ஜம்முனு வாழ காம்கேரின் OTP-86: விதிவிலக்குகள்!

ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 86
மார்ச் 27, 2021

விதிவிலக்குகள்!

நேற்று நான் எழுதி இருந்த ‘அழகு வாழ்க்கை’ என்ற பதிவில் மனைவியை ஸ்கூட்டியில் பின்னால் வைத்துக்கொண்டு பஸ் நிலையம் வந்திறங்கி மனைவியிடம் ஸ்கூட்டியை கொடுத்துவிட்டு தான் பஸ்ஸில் ஏறி அலுவலகம் செல்லும் காட்சியை ஒரு காதாசிரியர் நேரில் பார்த்த அனுபவத்தை எழுதி இருந்தார் என சொல்லி இருந்தேன்.

அந்தக் கதாசிரியர் ஒரு பெண் என நினைத்தே பலரும் பின்னூட்டமிட்டிருந்தனர்.

ஆனால் நான் குறிப்பிட்டிருந்த கதாசிரியர் வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஆண் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கூட்டியின் பின்னால் ஒரு ஆணை வைத்து ஓட்டி வருவதில் சில பிரச்சனைகள் உள்ளன. ஒன்று தன்னைவிட அதிக எடை உள்ளவரை பின்னால் அமரச் செய்து ஓட்டுவது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை. பேலன்ஸ் தவறும். மற்றொன்று மெயின் ரோடில் சில பெண்களுக்கு பைக் ஓட்ட பயமும் தயக்கமும் இருக்கும்.

நான் எம்.எஸ்.ஸி படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரி ஊரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவு. நான் தினமும் கல்லூரிக்கு சைக்கிளில்தான் சென்று வந்தேன். போக வர 10 பத்துகொலோமீட்டர். இரண்டு வருடங்கள் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் மழை வெயில் என எல்லா நாட்களிலும் சைக்கிளிலேயே சென்றேன். கல்லூரி பஸ் இருந்தது. உடன் படித்த மாணவிகளும் மாணவர்களும் கல்லூரி பஸ்ஸில்தான் சென்று வந்தார்கள். ஆனால் எனக்கு சைக்கிள் ஓட்டுவது பிடிக்கும் என்பதால் சைக்கிளில் சென்றேன். என்னைப் பார்த்து ஒரு மாணவி என்னுடன் சைக்கிளில் ஓட்டி வந்தாள். அன்று அவளுக்கு தலைவலியும், கால்வலியும், ஜூரமும் வந்ததுதான் மிச்சம். அதன்பிறகு அவள் வாழ்க்கையில் சைக்கிள் என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்கவில்லை என்று அவளே சொல்லி இருக்கிறாள்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் எல்லோராலும் எல்லாம் செய்ய முடியும், ஒருசாரார் மட்டுமே செய்ய முடியும் எனும் அளவில் யாரும் இங்கே தெய்வப் பிறவி இல்லை என்றாலும் சிலருக்கு உடல் வலிமை குறைவாக இருக்கும். ஒருசிலருக்கு மனதில் தைரியம் இருக்காது. மனதில் தைரியம் இருந்தால் உடல் வலிமை தானாகவே கூடும். எல்லாவற்றையும் மீறி அவரவர்கள் விருப்பம் என்று ஒன்று உள்ளது அல்லவா?

ஏன் பல ஆண்களுக்குக் கூட பைக் ஓட்டத்தெரியாது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால் கார் ஓட்டுவார்கள். கேட்டால் பைக்கில் பேலன்ஸ் இருக்காது. காரில் பேலன்ஸ் இருக்கும் என்று சொல்வார்கள். வியப்பாக இருக்கும்.

இப்போதெல்லாம் பைக்கை வடிவமைக்கும்போதே இளைஞர்களுக்கானது, பெண்களுக்கானது, மத்திய வயதினருக்கானது என வாடிக்கையாளர்களின் வயதுக்கு ஏற்பவே வடிவமைக்கிறார்கள்.

நன்றாக கவனித்துப் பாருங்கள். இளைஞர்களுக்கான பைக்கில் பின் சீட் மிகவும் தூக்கலாக இருக்கும். அதில் அமர்பவர்கள் யாராக இருந்தாலும் பைக்கின் முன் சீட்டில் அமர்ந்து ஓட்டுபவர் மீது சாயாமல் உட்கார வாய்ப்பே இல்லை. இது காதலர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ என யோசித்திருக்கிறேன்.

திருமணம் ஆன ஆண் நிச்சயம் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டுகூட அந்த வகை பைக்கில் செல்ல முடியாது. அலுவலகத்தில் இருந்து வரும்போது காய்கறியோ அல்லது மளிகை சாமானோ ஒன்றிரண்டு அவசரத்துக்கூட வாங்கி பாக்ஸில் வைத்து எடுத்து வர முடியாதபடி முழுக்க முழுக்க இளைஞர்களை குறி வைத்தே வடிவமைக்கப்பட்டிருக்கும் பைக் மாடல்களின் விலையும் லட்சத்தைத் தொடும் அளவுக்கு இருப்பதுதான் வியப்பின் உச்சம். வியாபார தந்திரம்.

பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கும் பைக்குகள் பெண்களின் உடல்வாகிற்கு ஏற்ப வடிவமைத்திருப்பார்கள். அவற்றை ஆண்கள் நெடும் தூர பயணங்களுக்கு பயன்படுத்தும்போது முதுகுவலி மற்றும் கால்வலியால்   பாதிக்கப்படுவார்கள். உயரமும், சீட்டின் அமைப்பும் இன்னபிற பாகங்களும் பெண்களுக்காகவே அவர்கள் ஓட்டிச் செல்வதற்கு வசதியாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அதுபோல மத்திய வயதினர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் பைக்குகளில் முன்பக்கம் சாமான்களை வைத்து எடுத்துவரவோ அல்லது குழந்தைகளை அமர வைத்துக்கொள்ளும்படியாகவோ இடம் இருக்கும். குறைந்தபட்சம் தலைக்கு மாட்டும் ஹெல்மெட்டையாவது அந்த இடத்தில் வைத்து எடுத்து வரும் அளவுக்கு இடம் இருக்கும். அதுபோல வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிவர வேண்டும் என்றாலும் அதை வைத்து எடுத்துவர பின்னால் பாக்ஸ் இருக்கும்.

இப்படி ஒரு சாராருக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் பைக்கை மற்றவர்கள் ஓட்டுவதிலும் பிரச்சனைகள் உள்ளன. அமர்ந்து வருவதிலும் பிரச்சனைகள் உள்ளன.

சரி நாம் பேசிக்கொண்டிருந்த விஷயத்துக்கு வருகிறேன். இப்படித்தான் மக்கள் தங்கள் அனுபவங்களின் அடிப்படையில் எல்லாவற்றையும் பொதுப்படையாக்கிக்கொள்கிறார்கள் அல்லது ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், பெண்ணியம் என பெயர்களை சூட்டிவிடுகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் ஓர் உண்மை நிகழ்வை எழுதி இருந்தேன். துணையை இழந்த ஒருவர் தன் துணையின் அருமையை அவர் இறந்த பிறகு உணர்ந்துகொண்டு அழுது கண்ணீர் வடிப்பதாக முடித்திருந்தேன்.

இந்த ஆண்களே இப்படித்தான். இருக்கும்போது மனைவியின் அருமையை உணர்வதில்லை. இருக்கும்போது போற்றி இருந்தால் இறந்த பிறகு இப்படி அழ வேண்டாமே என ஏகப்பட்ட பின்னூட்டங்கள், அதிலும் குறிப்பாக பெண்களிடம் இருந்து.

ஆனால் அத்தனையும் நிகழ்வை சரியாக முழுமையாக படிக்காமல் உணர்வு ரீதியாக எழுதப்பட்டப் பின்னூட்டங்கள்.

அந்த நிகழ்வின் கடைசியில் ஒரு டிவிஸ்ட் வைத்திருந்தேன். அது என்ன என்று தெரிந்துகொள்ள அந்த நிகழ்வை https://compcarebhuvaneswari.com/?p=6246 இந்த லிங்கில் படித்துப் பாருங்களேன்.

வேகத்தடை உள்ளது
வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை…
என்ற அறிவுப்புப் பலகை போல
விதிவிலக்குகளும் உள்ளன
கவனம்…
எல்லாவற்றையும்
பொதுப்படையாக்க வேண்டாமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 4 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon