ஜம்முனு வாழ காம்கேரின் OTP-80: எல்லோருக்கும் சுயசரிதையை படிக்கப் பிடிக்கிறது!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 80
மார்ச் 21, 2021

எல்லோருக்கும் சுயசரிதையை படிக்கப் பிடிக்கிறது!

ஆம். உண்மைதான் தங்கள் சுயசரிதையை.

நீங்கள் செய்யும் முயற்சிகள் எல்லாம் முன்பே பல பரிமாணங்களை எடுத்து வெவ்வேறு பரிணாமங்களில் தொடங்கப்பட்டிருக்கும். எதுவுமே திடீரென வந்துவிடுவதில்லை. ஆரம்பப் புள்ளி என்பது அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப யாராலோ எப்போதோ தொடங்கப்பட்டிருக்கும். அந்தப் புள்ளி காலமாற்றத்துக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் ஏற்ப புள்ளிக் கோலமாகவோ, கம்பிக் கோலமாகாவோ அல்லது அழகிய வண்னமயமான ரங்கோலி கோலமாகவோ வெளிப்படலாம். அது அந்தப் புள்ளியை மையமாக வைத்து செயல்படுபவரின் அறிவாற்றலையும், கற்பனைத் திறனையும், உழைப்பையும், ஊக்கத்தையும் பொருத்தது.

எதையுமே ‘நான்தான் முதன்முதலாக செய்தேன்’ என்று சொல்லிக்கொள்ள ஆரம்பிக்கும் அந்த இடத்தில் அந்த வார்த்தையை சொல்பவரின் சின்ன ஆணவம் வெளிப்படத் தொடங்கும். பெரும்பாலும் அந்த வார்த்தையைப் படிப்பவர்களுக்கோ அல்லது கேட்பவர்களுக்கோ கொஞ்சம் எரிச்சல் உண்டாவதை தவிர்க்க முடியாது.

‘நீ அறிவாளி’, ‘நீ அழகாக இருக்கிறாய்’ என்று சொல்வதைக் கேட்கத்தான் எல்லோருக்குமே பிடிக்கும். ‘நீ’ என்ற இடத்தில் ‘நான்’ என்ற வார்த்தையைப் பொருத்திப் படித்துப் பாருங்கள். ‘நான் அறிவாளி’, ‘நான் அழகாக இருக்கிறேன்’ என்பதையெல்லாம் நாம் மட்டுமே ரசிக்க முடியும். மற்றவர்களுக்கு அந்த வார்த்தைகளைக் கேட்கப் பிடிப்பதில்லை. இதுதான் உளவியல்.

நம்மை பிறர் உணரச் செய்வதில்தான் நம் வெற்றி உள்ளது. நம்மை நாமே அடிக்கடி ‘நான் இப்படி’, ‘நான் அப்படி’ என வெளிப்படுத்திக்கொண்டே இருப்பது ஒன்றும் பெரும் சாதனை கிடையாது. அப்படிச் செய்தால் ஒரு கட்டத்தில் அது நீர்த்துப் போய்விடும். நம்மைக் கண்டால் விலகி ஓட ஆரம்பித்துவிடுவார்கள்.

ஒரு நேர்காணலிலோ அல்லது ஆவணப்படுத்தலிலோ கேள்வி கேட்கும் நெறியாளர் மூலம் நம் அரிய சாதனை கேள்வியாக கேட்கப்பட்டு அப்போது நாம் நம் சாதனைகளை வெகு இயல்பாக பட்டியலிடும்போது, நம் சாதனைகள் உண்மையிலேயே இந்த காலகட்டத்தில் முதன் முயற்சியாக இருக்கும்பட்சத்தில் அது பார்வையாளர்களை பரவலாக சென்றடையும். நம் சுயசரிதை எழுதும்போது நம் சாதனையை வலுவாக குறிப்பிட்டுக்கொள்ளலாம்.

ஆனால் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம், ‘நான்தான் முதன் முதலில் அந்த சாதனையை செய்தேன்’ என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளத் தொடங்கும்போது உங்கள் மீதான மதிப்பு குறைந்து ஒருவித சலிப்புதான் உண்டாகும்.

ஏன் என்றால் இங்கு யாருக்கும் மற்றவர்களின் சுயசரிதையை அடிக்கடி கேட்கும் மனநிலை இல்லை. எல்லோருக்குமே தன் சுயசரிதையை சொல்வதற்கே ஆசை அதிகம் உள்ளது.

என் அப்பா அம்மாவுடன் பணியாற்றிய நண்பர் ஒருவருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததால், ஒருமுறை அவரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது அவருடன் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். அப்பா அம்மாவுடன் அவர் இருப்பதைப் போன்ற புகைப்படங்களை நான் எடுத்தேன். சில புகைப்படங்களை செல்ஃபியாக எடுத்தேன். நானும் அப்பாவின் நண்பரும் இருக்கும் புகைப்படத்தை அப்பாவை விட்டு எடுக்கச் சொன்னேன். பிறகு அவற்றை சரி பார்த்தேன். சில புகைப்படங்கள் தெளிவில்லாமல் இருந்ததால் மீண்டும் எடுக்கச் சொன்னேன். புகைப்படம் எடுப்பதற்கு சில நுணுக்கங்களையும் சொல்லிக்கொடுத்தேன்.

அப்போது அப்பாவின் நண்பர், ‘நீ புகைப்படம் எடுத்து எடுத்து பழகியதால் நன்றாக எடுக்கிறாய். உன் பணியில் அதுவும் ஓர் அங்கம் என்பதால்கூட உன்னால் நன்றாக எடுக்க முடிகிறது என்றும் சொல்லலாம். நாங்கள் எல்லாம் அப்படி இல்லையே, புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்றால்கூட எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரியாது. அந்தக் காலத்து புகைப்படங்களைப் பார்… எல்லோரும் சீரியஸான முகபாவத்துடன் இருப்பார்கள்…’ என்று சொல்லிக்கொண்டே போனார்.

உண்மைதானே.

என் அப்பா அம்மாவின் திருமணத்தில் புகைப்படங்கள்கூட எடுக்கவில்லை. வாய்ப்பில்லை. ஆனால் நான் பிறந்த பிறகு கேமிராவை வாடகைக்கு எடுத்து என்னை விதவிதமாக புகைப்படம் எடுத்து சேகரித்தனர். இன்று நம் எல்லோரிடமும் செல்போனிலேயே கேமிரா உள்ளது. நினைத்த நேரத்தில் நினைத்ததை புகைப்படம் எடுக்கிறோம். இதை ஏன் சொல்கிறேன் என்றால், இன்று நாம் செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் குவிப்பதினால் நாம்தான் அதை முதன்முதலில் செய்கின்றோம் என்று சொல்ல முடியுமா? வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமாக தங்கள் நினைவுகளை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டார்கள்.

புகைப்படம் எடுப்பதை ஒரு உதாரணத்துக்காகவே சொன்னேன். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். நம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குடும்பப் புத்தகம் இருக்க வேண்டும் என்பதை நான் அடிக்கடி வலியுறுத்திக்கொண்டே இருப்பேன். எங்கள் குடும்பத்துக்கு ஒரு குடும்பப் புத்தகமும், ஆவணப்படமும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது அதில் மாற்றங்களையும் செய்துவருவேன்.

இதை நான்தான் முதன்முதலில் செய்கிறேன் என என் குடும்பத்தில் பலர் பாராட்டுவார்கள். ஆனால் இந்த விஷயத்தை பலரும் பல விதமாக செய்து வருகிறார்கள் என்பதே உண்மை. எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் குடும்பத்தில் வருடா வருடம் ‘நதி – உறவுகளின் சங்கமம்’என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். உறவுகளின் எண்ணிக்கை 120-ஐ தாண்டும் 4 தலைமுறையினர் ஒன்றுகூடும் நிகழ்வாகும். கலை நிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், சிறந்த தம்பதிகளுக்கான விருது என ஜமாய்க்கிறார்கள். வடை பாயசத்துடன் விருந்தளித்து மகிழ்கிறார்கள்.

வருடா வருடம் ஒரு தம்பதியை, வயதில் மூத்தவர்கள் என்ற வரிசைப்படி  சிறப்பு விருந்தினராக தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் சிறப்பியல்புகள், அவர்களின் சாதனைகள் என பட்டியலிடுகிறார்கள். அவர்களை வைத்து அவர்கள் குடும்பத்தில் சிறந்த தம்பதிகளைத் தேர்ந்தெடுத்து விருதளித்து மகிழ்கிறார்கள்.

இது குடும்பப் புத்தகம், ஆவணப்படம் இதையெல்லாம் விட எத்தனையோ உயர்வானது. உறவினர்கள் அனைவரையும் எந்த சண்டை சச்சரவும் இன்றி ஒருங்கிணைப்பதே பெரிய விஷயம். அதுவும் வருடா வருடம் எனும்போது அது என்னைப் பொருத்தவரை செயற்கரிய செயல்.

குடும்பப் புத்தகம், ஆவணப்படம், குடும்பச் சங்கமம் இப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஒரு விஷயத்தின் தொடக்கப் புள்ளி. எனவே நான்தான் அந்த சாதனையை முதன்முதலாக செய்தேன் என்று சொல்வதெல்லாம் அறியாமையின் உச்சம்.

நம் செயல்பாடுகளை உள்ளது உள்ளபடி வெளிக்காட்டிக்கொள்வதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும். மக்களைச் சென்றடைய எத்தனை முயற்சிகள் வேண்டுமானாலும் எடுக்கலாம். விருதுகளுக்குக் கூட விண்ணப்பிக்கலாம். தவறே இல்லை. சில படைப்புகள் விருது கிடைக்கும்போதுதான் பொதுவெளியில் பிரகாசமாக வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் நம் படைப்புகளை முறையாக ரெஜிட்டர் செய்துகொள்ளவும் செய்யலாம். அதாவது Pattern Right என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

இப்படி செய்ய ஆரம்பித்தால் உங்கள் படைப்புகள் எந்த பெரும் முயற்சியும் இன்றி மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கிவிடும். உங்கள் படைப்புகள் மட்டுமல்ல, நீங்களும்தான்.

ஆனால் ‘இதை நான்தான் முதன்முதலில் செய்தேன்…’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பது உங்கள் மீதான மரியாதையையும் உங்கள் படைப்பின் மீதான கெளரவத்தையும் சற்றே தாழ்த்தும் என்பதுதான் உண்மை.

நமக்கு இன்று வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. திறமைக்கு ஏற்ற பாடத்திட்டங்களும் ஏராளம். சோம்பேறியாக இருப்பவர்களைத் தவிர எல்லோருக்குமே வாழ்வதற்கு ஏதேனும் ஒரு அழகிய வழி திறந்துத்தான் கிடக்கிறது. அழகிய வழியை மேலும் அழகாக்கி நமக்கானதாக்கிக்கொள்ளும் சாதுர்யம் நம் கைகளில்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 24 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon