ஜம்முனு வாழ காம்கேரின் OTP-79: சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்! (Sanjigai108)

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 79
மார்ச் 20, 2021

சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்!

‘உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு சொல்வதற்கென என்ன சேதி வைத்துள்ளீர்கள்?’ என்ற கேள்வியை யாரேனும் உங்களிடம் கேள்வியை எழுப்பினால் பதில் வைத்துள்ளீர்களா?

நாம் ஒவ்வொருமே பிறரிடம் சொல்வதற்கென செய்திகள் நிறைய வைத்திருப்போம். எல்லாவற்றையும் எல்லா நேரங்களிலும் வாரி இரைத்துவிட்டால் தேவையானதை தேவையான நேரத்தில் சொல்வதற்கு வார்த்தைகளோ விஷயங்களோ இருக்காது. அதனால்தான் சிலரைப் பார்த்தால் சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பார்கள். காரணம் அவர்கள் அவசியம் இல்லாதபோதும் தேவையே இல்லாத விஷயங்களை கொட்டித் தீர்த்திருப்பார்கள். அவர்களிடம் உள்ள விஷயங்கள் நீர்த்துப் போயிருக்கும்.

உங்கள் ‘சொல்’ மதிக்கப்பட வேண்டுமானால் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டும். சதா சொல்லிக்கொண்டிருந்தால் உங்கள் ‘சொல்’ செல்லா காசாகிவிடும். கேட்பதற்கு காதுகள் இருக்காது. உள்வாங்கிக்கொள்ள மனதும் இருக்காது. ‘காது இருக்கு… ஆனா இல்லை, மனசு இருக்கு….ஆனா இல்லை’ என நடிகர் வடிவேலு பேசுவதைப் போல கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நேற்று கருணை கிழங்கு ‘காராமல்’ எப்படி சமைக்கலாம் என்பதை என் அம்மாவிடம் கேட்டபோது அவர் சற்றும் யோசிக்காமல் ‘அந்த காலத்தில் நாங்கள் அவரை இலை அல்லது கொய்யா இலையைப் போட்டு கொதிக்க வைப்போம்…’ என்று ஒரு செய்தியை சொல்லிவிட்டு கொஞ்சம் உப்புபோட்ட புளி தண்ணீரில் கொதிக்க வைத்துவிட்டு அந்த தண்ணீரை கொட்டியபிறகு வேக வைத்தால் கருணைக் கிழங்கு ‘காராமல்’ இருக்கும் என்றார்.

இப்படித்தான் என் அம்மா ஒரு விஷயத்தைக் கேட்டால் அதன் தொடர்புடைய ஒரு அரிய தகவலுடன் அதை புதுமையாக எடுத்துச் சொல்வார். பெரும்பாலானவரின் அடுக்குமாடி குடியிருப்புகளில் அவரை இலையும் இருக்கப் போவதில்லை, கொய்யா இலையும் இருக்கப் போவதில்லை. ஆனாலும் அவர் சொல்வார். ஏன் சொல்கிறார்? அவருக்குத் தெரிந்ததை சொல்கிறார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், அடுத்தத் தலைமுறையினருக்கு தான் அறிந்ததை கொடுத்துவிட்டுச் செல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் அதை பெருமையாகச் சொல்லிக்காட்ட மாட்டார். இயல்பாக சொல்லிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்.

இதுபோல, எங்கள் அப்பாவிடம் இருந்துக் கற்றுகொண்ட விஷயங்கள் ஏராளம். பைக் கார் ரிப்பேர் ஆகி பாதி வழியில் நின்றால் தற்காலிகமாக சரிசெய்து சர்வீஸ் செண்டர் வரை எடுத்துச் செல்வது முதல் வீட்டில் ஃப்யூஸ் போனால் மாற்றுவது வரை தான் அறிந்த அத்தனை விஷயங்களையும் எங்களுக்குள்ளும் கடத்தியுள்ளார். அதனால்தான் நாங்கள் சுயசார்புடன் வளர்ந்துள்ளோம்.

இப்படி Ad-on Facility போல தேவையான தகவலுடன் சேர்த்து இணைப்பாக அரிய தகவலை சொன்னால் நீங்கள் சொல்லும் தகவலுக்கு மட்டுமில்லாமல் உங்கள் மீதான மதிப்பும் இரட்டிப்பாக உயரும்.

காசு பணம், வீடு வாசல் இவற்றைத்தான் உயில் எழுதி வைக்க வேண்டுமா என்ன? தன் அறிவையும், ஞானத்தையும், ஒழுக்கத்தையும், பண்பையும் கூட உயில் எழுதி வைக்கலாமே தங்கள் சந்ததியினரின் மனதுக்குள். இதற்கு வக்கீலோ, சாட்சியோ, சாட்சிக் கையெழுத்தோ, நாமினியோ யாருமே, எதுவுமே தேவையில்லை.

இ-காமர்ஸ் எனும் இணைய வியாபாரத்தில் B2C என்ற ஒரு வர்த்தகப் பிரிவு உள்ளது. வியாபாரத்தை இடைத்தரகர்கள் யாரும் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் பிரிவு அது. அதே பிரிவில்தான் நம் அடுத்த தலைமுறையினருக்கு நம் அறிவையும் ஞானத்தையும் கடத்துவதும் வரும். சொல்ல நினைத்ததை சொல்லலாம். பழக்க விரும்பியதைப் பழக்கலாம். எப்படி வடிவமைக்க விரும்புகிறோமோ அப்படி வடிவமைக்கலாம். சிற்பியாக நாம் இருக்க வேண்டுமானால் சிற்பியின் திறமையை மட்டும் பெற்றிருந்தால் போதாது. சிற்பியின் பொறுமையும் நமக்கு வேண்டும்.

உங்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு சொல்லிக்கொடுக்க உங்களிடம் எதுவுமே இல்லை என்றாலோ அல்லது தெரிந்ததை சொல்லிக்கொடுக்க விருப்பம் இல்லை என்றாலோ அல்லது அதற்கு நீங்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றாலோ உங்கள் மதிப்பதை நீங்களே குறைத்துக்கொள்கிறீர்கள் என்றே அர்த்தம்.

ஆகவே நீங்கள் அறிந்ததை உங்களுக்குத் தெரிந்ததை வாழ்க்கையின் போக்கில் ஆற்று நீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் இலை தழைகளைப் போல வெகு இயல்பாக அறிவுரைபோல் இல்லாமல், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற தொனியும் இல்லாமல் கதைபோல சுவாரஸ்யாமாகச் சொல்லிச் செல்லப் பழகுங்கள். வாழ்க்கை சுவைக்கும் உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும்!

சில விஷயங்களை கேட்டால் சொல்லுங்கள், சிலவற்றை கேட்காமலேயே சொல்லுங்கள், இன்னும் சிலவற்றை சாப்பிடும்போதும், தூங்கும் முன்னரும், டிவி பார்க்கும்போதும், சினிமா பார்த்த பிறகும், நடைப்பயிற்சி செய்யும்போதும் இயல்பாக உலக நடப்புடன் இணைத்து சொல்லிப் பழகுங்கள். கொஞ்சமாக மிகைப்படுத்தல் இல்லாமல் கற்பனையைக் கலந்தாலும் தவறில்லை. அதன் மூலம் ஏதேனும் ஒரு நல்ல விஷயம் உங்கள் அடுத்தத் தலைமுறையினரிடம் கடத்த முடிந்தால் கற்பனைக் கலப்பது தவறே இல்லை.

ஆனால் சொல்லாமல் மட்டும் இருந்துவிடாதீர்கள். பின்னாளில் நீங்கள் சொல்லாமல் விட்ட சொற்களுக்கு வருந்த வேண்டியிருக்கும்.

சொல்லப் பழகுவோம், சொல்லிப் பழகுவோம், சொல்லித்தரப் பழகுவோம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 17 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon