ஆன்லைன் போதைக்கு மயங்காமல் இருக்க என்ன செய்யலாம்?
நாம் வாழும் உலகில் என்னவெல்லாம் நல்லவை கெட்டவை இருக்கின்றனவோ அதுபோல சைபர் உலகம் (Cyber World) என சொல்லப்படும் டிஜிட்டல் உலகிலும் உள்ளன. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், நல்லவை அதீதமாக இருப்பதைப் போலவே தீயவை அதைவிட பலமடங்கு அதீதமாக இருக்கின்றன. ஏனெனில் டிஜிட்டல் உலகில் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை.
நம் தொலைபேசி எண், பிறந்த நாள் இவற்றை வைத்தே நம் வங்கி விவரங்களை எடுத்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்துகள் உள்ளன. நாமே வலிய பதிவிடும் புகைப்படங்கள் நம் ஒட்டு மொத்த குடும்பத்தையே உலகுக்கு அறிமுகப்படுத்திவிடுகிறது.
டிஜிட்டல் தொடர்பில் இருப்பவர்கள் நம்முடன் ஏதேனும் பிரச்சனை வந்தால் நம்மை நேராக எதிர்ப்பதை விட்டு மறைமுகமாக நம் குடும்பத்தினரை அசிங்கப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள். குறிப்பாக நம் வீட்டுக் குழந்தைகள். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை. அப்படி இல்லையென்றால் மனைவி, சகோதரிகள், அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி என வயது வித்தியாசம் இல்லாமல் தங்களுக்குள் ஏற்பட்ட வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ள அடுத்த வீட்டுப் பெண்களை பலிகடாவாக்குகிறார்கள்.
டிஜிட்டல் உலகில் நாம் கொடுக்கும் ஒவ்வொரு சிறு துரும்பும் நம் எதிரிகளுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. எனவே கவனமாக இருக்க வேண்டும். நாம் பதிவிட்டுவிட்டு அதை நீக்கினாலும் அதன் பிரதி ஏதேனும் ஒரு இடத்தில் இருந்துகொண்டேதான் இருக்கும். இப்படி நம் தகவல்களை பதிவிட்டவுடன் அதன் பிரதியை எடுப்பதற்கென்றே வெப்சைட்டுகள் உள்ளன. நீங்கள் உங்கள் தளத்தில் இருந்து நீக்கினாலும் அவை டிஜிட்டல் உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டிருக்கும்.
ஆன்லைனைப் பொறுத்தவரை இரண்டுவிதமான ஆபத்துகள்.
ஒன்று நம் கவனத்துக்கே வராமல் நாம் சம்மந்தப்படாமலேயே நம்மை சம்மந்தப்படுத்தி மாட்டிவிடுதல். உதாரணம்: நம் வங்கிப் பணத்தை சுரண்டுதல், நம் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து தவறான பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்துதல்.
இரண்டாவது நாமே வலிய சென்று மாட்டிக்கொள்வது. உதாரணம்: ஆன்லைன் ரம்மி, #ஹேஷ்டேக் சேலஞ்சுகள், நம் தகவல்களை நம்மிடமே கேட்டு வாங்கி ‘நீங்கள் எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர்?’, ‘உங்கள் வருங்காலம் எப்படி இருக்கும்?’, ‘2050-ல் நீங்கள் என்னவாக இருப்பீர்கள்?’, ‘முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்?’ என ஆன்லைன் ஜோதிடம் (!?) சொல்லும் நமக்கு ஆப்பு வைக்கும் ஆப்கள்.
Single Challenge, Family Challenge, Birthday Challenge என விதவிதமான சேலஞ்சுகளை ஹேஷ் டேகுகள்(#) மூலம் தாங்களகாவே தங்கள் புகைப்படங்களையும், சுய விவரங்களையும் பதிவிடும்போது யாரை நொந்துகொள்வது சொல்லுங்கள். தூண்டில் போட்டு மீன் பிடிக்க பலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தூண்டிலில் சிக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்ச்சி மட்டுமே இப்போதைக்கு அனைவருக்கும் அவசியமாகிறது.
ஆன்லைனில் தேவையானதை மட்டும் பதிவிடுவதும், தேவையானதுக்கு மட்டும் பயன்படுத்துவதும் நல்லது. பொழுதுபோகாமல் ஏதோ ஒரு பட்டனை கிளிக் செய்துகொண்டு புதைகுழியில் மாட்டிக்கொள்ளும் நபர்கள்தான் இங்கு அதிகம்.
எந்த ஒரு பொது வெப்சைட்டுக்குச் சென்றாலும் ஆன்லைன் ரம்மிக்கான ஆப்(பு)களுக்கு விளம்பரம் வருகிறது. கண் சிமிட்டி ‘வா, வா’ என நரகத்துக்கு சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. மன வலிமை இல்லாதவர்கள் புதைகுழியில் தானாகவே சென்று விழுகிறார்கள். அவ்வளவுதான்.
ஆன்லைன் ரம்மிகளில் ஈடுபடுபவர்கள் யார் என்று பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
நல்ல வேலையில் மாதம் 50,000, 60,000 சம்பாதிப்பவர்கள்.
நன்றாக தன்முனைப்புடன் பிசினஸ் செய்து தங்கள் கடுமையான உழைப்பில் சில லட்சங்கள் வரை சம்பாதிப்பவர்கள்.
உயர்கல்வி படித்தவர்கள்.
மனைவி குழந்தைகள் என அருமையான குடும்பத்துடன் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்.
பொறுப்பான பெற்றோர், பாசமுள்ள சகோதரன் சகோதரி என அழகான குடும்பச் சூழல் வாய்க்கப்பெற்றவர்கள்.
முன்பெல்லாம் தவறான பழக்க வழக்கங்களுக்கு வேலை வெட்டி இல்லாதவர்கள், வேலை கிடைக்காதவர்கள், வறுமையில் இருப்பவர்கள், என இவர்களைப் போன்றவர்கள்தான் அடிமையானார்கள்.
சுருங்கச் சொன்னால் வேலையில்லா திண்டாட்டத்தையும், ஏழ்மையையும், மோசமான குடும்பச் சூழலையும் காரணம் காட்டி தவறுகள் அரங்கேறிவந்தன.
இன்றோ, நல்ல வேலையில் லட்சத்தில் மாதாந்திர சம்பளம் வாங்குபவர்களும், சுயதொழிலில் அதற்கும் அதிகமான லட்சங்களில் பணம் சம்பாதிப்பவர்களும், அழகான குடும்பம் அமைந்தவர்களும்தான் பெரும்பாலும் ஆன்லைன் மோசடிகளில் தாங்களாகவே வலிய சென்று சிக்கி சின்னாபின்னமாகிறார்கள்.
இதையெல்லாம் குறைக்கவும் தடுக்கவும் என்ன செய்யலாம் என யோசித்தபோது சுயகட்டுப்பாடு ஒன்றே சிறந்த வழியாகத் தோன்றியது.
பெற்றோர் என்ன செய்வது?
பல இடங்களில் பெற்றோராக இருப்பவர்களே இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுபடுகிறார்கள். முதலில் விழிப்புணர்வு பெற வேண்டியது பெற்றோர்களே.
சமுதாயம் என்ன செய்வது?
தனி மனிதர்களின் சங்கமமே சமுதாயம். எனவே சமுதாயம் என்ற அமைப்பு எதையும் தன்னிச்சையாக செய்துவிட வாய்ப்பில்லை. ஏனெனில் எடுத்துச் சொல்லி திருத்துவதற்கும் ஆட்கள் இல்லை. எடுத்துச் சொன்னாலும் திருந்துவதற்கும் ஆட்கள் தயாராக இல்லை. ‘Mind Your business. It is my personal’ என பெற்றோர் வாயையே அடைக்கும் பிள்ளைகள் பெருகி வருகிறார்கள். அப்பா அம்மாவுக்கே இந்த கதி என்றால் சமுதாயம் என்ன செய்துவிட முடியும்?
அரசு என்ன செய்வது?
ஆன்லைன் ரம்மிகளை தடை செய்ய ஏற்பாடுகள் செய்யலாம்.அரசு எத்தனையோ சட்டங்களை போடத்தான் செய்கிறது. அதையெல்லாம் நம் மக்கள் கேட்கிறார்களா என்ன? ஹெல்மெட் போடாமல் போலீஸ் தலை தென்பட்டவுடன் வாகனத்தை திருப்பிக்கொண்டு வேகமாக செல்வது, சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பது, பொது இடங்களில் புகைப்பது, பெண்களை மறைமுகமாக மனதளவில் வன்கொடுமை செய்வது என தொடர்ந்துகொண்டுதானே உள்ளன.
வறுமையையோ, வேலைவாய்ப்பின்மையையோ, குடும்ப அமைப்பையோ இதற்கெல்லாம் காரணம் காட்டிவிட முடியாது.
முழுக்க முழுக்க தங்கள் முழு சம்மதத்துடன் தாங்களே விரும்பி வலிய சென்று மாட்டிக்கொள்ளும் இதுபோன்ற சங்கதிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமானால் சுய ஒழுக்கம் மேம்பட வேண்டும். பேராசையை ஒழிக்க வேண்டும். தேவைகளுக்கு ஏற்ப வாழும் மினிமலிசம் (Minimalism) வாழ்க்கையைப் பழக வேண்டும்.
குறிப்பாக எல்லா விஷயங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு வாழும் ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கையை யாருக்காவும் எதற்காகவும் தீய சக்திகளிடம் அடமானம் வைத்துவிடாதீர்கள். ஜாக்கிரதை!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
December 21, 2020
சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’ மாத பத்திரிகையில் (டிசம்பர் 2020)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 20
புத்தக வடிவிலேயே படிக்க… நம் தோழி டிசம்பர் 2020