளது. அது துணை இல்லாமல் சிங்கிள் பேரண்டாக இருந்து பிள்ளைகளை வளர்ப்பது, ஓய்வுக்குப் பிறகு துணையை இழந்து பிள்ளைகளுடன் வாழ்வது. இதுதான் மிகவும் கடினமான சூழல்.
சிங்கிள் பேரண்டாக இருந்து பிள்ளைகளை வளர்க்கும்போது ஒரு கட்டம் வரை உங்கள் கைக்குள் வளரும் பிள்ளைகள் ஒரு கட்டத்துக்குப் பிறகு உங்கள் அன்பைக் கூட கெடுபிடித்தனமாக உணர ஆரம்பித்து உங்களை விட்டு விலக ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. உங்களுக்காக பேசுவதற்கு ஆளில்லை என்பதை ஒரு காரணியாக எடுத்துக்கொண்டு முரணாக செயல்பட ஆரம்பிக்கலாம் உங்கள் பிள்ளைகள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
பணி ஓய்வுக்குப் பிறகு மனைவியை இழந்த ஒரு ஆண் பிள்ளைகளுடன் வாழும்போது சந்திக்கும் சங்கடங்கள் அதிகம். காரணம் ஒரு ஆணால் வேறொரு வீட்டில் அது பிள்ளைகளாகவே இருந்தாலும் அவர்களிடம் அன்னியோன்னியமாக வாழ்ந்துவிட முடிவதில்லை.
ஆனால் பணி ஓய்வுக்குப் பிறகு கணவனை இழந்த ஒரு பெண் பிள்ளைகளுடன் வாழும்போது அவளுடைய தேவைகள் அந்த வீட்டில் அதிகம் இருப்பதால் அவளால் காலம் தள்ளிவிட முடிகிறது. குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, சமைப்பது, பத்து பாத்திரங்கள் தேய்ப்பது, வீடு பெருக்குவது என வீட்டு வேலைகளை பிள்ளைகள் செய்யச் சொல்லாவிட்டாலும் அவர்களாகவே இழுத்துப் போட்டுக்கொண்டு செய்துவிடுவதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்காவிட்டாலும் ஒருவாய் காபி சுடச்சுடக் கிடைத்துவிடும்தான். காரணம் அதையும் அவளே தயார் செய்து சாப்பிட்டுவிட முடிகிறதல்லவா?
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரது முக்கியத்துவம் வேறுபடுகிறது.
பொதுவாகவே ஒரு கட்டத்துக்குப் பிறகு நாம் கருத்து சொல்வதை குறைத்துக்கொண்டு அமைதியாக பார்வையாளராக அமர்ந்துகொண்டு பார்த்துக்கொண்டிருப்பதுதான் நிம்மதியாக வாழ்வதற்கான லாஜிக்.
பிள்ளைகளை படிக்க வைத்தாயிற்று. வளர்த்தாயிற்று. நல்ல வேலைக்கும் அனுப்பியாகிவிட்டது என்றால் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும். உங்களிடம் ஆலோசனை கேட்டால் மட்டும் சொல்லிக்கொள்ளலாம். கேட்கவில்லை என்றால் இன்னும் உத்தமம். நீங்கள் அமைதியாக உங்களுக்குப் பிடித்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள்.
நம்மிடம் கேட்கவில்லையே, நாம் வாழ்வதே வேஸ்ட், நம்மை ஒரு பொருட்டாக நினைக்கவில்லையே என்றெல்லாம் உங்கள் மனதைக் குழப்பிக்கொண்டு உங்கள் உடல்நிலையை மோசமாக்கிக்கொள்ள வேண்டாம்.
உங்கள் உடலும், மனமும் நன்றாக இருக்கும்போதே நீங்கள் உதாசினப்படுத்துவதாக நினைக்கும்போது உங்கள் உடலும் மனமும் பாதிக்கப்பட்டு அவர்களையே உங்கள் ஒவ்வொரு அசைவுக்கும் எதிர்பார்க்க வேண்டி இருந்தால் என்ன ஆகும் என்பதை மட்டும் சிந்தித்து நிதர்சனத்தை உணர்ந்துகொண்டு நிம்மதியாக வாழப் பழகுங்கள்.
இத்தனை நேரம் நான் இளையதலைமுறையினருக்கு ஆதரவாக பேசி வந்தேன். இப்போது அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.
‘உங்கள் அம்மாவோ அல்லது அப்பாவோ யாரேனும் ஒருவர்தான் இருக்கிறார்கள் எனும் பட்சத்தில் அவர்களின் பென்ஷன் பணத்தையாவது அவர்களை செலவழித்துக்கொள்ள வழிவகை செய்யுங்கள். அதையும் உங்கள் கட்டுக்குள் வைத்துக்கொண்டு FD போடுகிறேன், RD போடுகிறேன் எனச் சொல்லி அதையும் அவர்கள் இறந்த பிறகு காரியங்கள் செய்வதற்காக சேமிக்கிறோம் என்று அவர்கள் காதுபட சொல்லி உங்களுக்கு உயிரும் உடமும் கொடுத்த பெற்றோர் இதயத்தில் ஆசிட் ஊற்றாதீர்கள். அவர்கள் எப்படிப்பட்ட பெற்றோராக இருந்தாலும்….’
இது ஒன்றுதான் அவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே பிரதி உபகாரம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP