ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 78
மார்ச் 19, 2021
உங்களை அழகாக்கும் ‘க்ரீம்’!
ஒரு குழந்தை இருக்கும் வீடு
விளையாட்டுப் பொருட்களின் சிதறல்கள்
சுவர்களில் பென்சில் கிறுக்கல்கள்
கீழே சிந்தியிருக்கும் பருப்பு சாதத்தின் துணுக்குகள்
அவை உண்டாக்கும் மெல்லிய நெய் வாசனை
அடிக்கடி சிணுங்கல் சப்தம்
சில நேரங்களில் பெருங்குரலெடுத்து அழும் சப்தம்
பல நேரங்களில் சிரிக்கும் ‘கலகல’ சப்தம்
நினைத்துக்கொண்டால் புரியாத மொழியில்
‘பேபே’-வென தாயுடன் சண்டைப் போடும் சப்தம்
திடீரென கூச்சல் போட்டு அழிச்சாட்டியம் பண்ணும் சப்தம்!
இதுவே குழந்தைகள் இருக்கும் வீட்டின் இலக்கணம்
இதுவே குழந்தைகள் இருக்கும் வீட்டின் வாசனையும் கூட!
குழந்தைகளின் இந்த வாசனையை
எப்போது நன்கு உணர முடியும்?
இரண்டு நாட்கள் குழந்தையை
தாத்தா பாட்டியிடம் கொடுத்துவிட்டு
பிரிந்து இருந்து பார்ப்பவர்கள்
குழந்தைகளின் வாசனையை நன்கறிவர்!
வீடு சுத்தமோ சுத்தமாக இருக்கும்
நேர்த்தியாக அதது அதனதன் இடத்தில் இருக்கும்
சாதத்தின் துணுக்குகள் காலில் ஈஷாது
அழுகை, சிணுங்கல், கூச்சல் என
எதுவுமே இருக்காது
இப்போதுதான் வீடு
அழகாக இருக்க வேண்டும்
ஆனால் வீடு அழகாக இருக்காது
நரகமாக இருக்கும்!
குழந்தைகள் புழங்கிக்கொண்டிருக்கும் வீடு
குழந்தைகளால் மட்டுமே சொர்க்கமாகும்!
இருக்கும் இடத்தை சொர்க்கமாக்குவதால்தான்
எல்லா குழந்தைகளுமே அழகாக இருக்கிறார்கள்
பார்த்தவுடன் கொஞ்சத் தோன்றுகிறது
ரசிக்கத் தோன்றுகிறது
தூக்கி வைத்துக்கொள்ளத் தோன்றுகிறது!
குழந்தைகள் எப்போதுமே
தனக்குத் தேவையானதைக் கேட்டுப்பெறுவதில்
கூச்சம் காட்டுவதில்லை
சதா மகிழ்ச்சியாக இருப்பதற்குக்
காரணம் தேடுவதில்லை
நிபந்தனையற்ற பாசம்
நிபந்தனையற்ற மகிழ்ச்சி
நிபந்தனையற்ற கொண்டாட்டம்
இதுவே குழந்தைகளின் இலக்கணம்!
இப்படி குழந்தைத்தனம் கொஞ்சம் மிகுந்து
வெகுளித்தனம் கூடுதலாக இருப்பவர்கள்
பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்
பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள்
என்று சொல்வதைவிட
பார்ப்பவர் கண்களுக்கு
அழகாகத் தெரிவார்கள்!
நான் கொஞ்சம் வெகுளியாக இருப்பதால்
என்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்
என்று கழிவிறக்கத்தில்
புலம்புபவர்கள் அதிகரித்துவிட்டார்கள்
ஜாக்கிரதை!
குழந்தையாக நடிப்பதும்
வெகுளியாக காட்டிக்கொள்வதும்
அத்தனை எளிதல்ல!
எனவே அதற்கு முயன்று
தோற்றுவிடாதீர்கள்!
அப்படியே ஜெயித்துத்தான் ஆக வேண்டும்
என கங்கணம் கட்டிக்கொண்டிருந்தால்
உண்மையாகவே குழந்தை மனசுடன் வாழப் பழகுங்கள்!
உண்மையாக இருந்தால்தான்
குழந்தைத்தன்மை உங்களிடம் நெருங்கும்!
பொய்யிருந்தால், கலப்பிடம் இருந்தால்
குழந்தை மட்டுமல்ல, குழந்தைத்தன்மைகூட
உங்களிடம் நெருங்கவே நெருங்காது
ஏனெனில்
குழந்தையும் உண்மையும் ஒன்று!
எந்தக் குழந்தையும்
தான் ஒரு குழந்தை
என்று சொல்லிகொள்ள
விரும்புவதில்லை
பெரிய மனுஷியாய்
அம்மாவைப் போலவும் பாட்டியைப் போலவும்
பெரிய மனுஷனாய்
அப்பாவைப் போலவும் தாத்தாவைப் போலவும்தான்
வெளிக்காட்டிக்கொள்ள முயல்வார்களே தவிர
எந்தக் குழந்தையும்
தன்னை குழந்தை என்றும்
தான் வெகுளி என்றும்
ஒத்துக்கொள்வதே இல்லை!
நீங்கள் அழகாக
தோற்றமளிக்க வேண்டுமானால்
குழந்தையைப்போல்
கள்ளம்கபடமில்லாமல் இருங்கள்!
இதுவே நீங்கள் அழகாகத்
தோன்ற உதவும் க்ரீம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai