ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 75
மார்ச் 16, 2021
வடைக்கு மயங்கும் எலிகள் அல்லவே நாம்!
காலையில் நடைப்பயிற்சி செய்வது நல்ல பழக்கம். அதை வழக்கமாக்கிக்கொண்டால் நம் மனமும் உடலும் சீராக இருக்கும். ஆனால் நம்மில் பலருக்கு அது மிகவும் கடினமான செயலாக உள்ளது.
நான் என் முப்பது வயதில் நடைப்பயிற்சியைத் தொடங்கினேன். எனக்கும் ஆரம்பத்தில் அது சற்று செயற்கையான செயலாகவே தோன்றியது. பக்கத்துத் தெருவில் இருக்கும் வங்கிக்கோ அல்லது தபால் அலுவலகத்துக்கோ நடந்து செல்வது என்பது இயல்பாக இருக்கும் எனக்கு, நடைப்பயிற்சி செய்வதற்காக நடப்பது என்பது செயற்கையாகவே இருந்தது. பின் எப்படி அதை எனக்குப் பிடித்தமானதாக்கிக்கொண்டேன் என்றால், நமக்கு மிகவும் பிடித்த மற்றொரு விஷயத்தை நமக்குப் பிடிக்காத அல்லது பிடிக்காது என நாமாக நினைத்துக்கொண்டிருக்கும் மற்றொரு விஷயத்துடன் இணைத்துக்கொண்டு செயல்படும்போது பிடிக்காத விஷயங்கள்கூட நமக்குப் பிடித்தமான செயலாகிவிடுகிறது.
நடக்கும்போது மெல்லிய இசையை கேட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தேன். பக்திப் பாடல்கள், ஆன்மிக உரைகள், வசனங்களும் புரியும்படி இசை அமைக்கப்பட்ட அந்தகாலத்துத் திரைப்படப் பாடல்கள் என கேட்டபடி நடக்க ஆரம்பித்தபோது நேரம் செல்வதே தெரிவதில்லை. கால் மணி நேர வாக்கிங் என்பது அரை மணி, முக்கல் மணி, ஒரு மணி நேரம் என நீண்டுகொண்டே சென்று இன்று குறைந்தபட்சம் ஒருமணி நேரம் வாக்கிங் சென்றால்தான் உடலும் மனமும் புத்துணர்வாக உள்ளது.
அதாவது கசப்பான கஷாயத்தை தன் குழந்தைகளுக்குக் கொடுத்து குடிக்க வைப்பதற்கு ‘கஷாயம் குடித்தால் கற்கண்டு கொடுப்பேன்’ என அம்மாக்கள் கற்கண்டை காட்டி காரியத்தை சாதித்துக்கொள்வதைப் போலதான் இந்த யுக்தியும்.
மழை நாட்களில் கூட குடை பிடித்துக்கொண்டு வாக்கிங் செல்லும் அளவுக்கு நடைப்பயிற்சிக்கு அடிமையாகி விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
பின்னாளில் அப்பா அம்மாவுக்காக வீட்டில் ‘ட்ரெட் மில்’ வாங்கினாலும் எனக்கு அதில் வாக்கிங் செல்வது என்பது இரண்டாம்பட்சம்தான். மழைநாட்களில் பத்து நிமிடங்களாவது நல்ல காற்றோட்டமாக மொட்டை மாடியில் குடைபிடித்துக்கொண்டு வாக்கிங் சென்று வந்த பிறகு ‘ட்ரெட் மில்’ வாக்கிங் செல்வேன்.
இவ்வளவுதான் நம் மனது. நம் மனதை எப்படிப் பழக்குகிறோமோ அப்படித்தான் அது செயல்படும். பழகாத ஒரு விஷயத்துடன் பழக்கமான மற்றொரு விஷயத்தையும் இணைத்துக்கொண்டு செயல்படுத்தும்போது பழகாத விஷயமும் நமக்குப் பழகிய விஷயத்துடன் நன்றாகப் பழகி நட்பாகிவிடும். என்ன குழப்பமாக இருக்கிறதா? மீண்டும் இந்த பத்தியை படித்துப்பாருங்கள். குழப்பம் தீரும்.
இப்படித்தான் ஒரு கதையை படித்தபோது அதன்படி செய்ய முயற்சித்தபோது நம் மனம் எவ்வளவு விசித்திரமானது, எப்படி எல்லாம் நமக்குக் கட்டுப்படுகிறது என்பதை உணர ஆரம்பித்தேன்.
அது என்ன கதை?
ஒரு குருவும் அவரது சீடரும் விடுதியில் தங்கி ஓய்வெடுத்தனர் ஒரு பயணத்தின் நடுவில்.
அன்றிரவு நாய்கள் குறைக்க ஆரம்பித்தன. குரு எந்த அசைவும் இன்றி உறங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவரது சீடருக்கோ உறக்கம் கலைந்தது. நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது. சீடருக்கோ ஆச்சர்யம். எப்படி குருவினால் இப்படி நிம்மதியாகத் தூங்க முடிகிறது என்று.
காலையில் கண் விழித்ததும் அவரிடமே கேட்டார்.
‘நாய்கள் நமக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்படவில்லை. அப்படி செயல்பட்டால்தான் அதன் செயல்பாடு நமக்கு தொந்திரவைக் கொடுக்க முடியும். நாய்களுக்குத் தெரிந்தது குரைப்பது ஒன்றுதான். அது தங்கள் வேலையை பார்க்கின்றன. நாம் நம் தூங்கும் வேலையை பார்க்க வேண்டும்…’ என்றார் குரு.
‘நாய்கள் இப்படி குரைத்தால் எப்படி தூங்குவது?’ என்று மீண்டும் கேட்ட கேள்வியையே கேட்டார் சீடன்.
‘நீங்கள் நாய்கள் குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். பிரச்சனை அவை குரைப்பதால் உண்டாகும் சப்தம் அல்ல. உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள்தான் அந்த சப்தத்தை எதிர்த்துப் போராடுகிறீர்கள். நாய்கள் குரைத்தால்தான் உறங்க முடியும் என நிபந்தையை உங்களுக்கு நீங்களே போட்டுக்கொள்கிறீர்கள்… நாய்களுக்குத் தெரியுமா உங்கள் நிபந்தனை? அப்படியே சொன்னாலும் புரிந்திகொள்ளத்தான் போகிறதா? நீங்கள் அருகில் சென்றாலே இன்னும் வேகமாகக் குரைக்கப் போகிறது. எனவே, நீங்கள் நிபந்தனையை விட்டு விலக்கினால் மட்டுமே நிம்மதியாகத் தூங்க முடியும்.
நாய்களின் குரைப்பதை நன்றாக கவனியுங்கள். எப்படி இவ்வளவு ஆக்ரோஷத்துடன் குரைக்கிறது என்பதை உன்னிப்பாக கவனியுங்கள். அப்போது நாய்களின் குரைப்பொலி கூட மந்திர சப்தமாக உங்களுக்குத் தோன்ற ஆரம்பிக்கும்…’
சீடனும் குருவின் ஆலோசனையை ஏற்று அன்றிரவு நாய்கள் குரைப்பதை கவனிக்க ஆரம்பித்தார். கவனிக்க கவனிக்க அந்த சப்தத்தின் மீது ஒரு பரவசம் தோன்ற ஆரம்பித்தது. ரசிக்கத் தொடங்கினார். அதுவே தாலாட்டாக மாறி அவரை ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டு சென்றது.
குருவின் ஆலோசனையின் சாராம்சம் இதுதான். ‘நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களினால் நாம் எரிச்சலோ கோபமோ அடைந்தால் நம் மனதை நமக்குள் உள் முகமாகத் திருப்ப வேண்டும். அப்போதுதான் தெரியும் நம் கோபத்துக்குக் காரணம் நம் ஆசையும், எதிர்பார்ப்பும், நிபந்தனைகளும்தான் என்று… இந்த உலகம் அதன் போக்கில் இயங்கிக்கொண்டுதான் இருக்கும். அதன் போக்கை நம்மால் மாற்ற இயலாது. நாம்தான் நம்மை செம்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்…’
இந்தக் கதையைப் படித்த பிறகு நானும்கூட நடு இரவில் ஊளையிடும் நாய்களின் சப்தங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். ஆனால் அதில் ஒரு பிரச்சனை உருவானது.
தினமும் 12, 12.30 மணிக்கு நாய்கள் குரைக்க ஆரம்பிக்கும். 15 நிமிடங்கள் வரை விதவிதமான சப்தங்களை எழுப்பும். அந்த சப்தத்தில் சட்டென விழிப்புத்தட்டும். ஆனால் அடுத்த ஐந்து பத்து நிமிடங்களில் அந்த சப்தம் தாலாட்டாகி மீண்டும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றுவிடுவேன்.
ஆனால் திடீரென ஒருநாள் அந்த நாய்கள் குரைப்பது நின்று போனது. குரைப்பொலி இல்லை என்றாலும் சரியாக 12, 12.30-க்கு விழிப்புத் தட்டியது. ஜன்னலை நீக்கி தெருவிளக்கொளியில் தெருவைப் பார்த்தேன். நாய்களைக் காணவில்லை. தெருவே ‘வெறிச்சோவென’ இருந்தது. உறக்கம் இல்லாமல் புரண்டுப் புரண்டு படுத்து இரண்டு மணி அளவில் தூங்க ஆரம்பித்தேன்.
அப்படியே அடுத்தடுத்த நாட்களும் நாய்களின் குரைப்பொலி கேட்காததால் தெருவில் இருப்போரிடம் விசாரித்தேன். அவற்றை பிடித்துக்கொண்டு சென்றுவிட்டார்கள் என்று சொன்னார்கள்.
அதன்பிறகு சிலநாட்கள் 12 மணிக்கு விழித்துக்கொண்டு 2 மணிக்கு உறங்க ஆரம்பித்தேன். பின்னர் இதை சமன் செய்து இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட சில நாட்கள் ஆனது.
இவ்வளவுதான் நம் மனம். எப்படிப் பழக்குகிறோமோ அப்படி செயல்படும். நாய்களின் குரைப்பொலியை நாராசமாக உணரவும், அதை தாலாட்டாக மாற்றவும் செய்யக் கூடிய மேஜிக் நம்மிடமே உள்ளது.
குரைப்பொலியை நாராசமாக உணரவும் வேண்டாம், தாலாட்டாக உணர்ந்து அடிமையாகவும் வேண்டாம். நாய் தன் இயல்பில் இருப்பதைப்போல நாம் நம் இயல்பில் இருக்கப்பழகுவோம். அதுவே நம் மனதை அடக்கும் வழி.
ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் இருந்துகொண்டே உள்நோக்காக அணுகும் நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளுக்குள் சென்று உள்நோக்காக பார்க்கும் நுட்பத்தை கடைபிடித்தால் அதில் இருந்து விடுபடுவது கடினமே. அப்படி உள்ளுக்குள் சென்று உள்நோக்குப் பார்வையை செலுத்த ஆரம்பிப்பது என்பது எலிகளைப் பிடிக்க வடைகளை போட்டு உள்ளேச் செல்ல தூண்டும் எலிப்பொறி போலாகிவிடும். வடைக்கு மயங்கி உள்ளே செல்லும் எலிகளுக்கு வெளியே வர வழி தெரியாது!
கவனமாக இருப்போம்! மனதை கட்டுக்குள் கொண்டுவருவோம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP