ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 52
பிப்ரவரி 21, 2021
‘அப்பா இருந்தவரை ராணி மாதிரி இருந்தேன்!’
எத்தனை வலிமிகு வலிமையான வார்த்தைகள். சமீபத்தில் என் மனதை சஞ்சலப்படுத்திக்கொண்டிருக்கும் வார்த்தைகளும்கூட.
இரண்டு நாட்களில் த்ரிஷ்யம்-2 திரைப்படம் குறித்து எத்தனையோ விமர்சனங்களை படித்தாயிற்று. ‘த்ரிஷ்யம்’ பார்க்கவில்லை. த்ரிஷ்யம்-2-ம் இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.
ஆனால் பாபநாசம் பார்த்திருக்கிறேன். அதைப் பார்த்தபோதே கதை, வசனம், காட்சி அமைப்பு, நடிப்பு இப்படி எல்லாவற்றையும் தாண்டி என்னைக் கவர்ந்தது அந்த திரைப்படத்தின் அப்பாவின் கதாபாத்திரம். ஒரு அப்பாவாக தன் மகளைக் காப்பாற்ற எப்படியெல்லாம் பிரயத்தனப்படுகிறார் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கியது.
அடுத்து என்னைக் கவர்ந்தது மகனை சரியாக வளர்க்காமல் தன் போக்குக்கு வளர்த்துவிட்டு அவனை காணாதபோது துடித்து உண்மையை கண்டறிய சட்ட ரீதியாக அத்தனை முயற்சிகளையும் எடுத்த பிறகு, உண்மை என்ன என்று தெரிந்ததும் மகன் மீதான பெருங்குற்றத்தை அறிந்தபோது அந்த குற்ற உணர்ச்சியில் தன் பதவியையே உதறித் தள்ளிய காவல்துறை அதிகாரியாக வரும் அம்மா கதாபாத்திரம்.
குடும்பத்தில் அப்பா அம்மாவின் பங்கு எத்தனை முக்கியம். இது யாருக்கும் தெரியாததில்லை. ஆனால் திரைப்படங்களில் சம்பவங்களோடு அந்தந்த கதாப்பாத்திரத்தில் தம்மைப் பொருத்திக்கொண்டு பார்க்கும்போது உடலெங்கும் ஒரு பதைபதைப்பு நம்மையும் அறியாமல் ஒட்டிக்கொள்கிறதே.
சாப்பாடு போட்டு, புதுசட்டை, மொபைல், லேப்டாப் எல்லாம் வாங்கிகொடுத்து, பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கும், நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கும் சினிமா செல்வதற்கும் பணம் கொடுப்பதுடன் அவர்களின் பொறுப்பு நின்றுவிடுவதில்லை. பிரச்சனை என வரும்போது எப்படியெல்லாம் முயற்சி செய்து அவர்களை அதில் இருந்து வெளிக்கொண்டுவர துடிக்க வேண்டியுள்ளது என்பதை நினைக்கும்போது உண்மையிலேயே ‘நல்ல பெற்றோராய்’ இருப்பது எத்தனை கடினமான விஷயம் என்பதை உணர முடியும்.
பெற்ற குழந்தைகளின் வலிகளை தங்களுக்குள் பெற்றுக்கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ வலிகளை பெற்றுக்கொண்ட தங்கள் குழந்தைகளுக்கு வலி தெரியாமல் அவர்களின் வலிகளில் இருந்து வெளியே கொண்டுவர அவர்கள் எடுக்கும் முயற்சிகளை இதுபோன்ற திரைப்படங்களை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்கும்போது குடும்பமாக உணர முடியும்.
அப்பா என்னை நான் விருப்பப்பட்ட கோர்ஸ் சேர்த்துவிடவில்லை, அப்பா என்னை சுதந்திரமாக இருக்க விடவில்லை, அப்பாவுக்கு மார்டனா சிந்திக்கவே தெரியலை, அப்பாவுக்கு ஜாலியா பேசத் தெரியவில்லை, அப்பா ஒரு சிடுமூஞ்சி, அப்பா எங்களை எங்குமே சுற்றுலா அழைத்துச் சென்றதில்லை அப்படி இப்படி என பல குழந்தைகளுக்கு குறைகள் இருக்கும். என் காதுபடவே சொல்லி இருக்கிறார்கள்.
என் உறவினர் ஒருவரின் 12 வயது மகள் ஒருமுறை சோஷியல் நெட்வொர்க்கில் தவறான தொடர்பில் சிக்குண்டபோது அதில் இருந்து மீள்வதற்கு அவள் அப்பா பட்டபாடு எனக்கு நன்கு தெரியும். சைபர் க்ரைமில் புகார் அளிப்பது முதல் தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பாக இருப்பதுவரை என்னிடம் கேட்டே செயல்பட்டதால் ஒரு அப்பாவாக அவருடைய துடிப்பை நான் நன்கறிவேன்.
பிள்ளைகளிடம் சிடுமூஞ்சி பட்டம் பெற்றிருந்த அந்த அப்பா, தன் பெண் குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் அவளுடைய அத்தனை வலிகளையும் தன் மனதில் தாங்கியபோது அவர் மீதான மதிப்பு விஸ்வரூபமானது. ஒரு கட்டத்தில் பிரச்சனையில் இருந்து வெளிவந்துவிட்டனர். இப்போதெல்லாம் அவர் மகள் அவரை சிடுமூஞ்சி என்று சொல்வதில்லை. அன்பாக நடந்துகொள்வதாக சொல்கிறார்.
இத்தனை ஆழமான அதலபாதாளத்தில் விழுந்துதான் பெற்றோரின் அருமையை புரிய வைக்க வேண்டி இருக்கிறது என்பதுதான் சுடும் நிஜமாக உள்ளது.
சமீபத்தில் அப்பாவுடன் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஒரு சைக்கிளில் தளும்பத் தளும்ப தண்ணீர் குடத்தை வைத்து தள்ளிக்கொண்டே சென்றார் ஒரு வயதான பாட்டி. சோர்வான கண்களுடன் தனக்குள் ஏதோ பேசியபடி தண்ணீர்ப் குடத்தின் கனம் தாங்க முடியாமல் நின்று நின்று சைக்கிளை தள்ளிக்கொண்டே நடந்து கொண்டிருந்தார். ஒடிசலான தேகம், சுருங்கிய தோல், இடுங்கிய கண்கள், தள்ளாடும் உடல், நடையில் நடுக்கம் இவை போதாதா வறுமையின் சாட்சிக்கு.
நாங்கள் தரிசனம் முடித்துவிட்டு காரில் ஏறும் போது எங்களைத் தாண்டிச் சென்றார். அவருக்கு கொஞ்சம் பணம் கொடுக்கலாம் என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு அவரை ‘பாட்டி’ என அழைத்தேன்.
‘எங்கிருந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறீர்கள்?’
அவர் ஏதோ ஒரு தெருவின் பெயரைச் சொன்னார்.
‘என்ன செய்யறீங்க… உங்க வீடு எங்க இருக்கு?’
‘இதோ இந்த தெருமுனையில்தான் இருக்கு. வீட்டுக்காரர் இருந்தவரை அவரது சம்பாத்தியத்தில் வாழ்ந்துவிட்டேன். குழந்தைகள் இல்லை. இப்போ சாப்பாடுக்கே கஷ்டப்படறேன். ஆதரவற்ற முதியோர்களுக்கு அரசு கொடுக்கும் பணத்தை வைத்துத்தான் சாப்பிடறேன்.’
என்ன நினைத்துக்கொண்டாரோ சைக்கிளை கஷ்டப்பட்டு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார்.
‘அது போதுமா உங்கள் செலவுகளுக்கு…’
‘என்ன செய்வது அதை வைத்துத்தான் ஓட்டியாகணும். அது தவிர இந்த சைக்கிளிலேயே வீடு வீடாகச் சென்று பால் பாக்கெட், பேப்பர் போடறேன். தினமும் 50 வீடுகளுக்கு… அதுல கொஞ்சம் பணம் வரும். அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் மதியம் மட்டும்தான் சாப்பிடுவேன். சாயந்திரம் கோயில் பிரசாதம் அப்படி இப்படின்னு வயிற்றை நிரப்பிக்கொள்வேன். கொரோனா வந்த பிறகு கோயில்களில் பிரசாதமும் தருவதில்லை. இரவில் பட்டினிதான்.’
கொஞ்சம் இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தார்.
‘என் கணவனுக்கு நான் கொள்ளிப் போட்டேன். எனக்கு யார் கொள்ளிப் போடப் போறான்னு தெரியல…’ என அழும் குரலில் சொன்னார்.
‘சரி கவலைப்படாதீங்க… இந்தாங்க இதை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லி இரண்டு நாட்கள் சாப்பிடுவதற்கு பணம் கொடுத்தேன்.
முதலில் மறுத்தாலும் வாங்கிக்கொண்டார். என்னையும் என் அப்பவையும் பார்த்து ‘நீங்க ரெண்டு பேரும் நீடூழி வாழணும்’ என்று சொன்னபோது ‘இவர் என் அப்பா…’ என்றேன்.
இதைக் கேட்டவுடன் அவர் கண்களில் பொலபொலவென கண்ணீர்.
‘என் அப்பா இருந்தவரை ராணி மாதிரி வைத்திருந்தார். கஷ்டம்னா என்னன்னே எனக்குத் தெரியாது. கல்யாணத்துக்குப் பிறகு குடிகார கணவனால் படாத கஷ்டம் இல்லை… என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது, கொள்ளிப் போடக் கூட ஆள் இல்லாமல்…’ என்று புலம்பிக்கொண்டே அழுத முகத்தை முந்தானையால் துடைத்தபடி சைக்கிள் ஸ்டாண்டை மெதுவாக எடுத்துவிட்டு தள்ளிக்கொண்டே நடந்தார்.
அவர் சொன்ன வார்த்தைகள் இன்னமும் சுட்டுக்கொண்டே இருக்கிறது. ‘என் அப்பா இருந்தவரை ராணி மாதிரி வைத்திருந்தார். கஷ்டம்னா என்னன்னே எனக்குத் தெரியாது…’
இப்படித்தான் பலருக்கும் தெரிவதில்லை அப்பாவின் அருமை. அப்பா படித்தவராக இருக்கலாம், படிக்காதவராக இருக்கலாம், நவநாகரிகமாக இருக்கலாம், கிராமத்து மனிதராக இருக்கலாம், ஆங்கிலத்தில் பேசி அசத்தலாம், தமிழைக் கூட சரியாக உச்சரிக்கத் தெரியாதவராக இருக்கலாம். அப்பா எப்படி இருந்தாலும், என்ன வேலை செய்தாலும், என்ன படித்திருந்தாலும் அப்பா அப்பாதான். அப்பா என்று ஒரு ஜீவன் நம்முடன் இருப்பதே நமக்கு யானை பலம் என்பது பலருக்கும் அவருடைய மறைவுக்குப் பிறகுதான் தெரிகிறது.
‘த்ரிஷ்யம்’ போன்ற திரைப்படங்கள் அப்பாக்களின் அன்பை அரவணைப்பை சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன. இதுபோன்ற திரைப்படங்களை குடும்பத்துடன் பிள்ளைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP