ஜம்முனு வாழ காம்கேரின் OTP-85: அழகு வாழ்க்கை எது?

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 85
மார்ச் 26, 2021

அழகு வாழ்க்கை எது?

ஒரு நிகழ்வு.

காலை நேர அலுவலக பரபரப்பு. ஒரு மத்திம வயது தம்பதி. 35 வயதிருக்கலாம். மனைவியை ஸ்கூட்டியில் பின்னால் வைத்துக்கொண்டு கணவன் ஓட்டி வருகிறார். பஸ் ஸ்டாப் வந்ததும் கணவன் இறங்கிக்கொண்டு, மனைவியிடம் ஸ்கூட்டியைக் கொடுக்கவும் பஸ் வரவும் சரியாக இருந்தது. கணவன் பஸ்ஸில் ஏறவும், மனைவி ஸ்கூட்டியில் கிளம்புகிறார்.

இது சாதாரணமாக ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வு. இதில் ஆணாதிக்கம் என்பதோ பெண் அடிமைத்தனம் என்பதோ எதுவும் இல்லை. ஆனால் இந்த நிகழ்வை நேரில் பார்த்த வயதில் மூத்த அனுபவசாலியான ஒரு கதாசிரியர் (ஆண்) எந்தக் கோணத்தில் எழுதி இருந்தார் தெரியுமா?

ஆண் ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு பஸ் நிலையம் வந்து பெண்ணிடம் கொடுக்கிறார். என்ன ஒரு ஆணாதிக்கம்?

இதில் எங்கிருந்து வந்தது ஆணாதிக்கம். எல்லா பெண்களுக்கும் பின்னால் ஒருவரை அமரச் செய்து ஸ்கூட்டி ஓட்டத் தெரியாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எடை அதிகமாக உள்ளவரை டபுல்ஸ் வைத்து ஓட்டும்போது பேலன்ஸ் தவறும் என்பதும் ஒரு காரணம். இதனால்கூட அந்தக் கணவன் தன் மனைவியை அமரச் செய்து தான் ஓட்டி வந்திருக்கலாம்.

இரண்டாவதாக அவர் விமர்சித்தது என்னவென்றால், கணவன் பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் காதலுடன் கனிவான பார்வை பார்த்து ‘பை பை’ சொல்லி மனைவியை அனுப்பி வைக்கவில்லை. இயந்திரத்தனமாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து கிளம்பிவிட்டார்.

காலை நேர பரபரப்பு. கூட்டமான பஸ் நிலையம். கொஞ்சம் நிலை தடுமாறினாலும் ஸ்கூட்டியில் மனைவியின் கவனம் சிதறக் கூடும். விபத்து ஏற்படலாம் என்ற எண்ணம் அந்தக் கணவனுக்கு இருக்கலாம் அல்லவா? மேலும் காலை நேர டென்ஷன் என்பது என்ன என்று இருவரும் அலுவலகம் செல்லும் வீடுகளின் சுவர்களுக்குக்கூட தெரியும். அதற்கு உயிர் இருந்திருந்தால் மனிதர்களைவிட அவற்றுக்குத்தான் பிபி, சுகர் எகிறியிருக்கும்.

மனைவியும் கணவனை இறக்கிவிட்டு அலுவலகம் செல்லும் பிசியில் இருக்கலாம் அல்லது வீட்டில் மற்றொரு குழந்தையை விட்டுவிட்டு வந்திருக்கலாம். அது தனியாக காத்திருக்கும். அதன் பாதுகாப்பு மட்டுமே அந்த மனைவியின் மனதில் இருந்திருக்கும். சீக்கிரம் வீடு செல்ல வேண்டுமே என்ற பரபரப்பு மட்டுமே மனதை ஆக்கிரமித்திருக்கும்.

இப்படி வேலை பளுவும், கடமைகளும் காத்திருக்கும் காலை நேர பரபரப்பில் கண்களால் காதல் செய்வதற்கு யாருக்குமே மனமும் இருக்காது. நேரமும் இருக்காது. அதுவும் பொறுப்பான அப்பா அம்மாவாக இருப்பவர்களுக்கு அவர்களின் கடமைகள் மட்டுமே அந்த நேரத்தில் பெரிதாக இருக்கும்.

ஜன்னல் வழியாக பார்த்து கண் மறையும் வரை கை அசைத்து காதலைச் சொல்வதெல்லாம் கவலைகள் ஏதுமின்றி கடமைச் சுமைகளும் இல்லாத காலகட்டத்தில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம்.

கட்டற்ற சுதந்திரத்துடன் வளைய வரும்போது மனதுக்குள் காதல் மட்டுமே நிரம்பி இருக்கும். கடமைகளும் பொறுப்புகளும் இரண்டாம் பட்சமே. ஆனால் கட்டற்ற கடமைகளையும் பொறுப்புகளையும் சுமக்க ஆரம்பித்தவுடன் பெரும்பாலும் காதலும் பாசமும் வெளியில் அப்பட்டமாக வெளிப்படுத்திக்கொள்வதில்லை. அவர்களுக்குள் வாட்ஸ் அப் மெச்செஜ், வாய்ஸ் மெசேஸ் என சின்ன சின்னதாக ஆத்மார்த்தமாக தகவல் பரிமாற்றத்தில் காதல் வெளிப்படும். அது எப்படி பார்ப்பவர் கண்களுக்குப் புலப்படும். மனமும் மனமும் பேசிக்கொள்வதை மற்றவர்களுக்கு அப்பட்டமாக்க அவசியம் அல்லவே.

அந்தக் கணவன் பஸ் புறப்பட்டவுடன் மனைவிக்கு ‘பார்த்து பத்திரமா ஓட்டிக்கொண்டு போ…’ என்றோ, ‘நான் ஆஃபீஸ் போனதும் மெசேஜ் செய்கிறேன்…’ என்றோ, ‘நாம் பேசியபடி இந்த வாரம் இந்த வேலையை முடிச்சுடலாம்… கவலைப்படாதே…’ என்றோ வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியபடி செல்லலாம்.

இதெல்லாம் காதல்தானே? அன்பு தானே? பாசம் தானே?

மனைவியும் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ சென்றதுமோ, மதிய உணவு இடைவேளையிலோ ‘இன்னிக்கு நம் மகளுக்குப் பிடிச்ச டிபன்தான் செய்திருக்கிறேன்… சாப்பிட்டுக்கோ… இரவு உனக்குப் பிடிச்சதை செய்து ஜமாய்ச்சுடலாம்…’ என்றோ, ‘இந்த வாரம் உன் அப்பா அம்மாவை போய் பார்த்துட்டு வந்துடலாம்…’ என்றோ, ‘நம்ம மகளுக்கு அப்பா அம்மாவைப் பற்றி  ஒரு வீடியோ செய்யணுமாம்… ஸ்கூல்ல ப்ராஜெக்ட்டுக்காகக் கொடுக்கணுமாம்… நாளை அதற்கேற்றவாறு நாம் நேரத்தை ப்ளான் செய்துக்கணும்… எவ்வளவு சந்தோஷமா இருக்கு… நம்ம மகள் அவளுடைய எட்டு வயதிலேயே நம்மைப் பற்றி பெருமையா டாக்குமெண்டரி செய்யப் போறா…’ என்றோ தகவல் அனுப்பி இருக்கலாம்.

இதெல்லாம் காதலும் பாசமும் அன்பும் அன்றி வேறென்ன?

ஒரு சமயம் மீட்டிங் ஒன்றில் பெண்ணியவாதி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

அவர் ஒரு பெண் ஆளுமையை நிகழ்ச்சி ஒன்றுக்கு பேசுவதற்காக சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தாராம். அந்த ஆளுமை உடனடியாக ‘ஓகே, வந்துடறேன்’ என்று சொல்லாமல் ‘வீட்டில் நிலமையைப் பார்த்துக்கொண்டு சொல்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

என்னைப் பொருத்த வரை அந்த ஆளுமை செய்தது சரிதான். ஏனெனில் நான்கூட அப்படித்தான் செய்திருப்பேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

ஆனால் அந்த ஆளுமை அப்படி பதில் சொன்னது பெண்ணடிமைத்தனம் என்ற கோணத்தில் மைக்கில் பேசிக்கொண்டிருந்த பெண்மணி விலாசிக்கொண்டிருந்தார்.

இதில் எங்கிருந்து பெண் அடிமைத்தனம் வந்தது?

வீட்டில் பெரியவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம். கணவனும் மனைவியுமாக மாறி மாறி பார்த்துக்கொள்ளும் சூழலில் இருக்கலாம். திடுதிப்பென்று மீட்டிங்கில் பேச எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? இதனை கணவனுடன் பேசி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் நாளன்று கணவனை விடுப்பு எடுக்கச் சொல்ல வேண்டும். அன்று அவருக்கும் விடுப்பு எடுக்க முடியாத சூழல் இருந்தால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதுபோல வீட்டில் குழந்தைகள் இருக்கலாம். கைக்குழந்தையாக இருந்தால் முழு கவனிப்புக்கு கணவனையோ அல்லது மாமனார் மாமியார் அல்லது தன் பெற்றோர் யாரையேனும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இந்த இரண்டு காரணங்களைத் தவிர தனக்கே கூட வேறு அப்பாயிண்ட்மெண்ட் இருக்கலாம். எதையுமே பார்க்காமல் ‘ஓ.கே. வருகிறேன்’ என்று யாரால் சொல்ல முடியும்? எப்படி சொல்ல முடியும்?

ஒரு ஆணாக இருந்தால்கூட அப்படி உடனடியாக பதில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஏனெனில் நாம் யாரும் தனித்தனி மனிதர்கள் கிடையாது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் குடும்பம் என்ற அமைப்புக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித உயிர்கள்.

முதல் நிகழ்வில் குறிப்பிட்டிருந்த ஆணின் செயல்பாடு ஆணாதிக்கமும் கிடையாது, இரண்டாவது நிகழ்வில் குறிப்பிடிருந்த பெண்ணின் செயல்பாடு பெண்ணடிமைத்தனமும் கிடையாது.

அதுதான் வாழ்க்கை. இணக்கமான வாழ்க்கை. இயல்பான வாழ்க்கை. மொத்தத்தில் அழகான வாழ்க்கை!

இப்படித்தான் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களுக்கும் ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என முலாம் பூசிவிடுவதால் பெரிய பெரிய விஷயங்களில் கோட்டை விட்டு விடுகிறோம். எதைச் சொன்னாலும் இவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என சொல்லி நம் குரலுக்கான மதிப்பை நாமே இழந்துவிடுகிறோம். நம் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமானால், தேவையில்லாத விஷயங்களுக்கு ஆணாதிக்கம், பெண்ணியம் என்பது போன்ற முலாம் பூசுவதை தவிர்ப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 964 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon