ஹலோ With காம்கேர் -356: சாதித்தவர்களின் குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்? 

ஹலோ with காம்கேர் – 356
December 21, 2020

கேள்வி: சாதித்தவர்களின் குணாதிசயங்கள் என்னவாக இருக்கும்?

1. ஏதேனும் ஒரு துறையில் சாதித்தவர்களை நேர்மையாக உச்சம் தொட்டவர்களை நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் யாருக்கும் எந்த அறிவுரைகளையும் சொல்ல மாட்டார்கள். ‘இப்படி இரு, அப்படி இரு’ என எந்த ஆலோசனைகளையும் வழங்க மாட்டார்கள்.

மாறாக அவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் அமையப்பெற்றிருப்பதைக் காணமுடியும்.

அப்படித்தான் வீடுகளில் கூட சில குழந்தைகளை பார்த்து வியந்து அவர்களின் பெற்றோரிடம் ‘நன்றாக சொல்லிக்கொடுத்து வளர்த்துள்ளீர்கள்’ என கூறி பெருமைப்படுத்துவார்கள்.

உண்மையில் சிறந்த குழந்தைகளாக விளங்குபவர்களின் பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை என்பதே உண்மை. மாறாக அந்த பெற்றோர்கள் வாழ்ந்து காட்டி வருபவர்களாகவே இருப்பார்கள். சொல்வதைவிட, கேட்பதைவிட பார்ப்பதும் அதன்படி நடப்பதுமே பெரிய பெரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரம் போடுகின்றன.

2. தங்களுக்கு என்ன திறமை இருக்கிறதோ அதற்கான பாதையை அவர்களாகவே தேர்ந்தெடுத்தவர்களாக அமைத்துக்கொண்டவர்களாக இருப்பார்கள்.

3. தங்கள் திறமைக்கு ஏற்ற பாதையை போட்டுக்கொள்ளும் அதே நேரம் அந்தத் திறமை சார்ந்த மாற்றுப் பாதைகளையும் யோசித்து வைத்திருப்பார்கள்.

4. தங்களை யாருடனும் ஒப்பிட விரும்ப மாட்டார்கள். தாங்களும் ஒப்பிட்டுக் கொண்டும் வாழ மாட்டார்கள்.

5. மற்றவர்களை கீழே தள்ளிவிட்டு தான் மேலே ஏறிச் செல்லும் மோசமான வழிமுறையை கனவிலும் யோசித்துப் பார்க்க மாட்டார்கள்.

6. தனது சாதனை என்பதும் வெற்றி என்பதும் பிறர் கொடுக்கும் அங்கீகாரத்தில் இல்லை, தனது ஆத்ம திருப்தியிலேயே உள்ளது என்பதை நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.

7. பணமும் புகழும் கிடைக்கிறது என்பதற்காக தங்களின் செயல்பாடுகளில் மாற்றம் செய்துகொள்ள மாட்டார்கள்.

8. தங்களின் சாதனைப் பயணத்துக்கு உதவிய சிறு துரும்பையும் மறக்க மாட்டார்கள். சமயம் கிடைக்கும்போது கெளரவப்படுத்தவும் தயங்க மாட்டார்கள்.

நேற்று வீடியோ ப்ளாக் (Video Blog) செய்துவரும் இல்லத்தரசிகள் பங்கு பெற்ற  ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் முப்பதனாயிரம் சப்ஸ்க்ரைபர்களை பெற்று திறம்பட ஒரு யு-டியூப் சேனலை நடத்து வரும் ஒரு பெண்  தான் வாழ்க்கையில் காதல் திருமணம் செய்துகொண்டதால் யாருமே உதவவில்லை. சில வருடங்கள் தயிர்சாதம் சாப்பிட்டே வாழ்க்கை நடத்தினோம். யு-டியூப் சேனல் ஆரம்பித்த பிறகுதான் எங்களால் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என சொல்லிக்கொண்டிருந்தார். குரலில் அத்தனை பச்சாதாபம். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. சமூக வலைதளங்களினால் குறிப்பாக யு-டியூப் சேனல் தான் வாழ்க்கை கொடுத்தது என்ற அளவில் அதற்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தார்.

நிகழ்ச்சியை நடத்தியவர் கடைசியில் ஒரு கேள்வி கேட்டார்.

‘நீங்கள் கஷ்டப்பட்டபோது உதவிய ஒரு நபரை சொல்ல வேண்டுமென்றால் யாரைச் சொல்வீர்கள்?’

உடனே அந்த பெண் ‘என் அம்மா…’ என்று குறிப்பிட்டு அவ்வப்பொழுது 500, 1000 என கொடுத்து உதவியதால்தான் நாங்கள் இந்த நிலைக்கு வர முடிந்தது என சொன்னார்.

‘யு-டியூப்தான் வாழ்க்கைக் கொடுத்தது என்று சொல்வதற்கு முன்னர் இதை அல்லவா நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்… வாழ்க்கை யாரையும் கைவிட்டு விடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் யார் வடிவிலாவது மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்…’ என்று பேசி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

உண்மைதான்.

நம் பிறப்பு, நம் வாழ்க்கை, நம் குடும்பம் எல்லாமே நமக்கானதுதான், நம்முடையதுதான், நம் விருப்பம்தான். ஆனாலும் நம்மை செம்மைப்படுத்திகொள்ள, சீனா புகழ் ‘ஃபார்ச்சூன் குக்கீஸ்’ பிஸ்கட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அதிர்ஷ்ட வாசகங்களைப் போல, வாழ்க்கை நம் கஷ்டகாலங்களில் நமக்கு உதவ யாரோ ஒருவரை ஏதேனும் ஒரு ரூபத்தில் அனுப்பி வைக்கிறது. அந்த ஒருவர் நம் அம்மா அப்பாவாகவோ, அண்ணன் தம்பியாகவோ, அக்கா தங்கையாகவோ, குழந்தையாகவோ இருக்கலாம். ஏன் ரயில்வே ஸ்டேஷன்களிலும், கோயில்களிலும், ஓட்டல்களிலும், சினிமா தியேட்டர்களிலும் நாம் எதேச்சையாக சந்திக்கின்ற முன்பின் அறியாத மனிதர்களாகக்கூட இருக்கலாம்.

நாம்தான் நம் கண்களுடன் சேர்த்து மனதையும் இதயத்தையும் இறுக மூடிக்கொண்டு ‘யாருமே நமக்கு உதவுவதற்கு இல்லை’ என்று புலம்புவதில் ஒருசுகம் கண்டு அதிலேயே மூழ்கி இருக்கிறோம்.

நம்மில் பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சனை என்னவென்றால் ‘நாம் நினைப்பதைப் போல உதவி கிடைக்க வேண்டும்…’ என்பதுதான்.

நமக்குக் கிடைக்கும் சின்ன தூசியளவு உதவியையும் மலையளவு பெருதவியாகக் கருதி அதை சரியாக பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் ஒரு அடியாவது முன்னேறி செல்வார்கள். சின்ன சின்ன முன்னேற்றங்கள் பெரிய பெரிய வெற்றிக்கு அடிகோளும். எடுத்தவுடன் காரை 4-வது கியரில் மாற்றி வேகமெடுத்தால் என்ன நடக்கும். எடுக்கத்தான் முடியுமா?

ஒவ்வொரு நாளும் கண் விழிக்கையில் மனதையும் இதயத்தையும் சேர்த்து திறந்து வைத்துக்கொள்வோம். அப்போதுதான் நம்மைச் சுற்றி உள்ள அதிர்ஷ்டங்களை நாம் இனம் காணவும், அனுபவிக்கவும் முடியும்.

முயற்சித்துப் பார்ப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்,

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 57 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon