ஜம்முனு வாழ காம்கேரின் OTP-87: ‘இன்ஸ்டண்ட்’ அறம் செய்ய முடியுமே! (SANJIGAI108)


ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 87
மார்ச் 28, 2021

‘இன்ஸ்டண்ட்’ அறம் செய்ய முடியுமே!

இன்ஸ்டண்ட் காபி போல இன்ஸ்டண்ட் அறம் உள்ளது உங்களில் யாருக்கெல்லாம் தெரியும்?

கவலையினாலோ, தொடர் வேலைகளினாலோ இன்னபிற காரணங்களினாலோ மனம் சஞ்சலமாகவோ அல்லது சோர்வாகவோ இருந்தால் அதில் இருந்து எப்படி வெளியில் வருவதுகூட ஒரு கலையே.

நம் மனம் மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, வருத்தமாக இருந்தாலும் சரி அதைச் சுற்றியே வலம் வந்துகொண்டிருக்கும். மகிழ்ச்சியாக இருந்தால் அந்த மகிழ்ச்சியை மிகக் குறைந்த காலகட்டமே தக்க வைத்துக்கொண்டு ‘இன்னும் கொஞ்சம் சாக்லெட் கொடு’ என அடம்பிடிக்கும் குழந்தையாய் அடுத்தடுத்த மகிழ்ச்சிக்கு எதிர்பார்க்கத் தொடங்கிவிடும்.

ஆனால் வருத்தமாக இருந்தால் அதை நீண்ட காலத்துக்கு தக்க வைத்துக்கொண்டு அழுது சுகம் காணும். அழுவது சுகம் காணுவதில் வருமா என நினைக்கிறீர்களா? நிச்சயம் வரும். ஒரு சிலர் வாய் விட்டு அழுவார்கள். சிலர் மனதுக்குள் அழுவார்கள். சிலர் ஏதேனும் ஒரு சிறிய சோகத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு குமைந்துகொண்டே இருப்பார்கள். சிலர் புலம்புவார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் வருத்தங்களை வெளிப்படுத்தும் முறையை வேண்டுமானால் மாற்றிக்கொள்வார்களே தவிர யாராலும் வருத்தத்தை வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருக்கவே முடியாது.

ஏனெனில் அழுது புலம்புவதும் சோகமாக இருப்பதும் நமக்கு நாமே ஒரு பரிதாப கவசத்தைப் போட்டுக்கொள்வதைப் போல. சில நேரங்களில் அந்தக் கவசம் நமக்கு ஆறுதலாக உள்ளது. பல நேரங்களில் பிறரிடம் இருந்தும் பரிதாபத்தை சம்பாதித்துக்கொள்ள முடிகிறது. அப்படி பரிதாபத்தை சம்பாதித்துக்கொண்டு வளைய வருவது ஒரு சுகத்தைக் கொடுக்கும். ஆறுதலைக் கொடுக்கும். நீங்கள் வருத்தமாக இருக்கும் நேரங்களில் உங்களை நீங்களே உற்று நோக்கினால் அதை உணர முடியும்.

அதுவே சந்தோஷமாக இருந்தால் பிறர் கண் பட்டுவிடப் போகிறதே என அதை முகத்தில் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். வார்த்தைகளால் கொண்டாட மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அதனாலேயே மனதுக்குள் இருந்தும் அவர்களின் சந்தோஷம் சீக்கிரம் காணாமல் போய்விடும். ஏனெனில் பொய்யாக நடிக்கத் தொடங்கும்போது மனமும் அதையே நம்பிவிடுவதால் சந்தோஷமும் துக்க முலாம் பூசிக்கொண்டுவிடும். அதுதான் நடக்கிறது.

நினைத்துக்கொண்டால் வருத்தத்தை மனதுக்குள் கொண்டு வந்து சட்டென அழுதுவிடும் நம்மால் நினைத்த மாத்திரத்தில் சந்தோஷத் தருணங்களை மனதுக்குள் கொண்டு வந்து சட்டென மகிழும் நுட்பம் தெரிந்திருந்தாலும் அதை பெரும்பாலும் செய்வதில்லை. காரணம், நம் மகிழ்ச்சி பிறருக்கு நம் மேல் ஒரு பொறாமையை தோற்றுவிக்கும் என்பதால் இருக்கலாம். பிறர் நம் மீது எப்போதும் கருணையோடு இருக்க வேண்டுமானால் நாம் எப்போதுமே துன்பத்தில், வருத்தத்தில், சோகத்தில் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற தவறான மனப்பாங்கு நம்மில் பலரிடம் உள்ளது.

நாம் சந்தோஷமாக இருந்தால் அது நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டு நம்மைச் சுற்றி ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உண்டாகி பலரையும் மகிழ்விக்கும்.

நம்மை நாம் சந்தோஷமாக வைத்துக்கொண்டு பிறரையும் மகிழ்ச்சியில் வைத்திருப்பதே, காசு பணம் கொடுத்து உதவும் அறங்களை எல்லாம்விட நம் எல்லோராலும் செய்யக் கூடிய மிகப் பெரிய பிரமாண்டமான அறம்.

இதனை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்ய முடியும். நேரம் காலம் தேவையில்லை. நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடிய அறம்.

இப்படி ‘இன்ஸ்டண்ட்’ காபி தூள் போல நாம் செய்யக்கூடிய ‘இன்ஸ்டண்ட்’ அறம் எப்படியெல்லாம் இருக்கலாம் தெரியுமா?

நடந்து சென்று கொண்டிருக்கும்போது பாலத்தில் ஏற்ற முடியாமல் திணறும் சைக்கிளில் செல்லும் சிறுவனின் சைக்கிளை பின்னால் இருந்து ஒரு அழுத்தம் கொடுத்து முன்னே தள்ளுவதில் இருக்கலாம், நாம் ஹோட்டலில் சாப்பிட்டு வரும்போது எதிரில் ஏழைச் சிறுவன் கையேந்தும்போது நான்கு இட்லி சுடச்சுட வாங்கிக் கொடுத்துவிட்டு வருவதில் இருக்கலாம், வாசலில் வந்து குப்பை எடுத்துச் செல்லும் தூய்மைப் பணியாளர்களிடம் சிரித்துக்கொண்டே ‘குட்மார்னிங்’ சொல்வதிலும், ‘தேங்க்யூ’ சொல்வதிலும் இருக்கலாம். உங்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் பிறரை மகிழ்விக்க முடியுமோ அதுவே ‘இன்ஸ்டண்ட்’ அறம்.

ஒருமுறை எங்கள் தெருவில் மோட்டர் காரில் வந்து குப்பைகளை அள்ளும் தூய்மைப்பணியாளருக்கு பொங்கல் அன்று  புது புடவைகொடுத்ததைப் பற்றி விரிவாக எழுதி இருந்தேன். அவர் பெயர் மற்றும் புகைப்படத்துடனும், அவர் மோட்டர் காரை ஓட்டும் லாவகத்தையும் வீடியோவாகப் பகிர்ந்திருந்தேன்.

உடனே பலரும் பின்னூட்டத்தில் அவர் பெயரை எந்த அடைமொழியும் இல்லாமல் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

தமிழ்செல்விக்கு வாழ்த்துகள், தமிழ்செல்வி அழகாக இருக்கிறார், தமிழ்செல்விக்கு எங்கள் பாராட்டை சொல்லுங்கள் இப்படியாக அவர்களின் பின்னூட்டங்கள் இருந்திருந்தன.

பாராட்டுவதும் வாழ்த்துவதும் நல்ல விஷயம்தான். ஆனால் வயதில் மூத்த ஒரு பெண்மணி தூய்மைப்பணியாளர் என்ற ஒரு காரணத்துக்காக எந்த மரியாதை அடைமொழியும் இல்லாமல் பெயரைச் சொல்லி எழுதியவைதான் மனதுக்கு வருத்தமாக இருந்தது.

யாரெல்லாம் இப்படிப் பாராட்டினார்களோ அவர்களுக்கெல்லாம் ‘தமிழ்செல்வி மேடமிடம் சொல்கிறேன்’ என்று குறிப்பால் அவர்கள் செய்கின்ற தவறை உணர்த்தினாலும் யாரும் புரிந்துகொள்வதாக இல்லை.

அவரவர்கள் செய்கின்ற பணியை வைத்து உரிமையை எடுத்துக்கொண்டு அதற்கேற்றாற்போல மரியாதையை குறைப்பதும் ஏற்றுவதும்கூட தவறுதான். கண்ணியக் குறைவுதான்.

கட்டுரை எழுதும்போது வேண்டுமானால் ஒவ்வொரு முறையும் அவர்கள், இவர்கள் என போடுவதையும், திரு, திருமதி என எழுதுவதையும் தவிர்க்கலாம். மற்றபடி பொதுவெளியில் பேசும்போதும் எழுதும்போதும் கண்ணியமான வார்த்தைகளும் அடைமொழிகளும் மிக அவசியமே.

நான் பொதுவாகவே எல்லோரையுமே சார், மேடம் போட்டு அழைப்பதால் அது யாராக இருந்தாலும் எந்தப் பணியை செய்தாலும் அவர்களை மரியாதையாகவே அழைக்கிறேன்.

அதுபோல உங்களால் சார், மேடம் போட முடியவில்லை என்றாலும் சகோதரி, அக்கா, அம்மா என்று ஏதேனும் ஒரு கண்ணியமான அடைமொழியுடன் பேசுவதும் பொதுவெளியில் பகிர்வதும்தான் முறையான செயல்பாடாக இருக்க முடியும்.

பழக்கத்தின் பேரில் உங்களுக்குள் உள்ள பரஸ்பர புரிந்துணர்வுக்கு ஏற்ப நீங்கள் நேரடியாக எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம். பொதுவெளியில் பழகும்போது இங்கிதம் மிக முக்கியம்.

அதுவே ஒரு நல்ல அறச் செயல்தான்!

பாருங்களேன், இங்கிதமாகப் பழகுவதுவதே அறம் எனச் சொல்லும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இங்கிதம், பண்பு, கண்ணியம் இவை எல்லாம் மனிதர்களாகிய நம் எல்லோரிடமும் இருக்க வேண்டிய அடிப்படைப் பண்பு, குணாதிசயங்கள். அதுவே இன்று அறம் என்ற போர்வைக்குள் வந்துவிட்டதை கவனியுங்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software

#காம்கேர்_OTP, #COMPCARE_OTP

(Visited 14 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari