ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 77
மார்ச் 18, 2021
‘ஆகையினால்’!
ஆகையினால் உனக்குப் பிடித்துள்ளது,
ஆகையினால் எனக்குப் பிடிக்கவில்லை – ஆனால்
உன் ஆகையினால் வேறு,
என் ஆகையினால் வேறு!
திருமணம் நிச்சயிக்கப்பட்ட
ஒரு ஆண் பெண்ணைப் பார்த்து சொல்வதாகவோ
அல்லது
ஒரு பெண் ஆணைப் பார்த்து சொல்வதாகவோ
எடுத்துக்கொள்ளலாம்!
இது
பெண்ணியவாத கவிதையும் அல்ல
ஆணாதிக்க கவிதையும் அல்ல!
‘ஆகையினால்’ மேலே வாசியுங்கள்
ஆகையினாலை!
உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்கிறாய்
காரணமும் சொல்கின்றாய்
நான் உன்னை நன்கு
புரிந்து கொண்டமையினால் என்று!
உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்கிறாய்
காரணமும் சொல்கின்றாய்
நான் உன்னை நன்கு
உணர்ந்து கொண்டமையினால் என்று!
உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்கிறாய்
காரணமும் சொல்கின்றாய்
உன் எதிர்காலக் கனவுகள் குறித்த தெளிவு
எனக்கு இருப்பதினால் என்று!
உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்கிறாய்
காரணமும் சொல்கின்றாய்
உன் ஆசைகளையும் ஆர்வங்களையும்
நான் தெரிந்து வைத்திருப்பதால் என்று!
உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்கிறாய்
காரணமும் சொல்கின்றாய்
உன்னையும் உன் குடும்பத்தையும்
நான் நேசிப்பதாக சொல்வதினால் என்று!
இவ்வளவு தெரிந்து கொண்ட நீ
எனக்கு பிடித்தவை என்ன, இலட்சியம் என்ன,
குறிக்கோள் என்ன, ஆசைகள் என்ன, கனவுகள் என்ன
என்று ஒரு துளியாவது அறிந்துகொள்ள முயற்சித்தாயா?
எனவே…
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை – காரணம்
நான் உன்னை நன்கு புரிந்து கொண்ட அளவுக்கு
என்னை நீ புரிந்துகொள்ள
முயற்சிக்கக் கூட இல்லை!
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை – காரணம்
நான் உன்னை நன்கு உணர்ந்து கொண்ட அளவுக்கு
என்னை நீ உணர்ந்துகொள்ள
ஒருதுளியும் முயலவில்லை என்பதால்!
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை – காரணம்
நான் உன் எதிர்காலக் கனவுகளுக்குக் கோட்டை கட்டிய பிறகும்
என் எதிர்காலக் கனவுகள் குறித்த
ஸ்மரனை கூட உனக்கு இல்லாததினால்!
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை – காரணம்
உன் ஆசைகளை கூறுபோட்டு அறிந்து வைத்திருக்கும்
என்னுடைய ஆர்வங்கள் பற்றி அறிந்துகொள்ளக் கூட
ஆர்வம் காட்டாத உன் மனோபாவத்தினால்!
எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை – காரணம்
இப்போது சமீபத்தில்தான் அறிமுகம் ஆன
உன் குடும்பத்தை நான் நேசிப்பதாக சொன்ன பிறகும்
நானும் உன் குடும்பத்தையும் நேசிக்கிறேன் என்று
வாய் வார்த்தைக்காகக் கூட சொல்லத் தோன்றாததினால்!
ஆகையினால்…
காரணங்களுக்கு காரணம் தேட வேண்டியதில்லை
உணர்வுகளால் உணர முடியும் சக்தி அதற்கிருப்பதினால்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai