வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும்[22] : பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி? (நம் தோழி)

பூக்களைவிட முட்களுக்குத்தான் மதிப்பு அதிகம். ஏன் இப்படி?

பொதுவாக திருமணம் ஆன பெண்ணிடம் கேட்கப்படும் கேள்வி இதுதான்.

‘உன் கணவன் உன்னை நன்றாக வைத்துக்கொள்கிறானா… உன்னை நன்றாக பார்த்துக்கொள்கிறானா?’

இந்த கேள்வியே அபத்தமானது என்பேன்.

யாரும் யாரையும் சதா சர்வ காலமும் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது. அந்த ‘யாரும்’ என்பதில் கணவன் மட்டுமில்லை. அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பர்கள், நம் பிள்ளைகள் இப்படி சகலரும் அடக்கம்.

நன்றாக வைத்துக்கொள்ளவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும் பெண்கள் ஜடப் பொருளா என்ன?

ஒருவன் நல்லவனாக குடி, சிகரெட் என எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனாக இருக்கிறான் என்றால் அது அவன் சிறப்பு.

வீட்டில் உள்ளவர்களுடன் அனுசரனையாக அன்பாக இருக்கிறான் என்றால் அதுவும் அவனுடைய பண்பின் சான்று.

வீட்டில் அம்மாவுக்கும் / மனைவிக்கும் சமையலில் மட்டுமல்ல எல்லா வீட்டு வேலைகளையும் பங்கீடு செய்துகொண்டு வாழ்கிறான் என்றால் அதுவும் அவனுடைய சீரிய குணத்தின் அடையாளம்.

வேலைக்குச் செல்வது, சம்பாதிப்பது, சம்பாதித்த பணத்தை வீண் செலவு செய்யாமல் குடும்பத்துக்கு செலவழிப்பது, குழந்தைகளை கவனிப்பது, மனைவியை மதிப்பது இதெல்லாம் அவனுடைய தலையாயக் கடமை.

ஒரு மனிதன் என்றாலே இப்படித்தானே இருக்க வேண்டும். அதைவிட்டு இப்படி இருந்தால் அவன் உத்தமன் என எப்போது கொண்டாட ஆரம்பித்தோமோ அப்போதே அந்த இயல்புகளைக் கொண்டவர்கள் குறைந்துவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

எண்ணிக்கையில் குறைந்ததால்தானே எதுவுமே முக்கியத்துவம் பெறுகிறது.

இன்று  பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிட குறைவாக இருப்பதால்தானே திருமண மார்க்கெட்டில் பெண்களுக்கான டிமாண்ட் அதிகரித்து அவர்களின் மதிப்பும் உயர்ந்துள்ளது. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஆண் பிள்ளைகளைப் பெற்றவர்களும், ஆண்களும் திருமண சந்தையில் எப்படி இருந்தார்கள் என்பது நம் அனைவருக்குமே நன்கு தெரியும். அந்த நிலை இன்றில்லை. காரணம் எண்ணிக்கையில் பெண்கள் குறைந்து வருவதே.

எப்போது டிமாண்ட் அதிகரிக்கிறதோ அப்போது அதற்கு மதிப்பு கூடும். இது பொதுவிதி.

இப்போது நம் பேசுபொருள் அதுவல்ல. இருந்தாலும் ஒரு ஒப்பீட்டுக்காக குறிப்பிட்டேன்.

நாம் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருவோம்.

எந்த ஆணிடமாவது  ‘உன் மனைவி உன்னை நன்கு கவனித்துக்கொள்கிறாளா, நன்றாக வைத்துக்கொள்கிறாளா?’ என யாரும் கேட்பதில்லை.

காரணம். பெண்கள் எல்லா காலங்களிலுமே சமைப்பது, வீட்டு வேலை செய்வது, குழந்தைகள் பெறுவது, அவர்களை வளர்ப்பது, பாடம் சொல்லிக்கொடுப்பது, கணவனின் தேவைகளை கவனிப்பது என பொறுப்புடனேயே இருக்கிறார்கள். அதனால்தான் எந்த ஒரு ஆணிடமும் ‘உன் மனைவி உன்னை நன்கு கவனித்துக்கொள்கிறாளா, நன்றாக வைத்துக்கொள்கிறாளா?’ என யாருமே கேட்பதில்லை.

எப்போதுமே பெண்கள் மிக சரியாகவே இயங்கி வருகிறாள். இயங்குவாள். உலகம் இருக்கும் வரை, அவள் இந்த உலகில் இருக்கும் வரை இப்படித்தான் இயங்குவாள். இதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் அவை மிக சொற்பம். எனவே அதை கருத்தில்கொண்டு விவாதிக்க வேண்டாம்.

அதுபோல ‘சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்’ என்று சொல்லி சொல்லியே பெண்களை பயம் காட்டுவார்கள்.

பெண்கள் ஏன் எப்போதுமே சேலையாகவே இருக்க வேண்டும். அவர்களை சேலையுடனேயே ஏன் ஒப்பிட வேண்டும். அவர்கள் முட்களாகவும் இருக்கலாமே. அவர்களை முட்களோடு ஒப்பிட்டாலாவது ஆண்கள் மனதுக்குள் நெருங்கினால் முள் குத்தும் என்ற பயம் ஒருதுளியாவது வரும் அல்லவா?

நான் இயங்கி வரும் துறையில் ஒரு ப்ராஜெக்ட்டின்போது சிறு பிரச்சனை. சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை சந்தித்து பேசியபோது அவர் ‘சேலை மீது முள் விழுந்தாலும், முள் மீது சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்  எனவே இந்த விஷயத்தை அப்படியே விட்டு விடுங்கள்…’ என்று பொறுப்பை தட்டிக் கழிக்க ஏதேதோ பேசினார்.

இதை என் பெற்றோரிடம் சொன்னபோது அவர்கள் என்னிடம் சொன்ன பதில் என்ன தெரியுமா?

‘பெண்கள் ஏன் எப்போதுமே சேலையாகவே இருக்க வேண்டும். முட்களாகவும் இருக்கலாம்…’ என்று உத்வேகம் கொடுத்ததுடன் அந்தப் பிரச்சனையில் இருந்து நேர்மையான முறையில் வெளிவருவதற்கும் உற்ற துணையாக இருந்தனர்.

பிரச்சனை என்னவோ ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்டதுதான். ஆனால் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் அவரது பொறுப்பை திசை மாற்ற பெண் என்ற ஆயுதத்தை எடுத்து பழைய சினிமா டயலாக் பேசியதுதான் அபத்தமாக இருந்தது. அவரது அறியாமையை காண்பித்தது. ஆனால் அவரை அந்த நிறுவனத்தில் ஜீனியஸ் என்று தலையில் வைத்துக்கொண்டாடுவார்கள். என்னைப் பொறுத்தவரை அவர் அந்த பட்டத்துக்கு ஒரு சதவிகிதம்கூட பொருத்தம் இல்லாதவர்.

பலரும் இப்படித்தான் நமக்கு ஆதரவாக பேசுவதாக நினைத்துக்கொண்டு அவர்களின் முகமூடி தானாகவே அவிழ்ந்து விழுவது தெரியாமலேயே பேசி மாட்டிக்கொள்வார்கள்.

பெண்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் இயங்கும் துறையில் அவர்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தாலும், சுயமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் பொதுவெளியில் இயங்கும் பெண்களுக்கு நான் சொல்ல விரும்பும் சிறிய ஆலோசனை இதுதான்:

‘உங்களை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நீங்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஜாக்கிரதையாக இயங்க வேண்டும். பத்திரமாக பாதுகாப்பாக பழக வேண்டும். புகழைவிட பணத்தைவிட பதவியைவிட நம் நிம்மதி முக்கியம். உங்கள் சுயத்தை இழந்துதான் இவற்றைப் பெற வேண்டும் என்கின்ற கட்டாயம் / அழுத்தம் உருவானால், சூழலை மாற்றுவது என்பது சாத்தியம் இல்லாதபோது, எவ்வளவு சீக்கிரம் அந்த சூழலில் இருந்து வெளிவர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளிவந்துவிடுங்கள். சமயோஜிதமாக சிந்தித்து இயங்கப் பழக வேண்டும். நண்பர்கள்போல் தெரிபவர்கள் அத்தனைபேரும் நண்பர்கள் அல்ல. அவர்களில் உங்களை கவிழ்க்க நினைப்பவர்களும் மறைந்திருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பத்து முறை திரும்பத்திரும்ப சிந்தித்து முடிவெடுங்கள்!

பொதுவெளியில் இயங்கும் பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
February 21, 2021

சக்தி மசாலா குழுமத்தில் இருந்து வெளிவரும்
‘நம் தோழி’  மாத பத்திரிகையில் (பிப்ரவரி 2021)
வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் – 22

புத்தக வடிவிலேயே படிக்க…நம் தோழி பிப்ரவரி 2021

(Visited 20 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon